Wednesday, November 3, 2010

சாருவுக்கு ஒரு கடிதம்: மலேசிய சிங்கப்பூர் இலக்கியம்

வணக்கம் சாரு,

நலமா? தங்களின் தங்கமீன் இணையத்தளத்தில் வெளிவந்த கட்டுரையையும் அதன் பின்னூட்டங்களையும் வாசித்தேன். மலேசிய சிங்கப்பூர் சனரஞ்சக இலக்கியவெளியை நோக்கிய உங்களின் விமர்சனத்தில் எனக்குச் சில இடங்களில்  உடன்பாடு உண்டு.

மலேசியாவில் தீவிர இலக்கியம் சிற்றிதழ்களின் மூலம் தொடங்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. 2006 தொடங்கி காதல் சிற்றிதழின் மூலம் இந்த நவீன இலக்கிய புரிதலைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சிகள் இங்குள்ள இளம் எழுத்தாளர்களின் மூலம் முன்னெடுக்கப்பட்டது. அது பிறகு வல்லினம் இதழாக மாறி, அடுத்தடுத்து அநங்கம், மௌனம் என விரிவடைந்து இன்னமும் சிறு கூட்டத்தின் மூலமே நடத்தப்பட்டு வருகின்றன. சிறு கூட்டத்தின் முயற்சிகள் எப்பொழுதும் அலட்சியப்படுத்தப்படும் என்பது உண்மைதானே.

மலேசியாவின் மூன்றாம்தர எழுத்து எனப்படுவது இங்குள்ள தினசரி பத்திரிக்கை/இதழ் மூலம் பெரும்பான்மை வாசிப்புக்குச் சென்றுகோண்டிருப்பதால், அதனைச் சார்ந்து உருவாகி வரும் அடுத்த தலைமுறைகளுக்கு நல்ல இலக்கிய பரிச்சயமே இல்லாமல் போய்விட்டதை நான் கடுமையானதாகவே கருதுகிறேன். ஒருவேளை இம்மாதிரியான குழுவில் சிக்கிக் கொள்ளும் இளம் எழுத்தாளன் முதலில் அதனைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் மாயையை அறுத்தெறிந்துவிட்டு புகழ் எனும் சிறிதுநேர முதுகு சொறிதலைத் தூக்கி எறிந்துவிட்டு சனரஞ்சக வெளியிலிருந்து மீளத் தெரிந்திருக்க வேண்டும். இதுவே அவனுக்கு மகத்தான சவால். என்னையும் உட்பட இங்குள்ள சில இளம் எழுத்தாளர்கள் அப்படிப்பட்ட ஒரு மாயையின் வலையிலிருந்து தப்பித்து வந்து தனக்கான அடையாளத்தை தீவிர இலக்கியத்தின் புரிதலை நோக்கி ஏற்படுத்திக் கொண்டவர்களே.

அடுத்ததாக இன்னமும் மூன்றாம்தர இலக்கியத்தை எழுதி கொண்டு, அதுதான் சிறந்த இலக்கியம் எனப் புரிந்துகொண்டும் அதைப் பிரச்சாரம் செய்து கொண்டும், உலக இலக்கிய பரிச்சயமே இல்லாமல் திரியும்  எழுத்தாளர்களும், அரசியல்வாதிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு அலையும் எழுத்தாளர்களும் இங்குத் தவிர்க்க முடியாத பிம்பமாக வளர்ந்து எம்பி குதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கடந்து மலேசியாவில் தரமான இலக்கியம் உருவாவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதைத் தெரிவிப்பதென்பது சிறு போராட்டம்தான். இவர்களின் பரிந்துரையும் குறுக்கீடல்களும் ஒரு மையச்சக்தியாக வளர்ந்து தீவிர இலக்கியத்தை நோக்கிய எல்லாம் வழிகளையும் மூடி மறைத்துவிட்டு வாசிப்பின் மூலம் அடைய வேண்டிய எல்லையைப் பற்றி பிரக்ஞையில்லாமல் அடுத்த தலைமுறையைச் சுற்றி ஒரு வட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டத்தில் சிக்கிக் கிடப்பவர்களுக்குக் கடைசிவரை சரியான இலக்கியமோ வாசிப்போ கற்பிக்கப்படப் போவதில்லை. ஆகையால்தான் வல்லினம் ஆசிரியர் நவீன் நம்முடைய இலக்கியமும் நவீன இலக்கியம் சார்ந்த வாசிப்பும் மலேசியாவின் மாணவர்களை நோக்கி சீக்கிரமாகப் பரவ வேண்டும் எனக் கூறினார். இன்று வல்லினம் சிறப்பிதழ் மலேசியாவிலுள்ள முக்கியமான கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இலவசமாகத் தரப்பட்டுள்ளது. இந்த முயற்சியைப் பற்றி யாருக்கு என்ன அக்கறை?

தாங்கள் சிங்கப்பூரிலுள்ள ஒருவரைப் பார்த்து உலகம் முழுக்க பல இடங்களில் நாடகம் அரங்கேற்றிய இளங்கோவன் எனும் கலைஞரை இதுவரை அங்கு அடையாளப்படுத்தியதேயில்லை எனக் கேட்டிருக்கிறீர்கள். இளங்கோவனின் எழுத்தும் நாடகமும் எப்பொழுதுமே அவர்களுக்கு ஒவ்வாதவையாகும். அதிலிருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருக்கும் அவர்களிடம் எப்படி அடையாளப்படுத்துதல் என்கிற நேர்மை சார்ந்த பங்களிப்பு இருக்கப் போகிறது? ஒவ்வொருமுறையும் அரசியல்வாதிகளுக்கு விலை போனவர்களையும் ஒடுக்குமுறைகளுக்குத் தலையை கொடுத்துவிட்டு சுகமாகத் திரிபவர்களையும், சுரணையில்லாமல் மேடையில் விலை போகும் எழுத்தாளர்களையும், நிஜ வாழ்விற்கும் எழுத்திற்கும் இடையில் சோரம்போகும் எழுத்ததாளர்களையும், சொந்த இனத்தைப் பற்றி நிஜ வாழ்வில் எந்த அக்கறையும் இல்லாமல் எழுத்தில் மட்டும் சுரணையைக் காட்டும் எழுத்தாளர்களையும் நோக்கி அவர்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும், அவர்களின் செயல்பாட்டின் மீது எச்சில் உமிழும், அவர்களின் கோலைத்தனத்தின் மீது நகக்கீறலைப் போன்ற வரிகளை அள்ளி வீசும் இளங்கோவனின் கூர்மையான எழுத்திற்கு முன் அவர்கள் செய்வது இரண்டு காரியம்தான், ஒன்று தப்பித்துக் கொள்வது, இன்னொன்று அமைதியாக மௌனம் சாதிப்பது.

இந்த மாத வல்லினம் இணைய இதழில்(மலேசியா) இளங்கோவனின் நீண்ட நேர்காணலும் அவருடைய நாடகத்தின் எழுத்துப் பிரதிகளும், அவரைப் பற்றிய சக எழுத்தாளர்களின் பத்திகளும் இடம் பெற்றுள்ளன. அவருடைய நாடகத்தைப் பற்றி சு.யுவராஜனும், இளங்கோவன் என்கிற ஆளுமையைப் பற்றி நவீன், முத்துசாமி, முனியாண்டி இராம.கண்ணபிரான், அவர்களும் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் முன்வைத்திருக்கும் கேள்வியை அதிகமாகப் பூர்த்தி செய்யும் வகையில் இளங்கோவன் என்கிற கலைஞரை வல்லினம் முன்னெடுத்துள்ளது. இளங்கோவனின் ஒரு நாடகத்தை மட்டும் பார்த்துவிட்டு என்னால் செய்யப்பட்ட விமர்சனத்தில் எனக்குத் திருப்தில்லாமல்தான் இருந்தது. ஆனால் இம்முறை வல்லினம் அவருடைய ஆறு நாடகத்தின் எழுத்துப் பிரதிகளின் சில பகுதிகளை மட்டும் வாசிப்பதற்கு வாய்ப்பளித்துள்ளது. (முழுமையான நாடகத்தின் எழுத்துப் பிரதிகளை வாசிக்க அவரின் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். அதற்கான தகவல்களும் வல்லினம் இணைய இதழின் விளம்பரப்பகுதியில் உள்ளது).

அவருடைய ஊடாடி நாடகம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தமிழன் எத்துனைக் கொடூரமாக நடத்தப்படுகிறான் என்பதை ஓர் உயிரின் கதறலின் மூலம் அறிய முடியும் அனுபவத்தை இளங்கோவன் தருகிறார். சுதந்திர காலக்கட்டத்தில் அங்குக் குடியேறி வெள்ளையனுக்கு வேலை செய்து கொடுத்த யாழ்ப்பானத்து தமிழர்களும், பிராமணர்களுமே தமிழனை பயங்கரமாக ஒடுக்கியுள்ளான் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

சிங்கப்பூரின் இலக்கிய நிலைமை எப்படி இருக்கிறது என்பதற்கான ஆழமான பார்வை இளங்கோவனின் நேர்காணலின் மூலம் பெற முடியும். இன்னமும் நம்பிக்கையளிக்கக்கூடிய எந்த இளம் எழுத்தாளர்களும் இல்லாத ஒரு நகரமாக வளர்ந்து வருகிறது சிங்கப்பூர் இலக்கியம். தமிழகத்திலிருந்து வந்து குடியேறி இங்கு வேலை பார்த்துக் கொண்டு சில இலக்கிய முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கும் நண்பர்களைத் தவிர்த்துவிட்டு சிங்கப்பூர் இலக்கியத்தை மதிப்பீட வேண்டிய கட்டாயம் இப்பொழுது இருக்கிறது.

தொடர்ந்து உரையாடலாம்.

நன்றி: படங்கள் (வல்லினம் இணைய இதழ்)
              தங்கமீன் இணைய இதழ்(சிங்கப்பூர்)

கே.பாலமுருகன்
மலேசியா