உயிர் எழுத்து மே மாத இதழில் பிரபஞனின் நேர்காணல் முக்கியத்துவப்படுத்தப்பட்டு சிறப்புப் பக்கங்களாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை எனது வாசிப்பில் இத்துனை நெருக்கமான ஓர் உணர்வை அளிக்கும் நேர்காணலை நான் வாசித்திருக்கவில்லை. இறுக்கமான மனநிலையையும் ஏதோ விவரிக்க முடியாத சோகத்தையும் கொடுக்கக்கூடிய வரிகள் அவருடைய நேர்காணலிலிருந்து பெற முடிந்தது.
ஒரு சில வரிகளையும் பிரபஞ்சனின் பார்வையையும் அதனையொட்டிய எனது புரிதலையும் குறிப்பிட்டு புதியதொரு உரையாடலைத் தொடக்கி வைக்கலாம் என்கிற நோக்கத்திலேயே இந்தப் பதிவு.
1. பிரபஞன் : புத்தகங்கள் சிலரைத் தம்முடன் பிணைத்துப் பிறகு கரைத்துவிடும். அது ஒருவகையான திறப்பு. புத்தகங்கள் ஆத்மாவுக்குள் ஏற்படுத்தும் மாறுதல்கள்.
எனது புரிதல்: இதுவொரு இரசாயன பரிமாற்றம் எனக்கூட சொல்லலாம். எல்லாம் புத்தகங்களுக்குள்ளும் வாசகனோடு பேசக் காத்திருக்கும் ஒரு மனநிலை தயாராகப் பதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாவலைத் திறக்கும்போது அதற்குள் ஒரு சமூகத்தின் வாழ்வும் அந்தச் சமூகத்தில் வாழ்ந்த சில மனிதர்களின் உணர்வுகளும் பகிரப்படுவதற்காகக் காத்திருக்கும் வேளையில் அதனுள் நுழையும் ஒரு வாசகன் தனது வாசகப் பர்வத்தில் அந்தப் பிரதியுடன் எல்லாம் நிலைகளிலும் ஓர் இரசாயன பரிமாற்றத்திற்கு ஆளாகின்றான். பற்பல மனநிலைகளுக்குள் நுழைந்து எல்லாம் சம்பவங்களையும் பெரும் காவியத்தின் உட்கூறுகளையும் அகத்தால் தரிசிக்கின்றான். இங்கு மெல்ல மெல்ல அந்தப் பிரதியில் பதிக்கப்பட்டிருக்கும் வாழ்வும் மனிதர்களும் உருக்கொள்கிறார்கள்.
இதே போல அடர்த்தியான வாசிப்பிற்குள் தன்னை எப்பொழுதும் கரைத்துவிட்டவர்கள்கூட சூழல் பிரக்ஞையைத் தொலைத்துவிட்டு பல சிக்கலான மனநிலைக்கு ஆளாகுகிறார்கள் என ஒரு கட்டுரையில் படித்ததாக ஞாபகம். பெரும்பாலான மனப்பிறழ்வு(ஆபத்தற்ற மனப்பிறழ்வு) கொண்டவர்களின் மனநிலையும் இப்படித்தான் இல்லாத சில மனிதகளின் இருப்பிற்குள் நுழைந்து தன் சுயத்தை இழக்கும் வல்லமையைப் பெற்றிருக்கும். இதற்குக் காரணம் தீவிரமான வாசிப்பு பிரதிகளின் நுட்பமான பாத்திர உற்பத்திகளில் நிதர்சனமாக சிக்கிக் கொள்ளும் வாசக மனம் எனவும் சொல்லலாம்.
ஒரு பிரதியை வாசித்து முடித்துவிட்டப் பிறகு, எப்படி அதன் ஆழத்திற்குள் காணாமல் போனோமோ , அதே போல மீண்டும் வெளியில் வருவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் போல. அங்கேயே அப்படியே நம்மை விட்டு வருவது யதார்த்த வாழ்வையும் பாதிக்கும். அப்படிப் பலமுறை புதுமைப்பித்தன், வண்ணநிலவன், வண்ணதாசன் போன்றவர்களின் வெளிக்குள் உலகத்திற்குள் நுழைந்து என்னை அங்கேயே விட்டு வந்திருக்கிறேன்.
“அங்கு அப்பொழுது தவறவிட்ட என்னை இன்னமும் மீட்கமுடியவில்லை, அப்பொழுது காணாமல் போன என்னைத் தேடுவதற்கான அதீத முயற்சிதான் என் எழுத்துகள்”
2. பிரபஞ்சன்: மிகுந்த கோபக்காரனாக அறியப்பட்டவன் நான். எடுத்தெறிந்து பேசுதல், சின்னப் பிரச்சனைக்கும் கைநீட்டி விடுதல், சண்டை போடுதல் முதலான சண்டியர் குணாம்சங்கள் என்னிடம் தூக்கலாக இருந்தன. என் சுபாவத்தை மாற்றியமைத்தது இலக்கியமே. என் வாசிப்புத்தான் இன்றைய நான். சக மனிதரைப் புரிந்துகொள்ளல், “மற்றமையை” ஏற்றுக் கொள்ளுதல், எல்லோருக்கும் அவரவருக்கென்று இருக்கும் நியாயங்களை உணர்ந்துகொள்ளுதல் எல்லாமும் இலக்கியத்திருந்தும் கதைகளிலிருந்தும் பெற்றேன்.
எனது புரிதல்: பிரபஞ்சன் வாசிப்பின் மூலம் வாசக மனம் அடையும் பண்படுதலையும் பக்குவத்தையும் நோக்கி பேசுவதாகப் புரிகிறது. வாழ்வில் சில ஏமாற்றங்களையும், வலிகளையும் புரிந்து கொள்வதற்கும் கடந்து செல்வதற்கும் சில சமயங்களில் நான் படித்த பல கதைகளே துணையாக இருந்திருக்கின்றன. இலக்கியம் என்கிற நிறுவனத்தில் நாம் பெற்றுக் கொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஒப்பீட்டுக் கொள்ளவும் பலத்தரப்பட்ட மனிதர்களும் வாழ்வனுபங்களும் இருக்கின்றன. வெறும் பறீட்சைக்காக வற்புறுத்தலால் வாசிப்பை நுகர்பவர்கள் பறிட்சை முடிந்ததும் பிரதிகளைத் தூக்கி வெளியே வீசிவிடுவார்கள். ஒரு சிலர் அங்கிருந்தும் உருவாக்கம் பெறுவார்கள்.
சக மனிதர்களைப் புரிந்துகொள்ளல் என்கிற குணாதிசயத்தை ஒரு மானுடத்தை நோக்கிய சிறு புள்ளிக்குரிய மனநிலையாகக் கருதுகிறேன். நிதர்சனத்தில் எத்துனை மனிதர்களைக் கடந்து வந்தாலும் சில சமயங்களில் அவர்களை நெருங்க சிரமப்படுவது தொடங்கி, அவர்களின் வாழ்வை விசாரனைக்குட்படுத்த முடியாமை வரை பல அசாத்தியங்களையும் தோல்விகளையும் தழுவியிருக்கிறோம். நடைமுறையில் நம்மைச் சுற்றி வாழும் எல்லாரையும் எல்லாம் வகை மனிதர்களையும் புரிந்துகொள்வதென்பது கடினமான போராட்டமே. ஆனால் சமக்காலத்தில் நம்மைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் வாழ்வைக் கூர்மையாக அவதானித்து அதைப் படைப்பாக்கிய படைப்பாளர்களின் பிரதியை அணுகும்போது மிகப்பெரிய அனுபவத்தை அடைகிறோம். அந்தச் சமயத்தில் நம் சமூகத்தையும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வின் தொடர்ச்சியையும் கசப்புகளையும் யதார்த்தங்களையும் புரிந்துகொள்ளத் துவங்குகிறோம். இங்கிருந்துதான் இந்தச் சமூகத்தை அதன் நிதர்சனத்தோடு புரிந்துகொள்வதில் ஒரு நேர்மையை வாசகன் அடைகிறான். (அப்படியொரு பிரதியாக மலேசியாவில் வெளிவந்த சீ.முத்துசாமியின் மண்புழுக்கள் நாவலைக் குறிப்பிடலாம்)
சக மனிதர்களைக் கண்டு பதற்றமடைதல், அவர்களைப் புறக்கணித்தல், அவர்களை வெறுத்தல், அவர்களின் மீது வன்முறை கொள்ளுதல், தனியொருவருக்கென உருவாகி ஒரு கலாச்சாரமாக வளர்ந்து நிற்கும் நியாயங்களின் மீது அதிருப்தி கொள்ளல் போன்ற எல்லாம்விதமான சராசரி அகநெருக்கடிகளிலிருந்தும் விடுப்படும் தருணத்தைத்தான் பிரபஞ்சனும் தனது வாசிப்ப்பின் மூலம் அடைகிறார்.
இங்குக் கொஞ்சம் வித்தியாசப்படுத்தி புரிந்துகொள்ளப்பட வேண்டிய விஷயமும் உண்டு. அதிகாரத்தைப் புரிந்துகொண்டு அதற்குத் துனை போகுதல் என்பதை ஒரு சமரசமாக அல்லது புரிந்துகொள்ளலாக ஏற்றுக் கொள்ள முடியாது. கூர்மையான வாசிப்பு அதிகாரத்தை எந்தப் புள்ளியிலிருந்து எதிர்த்து செயலாற்ற வேண்டும் என்கிற புத்திக்கூர்மையையும் நேர்மையையும் வழங்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் இத்துனை வாசித்தும் பக்குவப்பட்டும், சின்ன சின்ன விஷயங்களுக்கு சிலர் மீது அதீதமான வெறுப்பும் பொறாமையும் காழ்ப்பும் வன்முறையும் உருவாகும் கணத்தை எப்படி மதிப்பிடுவது எனத் தெரியவில்லை. எனக்குள் இருந்துகொண்டு ஏதோ ஒன்று சிலரை சிலரின் முகத்தைக்கூட பார்ப்பதிலிருந்து தவிர்த்துவிடும்படி குரலெழுப்பிக் கொண்டே இருக்கிறது. இதை எப்படிக் கையாளுவதென்பதைத்தான் எனது வாசிப்பின் மூலம் தேடிக் கொண்டிருக்கிறேன். எப்படியாயினும் நான் வெறுக்கும் சிலரும் சக மனிதர்கள்தானே எனப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
3. பிரபஞ்சன்: ஒரு மனிதனாக இருப்பது எப்படி என்பதை அப்பாத்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். கதையில் நல்ல மனிதர்கள் பாத்திரங்களை அவரை முன்மாதிரியாகக்கொண்டே நான் எழுதினேன்.
எனது புரிதல்: பொதுப்புத்தியில் எது நல்லது எது கெட்டது என்கிற புரிதலெல்லலம் இல்லாத அல்லது தெரியாத ஒரு காலக்கட்டத்தில் எனக்குத் தெரிந்த நல்லவர்கள் என் அம்மாவும் அப்பாவும்தான். பலருக்கும் இப்படியான மனச்சூழல்தான் உருவாகியிருக்கும் என நம்புகிறேன். அவர்கள் செய்வதுதான் மிகச் சிறந்த நல்லது. அவர்கள் எதைச் செய்யவேண்டாமென்று சொல்கிறார்களோ அதுதான் மிகச் சிறந்த கெட்டது எனப் புரிந்து வைத்திருந்தேன். இப்பொழுது சமூகம் அளித்திருக்கும் அல்லது ஒரு சிலரின் அதிகாரத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட சமூகத்தின் பொது ஒழுக்கம் என்கிற ரீதியில் வைத்து மதிப்பீட்டாலும், அந்த நல்லது கெட்டதைச் சில சமயங்களில் ஏற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.
எனது சில கதைகளில் பொதுவெளியில் சமூகத்தின் ஒழுக்கங்களை உதறியவர்களின் வாழ்வையும் குடும்பத்தில் தனித்துவமான ஒழுக்கங்களைக் கொண்டிருந்தவர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். இரண்டும் எனக்குள் புரிந்துகொள்ளப்பட்ட வெவ்வேறான கருத்துருவாக்கம் எனலாம். எப்படியிருப்பினும் நான் பார்த்த புரிந்துகொண்ட முதல் நல்லது முதல் நல்லவர் என் அம்மாதான். அதை என்னால் எந்தப் பொது ஒழுக்கம் சமூக ஒழுக்கம் என்கிற பிம்பங்களை முன்வைத்து மறுக்க முடியவில்லை. சமூகத்திற்கு முன் இது இயலாமையாகக்கூட இருக்கலாம் அல்லது சுய நியாயப்படுத்தல்களாகவும் உணரப்படலாம். எனக்கொன்றும் பிரச்சனையாகத் தெரியவில்லை. நான் பார்த்து பழகிய தாய்மையை தந்தை என்கிற குறியீட்டை எந்தச் சமூக பொது ஒழுக்கமும் ஒழுக்கக் காவலர்களும் தகர்க்க முடியாதபடி என் கதைகளின் மூலம் என் படைப்புகளின் மூலம் ஒரு பாதுகாப்பான வேலியைப் போட்டு வைத்திருக்கிறேன். பிறரின் வாழவையும் இப்படியாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கருதுகிறேன். (போதிக்கவில்லை). பிறகு ஏன் நாமும் சிலரும் ஒருவருக்கொருவர் முரண்படுகிறோம் எனப் புரிந்துகொள்ளலாம்.
பொது நியாயங்களைப் பின்பற்றுவதிலும் அதனை ஒன்றாக இருந்து காப்பதிலும் ஒரு சமூகக் கடப்பாடு இருப்பதை நான் மறுக்கவில்லை. அதனை முற்றிலும் உடைத்துவிட்டால், சமூகம் என்கிற நிறுவனம் அரசியலின்பால் வேரோடு தகர்ப்படும் என்பதை வேறு வகையில் புரிந்துகொள்ளலாம்.
குறிப்பு: பிரபஞ்சன் பலத்தரப்பில் மறுக்கப்பட்ட, கவனிக்கப்படாத ஓர் எழுத்தாளர். இருப்பினும் தொடர்ந்து தன் கதைவெளியில் பல பல மனிதர்களையும் வாழ்வையும் மனிதநேயம் என்கிற பரந்த கருணையையும் இந்த இலக்கிய உலகிற்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். சமூகத்தால் அல்லது இலக்கியம் என்கிற நிறுவனத்தால் புறக்கணிக்கப்பட்டாலும் அறியப்படாத வாசகனின் உள்ளத்திலிருந்து ஒரு சலனமாக சலசலப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது படைப்பெனும் மகா வித்தை.
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா