நகரத்தில் எப்பொழுதும் ஆங்காங்கே பல தொடர் அல்லது தொடர்பற்ற நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒன்றோடு ஒன்று சார்ந்திருக்காததைப் போலத் தோன்றினாலும் நகரம் என்கிற மையம் அனைத்தையும் இணைத்து வைத்திருக்கின்றது. நகரத்தின் மீது நீங்காது சில கனவுகள் வெயில் போல எரிந்தபடியே பரபரப்பிற்கு மத்தியில் படிந்திருக்கின்றன. கட்டற்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளில் சிலவற்றைத் தொகுக்கும்போது சில மனிதர்களும் சில நிகழ்வுகளும் தற்செயலாகச் சிக்கிக் கொள்கின்றன.
நிதானமின்றி ஒருவர் மீது ஒருவர் அவசரத்தையும் வெறுப்பையும் தூக்கி வீசிக் கொண்டு பரபரத்துக் கொண்டிருக்கும் நகரத்தில் எங்காவது ஓர் இடத்தில் இதற்கெல்லாம் தொடர்பே இல்லாமல் ஒரு கிழவர் அமர்ந்திருக்கக்கூடும். அவர்தான் நகரம் இழந்துவிட்டிருக்கும் அமைதியின் கடைசித் தூதர்போல எல்லாவற்றையும் அசைபோட்டுக் கொண்டு உட்காந்திருப்பார். அவர் யார்? அவர் யாரை அல்லது எதை அப்படிக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற கேள்வி எழ வாய்ப்புண்டு.
இதுபோல ஒரு மதியத்தில் நான் அத்தகைய ஒரு கிழவரை நகரத்தில் சந்திக்க நேர்ந்தது. முன்பு ஒருமுறை இதே கிழவரைத்தான் சம்சு கடையிலிருந்து துரட்டப்படுவதையும் அவர் படியிலிருந்து இடறிச் சாலையில் விழுவதையும் பார்த்திருக்கிறேன். எல்லாரையும் போல அதைக் கணநேர வேடிக்கையாகக் கடந்து போய்விட்டேன். இன்று மீண்டும் அதைவிட மோசமான தோற்றத்துடன் ஆப்போய் காய்க்கறி கடையில் மூலையில் அமர்ந்திருக்கக் கண்டேன். பலநெடுங்காலத்தின் சோர்வு அவர் முகத்தில் ஒட்டியிருந்தது. உடலைச் சுத்தப்படுத்திக்கொள்ளாமல் குறைந்தது இரண்டு மாதம் அவர் இந்த நகரத்தில் சுற்றி அலைந்திருக்க வேண்டும்.