Thursday, July 22, 2010

ஒரு வகுப்பறையை உருவாக்குதல்

வகுப்பறையை உருவாக்குதல் என்பது சுவருக்குச் சாயம் அடித்தல், நாற்காலி மேசைகளை அடுக்கி வைத்தல், வர்ணப் படங்களைச் சுவரில் தொங்க விடுதல் என்பதுடன் முடிந்து விடக்கூடியதா? அத்தகைய புறத்தை உருவாக்கும் செயலுக்கும் அப்பாற்பட்டு அந்த வகுப்பில் படிக்கக்கூடிய சுப்புவிற்கும் குப்புவிற்கும் என்ன செய்யப் போகிறோம் என்பதன் கேள்வியிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது வகுப்பறை எனும் உலகம்.

சுவரை அலங்கரித்தலும், சாயம் பூசுதலும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருக்குமாயின் அங்கு உருவாகி வருவது கட்டாயம் வகுப்பறை கிடையாது, அது அந்த ஆசிரியருக்குக் கிடைக்கப் போகும் புள்ளிக்கான அறை மட்டுமே எனக் கருதுகிறேன். பலமுறை முயற்சித்தும் சில சமயங்களில் வகுப்பை அலங்கரிப்பதிலும் அழகுப்படுத்துவதிலும் தீவிரமான பங்களிப்பைக் கொடுக்க முடிவதில்லை. அடுக்கி வைக்கும் புத்தகங்களும் தொங்கவிடப்படும் படங்களும் சுவரிலிருந்து கோணலாகச் சாய்ந்து கொண்டு கேலியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கல்வி அமைச்சு சந்திப்புக் கூட்டத்தில் மலாய்ப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிப்புரியும் ஒருவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. சர்மிளா சாந்தி எனும் அவர் பட்டவெர்த் தாமான் செனாங்கான் எனும் தேசிய பள்ளியில் கடந்த 3 வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். தமிழ் சார்ந்த வகுப்பறையை உருவாக்குவதில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் ஆற்றலையும் உணர நேர்ந்தபோது ஓர் ஆசிரியரின் ஆக்கச் சிந்தனையை அதுவும் மலாய்ப்பள்ளியில் அதை அவர் உபயோகிக்கும் விதத்தையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுள் அத்தகைய சிந்தனை உடையவர்கள் பலர் இருப்பதும் உண்மையே. ஆனால் இந்த ஆசிரியை மலாய் மாணவர்களுக்கும் சேர்த்துதான் அந்தத் தமிழ் வகுப்பறையைச் சுயமாகத் தன் சொந்த செலவில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார். இனப்பேதமின்றி மொழியின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் நல்ல தரமான கற்றல் சூழலை உருவாக்கிக் காட்டியிருக்கும் இவரைப் போன்ற ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அந்த வகுப்பைச் சிறுக சிறுக முறையாக வடிவமைத்து கட்டமைத்துள்ளார்.

2000க்கும் மேற்பட்ட பணச் செலவில் குமாரி சர்மிளா உருவாக்கியிருப்பது வெறும் வகுப்பறை மட்டும் அல்ல என்பதை உணர முடிந்தது. அதில் மாணவர்கள் கலகலப்புடனும் புதியதாக முளைத்த தெம்புடனும்
கற்றல் கற்பித்தலில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். குப்பனையும் சுப்பனையும்கூட ஆர்வமாகப் படிக்க வைக்கும் சூழலை உருவாக்கி வெற்றி பெறுவதுதான் வகுப்பறையை உருவாக்கும் உன்னதமான செயலின் வெளிப்பாடாகும்.

நாங்கள் சரஸ்வதி (சுங்கைப்பட்டாணி) தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு பயிலும்போது புதியதாகக் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். புதிய வகுப்பறை, தரையிலிருந்து கசிந்து வெளிப்பட்ட காரையின் வாசம் மிகுதியாக நுகரப்பட்டது. சுவர் முழுவதும் வெறுமை மட்டுமே அப்பியிருந்தது. ஆகையால் நாள் முழுவதும் எந்த ஆர்வமுமின்றி நத்தை போல நகர்ந்தது மணித்துளிகள் என்றே சொல்லலாம். ஆனால் எங்களின் தமிழ் ஆசிரியை திருமதி.சந்திரிக்கா முதன் முதலில் சுவரில் திருக்குறளும் அதன் பொருளும் அடங்கிய எழுத்து அட்டையை ஒட்டினார். அதுவும் அட்டையின் ஓரத்தில் திருவள்ளுவரின் படமும் இருந்தது.

சுவர் முழுவதும் அன்று வர்ணம் தீட்டப்பட்டது போல அழகாகக் காட்சியளித்தது. நான் வெறுமையில் பார்த்துப் பழகிய அந்தச் சுவருக்குள் முதலில் வந்தவர் திருவள்ளுவர்தான். “யாரும் சுவரைக் கிறுக்கக்கூடாது” என்கிற அறிவுரைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டும் மாணவர்கள் எதையாவது கிறுக்கிப் பார்ப்பதில் பரவசம் கொண்டார்கள். வெறுமையையும் காலியான சுவரையும் மாணவர்கள் எப்பொழுதும்
வெறுப்பார்கள் என்பதும் நிதர்சனம்.சர்மிளாவின் தமிழ் வகுப்பறையில் மாணவர்கள் கிறுக்குவதற்கு இடமில்லாத அளவிற்கு அவர்களின் மனதையும் அறிவையும் செம்மைப்படுத்தும் வகையில் பல பயிற்றுத்துணைப்பொருள்களைச் சுயமாகச் செய்து அங்கே வைத்திருக்கிறார்.

சுவரில் தொங்கவிடப்படும் படங்களும் பயிற்றுத்துணைப் பொருள்களும் வெறும் அழகை நிரப்புவதாக இல்லாமல் ஏங்கித் தவிக்கும் மாணவர்களின் கல்வி தேவையையும் அறிவு தேவையையும் வளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவர்களின் உலகத்தில் நீட்டப்படும் அல்லது ஆடவைக்கப்படும் பொம்மலாட்டம் போல பாவை கூத்து போல வகுப்பறையின் சூழல் மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருக்க வேண்டும். வகுப்பறை என்பது மாணவர்கள் வீடு திரும்பும்போது தங்களின் தோளில் மாட்டிக் கொண்டு வீடுவரை எடுத்துச் செல்லும் விளையாட்டு பொம்மை போல ஆகிவிட்டிருக்க வேண்டும். அவன் தன்னுடனே வைத்துக் கொண்டு உறங்கும் பொம்மை போல பல அழகான வடிவமைப்புடன் மிக நெருக்கமான உணர்வுடன் வகுப்பறையை உருவாக்க முடியும் என்பது ஒரு தன்னம்பிக்கையாகும். அவர்கள்  சர்மிளா போல விதைக்கப்பட வேண்டும்.


ஆக்கம்: கே.பாலமுருகன்
                 சுங்கைப்பட்டாணி, மலேசியா