Friday, May 7, 2010

சிறுகதை: காரணமற்ற மதிய வெறுப்பும் சூடான தேநீரும்

நீண்டதொரு மதிய உறக்கத்திற்குப் பிறகு விழித்ததும் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு கூடியிருந்தது. மிக அருகில் கூர்மையான ஒலியுடன் மெல்ல நகர்ந்துகொண்டிருந்த கடிகார முட்களின் மீது அதீதமான வெறுப்பு. காரணமற்ற வெறுப்பு ஒரு தீராத பொழுதைப் போல கெட்டியாகி பார்க்குமிடத்திலெல்லாம் ஒழுகிக் கொண்டிருந்தது. பெரிய சாலையைக் கடந்த காந்தி மண்டபத்தின் முன் இருக்கும் காப்பிக் கடையில் அமர்ந்து நிதானமாக ஒரு தேநீர் அருந்தினால் இதைச் சரிக்கட்டி விடக்கூடும்.

காரணமற்று எழும் வெறுப்புக்கு தனிமையில் கிடைக்கும் சூடான தேநீரே நிவாரணம். காப்பிக் கடைக்கு வந்ததும் எதிர்புறத்தில் பெரிய தொலைக்காட்சியைப் பொருத்தியிருந்தார்கள். வணிக ஈர்ப்பு. புதிய பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன. என்னவோ கூடுதலாக ஒரு இரைச்சல் சேர்ந்திருப்பது போல தோன்றியது. தனிமையில் அமிழ்ந்து தேநீரை அருந்த இயலவில்லை. எதையும் அவதானிக்க இடமில்லாமல் தொடர்ந்து வெற்று உணர்வுகளை நிரப்பிக் கொண்டே இருந்தது அந்த இரைச்சல். வெறுப்பு சட்டென மீண்டும் அதிகரித்தது.

“வேற என்னனெ வேணும்?”

“அந்த டீவியெ நிறுத்த முடியுமா?”

“இன்னிக்குத்தான் புதுசா போட்டிருக்கம்ணே, உங்கள மாதிரி
ஆளுங்களுக்குத்த்தான், பாருங்கண்ணே”

“சாப்ட ஏதாவது?”

“ஒன்னும் வேணாம்”

காரணமற்ற எனது வெறுப்பின் ஒரு நுணியைப் பிய்த்து அவன் மீது தூக்கி எறிய வேண்டுமெனத் தோன்றியது. மெதுவாக கவனத்தை எனக்குள்ளே குவிக்க முயன்றேன். சடாரென ஒருவன் அவசரமாக எனக்கு முன் வந்தமர்ந்தான். கையில் தங்க நிறத்திலான கடிகாரத்தை அணிந்திருந்தான். மதிய வெயில் பட்டு மின்னியதில் வெறுப்பு கொஞ்சம் கூடியது.

“வணக்கம் சார், குடிச்சிட்டிங்களா?”

அமைதியாக இருந்தேன். அவன் அணிந்திருந்த கழுத்து பட்டை என் கழுத்தை நெருக்குவது போல இருந்தது. மிக நேர்த்தியான ஆடை அலங்காரம். கையில் சிவப்பு வர்ண குறிப்பு புத்தகத்தையும் ஒர் ஆங்கில பத்திரிக்கையையும் வைத்திருந்தான்.

“பேப்பர் படிக்கிறீங்களா? ஸ்த்தார். . நல்ல நல்ல செய்திலாம் இருக்கும். தமிழ் பேப்பர்லாம் கஸ்த்தம். . ஒன்னும் இருக்காது, எவனாது செத்ததையும் கொடூரத்தையும்தான் முன்னுக்கே போட்டு வச்சிருப்பானுங்க”

அவனாகவே பேசிக் கொண்டிருந்தான். இப்படிப்பட்ட பைத்தியக்காரர்களைக் கண்டால் எனக்கு வழக்கமாகவே வெறுப்பு அதன் உச்சத்தை அடைந்து கொதிப்படையும்.

“என்னெ யாருன்னு தெரியுமா சார்?”

“தெரியாது. . “

“நாந்தான் துரை. . பேப்பர்லலலாம் அடிக்கடி பாத்திருப்பீங்களே?”

“இல்லெ பார்த்தது இல்லெ”

அவன் தனது இறுக்கமான கழுத்துப்பட்டையைச் சரிசெய்துவிட்டு என்னை கூர்ந்து பார்ப்பது போல அறுவறுப்பான ஒரு பாவனையில் பார்த்தான்.

“என்ன சொல்றீங்க, என்னெ தெரியாதா? நம்ப இவரு இருக்காருலெ, அதான் அவரு. . அவரே என்னெ புகழ்ந்து பல மேடையிலெ பேசிருக்காரு. என்னெ இது இதுகூட தெரியாமெ இருக்கீங்க”

முதன் முதலாக வெறுப்பு உச்சத்தை அடைந்து கிளர்ந்து தடிக்கத் துவங்கியது. எதிரில் இருப்பவனின் சொற்கள் மெல்ல மெல்ல அவனுக்கான ஓர் அயுதத்தைத் தயாரிப்பதற்கு துணையாக இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் எனது மதிய வேளையின் வெறுப்பை அவன் மீது நான் பிரயோகிக்கக்கூடும். அமைதியை இழப்பதென்பது வெறுப்பிற்கு ஒரு காரணத்தைக் கண்டடைவதற்குச் சமமான ஒரு முயற்சிக்கு வித்திட்டுவிடும் என கவனமாக அவனை நிராகரித்தேன்.

“நம்ப . . . இந்த . . . வார பத்திரிக்கையெ நீங்க பாத்தது இல்லையா? என்ன சார். . அதுலே வாரம் வாரம் என் படம் போட்டு ஒரு கவிதை வருமே? தெரியாதா? என்ன சார். . நல்ல ஞாபகப்படுத்தி பாருங்க, நாந்தான் அது”

காரணமற்ற வெறுப்பு தனது அடியிலிருந்து சல்லி வேர்களை முக்கி முக்கி வெளியேற்றிக் கொண்டிருந்தது. அதன் பிடிப்பு சிறுக சிறுக வலுவடைந்தது. அவனது கழுத்துப்பட்டை என் கழுத்தையும் சேர்த்து இறுக்கும் ஒரு வல்லமை உடையதாக இருந்தது. எச்சிலை விழுங்கிக் கொண்டு ஒருவித கழிவிரக்கத்துடன் அவனைப் பார்த்தேன்.

“சார். . நல்ல ஞாபகப்படுத்தி பாருங்க சார் பிளிஸ். . என்ன கண்டிப்பா உங்களுக்குத் தெரியும். போன வாரம்கூட தொலைக்காட்சிலெ நம்ப. . அங்க நடந்துச்சே அந்தத் தேர்தல் கூட்டத்துலெ ஒரு ஓரமா நிண்டுகிட்டு இருந்தனே, எல்லாத்துக்கிட்டயும் போன் பண்ணி அதைச் சொல்லிருந்தேன், கூட்டாளிங்கலாம் பெருமை பட்டாணுங்க”

நிமிர்ந்து அமர்ந்துகொண்டேன். மடமடவென மீதமிருந்த தேநீரை அருந்திக் கொண்டிருந்தேன். அவனுக்கான ஆயுதம் முழுவதும் தயாராகும் நிலையில் இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த “நான்” பேசிக் கொண்டே இருந்தது.

“நம்ப தலைவரு இருக்காருலே, அவரோடெ ஒவ்வொரு பொறந்தநாளுக்கும் நான் எழுதற கவிதைத்தான் பெருசா வரும் சார். . படிச்சதில்லையா? என்ன சார் நீங்க? ரொம்ப முக்கியமான ஒரு கவிதை சார் அதெல்லாம், நான் எழுதனது”

எனக்குள் உக்கிரமடைந்திருந்த காரணமற்ற மதிய வெறுப்பு தனது முதல் வாக்கியத்தை உருவாக்கியிருந்தது.

“இப்பெ உங்களுக்கு என்ன வேணும்?”

“இல்லெ. . என்னெ போய் தெரிலன்னு சொல்லிட்டிங்க, என்னாலே
தாங்கிக்க முடிலெ. பத்து வருசமா அங்க இங்கன்னு என்னெ பத்தி
பேசிக்கிட்டு இருக்கேன். . உங்க காதுக்கு எட்டனதெ இல்லியா?

அவனுக்கான ஆயுதம் தயாராகிவிட்டது. இதற்கு மேல் பிரயோகிக்காமல் இருந்தால் என் வெறுப்பிற்கு மரியாதை இல்லாமல் போய்விடும்.

“நீங்க கவிதைலாம் எழுதுவீங்களா? இந்தாங்க, இதான் என் கவிதை. போன வாரம் பரிசு கிடைச்சது. முடிஞ்சா காப்பி எடுத்து எல்லாருக்கும் கொடுங்க. . என்னைப் போய் தெரியாமெ இருக்கீங்க. . .ஐய்யோ”

வாயில் சேமித்து வைத்திருந்த தேநீரை அவன் முகத்தில் துப்பும்போது அவனுக்கான ஆயுதத்தின் சூடு இலேசாக ஆறியிருந்தது. காரணமற்ற ஒரு வெறுப்புடன் அங்கிருந்து வெளியேறினேன்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா