Monday, November 9, 2009

செழியன் - சாரு - எஸ்.ரா - விச்சுவாமித்திரன் அவர்களின் சினிமா பார்வை

அய்யப்பன் மாதவன் இயக்கிய “தனி” குறும்பட வெளியீட்டிற்காக இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்திருந்த ஒளிப்பதிவாளரும் குறும்பட இயக்குனரும் ஆனந்த விகடன் “உலக சினிமா” கட்டுரையாளருமான செழியன் அவர்களை நேரில் சந்தித்து உரையாடவும் நேர்காணல் செய்யவும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.

இயக்குனர் பேரரசுவின் சகோதரரான அறிவுநிதி அவர்களின் இல்லத்தில்தான் செழியனைச் சந்தித்துப் பேசினேன். தெளிவான முகத்துடன் மிகவும் நிதானமாகக் காட்சியளித்தார். கருத்துகளை மிக எளிமையாக எவ்வித சிக்கலும் தடுமாற்றங்களும் இன்றி முன் வைக்கக்கூடியவராக இருந்தார். ஏற்கனவே செழியனின் சினிமா பார்வையை ஆனந்த விகடன் தொடர் சினிமா கட்டுரையின் மூலம் பலர் அறிந்திருக்கக்கூடும்.

இன்றைய தழிச் சூழலில், சினிமா குறித்த ஆழ்ந்த பிரக்ஞையையும் மாற்றுப் பார்வையையும் தனது கட்டுரை மூலம் வெளிப்படுத்துபவர்கள் மிகவும் சொற்பமானவர்களே ஆகும். குறிப்பிட்டு சொல்வதென்றால் சாரு நிவேதிதா, விசுவாமித்திரன், செழியன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களே ஆகும். மேலும் இணையத்தில் பலர் சினிமா குறித்த (முக்கியமாக தமிழ் சினிமா) விமர்சனங்களை எழுதி வருவதும் வரவேற்கத்தக்கது. இந்த நால்வரின் சினிமா கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தவர்களுக்கு ஒவ்வொன்றும் சில நேர்த்தியான இடங்களில் வித்தியாசப்படுவதை அறிய முடியும்.

சாரு தனது சினிமா கட்டுரைகளில் திரைக்குப் பின்னாலுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி மிகவும் விரிவாக அவர்களின் ஆளுமை சார்ந்து பேசக்கூடியவர். சினிமாவில் உள்ள மற்ற பல அம்சங்களையும் குறிப்பாக இசையைப் பற்றி அதன் வரலாறு சார்ந்தும் பல தகவல்களை ஒப்பீடுகளைத் தரக்கூடியவர் ஆகும். ஒரு சில ஒப்பீடுகளுக்காக அவர் தனது விமர்சனங்களுக்குள் கொண்டு வரும் திரைப்பட கலைஞர்கள் தமிழில் அறியப்படாதவர்களும் அதே சமயம் கவனிக்கத்தக்க ஆளுமைகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒளிப்பதிவுகள் பற்றி பேசும்போது மிகவும் தட்டையான மொழிகளுக்குள் தகவல் வரட்சியின்றி, உலக சினிமாக்களை மேற்கோள்காட்டி விரிவாகப் பேசக்கூடியவர் சாரு. ( சில சமயங்களில் நமது செல்வராகவனையும் அகிரா குரோசாவையும் ஒரே புள்ளியில் இணைக்கும் அபாயமான ஒப்பீடுகளையும் காட்டி மிரளவும் செய்வார்)

அடுத்தபடியாக எஸ்.ராமகிருஷ்ணனின் சினிமா கட்டுரைகள் மிக முக்கியமானவையாகும். எளிதில் வாசகனை ஈர்க்கக்கூடிய வகையிலான சினிமா பார்வையை கவர்ச்சியான மொழியுடன் சொல்லக்கூடியவர். நண்பன் சினிமா பற்றி கூறுவது போல அவரது சினிமா கட்டுரைகள் நம்மை நெருங்கி வந்துவிடும். அவரது பெரும்பாலான சினிமா பார்வை மனித வாழ்வோடு ஒப்பிட்டு அதன் அழகியலை அடையக்கூடியதாக விவரிக்கப்பட்டிருக்கும். மேலும் எல்லாம் சினிமாக்களின் முகத்தையும் அதன் அடையாளத்தையும் வாழ்வியலின் பின்புலத்தோடு அவதானிக்கக்கூடியவர் எஸ்.ரா. (சினிமாவிற்கான உண்மையான படிமங்களுக்குள் அதிகபடியான இவரது வழக்கமான சொல்லாடல்கள் ஆக்கிரமிப்பு செய்யும்போது, சினிமாவின் சில காட்சிகள் புனைவுகளாக மாறிவிடுகிறது- “போல போல” என்ற தனது கற்பனைவாத ஒப்பீடுகளின் மூலம் சில சமயங்களில் அசலைத் தவறவிடுவதாகத் தோன்றும்)

அடுத்ததாக செழியனின் சினிமா பார்வை மூன்றாம்தர பார்வையாளன்/வாசகனையும் சினிமா பற்றிய நுகர்வெளிக்குள் கொண்டு வந்துவிடும் என்றே சொல்லலாம். ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக இதழின் வாசகர்களுக்கு அவர்களின் பிரக்ஞைக்கு ஏற்ப அதே சமயம் விரிந்த உளவியல் பார்வையுடன் தன் விமர்சனங்களை முன்வைக்கக்கூடியவர் செழியன். அவரது எல்லாம் சினிமா கட்டுரைகளிலும் மனத்துவ அணுகுமுறையின் மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. எல்லாம் விளைவுகளுக்கும் ஓர் உளவியல் கட்டுமானங்களை முன்வைத்து அந்தச் சினிமாவின் மையப்புள்ளியை அடையக்கூடிய மொழி செழியனுடையது. (தனது மனோத்துவ/உளவியல் மதிப்பீடுகளின் மூலம் சில சமயங்களில் வாசகனின் அல்லது பார்வையாளனின் சாதாரண கிரகித்தலையும் சிக்கலாக்கிவிடும் ஆக்கிரமிப்பு செழியனின் விமர்சனங்களில் இருப்பதாக நினைக்கிறேன். மேலும் ஒரு சில கட்டுரைகளில் ஒரே விதமான அணுகுமுறைகளே நுட்பமாகப் பாவித்திருப்பது போல தோன்றக்கூடும்.)

அடுத்ததாக தீராநதி இதழில் சினிமா பற்றி எழுதிவரும் விச்சுவாமித்திரன் ஆவார். இவருடைய சினிமா கட்டுரையின் மொழி மிகவும் சிக்கலானது. அதே சமயம் இவரது சினிமா மீதான சொல்லாடல்கள் தத்துவம் சார்ந்து அதன் கட்டமைப்பைத் தரமான களத்தில் விவரிக்கக்கூடியது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவை அல்ல. மேலும் ஆரம்பக்கால சினிமா வாசகனுக்கு முற்றிலும் ஏதுவான வடிவமும் அல்ல. இவரது சினிமா கட்டுரைகள் பெரும்பாலும் பிராந்திய அடையாளத்துடன் எழுதப்படக்கூடியது. ரஷ்ய சினிமா, கொரியா சினிமா எனப் பெயரிடப்பட்ட, நிலப்பரப்பின் பின்னனியில் அதன் தத்துவம் - பண்பாடு - கலாச்சாரம் - அரசியல் - போன்ற அம்சங்களின் உள்ளீடுகளை அளவுகோளாக்கி படத்தை விவரித்து எழுதுவார். ( இவரது சினிமா கட்டுரையைப் படித்து முடித்த பிறகு, சினிமா பார்க்கும் ஆவலைவிட வரலாறு அரசியல் படிக்க வேண்டும் என்ற ஆவலே மேலிடும் என்றே கருதுகிறேன். அளவுக்கு அதீதமான தகவல்களும் சான்றுகளும் சில சமயங்களில் அசல் சினிமா என்கிற வடிவத்தின் எளிமையைக் குறைத்துவிடுவதாகப்படுகிறது)

தமிழில் சினிமா குறித்தும் உலக சினிமா குறித்தும் இனி அதிகம் எழுதவும் விவாதிக்கவும் பட வேண்டும். தமிழிலேயே பல மாற்றுச் சினிமா எடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நமது உள்நாட்டில்கூட பல இளைஞர்கள் தரமான குறும்படங்களை எடுப்பதில் ஆர்வமும் காட்டி வருகிறார்கள் என்பதால் சினிமா குறித்தான வாசிப்பும் மீள்வாசிப்பும் அவசியமானதாகும். நமது வாழ்வைப் பதிவு செய்து வைப்பதில் இலக்கியமும் சினிமாவும் மிக முக்கியமான வடிவங்களாகும். போலித்தனமான, அசலுக்கு எதிரான இலக்கியமும் சரி, சினிமாவும் சரி, வெறும் மசாலா கலவைகளாகத்தான் பணம் சம்பாரித்துவிட்டு காணாமல் போய்விடும். யதார்த்தங்களை சினிமா புனைவுகளுடனும் அசலான மனிதர்களையும் வாழ்வையும் கலை நுட்பம் சார்ந்து வெளிப்படுத்தும் சினிமாவும் இலக்கியமும் மட்டுமே ஆரம்பத்தில் சர்ச்சைகளைச் சந்தித்தாலும் வரலாற்றில் பேசப்படும் முக்கியமான பதிவாக இருக்கும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா