Friday, July 10, 2009

தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்




நேற்றுவரை
என் விரல்களின் இடுக்குகளில்
காதலுக்கென ஒரு வரி
சிக்கியிருந்திருக்கலாம்.

நான் கடந்து வந்த
இரவுகளின் பெரும்
முணுமுணுப்பாக
இருந்ததென்னவோ
காதலின் ஒற்றை
வரிகள்.

நேற்றுவரை
வலியும் துக்கமும்
ஏக்கமும் முயற்சிகளும்
இருந்தன.
கவிதைகளும் இருந்தன.

இன்று
நெடுநாள் காத்திருப்பிற்குப்
பிறகு காதலில்
வெற்றியடைந்து
காதலியைப் பெற்றுவிட்டேன்.
கவிதைகளெல்லாம்
எங்கோ தொலைத்துவிட்டன.

2

தப்பித்து தப்பித்து
எத்தனையோ இரவுகளுக்கு
பிறகு
இன்றுதான்
ஒரு காதல் வரியை
சேமிக்க முடிந்தது.

அடுத்த வீட்டு
காதலன்
அவனின் காதலிக்காக
வைத்திருந்த கவிதைகளை
எப்படியோ காற்றில்
தவறவிட்டிருக்கிறான்.

200 நாட்கள்
கடும் முயற்சிகளுக்கு
பிறகு
அன்றென்னவோ
ஒரு காதல் கவிதையை
எழுதிவிட்டேன்.
ஆனால் அதுபோல
ஏற்கனவே 1000 கவிதைகள்
பிரசுரமாகிவிட்டன
என்பதை அறிந்துகொண்டபின்
பத்திரபடுத்த இயலாதது
இந்தக் காதல் கவிதைகளென
தீர்மானித்தேன்.


3
ஒரு காதல் கவிதையை
எழுதிய பிறகு
அதனைப் பத்திரப்படுத்த
மேகத்தின் விளிம்பில்
கட்டி வைத்தேன்.
மழையென பொழிந்து
சாக்கடை நீரில்
தேங்கிக் கிடந்தது.

தோற்றுப்போன
ஒரு காதலின் இரகசியங்களை
பறவைகளிடம் கொடுத்தனுப்பினேன்.
அது ஊராக ஊராக
எச்சமாகக் கழிந்து
தள்ளியது.

காதலுக்குத்தான்
மேகங்களும் பறவைகளும்
காதலின் தோல்விகளுக்கல்ல
என்பதை பாழாய்போன
ஒரு காதலும்
கற்றித்தரவில்லையே.

கே.பாலமுருகன்
bala_barathi@hotmail.com