Friday, February 13, 2015

சிறுகதை: வண்ணத்துப்பூச்சியின் மரணத்தில் நடந்த கலவரம்


கீர்த்திகா வெகுநேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அடுத்து அவள் அழப்போகிறாள் என அவள் முகம் முன்னெச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. கீர்த்திகாவைச் சுற்றி காஞ்சனா, துர்கா, ஏஞ்சலின், முகமாட் நின்றிருந்தார்கள்.

சரியாக 10 மணிக்குத்தான் இந்தச் சம்பவம் நடந்தது. அப்பொழுது ஓய்வு நேரம். வழக்கமாக மாணவர்கள் ஓடியாடி விளையாடும் நேரம் அது. வகுப்பில் எப்பொழுதும் பார்த்துக்கொள்ளும் அதே நண்பர்களைத்தான், ஓய்வு நேரத்தில் துரத்திப் பிடித்து விளையாடுவார்கள். வகுப்பறை ஒரு திட்டவட்டமான சட்டங்களால் நிரம்பியவை. ஆகவே, ஓய்வு நேரம் தற்காலிகமான ஒரு விடுதலையைக் கொடுப்பதால் மாணவர்களின் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் எல்லையே இல்லை.

அப்படிப்பட்ட சமயத்தில்தான் முருகேசன் துரத்த கீர்த்திகா தரையில் வந்தமர்ந்த வண்ணத்துப்பூச்சியைக் கவனிக்காமல் அதனை மிதித்தாள். எங்கு அடிப்பட்டது எனச் சரியாக ஊகிக்க முடியாமல் அவர்கள் எல்லோரும் தடுமாறிப் போய்விட்டார்கள். மஞ்சள் வர்ண வண்ணத்துப்பூச்சி சிறிது நேரம் தரையில் துடித்துக் கொண்டிருந்தது. கீர்த்திகா அதனைக் கையில் பிடித்து மேலே தூக்கி அருகாமையில் பார்த்தாள். மிக அழகான ஒரு சிற்றுயிர் அது. முதன் முதலாக ஒரு வண்ணத்துப் பூச்சியை அத்தனை நெருக்கத்தில் பார்க்கிறாள்.

வண்ணத்துப்பூச்சியை வெறும் வர்ணம் என்றுத்தான் அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். அதன் அழகான வர்ணத்தை மட்டுமே அதிகப்படி எல்லோரும் இரசிப்பார்கள். ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒட்டுமொத்த அழகை அதன் சிறகுகளிலும் அதன் வர்ணத்திலும் கொண்டு போய் சேர்ப்பிப்பதே பொதுவான இரசனையாக இருக்கிறது. ஆனால், அதனையும் தாண்டி அதற்கொரு உடல் இருக்கிறது; மெல்லிய கை கால்கள் இருக்கின்றன; கண்கள் இருக்கின்றன என்பதை அன்றே அவள் ஆச்சர்யமாகக் கவனித்தாள்.