பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள் வாழக்கூடிய இடம். கிராமத்தின் வாசலில் கிணறு போன்ற இடத்தில் மணி ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்துவிட்டால் அந்த மணி ஒலிக்கப்படுகிறது. இந்த மணியும் மணி சத்தமும் அக்கிராமத்திலுள்ள மக்களின் குலத்தொழிலைக் காப்பாற்றுவதற்கான ஒரு குறியீடாகவே கருதுகிறேன். அந்தக் கிராமத்தின் குலத்தொழிலே திருட்டுத்தான். அதைச் செய்யாவிட்டால் சாமி குற்றம் ஆகிவிடும் என நம்புகிறார்கள். ஆகையால் காவல்துறையின் வருகையை அறிவிப்பதற்குரிய ஒலியை அந்த மணி எழுப்புகிறது.
வழக்கமான பாலா படங்களில் ஆழப்புதைந்திருக்கும் குரூரங்கள் பரவலாக இல்லாமல் போனாலும், படம் முழுக்க மேட்டுக்குடிகளுக்கு அடித்தட்டு மக்களின் வேடங்களைப் போட்டிருப்பது ஆங்காங்கே அப்பட்டமாகத் தெரிகிறது. குறிப்பாக ஆர்யா விஷாலின் அப்பா ஷிரிகாந்த், அம்பிகா போன்றவர்கள். அம்பிகாவின்(விஷால்- அரவாணியின் அம்மா) குரல் கதைக்குள்ளிருந்து ஒலிக்காமல் கதைக்கு வெளியே சென்று அந்நியத்தன்மையை உண்டாக்கி படத்திற்குப் பலவீனத்தைச் சேர்க்கிறது.