முருகனுக்கு வேலையே அந்தப் பாலத்தில்தான். பள்ளி முடிந்து வீடு வந்ததும் புத்தகைப்பையை ஒரு மூளையில் வைத்துவிட்டு தூண்டிலை எடுத்துக்கொண்டு அந்தப் பாலத்திற்கு ஓடிவிடுவான்.
பரப்பரப்பு இல்லாத ஓய்ந்த சாலைக்குக் குறுக்காக ஓடும் ஆறு. மேட்டுக்கம்ப ஆறு என்றுத்தான் வழக்கமாகச் சொல்வார்கள். நாகா லீலீட் பெரிய ஆறு அடித்துக் கொண்டு வரும் அனைத்துக் குப்பைகளும் இங்குத்தான் வந்து சேரும். பிறகு ஒரு வாரத்திற்குக் கம்பத்திலுள்ள அனைவரின் உடலிலும் வீட்டிலும் சாப்பாட்டிலும் அதே வாடைத்தான்.
அந்த ஜாலான் லாமா ஆற்றிற்கு மேல் இருந்த பாலம் கயூ பாலாக் கட்டையால் செய்யப்பட்டது. பல வருடங்களுக்குத் தாங்குகிறது. எப்பொழுதாவது செம்பனை தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு போகும் லாரியைத் தவிர அவ்வப்போது சில வாகனங்கள் வந்து போகும்.
அன்று பள்ளி முடிந்து முருகன் தூண்டிலைத் தூக்கிக் கொண்டு தனது சைக்கிளில் அந்தப் பாலத்திற்கு வந்தான். தூரத்துக் குருவிகள் அலறல் தவிர சத்தமே இல்லை. பாதி செம்பனை அழிக்கப்பட்ட காடு அது. எதற்காகவோ அந்தக் காட்டின் பெரும்பகுதியை அழித்துவிட்டார்கள். ஒரு சிறு சத்தமும்கூட வெறித்துப் போயிருக்கும் அந்தக் காட்டின் பகுதியில் எதிரொலிக்கப்படும். பாலத்தின் நடுவில் அமர்ந்து தூண்டிலை ஆற்றில் வீசினான். தூண்டின் கொக்கி ஒரு கணம் மூழ்கி மீண்டும் தடுமாறி குப்பென்று வெளியே வந்தது.
‘நாளைக்காவது அந்தச் சண்ட மீனைப் பிடிச்சிருவியா?’ என அவன் நண்பன் சுகுமாறன் கேட்டதே அவன் ஞாபகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
கடந்த 2 வாரமாக அவனிடம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சண்டை மீன் எங்கிருந்து வருகிறது என அவனுக்குத் தெரிந்ததே இல்லை. அநேகமாக நாகா லீலீட் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம். ஒரு நாளும் அவனிடம் சிக்கியது இல்லை. அபூர்வமாகவே சண்டை மீன்கள் இப்படிச் சிறிய ஆறுகளுக்கு வரும். அவ்வளவு சாதூர்யமாக யாருக்கும் சிக்காது.
ஆறு அமைதியில் இருக்கும் தருணத்தில் சட்டென சீறிப் பாய்ந்து அது மீண்டும் ஆற்றிற்குள் நுழையும்போது முருகனுக்கு வாய்ப்பிளக்கும். கருப்பும் செம்மண் வர்ணமும் கலந்த ஒரு பளப்பளப்பு. வெய்யில் பட்டு மின்னும் உடல். பறவையின் இறக்கையை அதன் வாலில் வைத்துத் தைத்தது போன்று ஒரு தோற்றம்.