(அடர்ந்த வனம்- ஒரு தீ பந்தம் எரிந்து கொண்டிருக்கிறது)
வழிப்போக்கன்: உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன். வெகு சமீபத்தில் உங்களின் இந்தக் கோமாளியின் முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.
கோமாளிபதி: அப்படியா? கட்டாயமாக என்னை மேடைகளில் பார்த்திருக்கக்கூடும். என்னிடம் ஒரு மேடைக் குறிப்புகள்/ மேடையில் நான் பேசுவதற்கென்றே ஒரு உரை குறிப்பு உண்டு. அதையும் பார்த்ததுண்டா?
வழிப்போக்கன்: ஆமாம். பலருக்குத் தெரியும். வெளியில் இது பற்றி பேசிவிட்டு, இடைவேளையாகக் காரி உமிழ்ந்து தள்ளுகிறார்களாம்.
கோமாளிபதி: அப்படியா? மிக்க மகிழ்ச்சி. பெருமையாக உள்ளது. என் பெருமையில் உங்களுக்குப் பரிச்சயமான ஏதாவது எருமையை மேய விடமுடியுமா?
வழிபோக்கன்: மன்னிக்கவும். உங்களது 10 வருடத்திற்கும் மேலான அந்த மேடை குறிப்புக்கு முன் எருமைகளுக்கும் கொஞ்சம் கௌரவம் உண்டு. ஆதலால். . அது இயலாது.
கோமாளிபதி: அப்படியா! மிக்க மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி. நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவன். என்னுடைய அந்தப் பாரம்பரிய உரை குறிப்பு எங்கோ தொலைந்துவிட்டதால், பெரும் பதற்றத்திற்க்குள்ளாகியுள்ளேன். எனது இருப்பு அர்த்தமற்றுப் போய்விடும் என்கிற அச்சத்தில் வனத்திற்கு ஓடி வந்துவிட்டேன்.
வழிப்போக்கன்: உங்களது இலக்கிய மேடை குறிப்புகள் காணவில்லையா? ஐயகோ! வருடந்தோறும் இலக்கிய விமர்சனம் என்கிற பெயரில் நீங்கள் முன்வைக்கும் குப்பைகளை இனி பொதுமக்களும் சில அப்பாவி எழுத்தாளர்களும் கேட்க முடியாதா? இது எத்துனைப் பெரிய விடுதலை தெரியுமா?
கோமாளிபதி: விடுதலையா? இது பெரிய இழப்பு. காலம் காலமாக அதை நம்பித்தான் எனது சிறுகதை விமர்சனங்களைக் கொடுத்து வருகிறேன். சதி செய்து யாரோ எனது மேடை இலக்கிய குறிப்புகளைத் திருடிவிட்டார்கள். அதைத் திருடியவர்களின் கைகள் நெருப்பில் பொசுங்க வேண்டும்.
வழிப்போக்கன்: நிதானமாக இருங்கள். நீங்கள் மெத்த படித்தவர். பட்டம் பெற்றவர். நீங்கள் அறியாததா? உங்களின் மேடை பசப்பலில் உங்களின் மேதாவித்தனத்தின் உச்சம் வெளிப்படும் தருணத்தில் உங்கள் கைகளில் வலுவாகச் சிக்கிக் கிடக்கும் அந்த 10 வருடத்திற்கும் மேலான இலக்கிய குறிப்புகளை நீங்கள் வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டிருப்பீர்களே, ஞாபகம் இருக்கிறதா? உங்கள் வன்முறையான பிடியிலிருந்து அந்த ஒப்பீட்டு இலக்கிய குறிப்புகள் எப்படித் திருடப்பட்டிருக்கும்?
கோமாளிபதி: தம்பி. அதிகம் பேசாதே. நீ என்போல அதிகம் படிக்காதவன். படித்தவனுக்கு எங்கும் எப்பொழுதும் எதையும் பேசவும் சொல்லவும் உரிமையும் தகுதியும் இருக்கின்றன. நீயும் உன்னைப் போல குறைவாகப் படித்தவர்கள் வாயைப் பொத்திக் கொண்டு அருகில் பம்மிக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் உனக்கு விதிக்கப்பட்டது. அதை மீறுவதற்காக இலக்கியம், விமர்சனம் என்று எனதுரிமையைப் பறிக்காதே. நாட்டின் சிறுகதை போக்குகள் எப்படி இருக்கின்றன என்பது பற்றி எனக்குத்தான் தெரியும். கைவிடப்பட்ட பெற்றோர்கள், வியாபாரத்தில் தோல்வியடைந்த வியாபாரியின் முன்னேற்றம், காதலில் முன்னேறத் துடிக்கும் கல்லூரி மாணவர்கள், சோதனையில் விரக்தியடைந்த இளைஞனின் வாழ்க்கை முன்னேற்றம் என இப்படியான தளங்களில் சிறுகதை எழுதப்பட வேண்டும். அவ்வப்போது வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த வேறு இனத்தைச் சேர்ந்த கதைப்பாத்திரங்களும் கதையில் கட்டாயம் வரவேண்டும். அதுதான் சிறுகதை. நான் சொல்வது போலத்தான் படைப்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பரிசு கிடைக்கும்.
வழிப்போக்கன்: இதை எங்குச் சொன்னீர்கள்?
கோமாளிபதி: இதை ஒரு பரிசளிப்பு விழா மேடையில் அடுத்த வருடம் கதை எழுதவிருக்கும் பலருக்காகச் சொன்னேன்.
வழிப்போக்கன்: இதைச் சொல்லும் நீங்கள்தான் அடுத்த வருடமும் அந்தப் போட்டிக்கான நீதிபதி என்று எல்லோருக்கும் தெரியுமா?
கோமாளிபதி: ஏன் தெரியாது? அடப்பாவி மானுடா? அது எழுதி வைக்கப்பட்ட மிகச் சிறந்த வரலாறு. பலர் கேலி செய்தாலும் விடமாட்டேன் என்கிற பிடிமானத்துடன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். யார் தடுத்தாலும் விடமாட்டேன்.
வழிப்போக்கன்: அப்படியென்றால் அடுத்த வருடம் கதை எழுதுபவர்கள் உனது கோமாளித்தனமான மேடை பேச்சுக்காகவே எழுதுவார்கள் என்பது உறுதி. ஒட்டு மொத்த சமூகத்தையே ஒரு போட்டியின் மூலம் நீ நடத்தும் சர்வதிகாரத்தின் மூலம் கோமாளிகளாகப் படைக்கவிருக்கிறாய், அல்லவா?
கோமாளிபதி: ஏன் இத்தகையதொரு குற்றச்சாட்டு? அப்படியேதும் தெரியவில்லையே. என் எதிர்ப்பார்ப்பை மட்டுமே வெளிப்படுத்தினேன். இந்த நாட்டின் இலக்கியத்தைத் தீர்மானிக்கும் சக்தி எனது கல்வியறிவிற்கும் திறனாய்வு கல்விக்கும் உண்டு.
வழிப்போக்கன்: நல்லது. உனது எதிர்ப்பார்ப்பிற்கும் நீ நினைப்பது போலும் இங்குள்ள எழுத்தாளர்களையும் இலக்கியத்தையும் வடிவமைக்க முனைகிறாய்! உன் முதுகு தண்டைச் சொரிந்து கொள்ள கருவியாக போட்டிக்கான பரிசுகளை முன்னிறுத்தி படைப்பாளனின் சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்கிறாயா?
கோமாளிபதி: பிடிக்கவில்லையென்றால் அவர்களெல்லாம் ஏன் எழுத வேண்டும்? எனக்கு வேண்டியது என் திறனாய்வை வேதமாகப் பருகி தொலையும் ஒரு கூட்டம் மட்டுமே. எதிர்க்க நினைப்பவன் வேறெங்கிலும் எழுதிக் கொள்ளட்டும். முதல் பரிசு வேண்டுமென்றால் என்னைத் திருப்திப்படுத்தும் வகையில் எனக்கு சலனத்தை ஏற்படுத்தும் வகையில் படைத்து அனுப்பு. இல்லையென்றால் வெறுமனே இரு.
வழிப்போக்கன்: நீ பிரயோகிக்கும் ஆயுதம் மிகவும் ஆபாசமாக இருப்பதை நீ உணராதிருப்பது உனது மறுக்கும் ஆற்றலைக் காட்டுகிறது. இந்தச் சமூகம் உனது திறனாய்வுகளுக்கு முன் மண்டியிட்டுக் கிடக்க, உன் பெயருக்குப் பின் வரக்கூடிய அந்தப் பட்டங்கள்தான் காரணமா?
கோமாளிபதி: அடப்பாவமே! உனக்குத் தெரியாது. நான் சொன்னதைப் போலவே என்னைத் திருப்திப்படுத்தும் வகையில் கதை எழுதி அனுப்ப தயாராக இருக்கும் பல அடிமைகள் எனக்குண்டு. அவர்களுக்கு வேண்டியது படைப்பு என்கிற தரத்தைக் கடந்த புகழ், எனக்கு வேண்டியது என் எதிர்ப்பார்ப்பின் வெற்றி. என் திறனாய்வுக்கு ஒரு தீனி. அவ்வளவே.
வழிப்போக்கன்: தன் சுதந்திரத்திற்கு எழுத நினைக்கும் எழுத்தாளர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கோமாளிபதி: அவர்கள் முட்டாள்கள். நமக்கு வேண்டியது எங்களைப் போல சில நகல்கள். நிசமல்ல. நகல்களின் பெருக்கம் அலாதியான ஆசுவாசத்தை ஏற்படுத்துகிறது. புதுமை நவீனம் என எவனாது பேசிக் கொண்டு உள்ளே வந்தால் கொதித்து எழுந்திடுவோம்.
வழிப்போக்கன்: இந்த அடர்ந்த வனத்தில் இப்பொழுது என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?
கோமாளிபதி: எனது மேடை குறிப்புகளை இரவும் பகலும் தேடிக் கொண்டிருக்கிறேன். காணாமல் போன ஒரு வரலாறின் சோகம் இது. இந்த நாட்டில் பல வருட காலமாக ஒரே மாதிரி விமர்சிக்கும்/ திறனாய்வு செய்யும் ஒரு தகுதியான ஆள் வேறு யார் இருக்க் முடியும்?
வழிப்போக்கன்: போட்டிகளுக்கு நீதிபதிகள் யாரென்று தெரியக்கூடாது என்பதுதானே விதி? அதெப்படி இந்தப் போட்டிக்கு மட்டும் உங்களைத் தவிர வேறு யாரும் தலைமையில் இருக்கமாட்டார்கள் என உறுதியாக மக்களுக்குத் தெரிகிறது?
கோமாளிபதி: அன்றாடம் பத்திரிக்கையில் அறிக்கை விடுகிறேனே. எல்லோரும் என்னை நம்புகிறார்கள். என்னைவிட்டால் வேறு தகுதியான ஆள் யாரும் இல்லை என்று அந்தக் கடவுளுக்கே தெரியும்போது உனக்கெப்படி தெரியாமல் போனது? மூடனே!
வழிப்போக்கன்: கடைசியாக மக்களுக்கு நீங்கள் சொல்லும் கருத்து?
கோமாளிபதி: யாராவது எனது மேடை விமர்சனக் குறிப்புகளைத் தெரிந்தோ தெரியாமலோ எடுத்திருந்தால் தயவு செய்து திரும்பவும் என் இடத்திலேயே வைத்துவிடுங்கள். உங்களை நான் காட்டிக் கொடுக்கமாட்டேன். என்னை நம்புங்கள். அந்தக் குறிப்புகள் கிடைக்கவில்லையென்றால் நானும் என் நாட்டின் இலக்கியமும் தோல்வியடைந்துவிடும். ஆகையால் நம்புங்கள் நான்தான் இந்த நாட்டு இலக்கியத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன்.
(முல்லேசியா எனப்படும் பூமித்திய ரேகையிலிருந்து 14000 கிலோ மீட்டர் உள்ளே, பூமிக்கடியில் 25000 கிலோ மீட்டர் ஆழத்தில் நடந்த உரையாடல்)
(முல்லேசியா எனப்படும் பூமித்திய ரேகையிலிருந்து 14000 கிலோ மீட்டர் உள்ளே, பூமிக்கடியில் 25000 கிலோ மீட்டர் ஆழத்தில் நடந்த உரையாடல்)
(அதிகாரத்தின் குரல் ஓங்கி ஒலித்தது அடர்ந்த வனத்தில்)
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா