மின்னஞ்சலில் நகைச்சுவை சித்திரங்கள் வந்திருந்தன. குழந்தைகளின் விருப்பமான கார்ட்டூன்களின் கதாநாயகர்கள் 50 வருடத்திற்குப் பிறகு எப்படி இருப்பார்கள் என்கிற கற்பனையை மையமாகக் கொண்டு வரையப்பட்ட சித்திரங்கள் அவை. சூப்பர்மேன், பைடர்மேன், பார்பி டோல் போன்ற குழந்தைகளின் கதாநாயகர்கள் வயதான தோற்றத்துடன், தளர்வின் பிம்பமாகக் கற்பனை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தபோது ஒட்டுமொத்த பால்யத்தின் அதிசயங்களையே கேலி செய்வது போன்ற முயற்சிக்குரிய சித்திரங்களாகத் தெரிந்தன.
குழந்தைகள் தனது பால்யத்தைக் கடந்துவிடுகிறார்கள் ஆனால் குழந்தை பருவம் அப்படியே ஒரு விளையாட்டு மைதானம் போல அடுத்து வரும் குழந்தைகளின் இரைச்சல்களுக்காகவும் காலடி சப்தங்களுக்காகவும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றது. இதுதான் பால்யம் என்கிற மாபெரும் கனவின் தரிசனம். எல்லோரும் சென்றடையக்கூடிய ஒரு பாதையின் சந்திப்பு, கடந்துவிட்டாலும் அவை ஒரு நினைவாக நமக்குள் பதிந்துவிடுகின்றன.
எனது குழந்தை பருவம் டோம் அண்ட் ஜெர்ரியின் துரட்டிப் பிடிக்கும், எவ்வளவு துரட்டியும் பிடிப்படாமல் தப்பிக்கும் ஜெர்ரியின் தப்பிதல் சாகசத்திற்கு நிகரானது. சிறு சிறு முயற்சிகளுக்குப் பிறகே மறந்துபோன எனது பால்ய நினைவுகளை மீட்டுக் கொண்டு வர முடிகிறது. டோம்மை போல அதிவேகமாக கடந்த காலத்தைத் துரட்டி பிடித்து சௌகரியமான புரிதலுக்குக் கொண்டு வரும்போது குழந்தையில் எனது கார்ட்டூன் கதாநாயர்கர்களும் உடன் வந்துவிடுவதுண்டு. அப்பொழுது நான் பார்த்த டோம்மிற்கும் ஜெர்ரிக்கும் வயதாகியதே கிடையாது. இன்னமும் அவர்கள் துரட்டிக் கொண்டும் ஓடிக் கொண்டும் தப்பித்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.
“இந்த டோம் எப்பத்தான் ஜெர்ரியைப் பிடிச்சி சாப்டபோது?”
“இவ்ள கஸ்டப்பட்டும் அந்த ஜெர்ரியத்தான் சாப்டனுமா டோம்?”
சொற்கள் பால்யத்தின் மீதான படிமத்தில் அணை உடைந்து கட்டுக்குள் சிக்காத நீரைப் போல பாய்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொருமுறையும் பால்யத்தின் சொற்கள் ஒழுங்கிற்கு எதிரானதாக தனக்கான சுவார்சயங்களை உற்பத்தி செய்துகொண்டே கடக்கின்றன. கார்ட்டூன்களை மிக கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளின் சொற்களை அவர்களின் அவதானிப்புகளை நீங்கள் பார்த்ததுண்டா? அவை நமக்கு ஒவ்வாத ஒரு வடிவத்தில் நகரக்கூடியவை. பெரியவர்களின் முதிர்ச்சி எப்பொழுதும் அந்தக் கற்பனைகளுக்கும் சொற்களுக்கும் விரோதமானதாகவே இருந்து வருகின்றன.
“அப்பா. . சூப்பர்மேன் இப்பெ வானத்துலதானே இருப்பாரு?”
கார்ட்டூன் கதாநாயகர்களின் ஸ்டிக்கர் படங்களைச் சேகரிப்பது, அவர்களின் சித்திரங்களைச் சுவரில் அரையும்குறையுமாக வரைந்து வைப்பது, கார்ட்டூன் மனிதர்களின் படம் வரைந்த தலையனை முதல் சட்டைவரை அணிந்து கொள்வது என குழந்தைகளின் உலகம் கார்ட்டூன்களானவை. அவை மீள முடியாத ஒரு பால்யத்தின் சொல் போல மிகவும் சக்தி வாய்ந்தவை. பெரியவர்களுக்கு மிக அற்பமாகத் தோன்றும் கனவுகளின் இலைகளால் பிண்ணப்பட்டவை அவர்களின் உலகம்.
மின்னஞ்சலில் வந்த இந்தக் கார்ட்டூன்களுக்கு வயதானால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை பெரியவர்களின் முதிர்ச்சிக்குரிய கேலியாக குழந்தைகளின் உலகத்தை அடியில் கீறிவிடுவது போல, அவர்களின் கனவுகளின் சிறகுகளை அபக்கறிப்பது போல மிகக் கொடுமையானதாகப் படுகிறது.
சூப்பர்மேன் தளர்ந்துவிட்டான் என்பதும், அல்லது பைடர்மேன் இறந்துவிட்டான் என்பதும் குழந்தைகளின் உலகம் தனது சுவார்சயங்களை இழந்துவிட்டதற்கான தொடக்கமாகும். அதே போல பால்யத்தைக் கடந்துவிட்ட பெரியவர்களுக்கும், கார்ட்டூன்களின் சித்திரங்கள் மீது செலுத்தப்பட்ட இம்மாதிரியான கிண்டலகளும் கேலிகளும் அவர்களின் குழந்தை பருவத்தின் நினைவுகளைச் சிதைப்பதற்கு நிகரான வன்முறையாகவே அவதானிக்க தோன்றும்.
எனது பழைய வீட்டில் என் அறை சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் கார்ட்டூன் ஸ்டிக்கர்களுக்கு வயதாகிவிடுவதில்லை. இன்னமும் அவைகள் எனது சுவரில் மிதந்து கொண்டிருக்கின்றன பால்யத்தின் மீள முடியாத கனவுகளாக.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா