ஜனவரி முதலாம் நாள் சிங்கப்பூரில் மிகவும் ஆடம்பரமான ஓர் அரங்கில் கரிகாற் சோழன் விருதளிப்பு விழா தொடங்கியது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு.இராசேந்திரன் அவர்களும் பாடலாசிரியரும் கவிஞருமான நா.முத்துகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் இந்த விழாவை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். செயலாளர் சுப.அருணாச்சலம் அவர்கள் வழிநடத்த நிகழ்வு வரையறுக்கப்பட்ட நேரத்தின்படி நடைப்பெற்றது.
மண்டபத்தினுள் நுழைந்ததுமே சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சிக்காக நேர்காணல் ஒன்று செய்யப்பட்டது. கரிகாற் சோழன் விருது மூலம் புலம் பெயர் இலக்கியங்களின் மீது உலகப் பார்வையை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் முஸ்தப்பா அறக்கட்டளையின் இந்த முயற்சி பாராட்டத்தக்கவையாகும் எனக் குறிப்பிட்டேன்.
துணைவேந்தர் திரு.இராசேந்திரன் உரையாற்றும்போது இந்தாண்டிற்கான விருதுகள் வழங்கப்படுவதிலிருக்கும் தகுதிகளை மேலோட்டமாகக் கூறினார். மலேசியாவின் தொழிலாளர்களின் வாழ்வையும் நகர்ச்சையையும் அவர்களின் விளிம்பு நிலையையும் காட்டும் வகையில் எழுதப்பட்ட நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் ஒரு அருமையான நாவல் எனவும் குறிப்பிட்டார். ஒரு தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் நடக்கும் மனச்சிதைவுகளை மையமாகக் கொண்டு பட்டணத்தில் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுவதைக் காட்டும் நல்ல நாவல் எனவும் குறிப்பிட்டார்.