Monday, October 11, 2010

பிரபஞ்சன் வருகையும் மலேசியாவிற்கு வரும் எழுத்தாளர்களும்

9 ஆம் திகதி தொடங்கி 10 ஆம் திகதி வரை கோலாலம்பூரில் இரண்டு நாள் நிகழ்வாக சிறுகதை பட்டறை நடத்தப்பட்டது. இந்தச் சிறுகதை பட்டறையைத் தமிழக எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் மலேசியாவிற்கு வருகையளித்து நடத்திக் கொடுத்தார். முதல் நாள் தொடக்க விழாவில் பிரபஞ்சன் தமிழ் இலக்கியம் எத்திசையில் எனும் தலைப்பில் இலக்கிய உரை ஆற்றினார்.

மலேசியாவின் பல முக்கியமான முக்கியமில்லாத எழுத்தாளர்களும் இப்பட்டறையில் கலந்துகொண்டனர். மேலும் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றும் இலக்கியம் போதிக்கும் ஆசிரியர்கள் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் இப்பட்டறையில் கலந்துகொண்டனர். ஆசிரியர்கள் நிரம்பிய மேடை என்பதால் எழுத்தாளர் பிரபஞ்சன் எளிமையான முறையிலேயே தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.

ஒரு சிறுகதையைக் கதையிலிருந்து வித்தியாசப்படுத்தி புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார். கதை என்பது வெறும் நியதிகளை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடும், ஆனால் சிறுகதை என்பது பல சம்பவங்களில் தொடங்கி ஒரு மனிதனைக் கண்டடையும் இடத்தில் வந்து நிற்கும் எனவும், நகைச்சுவையில் தொடங்கி வாழ்வின் ஆத்ம தரிசனத்தில் வந்து வலுப்பெறும் எனவும் கூறினார். பெரும்பாலோர் நல்ல கதையைத்தான் எழுதுகிறார்களே தவிர சிறுகதையை அல்ல எனச் சாடினார்.

மேலும் தமிழிலுள்ள பல நல்ல சிறுகதைகளை உதாரணமாகக் காட்டி அது எப்படிச் சிறுகதையாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும் குறிப்பிட்டார். தமிழ்ச் சிறுகதை சூழலில் புதுமைப்பித்தனை வாசிக்காதவர்கள் ஒரு நல்ல சிறுகதையைப் படைத்துவிட இயலாது எனப் பிரபஞ்சன் தெரிவித்தார். மேலும் உலகச் சிறுகதை வாசிப்பில்லாதவர்கள் தட்டையான தேக்கம் நிறைந்த சிறுகதையையே தருவார்கள் என அவர் நம்புவதாகவும் கூறினார்.

ஞாயிறு இரவில் பட்டறை முடிந்ததும், வல்லினம் நண்பர்கள் அனைவரும் பிரபஞ்சனைச் சந்தித்து உரையாடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரபஞ்சன் மலேசியா வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பதாகவே அவரை அழைத்து இந்தச் சந்திப்புத் தொடர்பாக அவரிடம் கேட்டிருந்தேன். மூன்றுமுறை பிரபஞ்சனை அழைத்து இது குறித்து உறுதியும் செய்திருந்தேன். டாக்டர் சண்முகசிவாவும் நண்பர் ம.நவீனும் தொலைப்பேசியின் வாயிலாகப் பிரபஞ்சனை எங்களின் சந்திப்பிற்கு வரவழைக்க முயற்சிகள் செய்தும் கடைசியில் சந்திப்பை நடத்த முடியாமல் போனது.

பிரபஞ்சன் அநேகமாக இதைவிட தீவிரமான ஓர் இலக்கிய கலந்துரையாடலை பட்டறைக்குப் பிறகு நடத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம் போல. அல்லது யாராவது அவரிடம் பின்நவீனத்துவம் குறித்துப் பேசுவதற்கு அழைத்துப் போயிருக்கலாம். டாக்டர் அவர்கள் பலமுறை முயன்றும் பிரபஞ்சனை அழைத்து வரமுடியவில்லை. எனக்குத் திடீரென பிரமானந்த சுவாமி அவர்களின் மீது கோபம் வந்துவிட்டது.

அண்மையில் பிரபல எழுத்தாளரும் சிந்தனையாளருமான ஜெயமோகனை கூலிம் தியான ஆசிரமத்தின் தலைவர் சுவாமி பிரமானந்தாதான் சிரமப்பட்டு மலேசியாவிற்குக் கொண்டு வந்தார். மேலும் அவர் யாரெல்லாம் ஜெயமோகனை வைத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கேட்டார்களோ அவர்கள் அனைவருக்கும் தாராள மனதுடன் வாய்ப்பளித்தார். வாய்ப்பு கேட்ட யாருக்கும் எந்தச்சிறு தயக்கமுமின்றி அவருக்கே உரிய புன்னகையுடன் ஜெயமோகனை அனுப்பி வைத்தார். ஆனால் ஜெயமோகன் மலேசியாவிலிருந்து விடைப்பெற்றுச் செல்லும்போது வல்லினம் கலை இலக்கிய விழாவிலும் கூலிம் தியான ஆசிரமத்திலும் இருந்த சமயங்களில்தான் தான் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டார்.

இன்று மலேசியாவிற்கு வரும் எழுத்தாளர்கள்/படைப்பாளர்களைச் சந்திக்க வேண்டுமென்றால் முதலில் அவர்கள் யாரால் அழைத்து வரப்படுகிறார்கள் என்பதைத் தீவிரமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த மாதிரி படைப்பாளர்களுடன் நாம் வட்ட மேசை மாநாடா நடத்தப் போகிறோம் அல்லது நம் செய்யும் தொழிலுக்கு அவரைப் பாட்னராகச் சேர்த்துக் கொள்ளப் போகிறோமா? பிரபஞ்சனின் படைப்புகள் எல்லாராலும் வாசிக்கப்பட்டிருக்கிறது. அவரின் படைப்புலகம் சார்ந்தும், மேலும் இங்கு நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியக் களம் சார்ந்தும் அந்தப் படைப்பாளருடன் பகிர்வதாகவே திட்டம்.

மேலும் தீவிர/தரமான எழுத்தாளர்களைச் சந்திக்கக்கூடும் எனகிற நம்பிக்கையில் மலேசியாவிற்கு வந்து சேரும் முக்கியமான படைப்பாளிகளுக்குக் கடைசிவரை தெரிவதில்லை அவர்களின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது சால்வையும் மாலையும் என. மலேசியாவிற்கு வந்து சேரும் பல படைப்பாளிகள் சுற்றுலாவிற்கும் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கும் அல்லது இலக்கிய போட்டிகளுக்கு நீதிபதிகளாகவும் கொண்டு வரப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். கடைசிவரை அவர்களுடன் நேர்மையான இலக்கியச் சந்திப்பை நடத்துவதில் தோல்வியே ஏற்படுகிறது. (குறிப்பு: இலக்கியம் – கலை- இசை- நடனம் என எல்லாவற்றுக்கும் நீதிபதிகளாக தலைமை நடுவர்களாக இந்தியாவின் ஆளுமைகளையே நம்பி இருக்கிறோம். எப்பொழுது இங்குள்ள கலை உலகத்தைச் சேர்ந்த மூத்தவர்களின் மதிப்பீடும் ஆற்றலை வளர்க்கப் போகிறோம்?)

வல்லினம் ஆசிரியர் ம.நவீன் இந்த மாதிரியான இலக்கியச் சந்திப்புகளை நடத்தியுள்ளார். முதலில் மலாயாப்பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் பேராசிரியராக இங்கு வந்த இலங்கை கவிஞர் எம்.ஏ.நுக்மான்(மலேசிய தேசிய பலகலைக்கழகம்), பிறகு புலம் பெயர்ந்து எழுதி கொண்டிருக்கும் தீவிர எழுத்தாளர் ஷோபா சக்தி(கோலாலம்பூர்), இதற்கு முன்பதாக காதல் இதழ் நடத்திக் கொண்டிருக்கும்போது ஜெயமோகனை வரவழைத்திருக்கிறார். இன்னும் சில இருக்கக்கூடும். இவை யாவும் மலேசியாவில் எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான படைப்பாளிகளை ஒரு மையத்தில் இணைத்தக் குறிப்பிடத்தக்க இலக்கிய சந்திப்புகளாகும். அவருக்கு அடுத்து இப்பொழுது இந்த மாதிரி தமிழின் முக்கியமான படைப்பாளர்களை வரழைத்து இலக்கிய சந்திப்புகளை நடத்துவதற்கு கூலிம் தியான ஆசிரமத்தின் தலைவரும் இலக்கிய வாசகருமான பிராமானந்த சுவாமி அவர்களும் நவீன இலக்கிய சிந்தனைக்களமும் முனைப்பாக இருக்கிறோம்.

தொடர்ந்து, வல்லினம் அநங்கம் மௌனம் போன்ற இதழின் மூலம் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் யாவரும் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நமக்கான இலக்கியத் தனித்துவத்தை அடைந்துவிடலாம் என எழுத்தாளர் யுவராஜன் குறிப்பிட்டிருந்தார். அதற்கான தீவிர முயற்சிகள் இனி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும். விரைவில் வல்லினம் அநங்கம் நண்பர்கள் வட்டமும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களும் தைப்பிங்கில் இரண்டுநாள் இலக்கிய சந்திப்பை நடத்தவுள்ளோம். பிறகு அறிவிக்கப்படும்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா