Wednesday, July 16, 2008

சிங்கப்பூர் வருகையும் எஸ்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பும்-2




சிங்கப்பூர் நூலகம் ஏற்பாடு செய்திருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் நிகழ்வையொட்டி அவருடைய 8 சிறுகதைகள் முழு தொகுப்பாக பெயரில்லாத ஊரின் பகல்வேளை என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியீடப்பட்டு பரவலான வாசிப்பிற்குச் சென்றிருந்தது. ஒருவேளை அன்றைய நிகழ்வில் அந்தக் கதைகள் தொடர்பாக கலந்துரையாடப்படலாம் என்று தோன்றியது. ஒரு சில கதைகள் தவிர்த்து மற்ற கதைகளை நான் இன்னமும் படிக்கவில்லை. பாண்டித்துரையிடமிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். தலைப்புகள் வித்தியாசமாக இருந்தன. பிறகு நூலகத்திலுள்ள ஒரு பகுதிக்கு பாண்டித்துரை அழைத்துச் சென்றார். அவருடைய நண்பர் கண்ணன் அவர்களும் எங்களுடன் இனைந்திருந்தார். தரையில் அமர்ந்து கொண்டோம்.
புத்தகத்தைத் திறந்ததும் முதலில் எந்தக் கதை பக்க அளவில் குறைவாக இருக்கிறது என்று தேடினேன். அதுதான் வசதியாக இருக்கும். அந்தரம் என்ற கதை மட்டும்தான் கண்களில் பட்டது. பாண்டித்துரை அவர் நண்பருடன் பேசிக் கொண்டிருக்க நான் மட்டும் அந்தரத்தில் நுழைந்து கொண்டிருந்தேன். மழை துளி ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதையொட்டி வாழும் அந்தக் குடும்பத்தின் மனநிலைகளின் விவரிப்பாக கதை நகர்கிறது. அவர்கள் மட்டும் புலம் பெயராமல் அந்த மழை துளியின் இரகசியத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகக் காத்திருக்கிரார்கள். கதை அவ்வளவாக பிடிப்படவில்லை. பாண்டித்துரையும் அதையேதான் சொன்னார். எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் பெரும்பாலும் எளிமையானதாக இருந்தாலும் சில சமயங்களில் அவர் கூறும் அக நெருக்கடிகள் நம்மையும் கடந்து நிகழ்வது போல தெரிகிறது. ஆழ்ந்து வாசிக்க வேண்டும்.
நூலகத்து அதிகாரியின் குரல் ஒலி பெருக்கியிலிருந்து கிளம்பி எங்களை நெருங்கியது. எஸ்.ராம்கிருஷ்ணன் வந்துவிட்டார் வாசகர்களை வரும்படி கேட்டுக் கொண்டிருந்தார். என்னால் நம்பமுடியவில்லை. என்னை பிரமிக்க வைத்த ஓர் ஆளுமையைச் சந்திக்கப் போகிறேன். என்னை அதிகமாகப் பாதித்த எழுத்தாளரை மிக அருகில் பார்க்கப் போகிறேன். பாண்டித்துரையுடன் உள்ளே நுழைந்ததும் எஸ்.ராமகிருஷ்னன் வாசகர்களுடன் அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தார். மிகவும் எளிமையான தோற்றம். துணையெழுத்து தொகுப்பில் நான் பார்த்த எஸ்.ரா அவர்களின் முகத்தின் கோபம் களைந்து அவர் மிகவும் எளிமையாக தென்பட்டார். சிரித்துக் கொண்டே பேசினார். முன் வரிசை இருக்கையில் அமர்ந்து கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் முனைவர் லட்சுமி அழைத்தார். எழுந்து அவரிடம் சென்றபோது, ஜெயந்தி சங்கர் அங்குதான் அமர்ந்திருந்தார். முதலில் என்னால் அடையாளம் காண முடியவில்லை. சக எழுத்தாளினி என்று சொல்வதைவிட மூத்த அனுபவமுள்ள எழுத்தாளினி என்றே அவரை அடையாளப்படுத்த விரும்புகிறேன். சீனக் கலாச்சாரத்தின் மீதும் சீன இலக்கியங்கள் மீதும் ஆய்வு மனப்பான்மை கொண்ட ஒரு தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். அவருடைய புத்தகங்களை என்னிடம் கொடுத்தார். நான் சீ.முத்துசாமி எழுதிய மண் புழுக்கள் நாவலை அவரிடம் கொடுத்தேன். பிறகு எஸ்.ரா பேசுவதற்காகத் தயாரானார். அப்பொழுதுகூட என்னால் சில விஷயங்களை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தேன்.
தொடரும
கே.பாலமுருகன்