Monday, September 7, 2009

கால் முளைக்கும் பென்சில்கள்

பள்ளிப் பருவத்தில் நாம் அதிகமாகத் தொலைத்தது பென்சிலாகத்தான் இருக்க முடியும். என் ஒன்றாம் ஆண்டு பருவத்தை மீட்டுணர்ந்து பார்க்கும் தருணங்களிலெல்லாம் பென்சிலைத் தொலைத்துவிட்டு வகுப்பில் அழுது கொண்டிருந்த காட்சிகள்தான் அதிகமாக நினைவுக்கு வருகிறது. கணித ஆசிரியர் மாரியம்மா அவர்கள் உள்ளே வந்ததும் முதலில் எல்லோரையும் பென்சிலை எடுத்து மேசையின் மீது வைக்கச் சொல்லி, பென்சில் கொண்டு வராதவர்களைத் தண்டிப்பார். அப்பொழுதெல்லாம் காதைப் பிடித்து திருகுவது உயர்ந்த தண்டனையாக இருந்தது. தினமும் 5 மாணவர்களாவது பென்சிலைத் தொலைத்துவிட்டு அடி வாங்குவார்கள்.
மாணவர்களிடமிருந்து அதிகபடியாகத் தொலைந்துபோகும் பொருளாக ஏன் இந்தப் பென்சில் இருக்கிறது? அதெப்படி பென்சில் இவ்வளவு எளிமையாக நம்மிடமிருந்து தொலைந்து போகிகிறது? பென்சிலுக்குக் கால்கள் முளைத்து ஓடி போய்விடுவதாக நம்பும் மாணவர்களும் இருக்கவே செய்கிறார்கள். பென்சிலைத் தொலைத்துவிட்டு வீடு திரும்பிய நாட்களில் என் அம்மா என்னிடம் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.

“எப்படிடா உன் பென்சிலுக்கு மட்டும் கால் முளைச்சி ஓடிருதா?”

அந்தக கேள்விக்கு அடுத்தபடியாக முதுகில் ஒரு அறையும் விழுந்துவிடும். இரவில் கடவுளிடம் கேட்டுருக்கிறேன், ஏன் என் பென்சிலுக்குக் கால்கள் முளைக்கிறதென்று. இன்றும் தெரியவில்லை அதற்கான பதில்.

இப்பொழுது ஆசிரியராக பணியாற்றும் காலத்தில் எப்பொழுதும் வகுப்பிற்குச் செல்லும்போதெல்லாம் கையில் 2 பென்சிலாவது கொண்டு செல்வதுண்டு. ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடம் போதிக்கும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் இந்தப் பழக்கம் வந்துவிட்டால் அது ஆச்சார்யப்படுவதற்கில்லை. எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர், ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பாசிரியராக இருப்பதால், அவர் எப்பொழுதும் ஒரு பெட்டி பென்சில்களுடன்தான் காட்சியளிப்பார். அந்தப் பென்சில்களைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு ஒன்றாம் ஆண்டு மாணவனைப் போல மிகப் பத்திரமாக வகுப்பிற்கு நுழைவார்.


“எங்க சார், இந்தப் பிள்ளைங்க ஒவ்வொருநாளும் பென்சலெ காணாடிச்சிட்டு பாடம் செய்யாம உக்காந்துருக்காங்க. என்னாத்தான் பண்ண முடியும் சொல்லுங்க? நம்பளே பென்சில் வாங்கிக் கொடுக்கனும் போல, அப்பத்தான் முடியும். அதான் கொடுத்துட்டு உடனே வாங்கி வச்சிக்குவேன் சார்”


மாணவர்களுக்குப் பென்சிலைத் தொலைப்பது ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டிருக்கிறது. பென்சிலைத் தொலைக்காமல் வீட்டிற்குச் செல்லும் மாணவர்கள் அனேகமாக மேல்வகுப்பு மாணவர்களாகத்தான் இருக்க முடியும். ஒன்றாம் – இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வீடு திரும்புகையில் ஒரு பென்சிலையாவது விட்டுவிட்டுத்தான் போகிறார்கள். கால் முளைத்த அவர்களின் பென்சில்கள் வகுப்பறை முழுவதும் பள்ளிக்கூடம் முழுவதும் சுற்றி அலைந்துகொண்டிருக்கக்கூடும்.


“சார் என் பென்சிலே காணம் சார். இங்கத்தான் வச்சேன்”


“சார் இவன் என் பென்சில எடுத்துக்கிட்டுக் கொடுக்கவே மாட்டறான் சார்”


“சார் என் பென்சிலெ எடுத்துக்கிட்டு அவனோட பென்சிலுன்னு சொல்றான் சார்”


வகுப்பினுள் நுழைந்ததும் இப்படிப்பட்ட பென்சில் புகார்கள் ஓயாமல் வந்துகொண்டே இருக்கும். பல மாணவர்கள் ஆசிரியர் மேசைக்கு முன் வந்து நின்றுவிடுவார்கள். குழந்தைத்தனமான சொற்களுடன் தன் பென்சில் தொலைந்த கதையை அல்லது திருட்டுப் போன பென்சிலைப் பற்றிப் பேசத் துவங்குவார்கள். நான் எல்லாவற்றையும் இரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பேன். ஆக மொத்தத்தில் ஒரு மாணவனின் பென்சில் தொலைந்த சம்பவத்தில் எல்லோருக்கும் பங்கு இருப்பது போல், சம்பந்தபட்ட மாணவன் எல்லாம் மாணவர்களின் மீது புகார் கொடுத்துக் கொண்டிருப்பான். எவ்வளவு திறமையாக விசாரித்தும் பரிசோதனை செய்தும் காணாமல் போன அந்தப் பென்சிலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.


ஒருநாள் அடிக்கடி பென்சிலைத் தொலைக்கும் ஒரு மாணவனின் அம்மா வகுப்புவரை வந்து சண்டையிட்டார். தன் மகனின் பென்சில்கள் எங்கே போய்விடுகின்றன என்றும் யார் அதைத் திருடுகிறார்கள் என்றும் அதட்டிக் கொண்டிருந்தார். மாணவர்கள் மீது திருட்டு என்கிற சொல்பிரயோகம் கடுமையான ஒன்றாகவே கருதுகிறேன். சக மாணவனின் பென்சிலை எடுத்துக் கொள்வதற்குப் பெயர் எப்படித் திருட்டு என்று அவ்வளவு பெரிய சுமையை அவர்களின் சுட்டித்தனத்தின் மீது சுமத்த முடியும்?


என் பள்ளிப் பருவத்தில் சக மாணவர்களிடம் இருக்கும் வர்ணப் பென்சில்கள் மீது ஆசை அதிகமாக எழும், வீட்டிற்குச் செல்லும்போது அவனுடைய பெண்சில் பெட்டியிலிருந்து அந்தப் பெண்சிலை எடுத்துக் கொள்வேன். அதற்குப் பெயர் திருட்டு என்று பிறகுத்தான் பெரியவர்களால் கற்பிக்கப்பட்டன. ஆனால் நாம் அதைத் திருட்டு என்று அணுகுவதைவிட அவனுக்கு வேறு வகையில் அப்படிச் செய்வது தவறு என்று வலியுறுத்தி அவன் மனம் பாதிக்காதபடி செய்ய வேண்டும். ஒன்றாம் ஆண்டு மாணவர்களிடையே காணாமல் போகும் பென்சில் சம்பவங்களுக்கு அதை ஒரு திருட்டு என்று அவர்களின் குழந்தை உலகத்தைச் சிதைப்பதைவிட, காணாமல் போகும் பென்சில்களுக்குக் கால்கள் முளைத்துவிட்டது என்று சொல்லி அவர்களின் உலகத்தைக் காப்பாற்துவதே மேல் என்று நினைக்கிறேன்.


இன்றும் வகுப்பில் ஒரு பென்சில் காணாமல் போய்கொண்டே இருக்கின்றன. அந்தத் தொலைந்தபோன ஒவ்வொரு சம்பவங்களுக்கும் நான் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது, மாணவர்கள் அதை ஒரு திருட்டு என்று உணராதவரை அவர்களின் உலகத்தைக் காப்பாற்ற முயன்று வருகிறேன்.
நம்முடைய பால்ய வயதில் நாம் தொலைத்த பென்சில்களெல்லாம் இப்பொழுது திரும்ப கிடைத்தால் என்ன நேரும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? நமக்கு அருகில் ஒரு பென்சில் மலை உருவாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


“சார் என் பென்சிலுக்குக் கால் முளைச்சிருச்சி சார்” என்று சொல்லும் ஒரு மாணவனைப் பார்த்து என்ன சொல்லப் போகிறீர்கள்?


“டேய், அது இல்லைடா, எவனோ உன் பென்சிலே திருடிட்டாண்டா” என்று சொல்லப் போகிறார்களா? அவர்களின் கால் முளைத்த உலகத்தை உடைக்காதீர்கள்.


ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா


நன்றி : யுகமாயினி ஆகஸ்ட்