Friday, October 29, 2010

சன்னல் வைத்த புடவைகள் விற்பனைக்கு : கலாச்சார மயக்கம்

முன்குறிப்பு: சில சமயங்களில் வலைப்பதிவின் மூலம் செய்யப்படும் எண்ணப்பகிர்வைக்கூட பெரும் கலாச்சாரக் குற்றமாகப் பாவிக்கும் அளவிற்கு உடனடி உணர்ச்சிப்பெருக்கின் வாயிலாக ஒரு கூட்டத்தை அமைத்துப் பதற்றம் அடையும் சந்தர்ப்பங்கள் சிலருக்கு இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆகையால் இந்தப் பதிவு அந்த அளவிற்குக் கடுமையானதல்ல.

எது கலாச்சாரம்? கலாச்சாரம் நிலையானதா? ஒரு சமூகம் நம்பி வரும் கலாச்சாரம் உடைப்படும்போது, அதற்குப் பதிலான வேறு கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்ளும் அறிவு பெறப்பட்டுள்ளதா? உடனடியாக ஒரு கலாச்சாரத்தைக் கட்டாயம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அடிப்படையான நாகரிகத்தில் விழுந்திருக்கும் ஓட்டையை எங்குப் போய் உருவாக்கிக் கொண்டோம்? அல்லது கலாச்சாரம் என்பதே மிகப்பெரிய மயக்கநிலையா? வெறும் குறியீடுகளின் மூலம் கலாச்சாரத்தை ஆழ்மனதில் வேறுன்ற செய்ய முடியுமா? நவீன உலகின் பெரும் சர்ச்சை வெறும் கலாச்சாரம் என்கிற சொல் மட்டும்தானா?

எது கலாச்சாரம்?

பெரிய விளக்கமெல்லாம் கொடுத்து ஆய்வுக்கட்டுரையெல்லாம் செய்யப்போவதில்லை. பதிலைத் தேடி நகரும் குழப்பநிலை என வைத்துக் கொள்ளலாம். எதெல்லாம் சிறுவயதில் கலாச்சாரம் என எனக்கு அடையாளம் காட்டப்பட்டதோ அதெல்லாம் அடுத்ததடுத்த காலக்கட்டங்களில் உடைப்பட்டு தனது இருப்பைக் கேள்விக்குறியாக்கி கலாச்சாரம் என்கிற கோப்பையின் ஓட்டையிலிருந்து நழுவி விழுந்தது என்றே சொல்லலாம்.

எது கலாச்சாரம் எனத் தீர்க்கமாக அடையாளப்படுத்துவதில் ஆரம்பநிலையிலேயே குழப்பம் இருந்திருக்கிறது. ஆகையால் கலாச்சாரம் என்பதற்கு ஒவ்வொரு காலம்தொட்டே பல அறிஞர்கள் சமூக ஆய்வாளர்கள், தத்துவவாதிகள், ஆன்மீகவாதிகள் வெவ்வேறுமுறையில் விளக்கமளித்துள்ளார்கள். கலாச்சாரம் என்பது உறுதியானதாக இருந்திருக்குமாயின் அது தொடர்ந்து எல்லாம் காலக்கட்டங்களிலும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை உருவாக்கியிருக்கக்கூடும். ஆனால் அது அந்தந்த காலத்தில் தோன்றிய ஆளுமைகளால் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு புதிய புரிதலின் மூலம் மாற்றப்பட்டு தொடர்ந்து தகர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. பொய்யாக்கப்பட்டும் வந்திருக்கின்றன.

நவீன உலகின் அத்துனைச் சவால்களுக்கும் மத்தியில் வந்து நிற்கும் ஒரு சராசரியனுக்குக் கலாச்சாரம் பெரும் குழப்பமாகவும் மாயையாகவும் தோன்றக்கூடும். மேலும் மனிதர்களை வர்க்க ரீதியாக வகைப்படுத்தி அவர்களின் வாழ்க்கைமுறைகேற்ப மிக வசதியாக ‘உயர் கலாச்சாரம்’ ‘இரண்டாம்தர கலாச்சாரம்’ எனப் பிரயோகிக்கப்பட்டுள்ளன. இதனை உயர் ரக மாயை எனவும் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக நடுத்தர வாழ்வின் விளைவால் (சமூக மதிப்பீடுகளின் படி) இரண்டாம்தர கலாச்சாரத்தின் சொந்தக்காரரான ஒருவர், பொருளாதார ரீதியில் மேம்பட்டு மேல்தட்டு வாழ்க்கைக்குள் நுழையும்போது அவரின் வாழ்வை சிந்தனையை ‘உயர் கலாச்சாரம்’ என்கிற வகையில் அடையாளப்படுத்த நேர்கிறது. அத்துனை வகையான சமூக அங்கீகார விழாக்களும் அவருக்காக நடத்தப்படுகின்றன. முன்பொரு சமயத்தில் அவருடைய கருத்துகள் அவருடைய வீட்டின் எல்லையைக்கூட கடந்திருக்காது, ஆனால் இப்பொழுது வினாடிக்கு வினாடி அர்த்தம் புரியவிட்டாலும் கைத்தட்டப்படுகிறது. கலாச்சாரத்தை அவர்களின் மூலம் பிரச்சாரம் செய்கிறார்கள். எளிய மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். இன்று வாழ்வில் உயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் அவர்களின் பின்புலத்தை வைத்து கலாச்சாரம் மாற்றம் காண்கிறது.

கலாச்சாரம் எப்படி ஒருவனுக்குள்ளிருந்து வெளியேறுகிறது? எடுத்துக்காட்டு: குரூண் நகரத்தில் சீனக் கிழவன் ஒருவன் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி பணம் கேட்டு, அதனைக் கொண்டு சூதாடுவான் என அறிய முடிந்தது. அரைக்கால் சட்டையுடன் மேல் உடலில் துணியில்லாமல் எல்லாம் காரையும் நிறுத்தக்கூடியவன். அவன் முன்பு ‘நம்பர் அடித்து’ பெரிய பணக்காரனாக இருந்தானென்றும் பலருக்குப் பணம் கொடுத்து உதவியுள்ளான் என்றும் தெரிந்துகொண்டேன். பிறகொரு சமயத்தில் பணமெல்லாம் ஏமாற்றப்பட்டதால் மனக்குழப்பம் ஏற்பட்டு பைத்தியமாகிவிட்டான் எனவும் சொல்லப்பட்டது. அவன் முன்பு பணக்காரனாக இருந்தபோது அவன் வாழ்வின் மூலம் வெளிப்பட்ட எல்லாம் கலாச்சாரமும் இன்று உடைப்பட்டு காணாமல் போய்விட்டன. இப்பொழுது கலாச்சாரம் குறித்து பிறருக்கு இருக்கும் அத்துனை உயர்வான நம்பிக்கைகளும் அவனுக்கு முன் அர்த்தமற்றது. வாழும் காலத்திலேயே சமூகத்தின் அத்துனைக் கலாச்சாரத்தையும் ஒரு தனி சிதைந்த பிம்பமாக இருந்து உடைத்து நொருக்குகிறான். இப்படி நம்மிடையே வாழ்பவர்கள் நம் நம்பி கொண்டிருக்கும் கலாச்சாரத்தை பெரும் மாயையாக மாற்றி வருகிறார்கள்.

பொருளாதாரம் நிர்ணயிக்கும் அகத்தின் ஆரோக்கியத்தைக் கலாச்சாரத்தால் அசைக்கவே முடியவில்லை. அவன் அப்படி மனம் பாதிக்கப்பட்ட சமயத்தில் சமூகத்திற்கு அவன் மீது பரிதாபம் ஏற்பட்டிருக்கும், அவனுடைய முந்தைய கலாச்சாரம் இம்மியளவு அவன் மீது மதிப்பை மிச்சமாக வைத்திருக்குச் செய்திருக்கும், ஆனால் நாளடைவில் அவனுடைய பழக்க வழக்கங்கள்(சிதைந்த கலாச்சாரம் எனலாமா?) எரிச்சலையும் கோபத்தையும் பரவலாக ஏற்படுத்தியிருக்கும். பிறகொருநாளில் அவனுடைய செயல்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் வெறுப்பாக மாறியிருக்கும். இதுதான் வழக்கத்திற்கு மாறான சுயமாகக் கட்டமைக்கப்பட்ட சமூக ஒழுங்கிற்குப் புரிப்படாத பிம்பமாகிப் போன மனிதர்களின் மீது சமூகம் வைக்கும் விஞ்ஞானம். பரிதாபம் எரிச்சலாக மாறும் விந்தை. அவனிடமிருந்து அவனுக்குள் வளர்க்கப்பட்ட கலாச்சாரம் எப்படிச் சிதைந்திருக்கும்? நடு சாலையில் சட்டையில்லாமல் நடக்கக்கூடாது என்கிற கலாச்சாரத்தை எப்படி அவன் தொலைத்திருப்பான்?தன் வாழ்ந்த இனத்தின் கலாச்சாரம் மூலம் அவனுக்குள் விதைக்கப்பட்ட கலாச்சாரம், ஒழுக்கம் எல்லாம் பொருளாதார என்கிற ஒற்றை இழப்பால் சிதைக்க முடிகிறது என்றால், கலாச்சாரம் அத்துனைப் பலவீனமானதா?

மனம் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் போதிக்கப்பட்ட கலாச்சாரத்தைக் கட்டுடைக்கிறார்கள் என்றால், மனம் தெளிவுடைய படித்தவர்கள் அதிகம் இருக்கும் ஒரு சமூகமும் தனது முந்தைய கலாச்சாரத்தைப் பொய்யாக்குவதை என்ன சொல்வது? எடுத்துக்காட்டு: புடவை பெண்களின் கலாச்சார உடை எனப் பாடப்புத்தகம் தொடங்கி பொதுபுத்தியிலும் குறிப்பாக இருக்கிறது. மாணவர்களுக்குப் புடவையைப் பற்றி சொல்லும்போது ஆரம்ப கலாச்சாரத்தின் குறியீடாக அதைக் காட்டுகிறோம், அதன் வடிவத்தைக் காட்டுகிறோம். மாணவர்களும் வரைந்து இதுதான் ‘கலாச்சார உடை’ என அடையாளப்படுத்துகிறார்கள். இவர்களின் இந்த ‘கலாச்சாரம்’ குறித்த புரிதல் நம்பிக்கை எப்படி உடைகிறது?

ஒருமுறை குடியியலும் குடியுரிமை கல்வியும் எனும் பாடத்தில் ஐந்தாம் ஆண்டிற்குப் பாரம்பரிய உடைகள் எனும் பாடத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, எல்லாம் உடைகளையும் நான் வரைந்து காட்டினேன். புடவையை வரைந்து காட்டி இதுதான் இந்தியர்களின் பாரம்பரிய உடை என்றதும் மாணவர்களில் சிலர் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். பிறகு பெண் மாணவர்களில் ஒருவர் எழுந்து, வீட்டில் பெரியவர்களால் கட்டப்படும் புடவைகள் முழு நீள கையுடையது, கையே இல்லாத “sleeveless” புடவை என கட்டுவது கலாச்சாரமா எனக் கேட்டார். இன்னொரு மாணவன் எழுந்து, “சார் ஜன்னல் வைத்ததா வைக்காததா?” என சினிமா நகைச்சுவையை நகலெடுத்துக் கூறிவிட்டு அமர்ந்தான். எல்லோரும் சிரித்தார்கள். ஒரே கலாச்சார குறியீடு வகுப்பில் வேறு வகையிலும் நடைமுறையில் வேறுவகையிலும் மாணவர்கள் பார்த்துப் புரிந்துகொள்கிறார்கள். இதில் தவறு எங்கிருக்கிறது? புடவையை வைத்தே கலாச்சாரம் எப்படிப் போதிக்கப்பட்டது / எப்படிக் கிளைவிட்டு பரவுகிறது என்று பார்க்கலாம்.

1. இந்து பெண் தெய்வங்கள் எல்லாம் புடவை மட்டுமே கட்டியிருப்பார்கள். ஆக புடவை கட்டுவது தெய்வீகம் என்கிற புரிதல் ஏற்படுகிறது. முதலில் தெய்வம் புடவை கட்டியதா அல்லது பெண் புடவை கட்டியதால் தெய்வத்திற்குக் கட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. இது மிகவும் மோசமான ஆண் வழி சமூகமாக இருந்தாலும் பெண்களைத் தெய்வத்திற்கு நிகராகப் பாவிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நமது இந்திய குடும்பங்களில் பெண்கள் மட்டுமே அதிகமாக கொடுரமாக சிதைக்கப்படுகிறார்கள். புடவை தெய்வீகமானது அதைக் கட்டும் பெண்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள், ஆனால் குடும்பத்தில் அதிகாரம் ஆணிடம் இருக்கும் காரணத்திற்காக பெண் கொடுமைக்கு ஆளாகுகிறாள். இது என்ன கலாச்சாரம்?

2. சினிமா: பழைய சினிமாக்களில் படத்தின் ஆரம்பம் முதல் நீச்சல் உடை, நவீன உடை என் அணிந்துகொண்டு திரியும் கதைநாயகிகள், கதைநாயகனுக்கு நோய் வந்து அவனைப் பராமரிக்கும் சமயத்திலும், அல்லது வழித்தவறிய கதைநாயகனைச் சீர்ப்படுத்த நேரும் சமயங்களிலும் அதே பெண்(கதைநாயகி) புடவை மட்டுமே கட்டியிருப்பாள். அப்படி என்றால் புடவை என்பது சீர்த்திருத்த சீருடையா? ஆகவே சினிமாவின் மூலம் ஒரு பெண் சீர்ப்படும்போது புடவை மட்டுமே கட்டுவாள், அல்லது ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்கும் அதை நிறைவேற்றுவதற்கும் புடவை கட்டினாலே வெற்றி எனப் புரிந்துகொள்ளப்படும். சினிமாவின் மூலம் கொடுக்கப்பட்ட இந்தப் புரிதல், வீட்டிலுள்ள பெண்கள் புடவை கட்டவில்லை என்றால் அவர்களைக் குறைத்து மதிப்பிடுவது, அவர்களைத் திட்டுவது, அவர்களின் நடத்தையைக் கேலி செய்யும் அளவிற்குக்கூட நம்மைக் கொண்டு சென்றிருக்கிறது.

3. புடவை (கலாச்சாரம்) அடுத்ததாக ஒன்னொரு மாயையையும் ஏற்படுத்துகிறது. இன்றைய விளம்பர உலகத்தின் மலிவான பொருளாக மாறிவிட்ட புடவைகள் தொலைக்காட்சியிலும் பத்திரிக்கைகளிலும், இதழ்களிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. பெரும்பான்மையான சினிமா நடிகைகளைப் பயன்படுத்தி, சமூகத்தின் நுகர்ப்பொருளாக விளம்பரம் செய்யப்பட்டு புடவைகள் விற்கப்படுகின்றன. அங்காடித் தெரு படத்தில் அண்ணாச்சி கடையின் விளம்பரத்திற்கு வரும் சிநேகாவை, அவள் கட்டியிருக்கும் புடவையை விரித்து விரித்து ஆட்டி ஆடச் சொல்வதாக ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். பெண்களைத் தன் கவர்ச்சியின் மூலம் எப்படியெல்லாம் பொருளாதார இலாபத்திற்காக விளம்பரப்படுத்தலாம் என்பதைக் கண்டிக்கும் வகையிலான அந்தக் கிண்டலான காட்சி சிந்திக்க வைத்தது. பெரும்பான்மையான புடவை கடை முதலாளிகளின் கவர்ச்சி பொருளாகப் பெண்களும் , புடவைகளும் ஆகிவிட்டிருக்கின்றன. நாம் நம்பி வந்த புடவை என்கிற கலாச்சாரம் சினிமாவிற்கும் புடவை கடை முதலாளிகளுக்கும் எப்பொழுதோ விற்கப்பட்டுவிட்டன.

4. மகாபாரதத்தில் பாஞ்சாலியின் சீலையைத் துரியோதனன் பறிக்கும்போது, கிருஷ்ணன் புடவையைக் கொடுத்துதான் காப்பாற்றினான். பெண்ணின் மானத்தைப் பறிப்பதும் சீலைத்தான் காப்பாற்றுவதும் சீலைத்தான் என்று ஒரு சமய அறிஞர் என்னிடம் கூறினார். கலாச்சாரம் தனக்குத்தானே எப்படி தன்னை முரணாக ஆக்கிக்கொள்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். புடவை கட்டுவது மிகச் சிறந்த கலாச்சாரம் என்பது ஒரு பக்கம் நம்பிக்கையாக இருக்க, அதே புடவையைக் கட்டினாலும் பெண்ணை ஆபாசமாகக் காட்ட முடியும் என்பதற்கு அண்மையில் புடவை தையலில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் தொடங்கி சினிமாவில் மூத்த நடிகைகள் புடவை கட்டி ஆடும் ஆட்டமும் நிருபிக்கின்றன. சினிமா பெரும் சக்தியாக இருக்க, தையல் கலை இந்தியர்களின் மத்தியில் வாழ்வு கொடுக்கும் கருவியாக இருக்க, இவை இரண்டிற்கும் மத்தியில் எப்படிக் கலாச்சாரம் விலை பேசப்படுகிறது? இன்றைய தையல் கலையில் நிபுணத்துவம் பெற்று வளர்ந்த பெரும்பாண்மையான பெண்கள் புடவையில் அதிநவீன மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எந்த மாதிரியான சன்னல் வேண்டும் எனக் கேட்கிறார்களே. (கலாச்சாரத்தைத் திறந்து மூடி பார்க்கலாம் போல)

5. புடவை நம் இனத்தின் கலாச்சார உடை எனத்தான் நம்பி கொண்டிருந்தேன். ஆனால் அதற்குப் பல பெயர்கள் உண்டு என்பதைச் சந்தையில் பார்த்துதான் புரிந்துகொள்ள நேர்ந்தது. “சந்திரமுகி கட்டிய சீலை’, நயந்தாரா கட்டிய சீலை’, குஷ்பு ஜாக்போட் நிகழ்ச்சியில் கட்டிய சீலை, நமிதா கட்டிய சீலை, என பல லேபிள்கள். யார் கட்டி அழகு பார்த்தாலும், எங்குப் போனாலும், “இது சிரேயா கட்டிய புடவை” எனும் மந்திரத்தைத் தவறாமல் ஓதிக் கொள்ள மறக்கமாட்டுகிறார்கள்.

குறிப்பு: புடவையைக் கேலி செய்ய வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் சொல்லவில்லை. புடவை என்பது ஒரு குறியீடு மட்டுமே. நாம் நம்பும் கலாச்சாரம் நமக்கு அளித்த எல்லாவற்றையும் இன்றைய சமூகத்தில் பயன்படுத்தினால், சமூகத்தைச் சீர்ப்படுத்திவிடலாம் எனக் கண்மூடித்தனமாக நம்பிக்கை கொள்வது எத்துனை அபத்தம் என்பதைச் சொல்லவே இதையெல்லாம் குறிப்பிட்டேன். அடுத்த தலைமுறை எது கலாச்சாரம் எனக் கேட்கும்போது வெறும் தடுமாற்றமே மிஞ்சும் அல்லது போலியாக எதையாவது காட்டி ஒரு போதனையை நடத்துவதோடு நழுவியும் விடலாம்.

கலாச்சாரத்தின் மூலம் சமூகத்தை ஒழுக்கத்துடன் கட்டமைத்துவிடலாம் என்பதை விதியாக சமூக அமைப்பிற்குள் நுழைப்பதற்கு முன், கலாச்சாரத்தின் நிலையை, அது கொடுத்திருக்கும் சிதைவை, கலாச்சாரம் காலம் காலமாக ஒடுக்கி வந்த பிம்பங்களை, ஏற்படுத்திய வன்முறைகளை எனப் பரந்த வாழ்வின் வெளியில், வாழ்வின் வரலாற்று சம்பவங்களை முன்வைத்து விவாதிக்கலாம் அல்லது மீள்மதிப்பீடு செய்யலாம்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Sunday, October 24, 2010

லண்டன் சேனனுடன் வல்லினம் கலந்துரையாடல்

நேற்று இரவு 8.00 மணி போல லண்டனிலிருந்து வருகையளித்திருந்த எழுத்தாளர் சேனன் அவர்களுடன் வல்லினம் நண்பர்கள் ஒரு சந்திப்பை ஏற்படுத்தியிருந்தோம். பிரிக்பீல்ட் உணவகத்தில் சுமார் 3 மணி நேரம் சேனனுடன் உரையாட முடிந்தது.

சேனன் அப்பொழுதுதான் இலங்கைக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியிருந்ததால் அங்கு அவருக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். சேனன் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலைப் பதிவு செய்யும் வகையில் ‘எதிர்’ எனும் இணையத்தளத்தில் எழுதி வருகிறார். மேலும் சேனன் சிரித்த முகத்துடன் நட்புடன் பழகக்கூடியவராக இருந்தார். நான், நவீன், யுவராஜன், சிவா பெரியண்ணன், தோழி, மணிமொழி, யோகி, சந்துரு என அனைவரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டோம். இலக்கியம் குறித்து தீவிரமாகக் கலந்துரையாட முடியாவிட்டாலும் சேனன் அவரது இலக்கிய பார்வையையும் அரசியல் பார்வையையும் எங்களோடு பகிர்ந்துகொண்டார். நவீன் ஏற்கனவே லண்டன், பாரிஸ் போன்ற இடங்களுக்குச் சென்று ஷோபா சக்தி, சுகன், சேனன் போன்றவர்களைச் சந்தித்ததால், அவர்களை இங்கே அழைத்து வருவதில் எந்தச் சிக்கலும் இல்லை. விரைவில் வல்லினம் சந்திப்பு அ.மார்க்ஸ் எனும் முக்கியமான எழுத்தாளருடன் நடைபெறும் எனவும் திட்டமிருப்பதாகக் கூறினார்.

விரைவில்(டிசம்பர்) கவிஞர் பெருந்தேவி கோலாலம்பூர் வருவதாகக் கூறியிருக்கிறார். அவரையும் வல்லினம் நண்பர்கள் சந்திக்கக்கூடும். இந்த மாதிரியான சந்திப்புகள் எந்தவிதமான மேடை அரசியல் ஏற்பாடுகள் ஏதுமில்லாமல் மிக எளிமையாக நடத்தப்படுகின்றன. குறிப்பாக மது வாங்கிக் கொடுத்து, அவர்கள் மொக்க போதையில் இருக்கும்போது இலக்கியம் பேசும் (போதையில்தான் நல்ல இலக்கியம் பேச முடியும் என்கிற மாயை) விதத்தைப் பின்பற்றாமல், உணவகத்திலும் இலக்கியம் பேசலாம் என்கிற மேடை நிகழ்ச்சிகளின் அனைத்து சாத்தியங்களையும் களைத்துப் போட்டது வல்லினம் சந்திப்புகள்தான். நல்ல முயற்சிதானே.

சேனன் அவர்கள் குறிப்பிட்ட இலக்கிய ஆளுமைகளை மறுக்கக்கூடிய விதத்தில் பேசியது வித்தியாசமாக இருந்தது. ஏற்கனவே ஷோபா சக்தி வந்தபோதும் இதே போலத்தான் பலரை மறுத்து அவர்களின் ஆளுமைகளை உடைத்துத் தள்ளினார். (ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமையும் நமக்குரியதாக இருந்தபோதும்). சேனன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தது அதிகாரத்திற்கு எதிராகக் கலகக் குரலை ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான். அதிகாரம் இலக்கிய சூழலில் இருந்தாலும் அதனை நோக்கி கலகத்தை ஏற்படுத்துவதுதான் மாற்றுப் பார்வையை ஏற்படுத்தும் எனக் கூறினார். 

நண்பர் யுவராஜன் உடனே ஜெயமோகன் வந்தபோது “கறாராக இருப்பது” பற்றியும், சேனன் அதே போல, “கலகத்தை” பற்றியும் சொல்லிவிட்டதால் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என உற்சாகக் குரலுடன் கூறினார். நவீன் தொடர்ந்து இலங்கை இளம் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறித்தும் அடுத்த தலைமுறையின் இலக்கியத்தைப் பற்றியும் கேட்டார். சேனன் குறிப்பிட்ட சில எழுத்தாளர் இளைஞர்கள் இப்பொழுது தீவிரமாக இயங்கி வருவதாகவும் தீபச்செல்வன் போன்ற எழுத்தாளர்கள் போர்ச்சுழலிலும் போருக்குப் பிந்தைய நெருக்கடியான சூழலிலும் எழுதி வருவதையும் குறிப்பிட்டார்.

யுவராஜன் அவர் வாசித்த ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ பற்றி சேனனிடம் பேசினார். மார்க்சியம் பற்றியும் சோவியத் யூனியன் பற்றியும் கம்யுனிசம் பற்றியும் அந்த நாவலில் பேசப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டார். மார்க்சியம் பற்றி விரிவாக அறிந்து வைத்திருக்கும் சேனன் போன்றவர்கள் அந்த நாவலை வாசிக்கும் போது அதை வேறுவிதமான ஆய்விற்கும் புரிதலுக்கும் வாசிப்பிற்கும் உட்படுத்த வாய்ப்புண்டு என யுவா கூறினார். சேனன் மலேசிய இலக்கியம் குறித்து லண்டனில் ‘எதிர்’ இணையத்தளம் மூலம் அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். 

வல்லினம் மீதான அவர் பார்வை மலேசிய இலக்கியம் குறித்த விமர்சனத்திலிருந்து வேறுப்பட்டிருந்தது. இதுவரை மலேசிய இலக்கியம் தீவிரமான வாசிப்பிற்குப் பரவலாகப் போய் சேரவில்லை, ஆகையால் புலம் பெயர்வு இலக்கியம் என்கிற ரீதியில்கூட மலேசிய இலக்கியத்தை அறியமுடியவில்லை எனக் கூறினார். இனி வல்லினம் அநங்கம் போன்ற சிற்றிதழ்களின் மூலம் இந்தத் தடைகள் தகர்க்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இரவு 10.30க்கு மேல் எங்களின் உரையாடல் முடிந்தது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Tuesday, October 19, 2010

வனத்தின் குரல் - சிறுகதை பார்வை

‘வனத்தின் குரல் – மிக ஆழமான இழப்பின் குரல்”

சீ.முத்துசாமி எழுதிய ‘வனத்தின் குரல்’ சிறுகதை 2006-ல் ஜூன் மாத காதல் இதழில் பிரசுரம் ஆகியிருந்தது. அந்த இதழை 2007-ல் நான் வாங்கியபோது வனத்தின் குரலைக் கடைசிவரை கேட்கவே இல்லை. தவறவிட்டு விட்டேன். மலேசிய நவீன இலக்கியத்தின் தனித்துவமான படைப்பிலக்கியத்தின் குரல் சீ.முத்துசாமியினுடையது என்பதை அவருடன் பழகிய நாட்களிலும் அவருடைய மற்ற சிறுகதைகளை வாசித்த போதும் புரிந்துகொண்டேன்.


அண்மையில் எழுத்தாளர் யுவராஜன் அவர்களின் வீட்டில் அதிகாலை 5மணிவரை உரையாடிக் கொண்டிருந்தபோத சீ.முத்துசாமியின் படைப்புலகம் பற்றி கொஞ்சம் பேசினோம். அவருடைய பரிசு பெற்ற நாவலான ‘மண் புழுக்கள்’ பற்றி யுவாவிடம் கூறினேன். அவருடைய முக்கியமான படைப்பு அது என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது. சீ.மு-வின் ‘வனத்தின் குரல்’ சிறுகதை மிக முக்கியமான சிறுகதை எனவும் கட்டாயம் வாசிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். நான் அப்பொழுது அந்தக் கதையை இன்னும் படித்திருக்கவில்லை. ஆகையால் மேற்கொண்டு அவரும் அக்கதையைப் பற்றி ஏதும் பேசவில்லை.

நேற்றுத்தான் வனத்தின் குரலைத் தேடி மீண்டும் கண்டடைந்தேன். பழைய காதல் இதழ்களை எடுத்துப் புரட்டியபோது சீ.முத்துசாமியின் அந்த வனம் இன்னமும் அப்படியே பசுமையாகத்தான் இருந்தது. சீ.முத்துசாமியின் ‘வெளி’ சிறுகதையின் மூலம், முக்கியமாக மண் புழுக்கள் மூலம் நான் அடைந்த வாசக பரிதவிப்பும் பாதிப்பும் இந்தக் கதையில் என்னால் அடைய முடியவில்லை. ஒருவேளை இந்தக் கதையை நான் 2007-லேயே வாசிக்க நேர்ந்திருந்தால் கட்டாயம் முதலில் தடுமாறியிருந்திருப்பேன்.

வனத்தைப் பற்றிய வர்ணனைகள் இந்தச் சிறுகதையில் அபாரமான தெறிப்புடன் வெளிப்படுகிறது. சீ.முத்துசாமியின் இந்தக்கதையில் ஒரு ஜென் கவிதையை போல மௌனத்துடன் படுத்திருக்கிறது மலை. வனத்தை உண்மையின் இருப்பாகக் காட்டத்துவங்கி பிறகு குரலாக, உருவமற்ற சத்தமாக கதையில் ஒலிக்கவிடுகிறார் கதையாசிரியர். பெருநகரத்தின் இரைச்சலையும் பரப்பரப்பையும் அவ்வப்போது கிண்டலடித்துவிட்டு வனத்தின் அதிசயத்தைக் கதை நெடுக வித்தியாசமான மொழிநடையில் முன்வைக்கிறார்.

நான் அந்தக் கதையைப் புரிந்துகொண்ட விதம் வேறுப்பட்டது. ஒரு சிறுகதை பலவகையான புரிதல்களையும் அனுமானங்களையும் ஏற்படுத்திவிடுவது மிக இயல்பான ஒன்றுதானே. வனம் அந்தக் கதையின் மையப்பாத்திரத்திற்குள் மிகவும் செழிப்பான ஒன்றாக வளர்ந்து நிற்கிறது. அந்த அதிசயத்தின் முன் தன்னை அதனுள் ஒரு அங்கமாக நிறுவிக்கொள்கிறான். சுகுணா மீதான காதலும் அந்த வனத்தின் ஒரு பகுதியாக நிகழ்கிறது. இறுதியில் சுகுணாவை அவன் விட்டு விலகிய பிறகு அந்த வனமும் அவனைவிட்டுப் போய்விடுகிறது. நமக்குள் புதியதொரு உறுப்புகளாகத் தோன்றும் துரோகம், வன்மம், பொறாமை, போன்ற குணங்கள் நமக்குள் இருக்கும் ஓர் அதிசயத்தக்க வனத்தை/செழிப்பை மெல்ல கொன்றுவிடுவதாக இந்தக் கதையில் நான் உணர்ந்தேன்.

கெட்டவர்களின் மனதில் கடவுள் வாழமாட்டார் எனச் சொல்லப்படுவது சமயத்தின் மிகவும் அடிப்படையான நம்பிக்கை, ஆனால் கெட்டவர்கள் நல்லவர்கள் என வித்தியாசம் பாராமல் கடவுள் எல்லோருக்குள்ளும் இருப்பார் என்கிற தத்துவத்தை முன்வைப்பது பகவத் கீதை. சீ.முவின் ‘வனத்தின் குரலும்’ வனம் என்கிற அடையாளம் கடவுளுக்கு நிகரான வழிப்படுதலில்தான் வைத்துக் கட்டமைக்கப்படுகிறது. எல்லோருக்குள்ளும் ஒரு வனம் இருக்கிறது என புதிய புரிதலை உண்டாக்குகிறது.

அந்த வனம் என்பது நிதர்சனத்தின் எல்லை. அதற்குமேல் பரிணாமல் என்கிற தோரனையில் வசதிகளை உருவாக்கிக் கொள்கிறோம் எனவும் முன்னேற்றங்களை வடிவமைத்துக் கொள்கிறோம் எனவும் கதையாசிரியர் கதையில் குறிப்பிடுகிறார். ஒரு பொம்மைக் கடைக்குள் நுழையும் மையக்கதைப்பாத்திரம் அங்குள்ள போலித்தனங்களைப் பார்த்து வியப்படைகிறார். கரடி பொம்மைகள், சிங்கம் புலி பொம்மைகள், கிளி பொம்மைகள் என வனத்தின் பல நிசங்கள் அங்கு நகலெடுக்கப்பட்டிருக்கும். இன்னும் சில காலங்களில் அநேகமாக வனம் ஒரு வரைப்படமாக மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப்படும் என்கிற அபாயமும் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் இழக்கும் வனம்/செழிப்பு அவனை ஒரு இயந்திரமாக மட்டுமே செயல்பட வைக்கும். வனம் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் வளர்வது போல அந்தக் கட்டிடத்தின் ஒரு செங்கல் போலவே நவீன வாழ்க்கையும் அதன் அபத்தங்களும் அவனுக்குள் சொருகப்பட்டிருக்கும் என்கிற அனுமானத்தைக் கதை உணர்த்துகிறது. ஆகையால்தான் கதையின் நகரத்தில் அலையும் அத்துனை மனிதர்களின் மீது ‘காடு தொலைத்த நினைவு கூட இல்லாதவர்கள்’ எனும் பார்வையை முன்வைக்கிறார்.

பெரும்பாலும் நாம் நமக்கு நேர்மையாக இருப்பதில் தவறிவிடுகிறோம் என்கிற எண்ணம் எனக்குண்டு. வாழ்வின் சில தருணங்களில் எதை எதையோ காரணம் காட்டி நேர்மையாக இருப்பது முடியாத காரியம் என அதனைவிட்டு ஓடியிருக்கிறேன். தப்பித்தலுக்கும் வியாக்கியானம் செய்து நியாயப்படுத்தும் செயல்பாடு வேறு யாருக்குக் கைவரும், மனிதனைத்தவிர? அப்படியொரு நேர்மையை இழப்பதும் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் வனத்தை இழப்பதும் ஒருவகையில் ஒன்றையொன்று சார்ந்திருந்திருக்கிறது எனச் சிறுகதையின் மூலம் உணர முடிந்தது.

சுகுணா கதையில் சில இடங்களில் சொற்பமாக வந்துவிட்டுப் போகிறாள். ஆனால் சுகுணாவின் மூலம்தான் மையக்கதைப்பாத்திரம் தனக்குள் அடரும் ஒரு வனத்தை இழக்க நேரிடுகிறது. தையின் தொடக்கத்திலிருந்து அவருக்குள் உருவாகும் வனம் குறித்த பிரமை, பிரமிப்பு எல்லாம் கதையின் இறுதியில் உடைக்கப்படுகிறது. மறுவாசிப்பிற்குப் பிறகு வேறு ஏதும் திறப்புகள் ஏற்பட வாய்ப்பை தனக்குள் வைத்திருக்கும் நல்ல கதை என்பதில் மறுப்பில்லை.

ஒரு சில பகுதிகளில் சிறுகதையில் சட்டென ஒரு புரிதலை அள்ளி வீச முடிகிறது. வனம் என்கிற குறியீட்டிற்கும் மனதிற்கும் நெருக்கமான ஒப்புவமை சொல்லப்பட்டிருப்பது போல தோன்றும். “காடு குறித்த பிரக்ஞை பூர்வமான விழிப்பு, எந்தப் புள்ளியில் தொடக்கம், என்பதைத் திட்டவட்டமாக நினைவு கூர இயலவில்லை” எனும் இடத்தில் மனம் என்கிற ஒரு அந்தரங்க பிரக்ஞை இருப்பது குறித்து எப்பொழுது நாம் அறிந்திருப்போம் அல்லது உணர்ந்திருப்போம்? திட்டவட்டமாகக் கூற முடியாதுதானே. ஒருவேளை முதல்முறை காதல் செய்யும்போது மனதின் இருப்பை நாம் உணர்ந்திருக்கக்கூடும். இந்தக் கதையில் வரும் மையக்கதைப்பாத்திரமும்  முதல் காதலை மனசுக்குள் பதியம் போட்டப் பிறகுத்தான் வனத்தை உணர்கிறான்.

கதையில் நான் சீக்கிரமே அடைந்த இடங்கள் பேருந்தில் போய்க்கொண்டிருக்கும் மையக்கதைப்பாத்திரம் இரயில் பயணம் குறித்து மனப்பதிவையும் காட்சிப்பதிவையும் விவரிக்கும் இடங்கள். சிறுவயதில் அம்மாவுடன் அதிகமான இரயில் பயணங்களில் நாட்களைக் கழித்ததுண்டு. அத்துனைத் தூரமான பயணங்கள் இரயிலில் மட்டுமே சாத்தியம். தூரப்பயணங்கள் அதுவும் இரயிலில் பயணிக்கும்போது வனத்தை அளக்கவும் தரிசிக்கவும் வாய்ப்பாக அமையும். நகரத்தில் வாழ்ந்து பழகியவர்களுக்கு 3 நாட்களுக்கு மேல் வனத்தில் இருப்பதே பெரிய கொடுமையாகவும் அசௌகரிகமாகவும் அமைந்துவிடுவதுண்டு. ஆனால் இரயில் பயணங்கள் வனத்தில் வெகுகாலம் இருந்துவிட்ட களைப்பையும் அனுபவத்தையும் தரவல்லது என்றே நினைக்கிறேன். கதை மேலும் பல சலனங்களைக் கொண்டிருக்கிறது. வெவ்வேறான வாசிப்பில் வெவ்வேறான விமர்சனங்களின்போது இந்தப் பார்வை மேலும் விரிவடையும்.

இந்தச் சிறுகதையை வாசிப்பதற்கு முன்பதாகவே ஜெயமோகன் எழுதிய ‘காடு’ நாவலை வாசித்துவிட்டுதால், வனம் குறித்த குறிப்புகள் இடம்பெறும் இடங்களிலும் வர்ணனைகளிலும் மனம் குறைவான பிரமிப்பையே அடைந்தது. இருந்தபோதும் சிறுகதைக்குரிய அத்துனைக் கச்சிதங்களும் தாராளமாக இடம்பெற்றுள்ளன. சீ.மு-வின் வனத்தின் குரலை வாசித்து முடித்தப்பிறகு “மனிதனின் மனம் இயற்கையின் முன்வைக்கப்பட்ட ஒரு துண்டு மரம் போல” என ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி சொன்ன குறிப்பு ஞாபகத்திற்கு வருகிறது. மனம் காதலினாலும் துரோகத்தினாலும் எப்படித் தன் செழிப்பை/வனத்தை இழக்கிறது என்பதைப் பற்றி மிகவும் துரிதமான மொழிநடையில் கதையாசிரியர் சொல்லியிருக்கிறார்.

மனித உணர்வுகள் மரத்தின் வேர்களாக அலைந்து திரிந்து ஊடுருவி ஒரு நேசத்தை நோக்கி, உயிர் வாழ்தலுக்கான போராட்டத்துடன் பாய்கிறது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா


Wednesday, October 13, 2010

நான் மகான் அல்ல - மனநோயின் வேர்களும் குற்றவாளிகளின் நகரமும் (வல்லினம் இதழில்)

“உடல் நோயைவிட மனநோய்தான் மனிதனை அதிகம் அழிக்கும் தன்மை வாய்ந்தது” – சிசரோ எனும் உளவியல் நிபுணர் குறிப்பிடும் ஒரு மகத்தான கருத்து.

சமூக நடைமுறைக்கும் சமூகத்தின் பொது புத்திக்கும் சற்றும் பொருத்தமில்லாத நடவடிக்கைகளையும் மனதையும் கொண்டவர்களை “functional psychoses” எனக் குறிப்பிடுவார்கள். மூளை பாதிப்பு ஏதும் இல்லாமல் மனதளவில் பாதிக்கப்பட்டதன் விளைவுகளை சமூகத்தின் மைய அறத்திற்கு எதிராகப் பாவிப்பதைத்தான் இப்படி அடையாளப்படுத்தலாம். அத்தகைய ஒரு பிரச்சனையைத்தான் நான் மகான் அல்ல படம் மையக் கருவாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் படத்தில் இப்பிரச்சனை மையக் கதைப்பாத்திரத்தைச் சுற்றி மிகவும் மிதமான தன்மையுடன் புனையப்பட்டிருக்கிறது.

கமல் நடித்து வெளிவந்து பழைய படமான “சத்யா”வில் வேலையில்லாமல் நகரத்தில் தனக்கென ஒரு அறத்தையும் அதற்கு உடனான ஒரு மனதையும் உருவாக்கிக் கொண்டு சுற்றி அலையும் கதைப்பாத்திரத்தின் இன்னொரு வடிவமாகத்தான் இந்தப் படத்தில் கார்த்தி செய்திருக்கும் வேடத்தைப் புரிந்துகொள்ளக்கூடும். மேலும் பல தமிழ்ப்படங்களில் இப்படி மையக்கதைப்பாத்திரம் வேலை ஏதும் இல்லாத நாடோடியாகவும் அதே சமயம் வீட்டில் அடிக்கடி திட்டப்படும், அப்படித் திட்டப்பட்டும் கொஞ்சம்கூட கவலையில்லாமல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவதும் என வாடிக்கையாகக் காட்டப்பட்டிருக்கிறது. இது போன்ற நாடோடிகள் கட்டாயம் வெளியே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பவர்களாகவும் இருப்பார்கள்.மேலும் வாசிக்க:

வல்லினம் கலை இலக்கிய இணைய இதழ்:

Monday, October 11, 2010

பிரபஞ்சன் வருகையும் மலேசியாவிற்கு வரும் எழுத்தாளர்களும்

9 ஆம் திகதி தொடங்கி 10 ஆம் திகதி வரை கோலாலம்பூரில் இரண்டு நாள் நிகழ்வாக சிறுகதை பட்டறை நடத்தப்பட்டது. இந்தச் சிறுகதை பட்டறையைத் தமிழக எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் மலேசியாவிற்கு வருகையளித்து நடத்திக் கொடுத்தார். முதல் நாள் தொடக்க விழாவில் பிரபஞ்சன் தமிழ் இலக்கியம் எத்திசையில் எனும் தலைப்பில் இலக்கிய உரை ஆற்றினார்.

மலேசியாவின் பல முக்கியமான முக்கியமில்லாத எழுத்தாளர்களும் இப்பட்டறையில் கலந்துகொண்டனர். மேலும் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றும் இலக்கியம் போதிக்கும் ஆசிரியர்கள் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் இப்பட்டறையில் கலந்துகொண்டனர். ஆசிரியர்கள் நிரம்பிய மேடை என்பதால் எழுத்தாளர் பிரபஞ்சன் எளிமையான முறையிலேயே தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.

ஒரு சிறுகதையைக் கதையிலிருந்து வித்தியாசப்படுத்தி புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார். கதை என்பது வெறும் நியதிகளை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடும், ஆனால் சிறுகதை என்பது பல சம்பவங்களில் தொடங்கி ஒரு மனிதனைக் கண்டடையும் இடத்தில் வந்து நிற்கும் எனவும், நகைச்சுவையில் தொடங்கி வாழ்வின் ஆத்ம தரிசனத்தில் வந்து வலுப்பெறும் எனவும் கூறினார். பெரும்பாலோர் நல்ல கதையைத்தான் எழுதுகிறார்களே தவிர சிறுகதையை அல்ல எனச் சாடினார்.

மேலும் தமிழிலுள்ள பல நல்ல சிறுகதைகளை உதாரணமாகக் காட்டி அது எப்படிச் சிறுகதையாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும் குறிப்பிட்டார். தமிழ்ச் சிறுகதை சூழலில் புதுமைப்பித்தனை வாசிக்காதவர்கள் ஒரு நல்ல சிறுகதையைப் படைத்துவிட இயலாது எனப் பிரபஞ்சன் தெரிவித்தார். மேலும் உலகச் சிறுகதை வாசிப்பில்லாதவர்கள் தட்டையான தேக்கம் நிறைந்த சிறுகதையையே தருவார்கள் என அவர் நம்புவதாகவும் கூறினார்.

ஞாயிறு இரவில் பட்டறை முடிந்ததும், வல்லினம் நண்பர்கள் அனைவரும் பிரபஞ்சனைச் சந்தித்து உரையாடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரபஞ்சன் மலேசியா வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பதாகவே அவரை அழைத்து இந்தச் சந்திப்புத் தொடர்பாக அவரிடம் கேட்டிருந்தேன். மூன்றுமுறை பிரபஞ்சனை அழைத்து இது குறித்து உறுதியும் செய்திருந்தேன். டாக்டர் சண்முகசிவாவும் நண்பர் ம.நவீனும் தொலைப்பேசியின் வாயிலாகப் பிரபஞ்சனை எங்களின் சந்திப்பிற்கு வரவழைக்க முயற்சிகள் செய்தும் கடைசியில் சந்திப்பை நடத்த முடியாமல் போனது.

பிரபஞ்சன் அநேகமாக இதைவிட தீவிரமான ஓர் இலக்கிய கலந்துரையாடலை பட்டறைக்குப் பிறகு நடத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம் போல. அல்லது யாராவது அவரிடம் பின்நவீனத்துவம் குறித்துப் பேசுவதற்கு அழைத்துப் போயிருக்கலாம். டாக்டர் அவர்கள் பலமுறை முயன்றும் பிரபஞ்சனை அழைத்து வரமுடியவில்லை. எனக்குத் திடீரென பிரமானந்த சுவாமி அவர்களின் மீது கோபம் வந்துவிட்டது.

அண்மையில் பிரபல எழுத்தாளரும் சிந்தனையாளருமான ஜெயமோகனை கூலிம் தியான ஆசிரமத்தின் தலைவர் சுவாமி பிரமானந்தாதான் சிரமப்பட்டு மலேசியாவிற்குக் கொண்டு வந்தார். மேலும் அவர் யாரெல்லாம் ஜெயமோகனை வைத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கேட்டார்களோ அவர்கள் அனைவருக்கும் தாராள மனதுடன் வாய்ப்பளித்தார். வாய்ப்பு கேட்ட யாருக்கும் எந்தச்சிறு தயக்கமுமின்றி அவருக்கே உரிய புன்னகையுடன் ஜெயமோகனை அனுப்பி வைத்தார். ஆனால் ஜெயமோகன் மலேசியாவிலிருந்து விடைப்பெற்றுச் செல்லும்போது வல்லினம் கலை இலக்கிய விழாவிலும் கூலிம் தியான ஆசிரமத்திலும் இருந்த சமயங்களில்தான் தான் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டார்.

இன்று மலேசியாவிற்கு வரும் எழுத்தாளர்கள்/படைப்பாளர்களைச் சந்திக்க வேண்டுமென்றால் முதலில் அவர்கள் யாரால் அழைத்து வரப்படுகிறார்கள் என்பதைத் தீவிரமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த மாதிரி படைப்பாளர்களுடன் நாம் வட்ட மேசை மாநாடா நடத்தப் போகிறோம் அல்லது நம் செய்யும் தொழிலுக்கு அவரைப் பாட்னராகச் சேர்த்துக் கொள்ளப் போகிறோமா? பிரபஞ்சனின் படைப்புகள் எல்லாராலும் வாசிக்கப்பட்டிருக்கிறது. அவரின் படைப்புலகம் சார்ந்தும், மேலும் இங்கு நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியக் களம் சார்ந்தும் அந்தப் படைப்பாளருடன் பகிர்வதாகவே திட்டம்.

மேலும் தீவிர/தரமான எழுத்தாளர்களைச் சந்திக்கக்கூடும் எனகிற நம்பிக்கையில் மலேசியாவிற்கு வந்து சேரும் முக்கியமான படைப்பாளிகளுக்குக் கடைசிவரை தெரிவதில்லை அவர்களின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது சால்வையும் மாலையும் என. மலேசியாவிற்கு வந்து சேரும் பல படைப்பாளிகள் சுற்றுலாவிற்கும் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கும் அல்லது இலக்கிய போட்டிகளுக்கு நீதிபதிகளாகவும் கொண்டு வரப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். கடைசிவரை அவர்களுடன் நேர்மையான இலக்கியச் சந்திப்பை நடத்துவதில் தோல்வியே ஏற்படுகிறது. (குறிப்பு: இலக்கியம் – கலை- இசை- நடனம் என எல்லாவற்றுக்கும் நீதிபதிகளாக தலைமை நடுவர்களாக இந்தியாவின் ஆளுமைகளையே நம்பி இருக்கிறோம். எப்பொழுது இங்குள்ள கலை உலகத்தைச் சேர்ந்த மூத்தவர்களின் மதிப்பீடும் ஆற்றலை வளர்க்கப் போகிறோம்?)

வல்லினம் ஆசிரியர் ம.நவீன் இந்த மாதிரியான இலக்கியச் சந்திப்புகளை நடத்தியுள்ளார். முதலில் மலாயாப்பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் பேராசிரியராக இங்கு வந்த இலங்கை கவிஞர் எம்.ஏ.நுக்மான்(மலேசிய தேசிய பலகலைக்கழகம்), பிறகு புலம் பெயர்ந்து எழுதி கொண்டிருக்கும் தீவிர எழுத்தாளர் ஷோபா சக்தி(கோலாலம்பூர்), இதற்கு முன்பதாக காதல் இதழ் நடத்திக் கொண்டிருக்கும்போது ஜெயமோகனை வரவழைத்திருக்கிறார். இன்னும் சில இருக்கக்கூடும். இவை யாவும் மலேசியாவில் எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான படைப்பாளிகளை ஒரு மையத்தில் இணைத்தக் குறிப்பிடத்தக்க இலக்கிய சந்திப்புகளாகும். அவருக்கு அடுத்து இப்பொழுது இந்த மாதிரி தமிழின் முக்கியமான படைப்பாளர்களை வரழைத்து இலக்கிய சந்திப்புகளை நடத்துவதற்கு கூலிம் தியான ஆசிரமத்தின் தலைவரும் இலக்கிய வாசகருமான பிராமானந்த சுவாமி அவர்களும் நவீன இலக்கிய சிந்தனைக்களமும் முனைப்பாக இருக்கிறோம்.

தொடர்ந்து, வல்லினம் அநங்கம் மௌனம் போன்ற இதழின் மூலம் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் யாவரும் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நமக்கான இலக்கியத் தனித்துவத்தை அடைந்துவிடலாம் என எழுத்தாளர் யுவராஜன் குறிப்பிட்டிருந்தார். அதற்கான தீவிர முயற்சிகள் இனி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும். விரைவில் வல்லினம் அநங்கம் நண்பர்கள் வட்டமும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களும் தைப்பிங்கில் இரண்டுநாள் இலக்கிய சந்திப்பை நடத்தவுள்ளோம். பிறகு அறிவிக்கப்படும்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, October 8, 2010

சிறுகதை: சந்திரன் வாத்தியாரும் தவுசிங் தமிழ்ப்பள்ளியும்

இடம்: தவுசிங் தமிழ்ப்பள்ளி(40 வருட வரலாற்றில் எந்த மாற்றமும் காணாத ஒரே தமிழ்ப்பள்ளி)
பெயர்: சந்திரன் வாத்தியார்
வயது: 32
அனுபவம்: தோட்டத்து தமிழ்ப்பள்ளியில் 8 வருடம், ஐந்து முறை கோபத்தில் மேலதிகாரியை அடிப்பதற்குப் பதிலாகத் தன் காலைச் சுவரில் உதைத்திருக்கிறார், ஒருமுறை அலமாரியிலிருந்து கோப்பை எடுக்கும்போது பாம்பு சீறியிருக்கிறது (சத்தம் உஸ் உஸ் உஸ்), ஏழு முறை மாடு துரத்தியிருக்கிறது, நான்கு முறை மாணவர்களைக் கொண்டு வருவதற்காகத் தோட்டம் முழுக்க ஓடியிருக்கிறார்.
போராட்டம்: எப்படியாவது அந்தப் பள்ளியிலிருந்து வெளியேறி நகரத்துப் பள்ளிக்கு மாற்றலாகி போய்விட வேண்டும் என்கிற 5 வருட போராட்டம்.

இப்பொழுது சம்பவம் நடந்து கொண்டிருக்கும் வருடம்: 2010
மாலை மணி 2.00க்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வருகிறார்.

“தம்பி நீங்க நெனைச்ச மாதிரி எதும் நடக்கல”
“தெரியுமே. என்ன நடக்கும்னு. . .”
“இல்லெ, நானும் அரசியல் கட்சி மூலம் ஏதும் செய்யலாம்னு பாத்தேன். கேபள்லாம் பூட்டி பாத்தேன். எதுமே நடக்க மாட்டுது”
“ம்ம்ம்ம்”

மாலை மணி 2.20க்குத் துக்கம் விசாரணை முடிந்தவுடன் தலைவர் புறப்பட்டார். வழக்கம்போல அவரது கேபிள்கள் கழன்று விழுந்தன.

மாலை மணி 2.30க்கு சந்திரன் வாத்தியாருக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பள்ளிக்கூடத்திற்குப் பின்னால் இருக்கும் முருகன் கோவிலின் பாழடைந்துவிட்ட கொட்டகைக்குள் நுழைந்து கொண்டு சத்தமாக அழுதார். ஆண்கள் சத்தமாக அழுவது சந்திரன் சாருக்கே பிடிக்காத ஒன்றாயிற்றே. அந்தக் கொட்டகைக்குள் இருந்த பழங்காலத்துப் பல்லி வயோதிகக் குரலில் சோம்பலாகக் கீரிச் கீரிச் என சந்திரன் வாத்தியாரின் துக்கத்தில் கலந்துகொண்டது.

போராட்டம் 1: தலைமை ஆசிரியர் அறையின் கதவை அடைத்துவிட்டு இரகசியமாக எவ்வளவோ விளக்கிப் பார்த்து. அவர் காலையும் பிடித்து ஒரு நன்றியுள்ள ஜானியைப் போல நடந்து கொண்டும், கடைசியில் வருகிறது பதில்: Dukacita. Permohonan anda gagal.(தங்களின் விண்ணப்பம் தோல்வி). சந்திரன் வாத்தியார் அன்றிலிருந்து கிழங்கு கஞ்சியைக்கூட உறிஞ்சி சாப்பிடுவதை விட்டுவிட்டார்.

போராட்டம் 2: நாக்கை மட்டும் இன்னமும் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதில் சந்திரன் வாத்தியாருக்கு ஒரு மாபெரும் கௌரவம் இருந்தது. மேலதிகாரியைப் பார்த்து ஜிங் ஜாக் ஜிங் ஜாக் ஜிங் ஜாக் எனக் கச்சேரியெல்லாம் முடித்துவிட்டு வாலாட்டிவிட்டு வருவதற்குள் சந்திரன் வாத்தியாருக்குக் களைத்துவிட்டது. மீண்டும் பதில் வருகிறது: Dukacita. Permohonan anda gagal.(தங்களின் விண்ணப்பம் தோல்வி). வாலில் நெருப்பைப் பற்ற வைத்துவிட்டு இதற்குப் பின்னனியிலுள்ள துரோகிகளை எரிக்க வேண்டும் எனத் தோன்றியும் சடாரென வழக்கம்போல உழைத்து உழைத்து தேயத் துவங்கினார், தமிழ் கலாச்சாரத்தின் பற்றாளர் சந்திரன் வாத்தியார்.

போராட்டம் 3: இதற்கு முன் பார்த்தவரைவிட ஒரு படி மேல் இன்னொரு மேலதிகாரி. இவர் ஒரு படி மேல் என்பதால் சந்திரன் வாத்தியார் கொஞ்சம் கடினமாக உழைக்க நேர்ந்தது.

“தம்பி! ஏன்பா மாற்றம் கேக்கறெ?”
“8 வருசமா இங்க இருந்துட்டென் சார். வீடு 1 மணி நேரம் தொலைவுல இருக்கு. இது மூனாவது தடவெ முயற்சி பண்றேன் சார். . கொஞ்சம் பாத்துக் கொடுங்களேன்”

ஒழுகிய வாய்நீரைத் துடைத்துக் கொள்ள மறந்த சந்திரன் மேலதிகாரியின் ஒரு புன்முறுவலுக்காக வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். புன்முறுவலும் சிரிப்பும் தலை ஆட்டுதலும் இந்த மாதிரி அதிகாரிகளிடமிருந்து தனித்து வைத்திருக்கிறது.

“தம்பி. புரியுது. உங்க மாதிரி பொறுப்புள்ள வாத்தியாருங்க, இந்தமாதிரி தோட்டப்பள்ளிங்களுக்கு வேணும்பா. இங்கயெ இருங்களேன்”

“சார். எனக்கு வேற அனுவபம் வேணும் சார். எத்தன வருசம் இங்கய இருக்க முடியும் சார்? மாத்திறதுக்கு உதவி செய்யுங்க சார், கெஞ்சி கேட்டுக்கறன்”

“சரி இருங்க. முக்கியமானவங்ககிட்ட இப்பயெ பேசிட்டு சொல்றென்”

அறைக்கு வெளியே சந்திரன் வாத்தியார் கொண்டு வந்த அவருடைய கோப்பு நாற்காலியிருந்து கீழே சரிந்திருந்தது. அதை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அறையிலிருந்து அழைப்பு வரக்கூடும் எனப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருந்த நாள் பாடக்குறிப்பு புத்தகம் எப்பொழுது வேண்டுமானாலும் நழுவக்கூடும்.

27.06.2010
திறன்: 1.14 கேள்விகளுக்கேற்ப பதிலளிப்பர்
அடைவுநிலை: செம்பனை காட்டிலிருந்து தப்பித்து வந்த மாடு ஒன்று
பள்ளிக்குள் நுழைந்து செய்த அட்டகாசத்தில் இன்றைய திறனை மாணவர்கள்
அடையவில்லை.

28.06.2010
திறன்: 1.14 கேள்விகளுக்கேற்ப பதிலளிப்பர்
அடைவுநிலை: இன்று மேலிடத்திலிருந்து திடீர் சோதனை நடந்ததால், பழைய
கோப்புகளை அள்ளி சுத்தப்படுத்தியதில், மாணவர்கள் இன்றைய திறனை
அடைய முடியவில்லை.

01.07.2010
திறன்: 1.14 கேள்விகளுக்கேற்ப பதிலளிப்பர்
அடைவுநிலை: பாடம் தொடங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன் வகுப்பில்
நுழைந்த தலைமை ஆசிரியரின் சில கேள்விகளுக்கு மாணவர்கள் பதில்
அளிப்பதற்குள் பாடநேரம் முடிந்தது. மாணவர்கள் இன்றைய திறனை
அடைய முடியவில்லை.

02.07.2010
திறன்: 1.14 கேள்விகளுக்கேற்ப பதிலளிப்பர்
அடைவுநிலை: மாணவர் ஒருவரை அடித்துவிட்ட பிரச்சனையைப் பேசி
தீர்ப்பதற்காக வந்த பெற்றோரைக் கவனித்து அனுப்புவதற்குள் பாடவேளை
முடிந்தது. மாணவர்கள் இன்றைய திறனை அடைய முடியவில்லை.

03.07.2010
திறன்: 1.3 தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உரையாடுவர்(திறன்
அதிரடியாக மாற்றப்பட்டது)
அடைவுநிலை: மாணவர்களில் 80 சதவிகிதம் இன்று பள்ளிக்கு வராததால்,
திறனை அடைய முடியவில்லை.

04.07.2010
திறன்: 1.3 தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உரையாடுவர்
அடைவுநிலை: வகுப்பிலேயே மூத்திரம் பெய்துவிட்ட மாணவன் ஒருவனைச்
சுத்தப்படுத்துவதற்குள் இன்றைய பாடவேளை முடிவடைந்துவிட்டதால்,
மாணவர்கள் இன்றைய திறனை அடைய முடியவில்லை.


மீண்டும் அறைக்குள்ளிலிருந்து அழைப்பு வந்தது. தனது பாடக்குறிப்பு புத்தகத்தை அங்கேயே வைத்துவிட்டு சந்திரன் வாத்தியார் உள்ளே நுழைந்தார். மேலதிகாரியிரிடமிருந்து அலட்சியமான பதில். வெளியே வந்ததும் சந்திரன் வாத்தியாரின் தலை கவிழ்ந்திருந்தது.

“. . . . . ங்களா. . “ ஏதோ கெட்ட வார்த்தையில் சத்தமாக முனகிவிட்டு வெளியேறினார். பள்ளியை வந்தடைந்ததும் தலைமை ஆசிரியர் வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார்.

“என்னப்பா ஆச்சி?”
“சார், இன்னும் ரெண்டு திறன் சரியா நடத்த முடியலே, இன்னிக்காவது முடிச்சடறென்”
“அதானெ. அவ்ள சீக்கிரம் உங்களால போய்ட முடியுமா என்ன. . “

06.07.2010
திறன்: 1.3 தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உரையாடுவர்
அடைவுநிலை: மாணவர்கள் இன்றைய திறனை அடைய சிரமப்பட்டனர். தனது
தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அவர்களால் உரையாடவே முடியவில்லை.ஆகையால் மாணவர்கள் இன்றைய திறனை அடைய முடியவில்லை.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா


Tuesday, October 5, 2010

ஆர்வார்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய தோற்றம் : குரூண் நகரின் கனவு

கடந்த 20 வருடத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் இருந்த குரூண் நகருக்கான புதிய தமிழ்ப்பள்ளியின் வேலைபாடுகள் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்று இந்தக் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் கம்போங் பஞ்சாங் எனும் இடத்திற்கு நானும் என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியர்களும்(சோமசுந்தர் மற்றும் ஹென்ரி) பார்வையிட சென்றிருந்தோம்.

அரசாங்கம் இந்தப் பள்ளியைக் கட்டுவதற்குச் சம்மதம் தெரிவித்து எல்லாம் நிறைவேறும் கணத்தில் ஒருசில தடைகளால் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆர்வார்ட் பிரிவு 2 தமிழ்ப்பள்ளியையும் ஆர்வார்ட் 3 தமிழ்ப்பள்ளியையும் இணைத்து குரூண் நகரத்திற்குச் செல்லும் நுழைவாயிலில் கட்டப்படவிருக்கும் இந்தப் பள்ளியின் கட்டுமானம் அடுத்த வருடம் முடிவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சைம் டேர்பி நிறுவனம் இரு பள்ளிகளின் ஒட்டுமொத்த பெற்றோர்களும் இணைந்து புதிய பள்ளிக்குச் செல்வதற்கான சம்மதத்தைக் கையெழுத்து மூலமாகத் தெரிவித்தால்தான் மீண்டும் கட்டுமான பணி தொடங்கும் என அறிவித்துவிட்டதால், மீண்டும் இதைக் களைவதற்குப் போராட்டங்களும் கலந்துரையாடல்களும் தொடங்கின. இறுதியாக எல்லாம் பெற்றோர்களின் வீட்டிற்குச் சென்று எல்லாரிடமும் கையெழுத்து வாங்கினோம். இதில் ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து செயல்பட வேண்டியிருந்தது.

கையெழுத்திட முடியாத பெற்றோர்களை ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு சைம் டேர்பி அலுவலகத்திற்குக் கொண்டு போய் கையெழுத்து போட வைத்தோம். இத்துனையும் நடத்தி முடித்துதான் இப்பொழுது புதிய பள்ளிக்கான தோற்றம் மெல்ல வளர்ந்துகொண்டிருக்கிறது.

கணமான புத்தகைப்பையைத் தோளில் சுமந்துகொண்டு ஓடி ஆடி திரிந்த கணங்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு சம்பவத்தை நினைவுகூற செய்துகொண்டே இருக்கிறது. புத்தகப்பையை இறக்கி வைத்தாயிற்று ஆனால் பள்ளிக்கூடத்தை நீக்க முடியவில்லை. ஆறு ஆண்டுகள் என் பள்ளியின் ஒவ்வொரு மாற்றங்களுடன் வளர்ந்த காலக்கட்டம் நினைவுக்கு வருகிறது. சரஸ்வதி பள்ளிக்கூடத்தில் நான் ஐந்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்தான் பள்ளிக்குப் புதிய கட்டடம் ஒன்று கட்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள்தான் முதன்முதலில் அந்தக் கட்டிடத்தில் ஆறாம் ஆண்டு பயிலப் போகிறோம் என்கிற அறிவிப்பு கிடைத்ததும், அதன் பிறகு அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் நான் இருக்கத் தொடங்கினேன். அன்றாடம் தூரமாக நின்று கொண்டு அந்தக் கட்டடத்தின் மாற்றத்தை அவதானித்துக் கொண்டிருப்பேன். ஒரு தவளையின் நிதானத்தை உற்றுக் கவனிப்பது போல அந்தக் கட்டடத்தைக் கவனித்துக் கொண்டிருந்த கணங்கள், இந்தப் புதிய பள்ளியைப் பார்த்ததும் மீண்டும் உதித்தது.

இந்தப் பள்ளிக்கூடம் கட்டி முடிக்கும் கணத்தில் நான் எங்கு இருப்பேன் என்பதில் உறுதி இல்லை. 20 வருடத்திற்கும் மேலான பல பேரின் உழைப்பில், போராட்டத்தில் உருவாக போகும் இந்த ஆர்வார்ட் பள்ளியின் யார் கவனத்தையும் ஈர்க்க முடியாத ஒரு துளியாக மட்டுமே நான் இருப்பேன். 

குரூண் ஒரு சிறு நகரம்தான். இரவு 10 மணிக்கு மேல் ஆள் நடமாட்டத்தை இழந்த பிறகு விட்டு விட்டு எரியும் வெளிச்சத்திற்கு மத்தியில் ஒளிரும் எளிமையான நகரம். இனி ஆர்வார்ட் புதிய பள்ளி கட்டி முடிக்கப்பட்டதும் இந்தக் குரூண் நகரத்திற்கு ஒரு புதிய முகம் கிடைக்கக்கூடும். ஒரு புதிய பள்ளியின் உருவாக்கத்திற்குப் பின்னனியில் எத்தனையோ மாணவர்களின் கனவுகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கனவு இன்றோ நேற்றோ உருவானது அல்ல, இந்தப் புதிய பள்ளியில் படிக்க முடியாமல் போன இன்று வேலை செய்து கொண்டிருக்கும் முன்னால் மாணவர்களின் கனவின் தொடர்ச்சியும்கூட. வாழ்த்துவோம்.

இன்று இப்பள்ளியில் இல்லை என்றாலும். . . .
என்றும் அன்புடன்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Monday, October 4, 2010

மலேசிய பெண் படைப்பாளிகளின் இரண்டு கவிதைகள் : அகத்தில் தோன்றும் சலனங்கள் (கவிஞர் மணிமொழி - யோகி)

மௌனத்தில் வாசிக்க நேர்ந்த இரு முக்கியமான பெண் கவிஞர்களின் இரண்டு கவிதைகளைப் பற்றித்தான் இங்கு வாசக எதிர்வினையாகப் பதிவு செய்கிறேன். பெரும்பாலும் முறையான வாசிப்பு பயிற்சியின்மையாலே பல நல்ல கவிதைகள் வாசிக்கப்படாமலேயே காலத்தைக் கடந்து தன் தீவிரத்தை இழக்காமல் காத்திருக்கிறது. இந்த இரு கவிதையையும் தற்செயலாக மீண்டும் வாசிக்கும்போது அதை உணர முடிந்தது.

ஒரு நல்ல கவிதை வாசகனுக்குள் நெகிழ்ச்சியை அல்லது சலனத்தை ஏற்படுத்தும் அல்லது வாசித்த பிறகும் அதை மனதிலிருந்து நீக்க முடியாமல் போகும் என்றெல்லாம் கவிதை மீது நம்பிக்கை உண்டு. தற்சமயம் வாசிப்பு அடைந்திருக்கும் தேக்கமான எல்லையில் எல்லாம் படைப்புகளையும் ஒருவிதமான அவசரத்துடன் ஒரே வாசிப்பில் அதன் உள்ளே இருக்கும் புரிதல் பற்றிய எந்த அக்கறையுமின்றி கடந்துவிடும் வாசகர்கள் நிறைந்துவிட்டதால், அந்த இரைச்சலுக்கு மத்தியில் ஏதோ சில தீவிரமுடைய வாசகர்கள் மட்டுமே முழுமையை அகற்றி அதிலுள்ள நல்ல கவிதைகளை அடையாளம் காட்டுகிறார்கள். இது மலேசியாவில் மௌனம் இதழின் மூலம் நடத்தப்படுகிறது. வாசிப்பைச் சிரமமாகக் கருதுபவர்களே புரியாத படைப்புகளை நோக்கி பதற்றமடைகிறார்கள். ஒருவேளை மணிமொழி மற்றும் யோகியின் இந்தக் கவிதைகள் முதல் வாசிப்பில் புரியாமல் போகக்கூடும் அல்லது பிடிக்கொடுக்காமல் நழுவக்கூடும்.

மணிமொழியின் கவிதை

எனக்குப் பரிச்சியமான
நான் விரும்பிய
நான் வளர்த்த
பேயொன்று
என்னை. . .
எட்டி உதைத்து
முட்டித் தள்ளிக்
கத்திக் கொண்டு
நான்கு கறுத்த இறக்கையோடு
மிகச் சாதாரணமாய்
பறந்தோடியது
எனதன்பைக் குப்பையில்
வீசிவிட்டு.

நவீன கவிதைகள் பெரும்பாலும் தனிமனிதனின் பரிதவிப்புகளையும் அவனுடைய அக உணர்வுகளின் உச்சத்தையும் பற்றியதாகவே அதிகமாகப் புனையப்பட்டிருக்கின்றன. புற வாழ்வு அவனுக்களித்த அனுபவம் அவனுடைய அகத்திற்குள் பலவிதமான நெருக்கடிகளை உருவாக்கியிருக்கக்கூடும். அந்த நெருக்கடிகள் ஒரு கலை படைப்பாக வெளிப்படும்போது தனக்கான ஒரு படிமத்தைச் சார்ந்து உக்கிரமாகவும் நிதானமாகவும் எழுதப்படுகிறது. அந்தப் படிமத்தை ஆழமாக உணர முடியாதவர்கள், வலுக்கட்டாயமாக அந்தக் கவிதையை அர்த்தமற்றது என நிராகரித்துவிடவும் வாய்ப்புண்டு. பிரதி சரியாக வாசிக்க முடியாமல் போனதுதான் மிச்சம். இது கவிதையின் போதாமை கிடையாது. கவிதைக்கான வாசகர் இன்னும் வரவில்லை எனத்தான் அர்த்தம்.

மணிமொழியின் இந்தக் கவிதை குறித்து முதல் வாசிப்பிலேயே( பிப்ரவரி 2009 – மௌனம்) எனக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்திருந்தது. ஒரு வருடம் கழித்தே அதைப் பற்றி எழுதுவதற்கு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. கவிதையில் ஓர் ஆழ்ந்த மௌனம் இருக்க வேண்டும், இதைத் தேவையற்ற சொற்களை நீக்குவதன் மூலம் அமையலாம் அல்லது தேவையான ஒரு முக்கிய சொல்லை நீக்குவதன் மூலமும் அமையலாம். அதே போல கவிதை குறித்தும் அதிகமாக விவரிக்க இயல்வதில்லை. அந்த மௌனத்தை எப்படிக் களைத்துப் பார்ப்பது என்பதில் ஏற்பட்ட தயக்கம் என வைத்துக் கொள்ளலாம்.



“எனக்குப் பரிச்சியமான
நான் விரும்பிய
நான் வளர்த்த
பேயொன்று”

கவிதைக்குள் இருக்கும் ‘நான்” என்பதற்கும் அந்தப் பேய்க்கும் இருக்கும் நெருக்கமான உறவு ஆரம்பத்திலேயே சொல்லப்படுகிறது. ஆனால் அது விவரிக்கப்படவில்லை. சிக்கனமான சொல் தேர்வு இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் பேய் என்கிற உருவகம் எதற்கு? இந்தப் படிமத்தை உடைத்தால்தான் கவிதைக்குள் சாதாரணமாக நுழைய முடியும்.

நமக்கு மிக நெருக்கமான அன்பிற்குரியவர்களின் புறக்கணிப்பை இப்படி உருவகப்படுத்தி அதன் கொடூரத்தை உக்கிரமாகக் காட்ட முயன்றிருக்கலாம். எப்பொழுதும் நம் வெறுப்பையும் அன்பையும், கோபத்தையும் காட்டக்கூடியவர்களாக நமக்குச் சொந்தமானவர்களும் நெருக்கமானவர்களும்தான் இருப்பார்கள். அவர்கள் மீது நமக்கிருக்கும் உரிமை, அவர்களை வளர்க்கவும், விரும்பவும் சுதந்திரத்தைக் கொடுக்கிறது. அந்தச் சுதந்திரத்தைக் கொண்டு நாம் நேசிப்பவர்களைப் பேயாகவும், தேவதையாகவும், பூதமாகவும், பறவையாகவும் என எப்படி வேண்டுமென்றாலும் மன உணர்வுகளுக்கு ஏற்றாற் போல உருவாக்கிக் கொள்ளலாம்.

நாம் காட்டும் அன்பைத் தூக்கி வீசுபவரின் மீது ஏற்படும் ஒரு வர்ணனையாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். வெறுப்புணர்வின் படிமங்களை எடுத்து ‘எனதன்பைத் தூக்கி வீசியவரின் மீது எப்படி வேண்டுமானாலும் பிரயோகிக்கலாம். அத்தகையதொரு பிரயோகமாகவே இதைக் கருதுகிறேன். அன்பு புறக்கணிக்கப்படுதன் நிலை இப்படித்தான் இருக்கும் என அந்த அகநெருக்கடியை தனக்கான மௌனத்தில் அழுத்தி ஒரு பேயைப் போல ஆக்ரோஷமாகப் பறக்கவிடுகிறார் கவிஞர். அன்பைப் பற்றிய ஒரு முக்கியமான கவிதை இது என்றே சொல்லலாம்.

யோகியின் கவிதை

நான் தனித்திருந்த அந்த நாளில்
மழை பெய்து கொண்டிருந்தது
நான் இரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு பேசிக்கொண்டிருந்தேன்
மழையோடு விளையாடிக்கொண்டிருந்தேன்
மழையில் குளித்துக்கொண்டிருந்தேன்
மழை என்னைத் தழுவிக்கொண்டிருந்தது.
நான் தனித்திருக்கும் இந்த நாளிலும்
மழை பெய்துகொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.

நவீன கவிதைகளில் இன்றளவும் அதிகமாகப் புனையப்படும் பேசுபொருளாக தனிமை இருக்கிறது. த்துனைமுறை உதறினாலும் அறுந்து விழ முடியாத ஓர் உறுப்பு போல ஆகிவிட்டது தனிமை. அதை விழுங்கிக் கொள்வதன் மூலமே உளப்போராட்டங்களைக் கரைக்க முடியும் என்கிற அளவிற்கான சமரசங்கள் தேவைப்படுகின்றன. தனிமையைப் பற்றி மிக அருமையாகச் சொல்லக்கூடிய கவிதைகளில் தனிமை அகத்திற்கு வெளியே வைத்துப் பேசப்பட்டதில்லை, தனிமையின் கொடூரத்தை, இன்பத்தை, ஏதுமற்ற உணர்வை அகத்தின் குறியீடாகத்தான் பேசப்பட்டிருக்கின்றன.

யோகியின் இந்தக் கவிதை ‘தனிமையை’ பற்றிதாக இருந்தாலும், அது தனிமையை உடைத்துக் கொண்டு மேலும் ஒரு தனிமைக்குள் அடைப்படுவதை பற்றி நம்மிடம் சொல்கிறது. கவிதையின் முதலிலேயே, ‘நான் தனித்திருந்த நாளில்’ என்பது மிகத் தெளிவாக இது தனிமையைக் குறிக்கிறது எனத் தெரிந்துகொண்டாலும் கவிதையின் இறுதியில் தனிமைக்கான அடுத்த வளர்ச்சி மையப்பாத்திரத்தை மேலும் தனிமைப்படுத்துவதையும் புரிந்துகொள்ள வேண்டும். (இதற்கு மாறாகவும் புரிந்துகொள்ளலாம்).

“நான் தனித்திருக்கும் இந்த நாளிலும்
மழை பெய்துகொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.”-யோகி

முதலில் அவள் உணர்ந்த தனிமையில் ஒரு மழை இருந்தது, அதனுடன் அவள் விளையாடினாள், அந்த மழை தன்னைத் தழுவுவதாகக் கற்பித்துக் கொண்டாள். ஆனால் மற்றொருநாளில் அதே மழை பெய்து கொண்டிருக்கிறது, அவள்  தன்னைத் தனிமையின் தனிமைக்குள் தனிமைப்படுத்திக் கொள்கிறாள்.
யோகி தனிமைக்கென சில குறிப்புகளைக் கவிதையில் தருகிறார். இது தனிமையின் அடர்த்தியைக் காட்டக்கூடியது.




“மழை பெய்து கொண்டிருந்தது
நான் இரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு பேசிக்கொண்டிருந்தேன்”-யோகி

மழையோடு பேச என்ன இருக்கிறது? தன்னை ஆக்கிரமிக்கும் தனிமையிலிருந்து தப்பிக்க முயலும் செயலாக இதைக் கருதலாம் போல. அல்லது தனிமையைத் தானே விரும்பி ஏற்றுக் கொண்ட பின், தனிமை பழகிவிடுகிறது. அதிலிருந்து மீள இயலாமல் அதற்குள்ளே தொலைந்துவிடக்கூடிய குறிப்புகளாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். தனக்குப் பிடிக்காததையும் பிடித்தது போல காட்டிக் கொள்ள எத்துனை வீரியமான நாடகத்தைக் காட்ட வேண்டியிருக்கிறது? இரசனை, ஆர்வம், சுதந்திரம் எனத் தனிமைக்கு ஆயிரம் கற்பிதங்களை உருவாக்கிப் பார்த்தும் கடைசியில் அகம் தோற்று தனிமை தன்னை பலப்படுத்திக் கொள்கிறது.

“நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.”-யோகி


இது கொஞ்சம் சவால்தான். எத்துனைத் தூரம் தனிமை தன்னை வலுப்படுத்தும் என்பதற்கான ஆதாரம். அதை மேலோட்டமாகச் சிக்கனமாக மட்டுமே யோகி காட்டியிருக்கிறார். இதற்கு மேலும் இந்தத் தனிமையை உணர்த்துவதற்குச் சொல் சிக்கனத்தை ஏற்படுத்த முடியுமா? நகுலன் இதைச் செய்திருக்கிறார்.

“எனக்கு யாரும் இல்லை
நான்கூட” – நகுலன்

இதுவும் மிகக் கொடூரமான தனிமையின் வலியையும் நிதர்சனத்தையும் சொல்லிவிட்டு மௌனமாக நகரும் கவிதைத்தான். யோகி மேலும் முயன்றால் இன்னும் நல்ல கவிதைகளைத் தர முடியும். அதற்கான மொழி அவரிடம் உள்ளது. இதுதான் தனிமையைப் பற்றிய பேசிய மலேசியாவின் சிறந்த கவிதை என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை, மேலும் இந்தக் கவிதைத்தான் யோகியின் கவிதை உச்சம் எனவும் நான் அடையாளப்படுத்தவில்லை. இது யோகியின் ஒரு கவிதை பற்றிய பார்வை மட்டுமே. 

நம் அகத்தின் சலனங்களை மேலும் வலுவாகக் கலைத்தன்மையுடன் சொல்வதற்குக் கவித்துவமான பாய்ச்சல் கொண்ட மொழிநடை தேவைப்படுகிறது என நம்புகிறேன். நவீன கவிதைகள் ஏன் புரிவதில்லை என்கிற கேள்விகளுக்கு என்னிடமிருந்து ஒரே பதில்தான், இவை யாவும் முதலாம் ஆண்டு கட்டுரைகள் அல்ல, கொஞ்சம் முயற்சியும் ஆர்வமும் மூலை உழைப்பும் இருந்தால், கட்டாயம் எந்தப் பிரதியையும் புரிந்துகொள்ள முடியும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா