மழை நாட்களில் பள்ளியில் பல இடங்களில் மழை நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். அன்றைய தினம் மழை பொழுதுகள் கால்களில் ஒட்டிக் கொண்டே நாங்கள் நகரும் எல்லாம் இடங்களுக்கும் பின்தொடரும் என்றே சொல்லலாம். 25 நிமிட பயணத்திற்குப் பிறகு உடலுக்குக் கீழ் பாதிவரை நனைந்துகொண்டே வந்து சேர்வேன்.
“டே. . சார் நனைஞ்சிட்டாரு. .”
மழைக்காலங்களில் நான் வந்து சேரும் கணங்களில் மாணவர்கள் உதவிக்கென்று என்னைச் சூழ்ந்துகொள்வார்கள். நீர் சொட்ட சொட்ட காலை நிதானங்களை எங்கோ அவசரத்தில் ஏதோ ஒரு சாலை சந்திப்பில் தொலைத்துவிட்டு வந்திருப்பேன். பரப்பரப்பாக கொஞ்சம் கோபமாகவும் உள்ளே நுழையும் என்னை மாணவர்கள்தான் அசௌளகரிகங்களை மறக்கடிக்கும் முயற்சிகளைச் செய்து மகிழ்ச்சிப்படுத்துவார்கள். காலையிலேயே தொடங்கும் மழைக்காலங்களில் அதுவும் ஒரு மோட்டாரில் பயணம் செய்யும் ஆசிரியர்களின் நிலையை எப்படி அவ்வளவு துல்லியமாக விவரிப்பது என்று தெரியவில்லை.
“யேன் சார் வரும்போதே மழையெ கொண்டு வர்றீங்க?”
“சார் மழையெ ஏத்திகிட்டு வந்துடுவாருடா”
மாணவர்களைப் பொருத்தவரையில் நான் மழையைக் கொண்டு வரும் அல்லது மழையை மோட்டாரில் வைத்து சவாரி அடித்துக் கொண்டு வரும் ஆசிரியர். அவர்களின் எள்ளலும் நகைப்பும் மழைக்காலங்களில் குளிருடன் துளிர்த்துப் போயிருக்கும். பேருந்தில் ஏறி வரும் மாணவர்கள் மழைப்படாத தனது வசதிகளைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார்கள். சில மாணவர்கள் மழையில் நனைந்தே பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும் சொல்லிக் குறைப்பட்டுக் கொள்வார்கள்.
“சார். . மழைலே நனையவே விடமாட்டுறாங்க சார். . ஏன் சார்?”
“சார் எங்கம்மா மழை வந்திருச்சின்னா புத்தகத்த எடுத்துப் படிக்க சொல்லிருவாங்க”
“நான் மழை வந்திருச்சின்னா இளுத்துப் போத்திக்கிட்டு தூங்கிருவேன், எங்க வீட்டுலே அப்படித்தான் செய்ய சொல்லுவாங்க”
ஏன் மாணவர்களை மழையைக் காட்டி பயமுறுத்தியே வைத்திருக்கிறோம்? நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில், மழையில் நனைந்தால் காய்ச்சல் வந்துவிடும் என்று சொல்லியே மழையை அண்டவிடாமல் தூரமாகவே விலக்கி வைத்திருந்தார்கள். இன்றைய மாணவர்கள் மழைக்காலத்தில் அறைக்கதவைச் சாத்திக் கொண்டு அதன் நுகர்வையையெல்லாம் தொலைத்துவிட்டு, புத்தகங்கள் புரட்டுவதும் உறங்குவதுமென காணாமல் போய்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் மழை எப்படி இருக்கும் என்ற அனுபவங்களையும் மறந்திருந்தாலும் ஆச்சரியமில்லை.
“சார் இன்னிக்கு மழையைப் பத்தி படிக்கலாமா?”
“சார் சார். . மழைலே ஆட்டம் போட்டுக்கிட்டே படிக்கலாம் சார்”
எப்பொழுதும் மாணவர்களின் மழைக் குறித்த கனவுகளை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மழை நாட்களிலும் வகுப்பில் ஏற்படும் ஒழுகுதலை மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். நான் போதிக்கும் வகுப்பின் நடுகூரையில் இன்னும் சரிசெய்யப்படாத ஓட்டை இருப்பதால், மழை ஒழுகி வகுப்பிற்குள் நிரம்பிக் கொண்டிருக்கும். பாடம் போதிக்கும் கணங்களில் வகுப்பின் நடுபகுதியில் வாளியை வைத்துவிட்டு அதில் சொட்டு சொட்டாக ஒழுகிக் கொண்டிருக்கும் மழைநீரின் சிறு இரைச்சலை ஆயாசமாகக் கேட்டுக் கொண்டே இருப்போம்.
“ஏய் மழை நம்ப கிளாஸ்க்கு படிக்க வந்திருக்குடா”
மாணவர்கள் மழையின் வருகையை கூரையிலிருந்து ஒழுகும் அதன் முதல் துளியிலிருந்து வரவேற்கிறார்கள். நாள் முழுக்க மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் பயம், வீட்டுப் பாடம், கரும்பலகை என்ற அனைத்து வகுப்பறை விதிகளையும் கடந்து ஓடி போய் மழையில் நிற்க வேண்டும் என்கிற மனநிலையுடன் அமர்ந்திருக்கும் மாணவர்களின் ஏக்கங்களைப் பாடப் புத்தகம் என்கிற கட்டுபாட்டுகளுடன் சேர்த்துக் கட்டி வைத்திருப்பதாகவே தோன்றும். சில சமயங்களில் மழைநாளின் போது மாணவர்களைக் கொஞ்ச நேரம் வகுப்பிற்கு வெளியே அழைத்து வந்து மழையைக் காட்டுவேன். மழையில் பறந்து கொண்டிருக்கும் பறவைகளையும் காட்டுவேன்.
“அங்க பாரு மழைக்குருவி. . அதுக்கு மழை வரப் போதுனா தெரியும்னு பாட்டிச் சொல்லிருக்காங்க சார்”
அந்த மழைக்குருவியைப் பார்த்தேன். மழையுடன் இணைந்த, இனி வரலாறு முழுக்க மழையை ஊகிக்கும் குருவியாகவே பார்க்கப்படப் போகிற அதன் வாழ்வைக் குறித்து பிரமிப்படைந்தேன். எங்களின் பார்வையை அதன் கால்களில் கட்டிக் கொண்டு வெகுதூரம் பறந்தது. பள்ளியின் கூடாரத்திலிருந்து வடிந்து ஒழுகி விளிம்பிலிருந்து சொட்டும் ஒவ்வொரு மழைத்துளிகளையும் மாணவர்கள் கைகளில் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். மழைநாட்கள் அவர்களின் கைகளில் குவிந்து ஒழுகிக் கொண்டிருக்கும்.
“சார் மழையை கணக்குப் பண்ண முடியுமா?”
மழையையொட்டி மாணவர்களிடம் எப்பொழுதும் பல சந்தேகங்களும் கேள்விகளும் இருந்துகொண்டே வருகின்றன. அவிழ்க்கப்படாத முடிச்சுகளாக ஒவ்வொரு வயதிலும் அவர்கள் மழையைப் பார்த்துக் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அறிவியல் ரீதியில் பல விளக்கங்கள் கொடுத்தாலும் மழையின் இரகசியங்களையும் மகத்துவங்களையும் வெறும் அறிவியல் விளக்கத்துடன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் மழை தனக்குள் பல வினோதங்களைச் சுமந்துகொண்டு வானத்திலிருந்து விழும் அதிசய நட்சத்திரமாகப் பார்த்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
“சார் நான் மழையெ இந்த வாளிலெ பிடிக்கட்டா?”
அவ்வளவு பெரிய மழையை என் வகுப்பு மாணவி வாளியில் பிடிக்க நினைப்பதை என்னவென்று சொல்வது? மாணவர்களின் மழைநாட்களை அவர்களுக்கென விட்டுவிடுங்கள். அவர்கள் சுதந்திரத்துடன் மழையை இரசிக்கும் மழைக்கால பறவைகள். மழை அவர்களின் உலகத்தில் பல அதிசயங்களுடன் பெய்துகொண்டே இருக்கின்றன. மழை என்பது வெறும் அறிவியல் மட்டுமல்ல, நம் பால்ய காலத்தின் நினைவுகள். உங்களின் பள்ளிப் பருவத்தில் மழை ஒரு கதாநாயகன் போல உங்களைக் கவர்ந்திருக்கக்கூடும். முதன் முதலாக நீங்கள் மழையில் நனைந்ததையும் மழையில் நடந்ததையும் நினைத்துப் பாருங்கள். ஒரு காலத்தில் எல்லோரும் மழைக்கால பறவைகளாக இருந்திருக்கிறோம்.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
மலேசியா