காலச்சுவட்டின் வெளியீட்டில் எம்.எஸ் மொழிப்பெயர்ப்பில் வெளிவந்த ‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனைகள்’ மொழிப்பெயர்ப்பு சிறுகதை தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அர்ஜெண்டானாவில் பிறந்த ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ அவர்களின் கதைகள் ஆங்கீலம், போர்த்துகீஸ், ஜெர்மன், வியட்நாமீஸ், பிரெஞ்சு, இத்தாலி, பின்னிஷ், போலிஷ் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு மிகத் தீவிரமாகவும் உரையாடப்பட்டிருக்கின்றன.
தன்னுடைய கதைகளை ஒரு அதீதமான கற்பனைக்குள் புனையப்படும் உண்மையையே ஆதாரமாகக் கொண்டிருப்பதாகப் பலராலும் விமர்சிக்கப்பட்டதாக ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ குறிப்பிடுகிறார். இந்தக் கதை தொகுதியைப் படித்து முடிக்கும்போது என்னாலும் அவர் உலகத்திற்குள் அவர் புனைந்திருக்கும் படிமங்களினூடாகவே பயணிக்க முடிகிறது. கதை என்பதோ கலை என்பதோ மேட்டிமைவாத குறிக்கோள்களுடன் அணுகக்கூடியதாக இருத்தல் கூடாது. அது கலைக்கான புரிதலைச் சாத்தியப்படுத்தாது. கலை என்பது பாராபட்சமின்றி மனித குலத்திற்கே உரியது. அது பேசும் உலகை வைத்தே அதன் தீவிரத்தையும் ஆழத்தையும் நம்மால் மதிப்பிட முடியும்.
ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ அவர்களின் இந்தத் தொகுப்பிலுள்ள முதல் சிறுகதையான ‘அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்’ முதல் வாசிப்பில் பெருமளவு சமூக உறவு குறித்தான அதிர்ச்சியையே அளித்தது. அதனைத் தாண்டி கதை கொண்டிருக்கும் வாதங்களுக்குள் நுழைய வேண்டி இருந்தது. கதையின் மேல்தட்டிலேயே ஒருவன் தங்கிவிட முடியும். ஆனால், அது கதையின் ஆழத்திற்குள் நம்மை கொண்டு போகாது. பூங்கா ஒன்றில் பத்திரிகை படிக்கச் செல்லும் ஒருவன் திடீரென தன் தலையில் யாரோ குடையால் அடிப்பதை உணர்கிறான். வலியை உண்டாக்காத அதே சமயம் எந்தவகையிலுமே ஆபத்தில்லாத அடி அது. அவனுடைய குடையால் தொடர்ந்து கதைச்சொல்லியின் தலையில் அடித்துக் கொண்டே இருக்கிறான். ஆத்திரம் அடைந்த கதைச்சொல்லி அவனை ஓங்கிக் குத்துகிறான். மூக்கில் இரத்தம் வடிய பலவீனத்துடன் எழுந்து மீண்டும் அவன் தலையில் குடையால் அடிக்கத் துவங்குகிறான். காலம் காலமாக அதே வேலையைச் செய்து செய்து சலித்துப் போனவனின் பாவனையில் அவன் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான். அவனிடமிருந்து தப்பிக்கக் கதைச்சொல்லி அங்கிருந்து ஓடுகிறான். ஆனால், அந்தக் குடையால் அடிப்பவன் கதைச்சொல்லியைப் பின் தொடர்ந்து வருகிறான். அவனுடன் பேருந்தில் ஏறி எல்லோரும் கேலியாகச் சிரிக்க எந்த உணர்ச்சியுமில்லாமல் கதைச்சொல்லியின் தலையில் அடித்துக் கொண்டே இருக்கிறான்.
இப்படியாக ஐந்து வருடங்கள் கதைச்சொல்லியை அவன் குடையால் தலையில் அடித்து அடித்து, அது ஒரு வழக்கமான விசயமாக மாறுகிறது. அந்தக் குடை அடி இல்லாமல் தன்னால் உறங்க முடியாது என்கிற நிலைக்குக் கதைச்சொல்லி வந்துவிடுகிறான், மேலும் இனி தனக்கு இருக்கும் ஒரே பயம் ஒருவேளை தன்னைக் குடையால் அடித்துக் கொண்டிருப்பவனுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இனி மிச்ச நாட்களை இந்தக் குடையால் அடிக்கப்படாமல் எப்படி வாழப்போகிறேன் என்கிற சந்தேகங்களுடன் கதை முடிகிறது.