Monday, October 4, 2010

மலேசிய பெண் படைப்பாளிகளின் இரண்டு கவிதைகள் : அகத்தில் தோன்றும் சலனங்கள் (கவிஞர் மணிமொழி - யோகி)

மௌனத்தில் வாசிக்க நேர்ந்த இரு முக்கியமான பெண் கவிஞர்களின் இரண்டு கவிதைகளைப் பற்றித்தான் இங்கு வாசக எதிர்வினையாகப் பதிவு செய்கிறேன். பெரும்பாலும் முறையான வாசிப்பு பயிற்சியின்மையாலே பல நல்ல கவிதைகள் வாசிக்கப்படாமலேயே காலத்தைக் கடந்து தன் தீவிரத்தை இழக்காமல் காத்திருக்கிறது. இந்த இரு கவிதையையும் தற்செயலாக மீண்டும் வாசிக்கும்போது அதை உணர முடிந்தது.

ஒரு நல்ல கவிதை வாசகனுக்குள் நெகிழ்ச்சியை அல்லது சலனத்தை ஏற்படுத்தும் அல்லது வாசித்த பிறகும் அதை மனதிலிருந்து நீக்க முடியாமல் போகும் என்றெல்லாம் கவிதை மீது நம்பிக்கை உண்டு. தற்சமயம் வாசிப்பு அடைந்திருக்கும் தேக்கமான எல்லையில் எல்லாம் படைப்புகளையும் ஒருவிதமான அவசரத்துடன் ஒரே வாசிப்பில் அதன் உள்ளே இருக்கும் புரிதல் பற்றிய எந்த அக்கறையுமின்றி கடந்துவிடும் வாசகர்கள் நிறைந்துவிட்டதால், அந்த இரைச்சலுக்கு மத்தியில் ஏதோ சில தீவிரமுடைய வாசகர்கள் மட்டுமே முழுமையை அகற்றி அதிலுள்ள நல்ல கவிதைகளை அடையாளம் காட்டுகிறார்கள். இது மலேசியாவில் மௌனம் இதழின் மூலம் நடத்தப்படுகிறது. வாசிப்பைச் சிரமமாகக் கருதுபவர்களே புரியாத படைப்புகளை நோக்கி பதற்றமடைகிறார்கள். ஒருவேளை மணிமொழி மற்றும் யோகியின் இந்தக் கவிதைகள் முதல் வாசிப்பில் புரியாமல் போகக்கூடும் அல்லது பிடிக்கொடுக்காமல் நழுவக்கூடும்.

மணிமொழியின் கவிதை

எனக்குப் பரிச்சியமான
நான் விரும்பிய
நான் வளர்த்த
பேயொன்று
என்னை. . .
எட்டி உதைத்து
முட்டித் தள்ளிக்
கத்திக் கொண்டு
நான்கு கறுத்த இறக்கையோடு
மிகச் சாதாரணமாய்
பறந்தோடியது
எனதன்பைக் குப்பையில்
வீசிவிட்டு.

நவீன கவிதைகள் பெரும்பாலும் தனிமனிதனின் பரிதவிப்புகளையும் அவனுடைய அக உணர்வுகளின் உச்சத்தையும் பற்றியதாகவே அதிகமாகப் புனையப்பட்டிருக்கின்றன. புற வாழ்வு அவனுக்களித்த அனுபவம் அவனுடைய அகத்திற்குள் பலவிதமான நெருக்கடிகளை உருவாக்கியிருக்கக்கூடும். அந்த நெருக்கடிகள் ஒரு கலை படைப்பாக வெளிப்படும்போது தனக்கான ஒரு படிமத்தைச் சார்ந்து உக்கிரமாகவும் நிதானமாகவும் எழுதப்படுகிறது. அந்தப் படிமத்தை ஆழமாக உணர முடியாதவர்கள், வலுக்கட்டாயமாக அந்தக் கவிதையை அர்த்தமற்றது என நிராகரித்துவிடவும் வாய்ப்புண்டு. பிரதி சரியாக வாசிக்க முடியாமல் போனதுதான் மிச்சம். இது கவிதையின் போதாமை கிடையாது. கவிதைக்கான வாசகர் இன்னும் வரவில்லை எனத்தான் அர்த்தம்.

மணிமொழியின் இந்தக் கவிதை குறித்து முதல் வாசிப்பிலேயே( பிப்ரவரி 2009 – மௌனம்) எனக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்திருந்தது. ஒரு வருடம் கழித்தே அதைப் பற்றி எழுதுவதற்கு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. கவிதையில் ஓர் ஆழ்ந்த மௌனம் இருக்க வேண்டும், இதைத் தேவையற்ற சொற்களை நீக்குவதன் மூலம் அமையலாம் அல்லது தேவையான ஒரு முக்கிய சொல்லை நீக்குவதன் மூலமும் அமையலாம். அதே போல கவிதை குறித்தும் அதிகமாக விவரிக்க இயல்வதில்லை. அந்த மௌனத்தை எப்படிக் களைத்துப் பார்ப்பது என்பதில் ஏற்பட்ட தயக்கம் என வைத்துக் கொள்ளலாம்.“எனக்குப் பரிச்சியமான
நான் விரும்பிய
நான் வளர்த்த
பேயொன்று”

கவிதைக்குள் இருக்கும் ‘நான்” என்பதற்கும் அந்தப் பேய்க்கும் இருக்கும் நெருக்கமான உறவு ஆரம்பத்திலேயே சொல்லப்படுகிறது. ஆனால் அது விவரிக்கப்படவில்லை. சிக்கனமான சொல் தேர்வு இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் பேய் என்கிற உருவகம் எதற்கு? இந்தப் படிமத்தை உடைத்தால்தான் கவிதைக்குள் சாதாரணமாக நுழைய முடியும்.

நமக்கு மிக நெருக்கமான அன்பிற்குரியவர்களின் புறக்கணிப்பை இப்படி உருவகப்படுத்தி அதன் கொடூரத்தை உக்கிரமாகக் காட்ட முயன்றிருக்கலாம். எப்பொழுதும் நம் வெறுப்பையும் அன்பையும், கோபத்தையும் காட்டக்கூடியவர்களாக நமக்குச் சொந்தமானவர்களும் நெருக்கமானவர்களும்தான் இருப்பார்கள். அவர்கள் மீது நமக்கிருக்கும் உரிமை, அவர்களை வளர்க்கவும், விரும்பவும் சுதந்திரத்தைக் கொடுக்கிறது. அந்தச் சுதந்திரத்தைக் கொண்டு நாம் நேசிப்பவர்களைப் பேயாகவும், தேவதையாகவும், பூதமாகவும், பறவையாகவும் என எப்படி வேண்டுமென்றாலும் மன உணர்வுகளுக்கு ஏற்றாற் போல உருவாக்கிக் கொள்ளலாம்.

நாம் காட்டும் அன்பைத் தூக்கி வீசுபவரின் மீது ஏற்படும் ஒரு வர்ணனையாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். வெறுப்புணர்வின் படிமங்களை எடுத்து ‘எனதன்பைத் தூக்கி வீசியவரின் மீது எப்படி வேண்டுமானாலும் பிரயோகிக்கலாம். அத்தகையதொரு பிரயோகமாகவே இதைக் கருதுகிறேன். அன்பு புறக்கணிக்கப்படுதன் நிலை இப்படித்தான் இருக்கும் என அந்த அகநெருக்கடியை தனக்கான மௌனத்தில் அழுத்தி ஒரு பேயைப் போல ஆக்ரோஷமாகப் பறக்கவிடுகிறார் கவிஞர். அன்பைப் பற்றிய ஒரு முக்கியமான கவிதை இது என்றே சொல்லலாம்.

யோகியின் கவிதை

நான் தனித்திருந்த அந்த நாளில்
மழை பெய்து கொண்டிருந்தது
நான் இரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு பேசிக்கொண்டிருந்தேன்
மழையோடு விளையாடிக்கொண்டிருந்தேன்
மழையில் குளித்துக்கொண்டிருந்தேன்
மழை என்னைத் தழுவிக்கொண்டிருந்தது.
நான் தனித்திருக்கும் இந்த நாளிலும்
மழை பெய்துகொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.

நவீன கவிதைகளில் இன்றளவும் அதிகமாகப் புனையப்படும் பேசுபொருளாக தனிமை இருக்கிறது. த்துனைமுறை உதறினாலும் அறுந்து விழ முடியாத ஓர் உறுப்பு போல ஆகிவிட்டது தனிமை. அதை விழுங்கிக் கொள்வதன் மூலமே உளப்போராட்டங்களைக் கரைக்க முடியும் என்கிற அளவிற்கான சமரசங்கள் தேவைப்படுகின்றன. தனிமையைப் பற்றி மிக அருமையாகச் சொல்லக்கூடிய கவிதைகளில் தனிமை அகத்திற்கு வெளியே வைத்துப் பேசப்பட்டதில்லை, தனிமையின் கொடூரத்தை, இன்பத்தை, ஏதுமற்ற உணர்வை அகத்தின் குறியீடாகத்தான் பேசப்பட்டிருக்கின்றன.

யோகியின் இந்தக் கவிதை ‘தனிமையை’ பற்றிதாக இருந்தாலும், அது தனிமையை உடைத்துக் கொண்டு மேலும் ஒரு தனிமைக்குள் அடைப்படுவதை பற்றி நம்மிடம் சொல்கிறது. கவிதையின் முதலிலேயே, ‘நான் தனித்திருந்த நாளில்’ என்பது மிகத் தெளிவாக இது தனிமையைக் குறிக்கிறது எனத் தெரிந்துகொண்டாலும் கவிதையின் இறுதியில் தனிமைக்கான அடுத்த வளர்ச்சி மையப்பாத்திரத்தை மேலும் தனிமைப்படுத்துவதையும் புரிந்துகொள்ள வேண்டும். (இதற்கு மாறாகவும் புரிந்துகொள்ளலாம்).

“நான் தனித்திருக்கும் இந்த நாளிலும்
மழை பெய்துகொண்டிருக்கிறது
நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.”-யோகி

முதலில் அவள் உணர்ந்த தனிமையில் ஒரு மழை இருந்தது, அதனுடன் அவள் விளையாடினாள், அந்த மழை தன்னைத் தழுவுவதாகக் கற்பித்துக் கொண்டாள். ஆனால் மற்றொருநாளில் அதே மழை பெய்து கொண்டிருக்கிறது, அவள்  தன்னைத் தனிமையின் தனிமைக்குள் தனிமைப்படுத்திக் கொள்கிறாள்.
யோகி தனிமைக்கென சில குறிப்புகளைக் கவிதையில் தருகிறார். இது தனிமையின் அடர்த்தியைக் காட்டக்கூடியது.
“மழை பெய்து கொண்டிருந்தது
நான் இரசித்துக்கொண்டிருந்தேன்
மழையோடு பேசிக்கொண்டிருந்தேன்”-யோகி

மழையோடு பேச என்ன இருக்கிறது? தன்னை ஆக்கிரமிக்கும் தனிமையிலிருந்து தப்பிக்க முயலும் செயலாக இதைக் கருதலாம் போல. அல்லது தனிமையைத் தானே விரும்பி ஏற்றுக் கொண்ட பின், தனிமை பழகிவிடுகிறது. அதிலிருந்து மீள இயலாமல் அதற்குள்ளே தொலைந்துவிடக்கூடிய குறிப்புகளாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். தனக்குப் பிடிக்காததையும் பிடித்தது போல காட்டிக் கொள்ள எத்துனை வீரியமான நாடகத்தைக் காட்ட வேண்டியிருக்கிறது? இரசனை, ஆர்வம், சுதந்திரம் எனத் தனிமைக்கு ஆயிரம் கற்பிதங்களை உருவாக்கிப் பார்த்தும் கடைசியில் அகம் தோற்று தனிமை தன்னை பலப்படுத்திக் கொள்கிறது.

“நான் கதவடைத்து
அந்த நாளை நினைத்துக்கொண்டிருந்தேன்.”-யோகி


இது கொஞ்சம் சவால்தான். எத்துனைத் தூரம் தனிமை தன்னை வலுப்படுத்தும் என்பதற்கான ஆதாரம். அதை மேலோட்டமாகச் சிக்கனமாக மட்டுமே யோகி காட்டியிருக்கிறார். இதற்கு மேலும் இந்தத் தனிமையை உணர்த்துவதற்குச் சொல் சிக்கனத்தை ஏற்படுத்த முடியுமா? நகுலன் இதைச் செய்திருக்கிறார்.

“எனக்கு யாரும் இல்லை
நான்கூட” – நகுலன்

இதுவும் மிகக் கொடூரமான தனிமையின் வலியையும் நிதர்சனத்தையும் சொல்லிவிட்டு மௌனமாக நகரும் கவிதைத்தான். யோகி மேலும் முயன்றால் இன்னும் நல்ல கவிதைகளைத் தர முடியும். அதற்கான மொழி அவரிடம் உள்ளது. இதுதான் தனிமையைப் பற்றிய பேசிய மலேசியாவின் சிறந்த கவிதை என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை, மேலும் இந்தக் கவிதைத்தான் யோகியின் கவிதை உச்சம் எனவும் நான் அடையாளப்படுத்தவில்லை. இது யோகியின் ஒரு கவிதை பற்றிய பார்வை மட்டுமே. 

நம் அகத்தின் சலனங்களை மேலும் வலுவாகக் கலைத்தன்மையுடன் சொல்வதற்குக் கவித்துவமான பாய்ச்சல் கொண்ட மொழிநடை தேவைப்படுகிறது என நம்புகிறேன். நவீன கவிதைகள் ஏன் புரிவதில்லை என்கிற கேள்விகளுக்கு என்னிடமிருந்து ஒரே பதில்தான், இவை யாவும் முதலாம் ஆண்டு கட்டுரைகள் அல்ல, கொஞ்சம் முயற்சியும் ஆர்வமும் மூலை உழைப்பும் இருந்தால், கட்டாயம் எந்தப் பிரதியையும் புரிந்துகொள்ள முடியும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா