Saturday, April 18, 2015

நேர்காணல்: தோட்டங்களை விட்டு ஓடிவந்த தமிழர்களின் நிலவியல் வாழ்க்கையே கே.பாலமுருகனின் நாவல்!

http://www.selliyal.com/?p=88939
கோலாலம்பூர், ஏப்ரல் 18 – கே.பாலமுருகன் (படம்) எனும் படைப்பாளி மலேசிய தமிழிலக்கிய சூழலில் சிறுகதைகள், நாவல்கள் மூலம் நன்கு அறியப்பட்ட இளம் படைப்பாளி. தனது 23ஆவது வயதில் அவர் எழுதிய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ எனும் நாவல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான தமிழ் நாவல் போட்டியில் 2007ஆம் ஆண்டில் முதல் பரிசை வென்று தமிழ் இலக்கியச் சூழலை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதோடுமட்டுமல்லாமல் அவருடைய அந்த நாவல், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் முஸ்தப்பா அறவாரியத்தின் வழியாக அவருக்கு ‘கரிகாற் சோழன்’ விருதைப் பெற்றுக் கொடுத்தது. நாவல் பயணத்தில் தனித்து விளங்கும் கே.பாலமுருகனின் அடுத்த இரண்டு குறுநாவல்கள் அடங்கிய ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் தொகுப்பு குறித்து அவரிடம் உரையாடியபோது:
unnamed (1)
கேள்வி: ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் நாவல் எப்படி உருவானது? அதன் பின்னணி என்ன?
கே.பாலமுருகன்: நான் எனது 11ஆவது வயது முதல் 15ஆவது வயதுவரை ஆற்றோரக் கம்பத்தில்தான் வாழ்ந்தேன். பின்னர் அந்த ஆற்றோரம் இருந்தவர்களுக்கு ஒரு மலிவு அடுக்குமாடி கட்டித்தரப்பட்டது. நாங்கள் சீனக் கம்பத்திலேயே இருந்துவிட்டோம். என் நண்பர்கள் பெரும்பாலானோர் அடுக்குமாடிக்குப் போய்விட்டதால் வாரத்தில் நான்குமுறை அங்குப் போய் அவர்களுடன்தான் இருப்பேன்.