Friday, December 26, 2014

பெரும் வெள்ளக்காடாக மாறிக்கொண்டிருக்கும் மலேசியா 2014 : ஆம் ஆண்டின் மூன்றாவது துயரமிக்க கணம்

"என் குடும்பத்தார் சிலர் கடைசியாக மேட்டுப் பகுதிக்குப் போவதாகச் சொல்லிக் கிளம்பினர். அவர்கள் அங்கு உயிருடன் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. நாங்கள் பிழைத்துக் கொண்டோம் என்கிற தகவலும் அவர்களுக்குத் தெரியாது" கெராய் மருத்துவமனையின் இருளுக்குள்ளிருந்து வரும் குரல்கள்.

//bius melalui hidung) kepada seorang bayi dalam gelap untuk menyelamatkan nyawanya selepas generator di Hospital Kuala Krai kehabisan minyak hari ini.//

பிறந்த குழந்தையொன்றின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவசர சிகிச்சை வழங்கப்பட்டது. மின்சார நிறுத்தப்பட்டதால் கெராய் மருத்துவமனையில் பெரும் அவதி.




இன்று சுனாமி நினைவு நாள். கடந்த 10 வருடங்களுக்கு முன் 2004ஆம் ஆண்டு ஒரு இறப்பு வீட்டில் பஜனையை முடித்துவிட்டு புக்கிட் மெர்த்தாஜமிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தோம். (அப்பொழுது ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் இருந்த காலம்) தொலைப்பேசியின் மூலம் உலகம் முழுக்க சுனாமி ஏற்பட்டதுள்ளதாக அறியப்பட்டோம். உடனே காரில் இருந்த ஒரு பக்தர் இந்தப் பூமிக்குக் கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது என்றார். நான் வெளியில் பார்த்தேன். சுகந்தமான காற்றும் அமைதியுமே நிலவியிருந்தது. பிறகெப்படி இது கெட்ட காலம் எனத் தோன்றியது.

உலகில் இந்தக் கணம் எங்கோ ஓர் இறப்பு நடந்து கொண்டிருக்கலாம். ஒரு கொலை நடந்து கொண்டிருக்கலாம். ஒரு குழந்தை பிறந்து கொண்டிருக்கலாம். ஒரு நாட்டில் குண்டு போடப்பட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது யாரோ ஒருவர் பட்டினியில் வாடிக் கொண்டிருக்கலாம். அல்லது ஒரு பெரிய விருந்து நடந்து கொண்டிருக்கலாம். இதில் நாம் எங்கு இருக்கிறோம் என்பது பொறுத்தே வாழ்வு. வாழ்ந்தவன் வாழ்ந்து கொண்டிருப்பவனும் எல்லோருமே கடைசியாக உணர்வது வாழ்க்கை அத்தனை எளிமையானது அல்ல; வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து எல்லோருக்கும் பயம் உண்டு. குறிப்பாக மரணம் குறித்து அனைவருக்கும் தீராத ஒரு திகில் உள்ளுக்குள் உறைந்து போய்க் கிடக்கின்றது. அதிலிருந்து மீள பக்தி, கடவுள், தன்முணைப்பு, துறவு என மனித மனம் பல களங்களைத் தாண்டி வந்துவிட்டது. இதில் எது உண்மை எது பொய் என விவாதிக்கும் சூழல் இல்லாமல் தினம் தினம் ஒரு கார்ப்பரேட் சாமியார்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

சடாரென்று அன்று காரில் அமர்ந்திருந்த அவரும் ஒரு கார்ப்பரேட் சாமியாருக்குரிய பொய்யான சமாதானம் சொன்னதாகவே இப்பொழுது தோன்றுகிறது. ஏதோ ஓர் இயக்கத்தில் போய் சேர்ந்துவிட்டால் போதும் நம்மை ஒரு பாதுகாப்பான சூழலில் அமர்த்திக் கொண்டுவிட்டோம் என மனம் அமைதியடைகிறது. ஆனால், இது போன்ற சுனாமியின் போது நல்லவன் கெட்டவன், சாமியார் பக்தன், அரசன் ஆண்டி எனப் பேதம் பார்க்காமல் அனைவரையும் அடித்துத் தள்ளித் துடைத்துவிடுகிறது இயற்கை.


பத்து வருடம் நினைவுகளைக் கடந்து நிற்கும் இன்றைய மலேசியா, திடீரென்று பெரும் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்யும் மழையால் மலேசியாவின் ஐந்து மாநிலங்களில் (கிளாந்தான், பேராக், பகாங், பெர்லிஸ் & திரங்காணு) பயங்கர வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அநேகமாக மலேசியாவின் வரலாற்றில் மிகக் கொடுமையான வெள்ளம் எனப் பேசப்படும் 1982ஆம் ஆண்டில் நடந்ததைவிட இவ்வாண்டின் வெள்ளம் பெரும் சரித்திரமாக மாறக்கூடும். இதுவரை 100,000 க்கும் மேற்பட்டோர் வெள்ளைத் துயர்த்துடைப்பு மையத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். கிளாந்தான் மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,000- தாண்டுகிறது.