Thursday, July 12, 2012

சிறுகதை: வீட்டைத் தொலைத்தவர்கள்


நான் மணியத்தின் மகன் சிவா

அப்பா பெயர் மணியம். அப்படிச் சொன்னால் சிலருக்கு மட்டுமே தெரியும். வழக்கமாக அவரைக் ‘கட்டை மணியம்’ என்றுத்தான் அழைப்பார்கள். வழியில் சந்தித்தத் தெரிந்தவர்களிடம் ‘கட்ட மணியத்தெ பாத்தீங்களா?” எனக் கேட்டேன். தெரியாதவர்களிடம், “ தலை சொட்டெ, இலேசா கூன் வலைஞ்சிருக்கும், கட்டையா இருப்பாரு... சொந்தமா பேசிக்கிட்டு இருப்பாரு..அவரெ எங்காவது பாத்தீங்களா?” எனக் கேட்டேன். அங்கு யாரும் யாரையும் தேடுபவர்கள் கிடையாது. அதிர்ச்சியைத் தரக்கூடிய எந்தவொரு கேள்வியையும் அவர்கள் சந்திக்கத் தயாரில்லை. அதிர்ச்சியான விசயங்கள் அவர்களின் நேரத்தில் சிலவற்றை பிடுங்கிக்கொள்ளும் என்கிற அச்சம். சாரை சாரையாகக் கடந்து போகும் வாகனங்களுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் கட்டை மணியம் எங்கு இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்?

எங்குத் தேடியும் அப்பா கிடைக்கவில்லை. வெகுநேரம் மங்கிய வெளிச்சத்துக்கு மத்தியில் நகரம் முழுக்கவும் தேடி அலைந்துவிட்டு சீன ஆப்பே கடையில் வந்து அமர்ந்துவிட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெறும் விட்டுவிட்டு மின்னும் வெளிச்சமும் இருளும்தான். சாலைகள் பாம்பு போல பளபளவென நெளிந்தன. வெள்ளை காற்சட்டை, கோடு போட்ட நீல சட்டை. அப்பா வீட்டிலிருந்து வெளியேறும்போது அணிந்திருந்த உடையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திவிட்டு வருவோர் போவோரைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.