எப்பொழுதும் போலவே
இன்றும்
கிழக்குக்கரையைப் பற்றிய
ஒரு கதை
அடித்துச் சென்றது
சுங்கை நதியில்.
அநேகமாக
கிழக்குக்கரையிலுள்ள
அஞ்சலைப் பாட்டி
இறந்திருக்கக்கூடும்
அல்லது இன்று
கூடுதலான
மலம் கழிக்கப்பட்டிருக்கும்.
மீண்டும்
மழைக்காலத்திற்குப் பிந்தைய
ஒரு அதிகாலையில்
அடர்ந்த கதைகளுடன்
முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றது
யாருமற்ற தனிமையில்
சுங்கை நதி.
தவுசே சீனக் கிழவியின்
வீட்டின் மூன்றாவது
கால் இடறி
வீட்டை முழுங்கிய
ஒரு செய்தியை
எப்படிக் கதையாக
மாற்றக்கூடிய சாமர்த்தியம்
வாய்த்திருக்கும்
சுங்கை நதிக்கு?
அம்மோய் அக்காவின்
குடிக்கார கணவன்
எப்படி ஒரு கதைக்குள்
தவறி விழுந்து
இறந்திருக்கக்கூடும்?
வரிசையாக நின்று
சுங்கை எனும் கதைக்குள்
மூத்திரம் பெய்த சிறுவர்களில்
இருவர்
ஒரு மழைக்காலத்தில்
கதையிலிருந்து நீங்கிவிட்டதன்
சோகத்தை எப்படி
புனைந்திருக்கும்
சுங்கை நதி?
மீண்டும்
ஒரு அதிகாலை.
யாருக்கும் சொல்ல வேண்டாம்
என்கிற வெறுப்பில்
எல்லாம் கதைகளையும்
தனக்குள்ளே
ஒளித்துக்கொண்டு
இரகசியமாய் நகர்கிறது
சுங்கை நதி.
வெளியே தெரிந்த
இறந்தவர்களின் கைகளில்
ஒட்டிக் கொண்டிருந்த
வறுமையும் கிழக்குக்கரையின்
சோகமும்
எப்படியும் வெளிப்பட்டன
மையமில்லாத வெறும் கதைகளாய்
அர்த்தமற்ற வெறும் நிகழ்வாய்
கதைப்பாத்திரங்களை இழந்த
வெறும் சூன்யமாய்.
சுங்கை நதி
எந்தச் சலனமுமின்றி
அடுத்த மழைக்காலம் வரும்வரை
தனக்குள்ளே பயணிக்கத் துவங்கியது.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா.