தெருவோரம் இருந்த யூ வாங் கொய்த்தியோ கடையில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அன்று விநோதமாகத் தெரிந்தன. கரண்டில் பட்டு செத்துக் கொண்டிருந்த ஈக்களின் சாவு சத்தமும் மனிதர்களின் கூச்சலும் கேட்டு கேட்டு சலித்த களைப்பில் அமர்ந்திருந்தேன். வழக்கமாக வேலை முடிந்து வரும் வழியில் ஒரு கொய்த்தியோ சாப்பிடாமல் வீட்டுக்குப் போவதில்லை. ஓரளவிற்கு கொய்த்தியோ என் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவு. ஒருநாள் சாப்பிடவில்லையென்றாலும் அன்றிரவு முழுவதும் கொய்த்தியோ நாசியைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கும்.
ஓர மேசை, கருவடைந்த மஞ்சள் தட்டு, கரண்டிகளின் சண்டையிடும் ஒலி, யூ வாங் நெருப்பில் வாட்டியெடுத்த கொய்த்தியோ, அன்றைய நாள் அத்தனை அற்புதமானதாக மாறும். யூலி தொழிற்சாலையில் 8 மணி நேரம் நின்று வேலை செய்துவிட்டு வந்த அலுப்பும் விலகும். அவ்வப்போது ஐ.டி கார்ட்டைக் கழற்றுவதற்கு மறந்து கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்க அமர்ந்திருப்பேன்.
“ஓய்ய்ய்ய் தவுக்கே மனா கொய்த்தியோ?”
கேட்க விரும்பாத கொஞ்சமும் ஈரமில்லாத குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். நானும் ஒருமுறை அப்படிக் கத்திப் பார்த்தேன். எனக்கே அருவருப்பாக இருந்தது. கொஞ்சமும் இலகுவாக இல்லை. கடினமான குரல். இயந்திரத்தின் சத்தம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.