Monday, March 16, 2009

11.00 மணி பேருந்தும் பருவ நகர்வும்


அகால இருள் சூழத் துவங்கியிருக்கும் கணத்தில்தான் ஒவ்வொரு முறையும் அக்காவை மலாக்காவிலுள்ள கல்லூரிக்குப் பேருந்து ஏற்றிவிட சுங்கைப்பட்டாணி பேருந்து நிலையத்திற்கு வருவதுண்டு. அந்தச் சமயங்களில் அக்காள் பேருந்தில் ஏறி சொகுசு இருக்கையில் அமர்ந்துகொண்டு உயரத்திலிருந்து எங்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டு பேருந்துடன் மறையும் போதேல்லாம் பல தடவை மனதுக்குள் ஒரு வகை ஆசை பூதாகரமாய் எழுந்து தொலைப்பதுண்டு. அக்கா குளுரூட்டியின் கதகதப்போடு உடலை இறுக்கிக் கொண்டு பேருந்தின் இருட்டில் அமர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனம் அதைக் கண்டு சில்லிடுகிறது.

நாமும் ஒரு நாள் இங்கிருந்து கிளம்பி வேறு ஊருக்கு இதே பேருந்தில் குடும்பத்தைவிட்டு தொலையக்கூடாதா என்று மனம் ஏங்கித் தவிக்கிறது. சோர்வான மனதுடன் பேருந்து நிலையத்திலிருந்து அகன்று கொள்கிறேன். தற்காலிகமான அந்த ஆசை மனதில் கிளைவிட்டு அடர்த்தியாய்ப் படர்ந்து கொள்ளும். அக்காள் வீடு திரும்பி மறுபடியும் கல்லூரிக்குத் செல்லும் வரை அந்த ஆசைகள் மனதிலிருந்து கிளர்ந்தெழாது எனலாம். அந்தப் பேருந்து பயணத்தின் மீதுள்ள அதீதக் கற்பனைகள்தான் போலும். எந்த ஊருக்குப் போவது? வெளியூரில் உறவினர்களும் கிடையாது, நண்பர்களும் சிலரின் பெயர் கூட மறந்து போயிற்று.

ரகுநாதன். . செராஸ் பகுதியில் எங்கேயோ மலை அடிவாரத்தின் ஓரத்தில் இருப்பதாக ஞாபகம். கலைமணி. . . மலிவு வீடு பகுதியில் இருப்பதாகவும், ஏதோ ஒரு காரணத்திற்காக இடம் பெயர்ந்துவிட்டான் என்றும் தகவல். தர்மலிங்கம். . . செராயா பள்ளியின் பின்புறத்தில் எங்கேயோ இருப்பதாக நினைவு இருக்கிறது. மற்றபடி அங்கு யாரையும் தெரியாது. அப்படியிருக்க வேறெங்குப் போய்த் தொலைவது?

கோலாலம்பூர் என்று சொல்கிறார்களே, அந்த நவநாகரிகப் பட்டணத்திற்குள் ஒரு முறை பிரவேசித்துவிட்டு அன்றைய இரவே மறுபடியும் வீடு திரும்பிவிடலாம் என்ற நிஜத்திற்குள் அடங்காத எண்ணங்களும் வந்து திட்டங்களும் எழுவதுண்டு. எது எப்படியிருப்பினும் இன்று அந்த பல நாள் ஆசை நிறைவேறப் போகிறது. அதற்கு காரணம் சுரேஷ்தான். பால்ய நண்பன். நாளை அவனுக்கு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா. அப்பாவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து பழகிவிட்ட என்னை முதன் முதலாக தூர பயணத்திற்கு இழுத்துவிடக் காரணமாக அமைந்தது அவனுடைய பட்டமளிப்பு விழாதான். நான் கட்டாயமாக வர வேண்டுமென அப்பாவிடமே கேட்டுக் கொண்டான்.

" ஒரு நாள்தானே. . போய்ட்டு வரட்டுங்க. . எத்தன காலம்தான் உங்க பிள்ளைய பொத்தி பொத்தி வளர்க்கப் போறிங்க. ."

"பா, பஸ்ல போறது ஒன்னும் பிரச்சன இல்லப்பா. . .ராத்திரி பஸ்ஸ எடுத்தா நேரம் போறதே தெரியாது, காலையில புடுராயால இறக்கி விட்டுருவானுங்க.. ."

"என்னாங்க. . அவன் என்னா சின்னப் பையனா? எல்லாம் தெரியும். சும்மா ஒரு நாள்தானே போய்ட்டு வரட்டும்ங்க"

"நான்லாம் போயிட்டு வரலயா? அவனும் ஆம்பளெ சிங்கம்தானே! அதெல்லாம் பத்திரமா போய்ட்டு வந்துருவான்ப்பா. . இப்பெல்லாம் ஆறாம் வகுப்பு படிக்கற பிள்ளிங்களே சொந்தமா வெளியூருக்குப் போய்ட்டு வராங்கலே"

"என்னா ஆம்பளே சிங்கம்? நீங்களே இல்லாத பொல்லாதுலாம் சொல்லி அவனுக்குத் தைரியத்த கொடுத்துறாதீங்க. . அப்பறம் எல்லாத்துக்கும் துணிச்சல் வந்துரும்"

"அப்படி இல்லப்பா. . நல்ல விஷயமாதானே போறான் . . நாளைக்கு அவனுக்கு ஏதாவதுனா அவனுங்களாம் இங்க வரனுமே"

அக்காவும் அம்மாவும் அப்பாவைச் சமாதனப்படுத்தவே இரண்டு மணி நேரம் தேவைபட்டது.. கண்ணாடியில் பார்க்கும்போது என் முகத்தில் தெரியும் தடிப்பான மீசையும் முதிர்ச்சியும் பெருமையடையச் செய்யும். கைகளின் பலத்தை இறுக்கி புடைத்துக் கொண்டு நெளியும் நரம்புகளைக் காட்டி நான் பெரியவன், நான் இளம்காளை என்றெல்லாம் பிதற்றிக் கொள்வேன். ஆனால் அப்பாவை நினைக்கும் போதெல்லாம் என்னுடைய வயது தானாகக் குறைந்து, அப்பாவின் பாதுகாப்புப் பிடிக்குள் 10 வயதுப் பையனைப் போல சிக்கிக் கொள்கிறேன். கைகளின் நரம்புகள் அறுந்து வீழ்கின்றன, முகத்திலுள்ள முதிர்ச்சி தளர்ந்து பலவீனமாக மாறுகிறது.

அப்பாவைப் பொறுத்தவரை நான் இன்னும் சிறு பிராயத்தில் மூக்குச் சளி ஒழுக நின்று கொண்டிருக்கும் சிறுவனாகவே உழன்று கொண்டிருக்கிறேன். பிரத்தியேக வகுப்பிற்குச் செல்ல அடம் பிடிக்கும் என்னை இழுத்துப் பிடித்துத் தோளில் வைத்து சுமந்து கொண்டு போய் சேர்த்துவிட்டு அங்கேயே இருந்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும் அந்தக் காலத்து அப்பாதான் இன்னமும் எனக்கு முன்னே இருக்கிறார். ஆனால் இப்பொழுதெல்லாம் அப்பாவின் அந்தக் கண்டிப்பும், அக்கறையும் வெளிப்படையாகக் காட்டப்படுவதில்லை. பெரும் முனகல் ஒன்றை அள்ளி வீசுவதும், அல்லது அம்மாவிடம் கடுமையாகப் புலம்புவதும், சட்டென்று முகம் காட்டிப் பேசாமல் எரிந்து விழுவதுமாக அப்பாவின் முந்தைய கண்டிப்பு கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தது.

"ப்பா. . அனுப்புங்கப்பா. பாவம். ஒரு தடவெ போய்ட்டு வரட்டுமே! நாலு தேவைக்குப் போனாதானே அவனுக்கும் உலகம் தெரியும்!"

அப்பாவிற்கு மீண்டும் மீண்டும் நிறைய சமாதானம் தேவைப்பட்டது. அவரை மீறி என்னால் நகரவே இயலவில்லை. முகத்தைக் கொஞ்சம் பரிதாபமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்தேன். அப்பாவின் சம்மதம் பெறுவதற்கு அது வசதியாகவே இருந்திருக்கக்கூடும். இரண்டுமுறை வெறுப்போடு தலையசைத்துவிட்டு,

"சரி சரி. . பத்திரமா போகணும். . இதெல்லாம் விளையாட்டு இல்ல, போய்ச் சேர்ந்தோன உடனே தகவல் சொல்லணும். ." என்று கூறிவிட்டு மறுபடியும் மனக்குறையோடு ஏதோ முனகிக்கொண்டே நகர்ந்தார்.

25 வெள்ளி டிக்கேட். 11.00 மணிக்குப் பேருந்து. எல்லோரும் பேருந்து நிலையத்திற்குக் கிளம்பினோம். வழியில் அப்பா ஏதோ சிந்தனையிலேயே இருந்தார். அவருடைய முகம் வாட்டமாக எதையோ இழந்ததைப் போல காணப்பட்டது.

"புடுராயாலெ காலைலே எப்படி இருக்கும்?"

"ப்பா! அங்கலாம் ஆளுங்க ஏறரெ எடம்தான். நெறைய பேரு இருப்பாங்க"

"போலிஸ் பாதுகாப்பு இருக்கா?"

"இருக்குப்பா, பக்கத்துலே ஒரு அறையிலே இருப்பாங்க"

"திருட்டுப் பயனுங்களாம் அங்கதானே இருப்பானுங்கெ? அதான் சேதிலலாம் பாக்கறமே"

"அதுலாம் நம்ப பாதுகாப்பா இருந்துட்டா ஒன்னும் நடக்காதுப்பா"

அப்பாவின் முக இடுக்குகளில் பய உணர்வு வெளிப்படையாகவே ஒளிந்திருந்தது. ஒரே பையனை வெளியூர் அனுப்புவதில், அதுவும் தனியாக அனுபவமில்லாத ஊருக்கு அனுப்புவதில் எந்த அப்பாவிற்கு உடன்பாடு இருக்கப் போகிறது?. அப்பா என்னவோ என்னைத் தடுக்க முடியாத இயலாமையில்தான் இருந்தார். எல்லா நேரங்களிலும் அப்பா என்ற உரிமையைப் பயன்படுத்தி என் சுதந்திரத்திற்குள் அத்துமீற விரும்பாதவர் அவர். அதனால்தான் இன்று அவர் அமைதியாகவே இருந்தார்.

பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும் இருளுக்குள் பலர் எறும்புகளைப் போல் அங்குமிங்குமாக ஊர்ந்து கொண்டிருந்தனர். யாரையும் பார்த்து சுதாரித்துக் கொள்ள மனம் ஒவ்வவில்லை. அமைதியாக அப்பாவின் பின் முகம் காட்டாதபடி நடந்து சென்றேன்.

"இந்தாடா கோத்தா தண்ணி. . . சொக்லேட் ரொட்டியும் இருக்கு. அப்பறம் எங்காவது நிப்பாட்டுவானுங்க. . இறங்கிப் போயிராத. . இடம் தெரியாம மாட்டிக்குவ, இதயே சாப்டுக்கடா. போன தடவை நம்ப சுந்தரி கல்யாணத்துக்குப் போயிருந்த போது, இப்படித்தான் நானும் இறங்கிப் போய், வேற ஏதோ ஒரு பஸ்ல ஏறி, ஒரே கொழப்பமா போச்சுங்க. . அதான் கொஞ்சம் பயம்"

அம்மாவின் அலட்டலும் புலம்பலும் எனக்குக் கொஞ்சம் பயத்தையே ஏற்படுத்தியது. அம்மாவைப் பொறுத்த வரையிலும் நான் தவறுகள் செய்துவிட்டு மாங்காய் மரத்தில் ஏறிக் கொண்டு அடிக்குப் பயந்து நிற்கும் சின்னப் பையனாகவே அந்தப் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தேன். அதனால்தான் இத்தனை ஆலோசனைகள். என் முகத்தைப் பார்த்து பார்த்து முனகிக் கொண்டேயிருந்தார்.

"கண்ணாடி ஓரத்திலே உட்காந்துக்கடா. . இடத்தைலாம் நல்லா பாத்துக்க, சிரம்பான் போர்ட்டைப் பாத்துட்டனா, தெரிஞ்சிக்கா, கோலாலம்பூர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும்னு. அப்பறம் பேக்லாம் எடுத்து வச்சுக்க, விட்டுடாத, என்ன?"

"ஐயோ, சரி மா. . ."

அம்மாவின் தொடர் ஆலோசனைகள் மேலும் மேலும் அசௌகரிகத்தையே வரவழைத்துக் கொண்டிருந்தன. அப்பாவின் முகத்தில் மாற்றம் தெரிவது போல இருந்தது. இதுதான் முதல் தடவை பயணம் என்ற ஆனந்தமெல்லாம் சிறிது நேரத்திற்கு வருவதும், அப்பாவின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் மறைவதுமாக இருந்தது. எப்பொழுதும் வசதிக்கிணங்கி, கொஞ்சம் சீக்கிரமாகவே பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிடுவது இங்கு பலரின் வழக்கமாகும். நாங்களும் அப்படித்தான். அப்பொழுது. மணி 10.15 இருக்கும் 11.00மணிக்குத்தான் பேருந்து என்றாலும் சாலை நெரிசலுக்குப் பயந்து விரைவாகவே வந்து சேர்ந்துவிட்டிருந்தோம்.

பேருந்து நிறுத்தத்திலுள்ள பெரிய இருக்கையில் எல்லோரும் அமர்ந்து கொண்டோம். என்னுடைய பயண டிக்கெட் அப்பாவின் கையில்தான் இருந்தது. அதைச் சுருட்டிக் கையில் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சுற்றிலும் எதையோ சுதாரித்துக் கொண்டே இருந்தார்.

"தாமு, போய்ச் சேர்ந்தோனே போன் பண்ணு. . அத்தையைக் கேட்டதா சொல்லு. . மறந்திறாத. . ஆங். . ஆங். . ஓகே ஓகே. . .பார்த்து"

பேருந்தில் ஏறிவிட்ட யாரோ ஒருவருக்கு வயதான அம்மா ஒருவர் கையையும் தலையையும் அசைத்துக் கொண்டே இருந்தார். அவர் கொஞ்சம் சத்தம் போட்டே பேசிக் கொண்டிருந்தார். ஒருவேளை பேருந்தில் அமர்ந்திருக்கும் அந்த நபருக்கு ஏதும் விளங்காமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் செய்கைகளுக்கு மத்தியில் அந்த அம்மாவின் குரலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்த அம்மாவின் முகத்தில் நான் அப்பாவைப் பார்த்தேன். மகனை அனுப்ப மனமில்லாமல் தயங்கி நின்றிருந்தார். அப்பா அந்த வயதான அம்மாவைப் பார்க்க நேர்ந்தால்? தலையை நிமிர்த்தி அப்பாவைப் பார்த்தேன். அவர் வேறு எங்கோ பார்த்தவாறே ஆழ்ந்த சிந்தனையிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

"இங்க கொடுடா. . நான் தூக்கிட்டு வரேன். . என்ன இவ்ள பாரமா இருக்கு? ரெண்டு நாளைக்கு இவ்ள துணியா. . அட பாவி. .கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? அள்ளிக் கட்டிக்கிட்டு என்ன 10 வருஷமா இருக்கப் போறே?"

யாரோ இருவர் சிரித்துக் கொண்டே வந்தார்கள். நிச்சயம் வசதியாக நடந்துவரும் அந்த நபர்தான் எங்கோ வெளியூருக்குச் செல்லவிருக்கிறார். துணிப்பையைச் சுமந்து கொண்டு வருபவர்தான், அந்த நபரை வழியனுப்ப வந்திருக்க வேண்டும். வெளியூர்ப் பயணிகளுக்கென்று தனியான சுபாவம் இருக்கிறதோ? எனக்கென்னவோ பயமாகத்தான் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் இத்தனை நாளின் ஏக்கங்களின் பிடியிலிருந்தும், அப்பாவின் பிடியிலிருந்தும் முதல் முறை விடுபடும் சுதந்திரம் கிடைத்திருப்பதினால் அதிகமாக மகிழ்ச்சியே இழையோடியது.

அப்பா அவ்வப்போது என் நிதானத்திற்குள் பவ்வியமாக மறைந்திருக்கும் பய உணர்வை அறிந்து கொண்டவர் போல, மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய பார்வை, எங்கே திடீரென்று மனம் மாறி என்னைப் போகவிடாமல் தடுத்துவிடுவாரோ என்பது போல் இருந்தது. பேருந்து உடனே வந்துவிட வேண்டுமென மனம் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நுழையும் எல்லாப் பேருந்துகளின் எண்ணையும் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாப் பேருந்துகளும் அழுது கொண்டே உள்ளே நுழைவது போல இருந்தது. அதன் தளர்ந்த முகம் மங்கிய வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் முன்விளக்குகள் இரண்டும் அப்பாவின் சோகத்தைக் காட்சிப்படுத்துவது போலவே தோன்றியது.

தூரத்தில் ஒரு பெண் யாரையோ பார்த்துக் கண் கலங்கி நின்று கொண்டிருந்தாள். அவள் செல்வதற்கிருந்த பேருந்து வந்து சேர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் கையில் கைப்பையை ஏந்திக் கொண்டு யாரையோ திரும்பிப் பார்த்திருப்பவளாய், நகர்வதற்கு மனமில்லாமல் நின்று கொண்டிருந்தாள். அவளின் கண்கள் நோக்கியிருந்த திசையை, நானும் பார்த்தேன். அந்த இடத்தின் கூட்டம், அவளுடைய கண்ணீருக்குக் காரணமாக இருந்த அந்த யாரோ ஒரு நபரை அடையாளம் காண முடியாத அளவிற்கு மறைத்துக் கொண்டு நெறிசலாகக் காணப்பட்டது.

அன்பான உறவுகளை உதறிவிட்டு எங்குச் செல்வதென்றாலும் கவலைதான் போல. அக்காவும் இப்படித்தானே. முதல் தடவை மலாக்காவிற்குப் பயணம் செய்யும்போது அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக் கண் கலங்கினாள். ஆனால் அக்கா என்னவோ பலவிதமான பாதுகாப்புகளுடன்தான் சென்றாள். எனக்கு மட்டும் என்னவோ, கவலையும் இல்லை கண்ணீரும் இல்லை. எப்படியிருந்தாலும் மறுநாள் அதிகாலையில் இதே இடத்தில் வந்து சேர்ந்துவிடப் போகிறேன். பிறகென்ன?

"டேய் பார்த்துடா. . .பஸ்சை விட்டு கீழ இறங்கிறாத. . உனக்கு இடம்லாம் தெரியாது வேற. . . அப்பப்ப போன் பண்ணு. ."

" சரிமா பண்றேன்மா. .சும்மா. . அதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க"

ஓர் அம்மாவும் அவரின் மகனும் பேசிக் கொண்டே எங்களைக் கடந்து சென்றனர். அந்த அம்மாவுக்கு 65 வயதிருக்கும். அவர் அணிந்திருந்த பாலித்தீன் சிலிப்பர் சர் சர்ரென ஓசையை எழுப்பிக் கொண்டே வந்தது. அந்த அம்மா சலனப்பட்டுக் கொண்டே அவ்வப்போது ஏதாவது ஆலோசனைகளைச் சொல்லியவாறே வந்தார். அவருடைய கவலைகளுக்கு நியாயம் இருப்பதை உணர்ந்ததைப் போல என் அம்மா தொடர்பேயில்லாமல் தலையசைத்துக் கொண்டிருந்தார். சற்று முன் அவர் பேசிய வசனங்கள்தானே. அதனால்தான் போல. இத்தனைக்கும் அவருடைய மகனுக்கு என்னைவிட 5 வயது கூடுதலாக இருக்கும்.

இப்பொழுது மீண்டும் அப்பா என்னைச் சந்தேகத்துடன் பார்த்தார். 25 ரிங்கிட் பெரிதல்லதான். முடியாது என்று கூறி என்னை அங்கிருந்து அழைத்துப் போவதற்கு அப்பாவிற்கு வெகு நேரம் ஆகாது. அவர் அப்படிச் செய்தாலும் மீண்டும் அவரை சமாதானப்படுத்துவதற்கு நேரமும் இல்லை.

இதயத்தில் ஏற்பட்ட துடிப்பு, கண்கள்வரை எட்டியிருந்தது. முடிந்தவரை நிதானத்தையும் ஒருவகை சூழ்நிலை தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டேன். அப்பாவின் முன் நான் வயது முதிர்ந்த பையன் என்று சுட்டிக் காட்டும் பாவனையில் பிடிவாதமாக அமர்ந்திருந்தேன். மணி 10.35 ஆகிவிட்டிருந்தது. இன்னும் 20 நிமிடத்திற்கு மகனின் பயணம் குறித்து அப்பாவின் சிந்தனையில் எவ்விதக் குறுக்கிடலும் ஏற்படக்கூடதென வேண்டிக் கொண்டிருந்தேன்.

"பிளிஸ் டா. . . . அழாதடா. . எத்தன நாள் சொல்லு? கொஞ்ச நாள்தானே"

"அறிவுக்குத் தெரியுது. . மனசுக்கு?"

அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தவள் சடாரென அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். இப்பொழுது அவளுடைய கைகள் அவனுடைய கழுத்தை நெருக்கமாகப் பற்றிக் கொண்டன. இந்தக் காட்சியை நான் மட்டும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை, அப்பாவும்தான் என்று உணர்ந்த மறுகணமே, வேறு திசையைப் பார்ப்பது போல சமாளித்துக் கொண்டேன். எந்த நேரத்திலும் அப்பாவிற்கு என் மீதான சந்தேகங்கள் உச்சத்தை நாடிவிடலாம் என்ற பயத்திலேயே நிலைத்திருந்தேன்.

" இவள தனியா அனுப்பாதனு சொன்னா, கேட்க மாட்றீங்க, இருந்துட்டு அடுத்த வாரமே மீனாட்சிகூட போயிருக்கலாம். .பொம்பள பிள்ள வேற. ."

யாரோ ஒருவர், அவரும் ‘அப்பா'வாகத்தான் இருக்க முடியும், முனகிக் கொண்டே முன்னோக்கி நடந்து கொண்டிருந்தார். அவரின் பின்புறத்தில் ஒருவித சளிப்புடன் நாகரிக உடையில் ஓர் இளம்பெண். அவளுக்கு அருகில் இரு கைகளிலும் துணிப்பைகளைச் சுமந்து கொண்டு ஓர் அம்மாவும் நடந்து கொண்டிருந்தார். அவர்களுடைய உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா என்னை வயதுக்கு வந்த இளம் பெண்ணைப் பார்ப்பது போலவே பாதுகாப்பு உணர்வோடு பார்க்கத் தொடங்கினார். மனதில் இறுக்கங்கள் நெளிந்து அடம் செய்து கொண்டிருந்தன.

"ஐயோ, கடவுளே மணி வேகமா ஓடக்கூடாதா?. . பஸ் வந்திரணும். . ஐயோ சாமி. . அந்தப் பஸ்ச சீக்கிரம் அனுப்பிவிடு. . "

பேருந்து நிறுத்தத்தில் சூழ்ந்திருந்த மனிதர்களின் அசைவுகள் என்னுடைய கனவுகளுக்கு விரோதமாகவும் அப்பாவின் நியாயங்களுக்குத் தோழமையாகவும் நிகழ்ந்து கொண்டிருந்தன. மணி சரியாக 10.55 ஆகியது. சில பேருந்துகள் நிறுத்தத்திற்குள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தன. நான் செல்லவிருக்கும் பேருந்தின் வருகையை எதிர்ப்பார்த்து கண்கள் படபடத்துக் கொண்டிருந்தன. அந்தப் பேருந்து மட்டும் இன்னும் வந்து சேராமால் என் வயிற்றில் நெருப்பை மூட்டிக் கொண்டிருக்கிறதோ?

நேரம் ஆக ஆக இந்தக் கோலாலம்பூர் பயணம் வெற்றி பெறுமா என்கிற சந்தேகமே அதிகமாக எழத் துவங்கின. அதுவரை இருளில் மறைந்திருந்த பிச்சைக்காரர்கள் மெதுவாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர். இடுப்பில் பிள்ளையைச் சுமந்து கொண்டு ஒரு தாயும், பித்தனைப் போன்று காட்சியளிக்கும் இரு கிழவனும் அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் காசு கேட்டு நகர்ந்து கொண்டிருந்தனர். ஒரு வாலிபர் அப்பாவின் சிகிச்சைக்குப் பணம் கேட்டு கையில் அவர் அப்பாவின் மருத்துவச் சான்றிதழ்களையும் மருத்துவச் சிகிச்சை குறிப்புகள் பற்றிய ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு எல்லோரிடமும் விளக்கி உதவி கேட்டுக் கொண்டிருந்தார். எல்லா சம்பவங்களையும் நானும் அப்பாவும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இதுவரை என் பயணத்திற்கு விரோதமான சாதகத்தன்மைகள் இருந்தது போதாதென்று, ஐயாவு மாமாவும் அங்கு வந்து சேர்ந்திருக்கக் கூடாதுதான். வரும் போதே எங்களைப் பார்த்துவிட்டு சத்தமாக கேள்வி எழுப்பியவாறே நுழைந்தார்.

"எங்கண்ணே, வெளியூர் பயணமா? சொல்லவே இல்ல. ."

"நான் இல்லப்பா. . தோ இவன்தான், கோலாலம்பூருக்குப் போறான், தெரிஞ்ச பையனுக்குப் பட்டமளிப்பு விழா அங்க. . "

"பையன் தனியாவா? என்னணே ஆச்சரியமா இருக்கு? பையன நம்ப ஊரு திருவிழாவுக்கே அனுப்ப மாட்டிங்க, இப்ப கோலாலம்பூருக்கா? ஒரே பையன் வேற, பாத்துணே! இப்பலாம் பஸ்லே திருட்டு, விபத்துனு நடந்துகிட்டு இருக்கு.."

"என்னப்பா சொல்ற?"

" ஆமாண்ணே, நீங்க செய்தியே பாக்கறதில்லையா? போன வாரம்கூட ஒரு பஸ் எரிஞ்சி போச்சு.. . போன வாரமே அந்த மாதிரி ரெண்டு சம்பவம்ணே"

மனதிலிருந்த கொஞ்சம் நம்பிக்கையும் தளர்ந்து வீழ்ந்து கொண்டிருந்தது.

"ஆண்டவனே! இந்த ஐயாவு மாமாவை நேரம் பார்த்து சகுனியாட்டம் நீதான் அனுப்பி வச்சியா. ."

மணி சரியாக 11.05 ஆகியிருந்தது. பேருந்து கவுண்டரிலிருந்து ஒரு வயதான தாத்தா வேகமாகக் கத்தினார்.

"கோலாலம்பூருக்குப் போற பஸ்சு அறை மணி நேரம் லேட்.. சாரி... கொஞ்ச நேரம் காத்திருக்கணும்...."

இப்பொழுது அப்பா என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.


கே.பாலமுருகன்
bala_barathi@hotmail.com