Tuesday, August 25, 2009

இரு படங்கள் பற்றி : 1.ஊடக மொழியுடன் ஷங்கர் படத்தின் ஒரு நகலாக கந்தசாமி 2.மனச்சிதைவின் இன்னொரு இருண்ட பரிணாமம் “orphan”

மேற்குறிபட்ட இரு படங்களையும் ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் பார்க்க நேர்ந்தது. இரு படங்களும் தனித்தனி அதிர்வுகளை ஏற்படுத்தின. கந்தசாமி படம் முடிவடைந்தபோது ஷங்கரின் ஊடக செல்வாக்குடன் விளிம்புநிலை மனிதர்களின் குரலாக அவர்களின் கதாநாயகனாக வலம் வரும் மூன்றாம்தர புரட்சி கமார்ஷியல் படம் போன்ற தாக்கத்தை ஒரு நகலாக வெளிப்படுத்தியிருப்பதை உணர முடிந்தது.



மீண்டும் மீண்டும் கதாநாயக பிம்பத்தின் சாகசங்களையும் அட்டுழியத்தையும் கொண்டு வியாபாரம் செய்யும் சந்தையின் அடுத்த இறக்குமதியாக சிரேயாவின் தாராள காம சேட்டைகளையும் தாராள உடை குறைப்பையும் சேர்த்து திரைஅரங்குகளில் ஒரு மசாலா புத்திமதி படம்தான் தரப்பட்டுள்ளது. ஏழைகளின் நாயகனாக ஏற்கனவே சிவாஜியில் ஷங்கர் சொன்ன அதே கருப்பு பணத்தை மீட்கும் பாணியில் மெக்சிக்கோ வரை நீண்டு கந்தசாமியின் மண்டைக்கு எட்டாத வெறுப்பேற்றும் திடீர் சாகசங்களைக் கட்டமைத்து அதை ஊடகத்தின் வாயிலாக ஊடகத்தைத் துணையாகக் கொண்டு வெளிப்படுத்தியிருப்பது பலமுறை அரங்கேறி சலித்துவிட்ட பாங்கு.

குறிப்பு: அஸ்ட்ரோவில் அண்மையில் விக்ரமுடன் காந்தீபன் நடத்திய நேர்காணலில் விக்ரம் இப்படியொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

“கந்தசாமி படத்தில் வரும் பாடல்களெல்லாம் குழந்தைகளுக்காக எழுதப்பட்டது, “போடா போடி. . மியாவ் மியாவ். . .” இதெல்லாம் பார்த்தீங்கனா சின்ன பிள்ளைங்கத்தான் இப்படி விரும்புவாங்க பேசுவாங்க” என்று கந்தசாமி நேரடி ஒளிப்பரப்பில் வெட்கமில்லாமல் சொல்ல அதை ஆமோதிக்கும் வகையில் காந்தீபனும் (மலேசிய கதாநாயகர்) தலை ஆட்டினாராம் வெட்கமில்லாமல். அதற்குப் பல மாற்றுக் கருத்துகளும் வந்ததென்று சொன்னார். இனி விக்ரம் படங்களின் பாடல்களை (சிரேயாவுடன் போடும் துண்டாட்டம்) எல்லாவற்றையும் “குழந்தைகளுக்கான பாடல்” என்று வெளியீட நேர்ந்தாலும் ஆச்சிரியமில்லை.

2. orphan (அனாதை)

அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ஆங்கில படம். குளிர் பிரதேசம் ஒன்றின் பின்னனியில் ஒரு குடும்ப பெண்ணின் தோல்வியடைந்த தனது மூன்றாவது பிரசவத்தின் ஒரு கொடூரமான துர்கனவிலிருந்து தொடங்குகிறது படம். அவளது மூன்றாவது குழந்தை வயிற்றிலேயே இறந்துவிடுவதால், அந்த மரணமும் வலியும் பெரும் பாதிப்பாக அவளின் நாட்களைப் பின் தொடர்கிறது. ஏற்கனவே ஒரு பையனும் காது கேளாத ஒரு பெண் குழந்தையும் இருக்க, மூன்றாவதாக ஒரு பெண் சிறுமியைத் அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுக்கிறார்கள்.

தத்தெடுக்கப்படும் அந்தப் பெண் சிறுமியைச் சுற்றித்தான் கதை சொல்லப்படுகிறது. அந்தச் சிறுமியின் சிதைந்த உலகத்தை வேறொரு பரிணாமத்தில் காட்டும்போது அதை ஏற்றுக் கொள்ள மனம் தடுமாறுகிறது. நீங்களே அதன் கதையையும் சம்பவங்களையும் அவளுக்குள் ஏற்படும் மனச்சிதைவின் பின்னனியையும் தெரிந்துகொள்ளும்போது அது தனி அனுபவமாக அமையும்.

முழுக்க ஒரு குடும்பத்தில் நிகழும் கதையாக, அந்த அனாதை சிறுமியின் அகத்தின் அடுக்குகளை உளவியல் இரகசியங்களுடனும் முடிச்சுகளுடனும் மர்மமாகக் காட்சியப்படுத்தியிருப்பது ஒரு தரமான கமர்ஷியல் + உளவியல் படத்திற்க்குரிய தேர்ச்சியும் கலையும் வெளிப்படுகிறது.

குறிப்பு: இந்தப் படத்தின் பல காட்சிகளை எதிர்க்கொள்ள மனத்திடம் ரொம்பவும் அவசியம் என்றே கருதுகிறேன். சில காட்சிகள் அதிர்வை ஏற்படுத்தக்கூடும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய படம் என்றே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

(எ.காட்டாக: தனது கையைச் சொந்தமாக அவளே முறித்துக் கொள்வதும், எலும்பு உடைந்து சதைக்குள்ளிருந்து விரைப்பதும் மிக அருகாமையில் காட்டியிருப்பது மனதைப் பதற்றத்திற்க்குள்ளாக்க வாய்ப்புண்டு)

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா