Tuesday, August 3, 2010

சினிமா விமர்சனம்: நான் என் கடவுளிடமிருந்து கற்றுக் கொண்ட முதல் சொல் தண்ணீர் - Black

எப்பொழுது நான் எனது முதல் சொல்லைக் கற்றுக் கொண்டிருப்பேன்? நான் எழுதிய முதல் எழுத்து என்னவாக இருக்கும்? யார் என் கையைப் பிடித்து எழுத வைத்திருப்பார்? நான் எனக்கான முதல் சொல்லையோ அல்லது எழுத்தையோ கற்றுக் கொண்ட பிறகு எப்படியெல்லாம் அதைக் கொண்டாடியிருப்பேன்? குறைந்தது அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ அதைச் சொல்லி மகிழ்ந்திருக்கக்கூடும்?

மிசேல் தனது 40 வருடப் போராட்டத்திற்குப் பிறகு இறுதியில் ஒரு கலைப்பிரிவில் பட்டத்தாரியாக வெற்றிப் பெறுகிறாள். பிறப்பிலேயே கண் தெரியாத காது கேளாத மிசேல் பட்டமளிப்பு விழாவில் மேடையில் பேசுவதற்கு அழைக்கப்படுகிறாள். உடல் மொழியால் அவள் அங்கிருக்கும் பட்டதாரிகளுக்குச் சொல்வதை அவளுடைய அம்மா மொழிப்பெயர்த்துக் கூறுகிறாள்.

மிசேல் எனும் அந்தப் பெண் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளையும் எனக்கு முதல் சொல்லைக் கற்றுக் கொடுத்த எனது ஆசிரியர்களுக்கு நன்றியுடன் சமர்ப்பிக்கின்றேன். அந்த ஆசிரியர் என் அம்மாவாக இருக்கலாம் அல்லது என் அக்காவாக இருக்கலாம் அல்லது ஆரம்பப்பள்ளி ஆசிரியராகவும் இருக்கலாம். பெயரும் அடையாளமும் மறந்துபோன அந்த ஆசிரியர் எனக்குச் சொற்களையும் அந்தச் சொற்களின் வழி இந்த உலகத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

மிசேல் வெளிச்சமான இந்த உலகத்தின் முன் தன்னுடைய 40 வருட இருளிலிருந்து எடுத்து சமர்ப்பிக்கும் வரிகள் இவைதான்:

“சின்ன வயசுலேந்து நான் எதையாவது தேடிக்கிட்டேதான் இருப்பேன். என் விரல்கள் எதையாவது தொட்டு தேடிக்கிட்டே இருக்கும். ஆனால், கடைசிலெ வெறும் இருட்டு மட்டும்தான் மிஞ்சும். ஒருநாள் என் அம்மா என்னை அந்நியமான ஒரு ஆளுகிட்ட ஒப்படைச்சாங்க. அவர் எல்லோரையும் விட வித்தியாசமானவரா இருந்தாரு. அவர் ஒரு மந்திரவாதி. பல வருட முயற்சிகளில் அவர் என்னை என்னுடைய இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். கடவுள் என வந்துவிட்டால் எல்லோரும் குருடுதான். இங்குள்ள யாரும் கடவுளைப் பார்த்திருக்க மாட்டீங்க, அவரு பேசுவதைக் கேட்டிருக்கவும் மாட்டீங்க. ஆனால் நான் அப்படி இல்லை. நான் கடவுளைத் தொட்டுப் பார்த்தேன். அவரை உணர்ந்தேன். அவர் இருப்பதை என்னால உணர முடிந்தது. I have felt his presence. நான் அந்தக் கடவுளை “டீச்சர்” என அழைத்தேன். I call him tee. . (teacher) என்னைப் பொருத்தவரை எல்லாமே இருட்டுதான். ஆனால் என் ஆசிரியர் இருளின் புதிய அர்த்தத்தைக் கற்றுக் கொடுத்தார். கருப்பு என்பது வெறும் இருள் மட்டும் அல்ல, It is the colour of achievement. The colour of knowledge. The colour of graduation robe ”

மீசேலை அவளது வன்மையான இருளிலிருந்து காப்பற்றுவதற்கு அவளுடைய பெற்றோர்கள் தீர்மானித்துப் பல முயற்சிகளையும் செய்து பார்க்கிறார்கள். அவர்களின் இறுதி நம்பிக்கையாக அவளுக்குப் புதிய ஆசிரியராக மிசேலின் 8ஆவது வயதில் வந்து சேர்கிறார் அமித்தாப். ஏற்கனவே கண் தெரியாத காது கேளாத மாணவர்கள் பயிலும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்குண்டு. முன்பொரு சமயம் அவருடைய அணுகுமுறையின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலும் அவருடைய குடிப் பழக்கத்தினாலும் அங்கிருந்து அந்தப் பள்ளிலிருந்து அமித்தாப் வெளியேற்றப்படுகிறார். இதைப் பற்றி அமிதாப் விவரிக்கும்போது, ‘என்னுடைய கண் தெரியாத காது கேளாத மாணவர்கள் நான் அவர்களிடமிருந்து நீங்கும்போது என்னை வழியனுப்பும் வகையில் வேறு திசையைப் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் நான் அவர்களிடமிருந்து பிரிந்து வந்தது வேறு திசை, இதைவிட கொடுமை ஒரு ஆசிரியருக்கு நேர்ந்துவிடுமா?’ என கண்ணீர் மல்க உண்மையான ஒரு ஆசிரியரின் சோகத்தை வெளிப்படுத்துகிறார். அதுவும் இத்தகையதொரு குழந்தைகள்/மாணவர்கள் எப்பொழுதும் வித்தியாசமான கடவுளின் படைப்பு எனவே அமித்தாப் அடையாளப்படுத்துகிறார்.

அமித்தாப் மிசேலை அசாதரண படைப்பாகக் கருதி அவளை அவளுடைய இருண்மையான வன்முறைமிக்க உலகிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு வித்தியாசமான உத்திகளைக் கையாளுகிறார். இருவருக்கும் மத்தியில் நடக்கும் போராட்டத்தைப் பார்க்கும்போது வார்த்தைகளும் வர்ணங்களுமற்ற இருளுக்கும் எல்லாம் நேர்த்திகளுமுடைய வெளிச்சத்திற்கும் நிகழும் வாழ்வு குறித்த தர்க்கம் போல புரிந்துகொள்ளக்கூடும். அவளுடைய எட்டாவது வயதில் அவள் உலகம் வெறும் இருளால் நிரம்பியிருக்கிறது. அவளிடம் பேசுவதற்கும் பிறரிடம் பகிர்ந்துகொள்வதற்கும் வெறும் ஒலியும் வன்முறையும்தான் மீந்திருக்கிறது. உணவு சாப்பிடுவது தொடங்கி, அறையில் கண்ணாடி பொருள்களைத் தூக்கி வீசி உடைப்பது முதல் எல்லாவற்றிலும் ஒரு கொடூரத்தையும் அழுகையையும்தான் சுமந்து கொண்டிருக்கிறாள் மீசேல்.

அமித்தாப் அவளுக்கு ஏதாவது ஒரு மாயம் நடக்கக்கூடும் எனவும் அந்தக் கணத்தில் அவள் அவளுடைய இருளிலிருந்து முதல் வெளிச்சத்தை அடைவாள் எனவும் மிகவும் தீர்க்கமாக நம்பிக்கை கொண்டு அவளுக்கான பயிற்சிகளைத் தொடங்குகிறார். முதலில் உணவைக் கரண்டியால் அமைதியாக நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவதை அவளுக்குக் கற்றுக் கொடுக்கிறார். அவளோ மிகவும் வன்மையாகப் பிறர் சாப்பிடும் தட்டிலிருந்து உணவை அள்ளி அல்லது பறித்து அதை வாயில் அப்பிக் கொள்கிறாள். அவளுடைய நடத்தைகளை வன்மையிலிருந்து நிதானத்திற்குக் கொண்டு வர, அவளைச் சுற்றியுள்ள உலகத்தை உணர்ந்து கொள்ள, மெல்ல மெல்ல அமிதாப் பலவிதமான பயிற்றுமுறைகளைக் கையாளுகிறார்.

. மிசேலால் எந்தவித ஒலியையும் எழுப்ப இயலாததால், அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்காக அவளது உடலில் மணியைக் கட்டி வைத்திருப்பார்கள். அவள் எங்கிருந்தாலும் அவள் உடல் அசைவிற்கேற்ப ஒலியை எழுப்பும் மணியை வைத்து அவளின் இருப்பை அடையாளம் கண்டு கொள்வார்கள். இது அந்த வீட்டிலிருப்பவர்களின் வசதிக்காக மிசேலின் உடலில் தொங்கவிடப்பட்டுருக்கிறது. இதைப் பார்த்த அமிதாப் நீங்கள் வளர்ப்பது குழைந்தையை மிருகத்தை அல்ல என அவளை அதிலிருந்து மீட்கிறார். அந்த மணியைக் கழற்றி தூக்கி எறிந்துவிடுகிறார். அமிதாப்பின் வித்தியாசமான பயிற்சிகளைக் கண்டு அவளது பெற்றோர்கள் வெறுப்படைகிறார்கள். அமிதாப் ஒரு குடிகாரன் என்பதால் அவரது ஆளுமை சந்தேகிக்கப்படுகிறது. மிசேலை வன்மையாக கொடூரமான முறையில் எதிர்க்கொள்வதாக அவளது பெற்றோர் குற்றம் சுமத்துவதையும் பொருட்படுத்தாமல் மிசேலை அவளது அடர்ந்த இருளிலிருந்து மீட்பதற்காகப் போராடுகிறார் அமிதாப்.

மிசேலுக்கு ஆசிரியராக வந்த இரண்டாவது நாளிலேயே மிசேலின் தந்தை அமிதாப்பின் சேவையை விரும்பாமல் அவரை அங்கிருந்து மறுநாள் திரும்பிவிடும்படி கூறிவிட்டு 20 நாட்கள் வேலையாக வெளிமாநிலம் சென்று விடுகிறார். ஆனால் அமிதாப் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மிசேலின் அம்மாவைச் சமாதானம் செய்து, 20 நாளில் மிசேலின் வாழ்வில் ஏதாவது ஒரு சிறு மாற்றத்தையாவது உருவாக்குவேன் எனக் களத்தில் இறங்குகிறார் அமிதாப். ஆகையால் அவருக்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பம் அந்த 20 நாட்கள் மட்டுமே. முதலில் மிசேலின் தந்தையின் படிக்கும் அறையை மாற்றம் செய்து மிசேலை அங்குக் கொண்டு வருகிறார் அமிதாப். ஒரு புது இடத்திற்கு வந்திருப்பதை மிசேல் உணர வேண்டும் மேலும் தன் அம்மாவின் வாசம் படாத ஒரு வெளிக்குள் அவள் இருக்க வேண்டும் என ஏற்பாடுகளைச் செய்து அவரது பயிற்சிகளை தொடங்குகிறார்.

பார்வையற்ற குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்வதில் அமிதாப் வேறொரு மனவெளியைக் கொண்டுருக்கிறார். அவர்களிடமிருந்து வெளிச்சம் பிடுங்கப்பட்டுருக்கிறது. பிடுங்கப்பட்ட அந்த வெளிச்சம் சிறுக சிறுக இறந்துகொண்டிருக்கிறது என அவர் நம்புகிறார். “the light is dying”. வெளிச்சம் பறிக்கப்பட்ட அந்தக் குழந்தைகளிடம் மீண்டும் அவர்களுக்கான வெளிச்சத்தை மந்திரம் போல கொடுக்க வேண்டும் எனவும் நினைக்கிறார்.

மிசேல் இருளில் தொலைந்து போனவள், அவளுக்குச் சொற்களால் ஆன சிறகுகளை வரமாகக் கொடுப்பேன். வெளிச்சத்தை நோக்கி பறப்பதற்குக் கற்றுக் கொடுப்பேன் எனத் தீவிரமாக அவளை மீட்டெடுப்பதில் அமிதாப் காட்டும் அக்கறையும் அன்பும் கவனிப்பும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. அது அடர்ந்த ஓர் இருளுக்குள்ளிருந்து வெளிச்சம் என்கிற முதல் புள்ளியை இட்டு நிரப்பும் அசாத்தியமான முயற்சி எனக்கூட சொல்லலாம்.

கடவுளால் அரைகுறையாக விடப்பட்ட நான் என் ஆசிரியரால் முழுமைப் பெற்று எனக்கான வாழ்வை அடைகிறேன்” என மிசேல் தன் சுயசரிதையை எழுதும் போது குறிப்பிடுவது மிக முக்கியமான வரிகளாகும். உலகத்தில் இத்தகையதொரு இருளில் விடப்படும் குழந்தைகளுக்கென அவர்களின் உலகத்தை வர்ணங்களால் தீட்டக்கூடிய அன்பின் விரல்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும். அமிதாப் போல அவர்களின் மீது அக்கறை கொண்டு ஒலியும் ஒளியும் இல்லாத அவர்களின் வெளியில் தனது முதல் வர்ணத்தை அள்ளி வீசக்கூடிய கரங்கள் வேண்டும். அப்படியொரு அருமையான கதைப்பாத்திரத்தில்தான் அமிதாப் நடித்திருக்கிறார். படம் முழுக்க காது கேளாத கண் தெரியாத மாணவர்களுக்குரிய ஆசிரியராக தனது உடல் மொழியாலும் முகப்பாவனைகளாலும் வாழ்ந்திருக்கிறார். இத்துனைப் பிரமாண்டமான ஓர் அசல் வெளிப்பாட்டை இந்திய சினிமா உலகில் வேறு யாராலும் தர இயலுமா என வியக்கும் அளவிற்கு அமிதாப்பும் ராணி முக்கர்ஜியும் படம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள்.

அமிதாபிற்கு இருந்த அந்த 20 நாள் முடிவடைந்து அவர் புறப்படுவதற்குத் தயாராகுகிறார். இருந்தபோதும் மிசேலினின் வெளிச்சத்தை அவளிடம் கொடுக்க வேண்டும் என்கிற பிடிமானம் அவரிடமிருந்து நீங்குவதாக இல்லை. மிசேலைத் தூக்கிக் கொண்டு போய் குளத்தில் போடுகிறார். அவளுக்கு தண்ணீர் என்றால் நடுக்கம். தண்ணீருக்குள் விழுந்த பிறகு அவள் அதை உணர்கிறாள். முதன் முதலாக தண்ணீர் மீதான பயம் நீங்கி, அதை முழுவதுமாக உணர்கிறாள். அந்தப் புள்ளியிலிருந்துதான் அவளுடைய அகம் திறந்து தனது முதல் வெளிச்சத்தை அடைகிறது.

அமிதாப் அவளுடைய கையை எடுத்து தன் உதட்டில் வைத்து “water” என உச்சரிக்கிறார். மிசேல் மீண்டும் அமிதாப்பின் கையை எடுத்து அவளது உதட்டில் வைத்து அதே போல கொஞ்சம் தெளிவில்லாமல் தண்ணீர்(water) என உச்சரிக்கிறாள். அவள் கற்றுக் கொள்ளும் முதல் சொல் “தண்ணீர்” ஆகும். அதனை அவள் கொண்டாடுகிறாள். திடல் முழுக்க ஓடி பூக்களையும் புற்களையும் தொட்டு தொட்டு அள்ளி வீசுகிறாள். இதுவரை அவள் அடைந்திருந்தாத பரவசத்தை தன்னிலையை அடைந்து அர்த்தம் கொள்கிறாள். தன்னுடனே இருந்த அந்த இருட்டும் கருப்பும் இப்பொழுது அர்த்தமுள்ளதாக மாறுகிறது. இதைத்தான் அமிதாப் விந்தை எனச் சொல்கிறார்.

இப்படியாக தொடர்ந்து அவளுடைய இருண்ட அகத்தையும் புலனையும் சொற்களாலும் முறையான பார்வையற்ற கல்வி முறையினாலும் வளர்த்தெடுக்கிறார் அமிதாப். அவள் உபயோகப்படுத்தும் பொருள்களுக்கும், அவள் தொட்டுணரும் பொருள்களுக்கும், அவளைச் சுற்றி இருக்கும் அனைத்திற்கும் பெயர் இருப்பதையும் அர்த்தம் இருப்பதையும் அவளுக்குப் புரிய வைக்கிறார். தன்னால் பார்க்க முடியாத ஒன்றின் பெயரையும் அர்த்தத்தையும் அறிந்து கொள்ளும்போது உலகம் அவளை நெருங்கி வருகிறது. அவளுடைய இருத்தல் பயன்மிக்கதாக மாற்றப்படுகிறது. இறுதியாக எல்லோரும் பயிலும் பல்கலைக்கழகத்திலேயே படிப்பதற்கு மிசேலுக்கு நேர்காணல் பரிசோதனைகளுக்குப் பிறகு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 40 வருட முயற்சிகளுக்குப் பிறகு பற்பல தோல்விகளைத் தழுவி சோர்வடைந்து உற்சாகம் கொண்டு மீண்டும் மீண்டும் உழைத்து கடைசியாக அவள் பட்டதாரியாக ஆகிறாள்.

ஆனாலும் அவளுடைய உலகத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சுவதற்காக தனது ஆயுள் முழுவதையும் தியாகம் செய்த மிசேலின் ஆசிரியர் அமிதாப் மெல்ல மெல்ல முதுமையை அடைந்து தன் சுயநினைவுகளை இழக்கிறார். அவருடைய உலகம் எல்லாம் நினைவுகளையும் வார்த்தைகளையும் இழந்து காலியாகிறது. வெறும் வன்மையான வெளிச்சம் மட்டுமே அர்த்தமில்லாமல் தேங்கி நிற்கிறது. முன்பொரு சமயத்தில் அவளிடமிருந்து தொலைந்து போகும் அமிதாப் மீண்டும் ஓர் பூங்காவில் கண்டுப்பிடிக்கப்படுகிறார். வெறும் உடலுடன் தன்னைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாமல் சுற்றி இருப்பவர்களையும் அடையாளம் காண முடியாத நிலையில் மிசேல் அவரை அழைத்துக் கொண்டு போய் அவருடைய நினைவுகளை மீட்பதற்குப் பல முயற்சிகள் செய்து பார்க்கிறாள். தனக்கு இந்த உலகத்தைப் புரிய வைத்த என் ஆசிரியர் என் கடவுள் அவருடைய உலகத்தைத் தொலைத்துவிட்டு நிற்பதைக் கண்டு பெரும் வேதனை அடைகிறாள். அவரிடமிருந்து பெறப்பட்ட அந்த நேர்மையான அன்பும் அக்கறையும் அவளை இயக்கியது போல மிசேலின் அன்பும் அக்கறையும் அவரை மீட்கும் என நம்புகிறாள்.

பட்டமளிப்பு விழா முடிந்ததும் அவரைப் பார்க்க அந்தக் கருப்பு அங்கியை அணிந்துகொண்டு மிசேல் மருத்துவனைக்குப் போகிறாள். அங்கே அமிதாப் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதைக் கண்டதும் அதைத் தன் பலத்தைக் கூட்டி அறுத்து எறிகிறாள். இந்த இடத்தில் தன் ஆசிரியடரிமிருந்து பெறப்பட்ட மனிதர்களை மனிதத்தன்மையுடன் பார்க்கும் தன்மை மேலோங்கி அன்பை உயர்த்திக் காட்டுகிறது. மிசேலைக் கருப்பு அங்கியில் பார்க்கும் அமிதாப்பின் கண்களிலிருந்து நீர் வழிகிறது. சன்னலைத் திறந்து வெளியே தூறிக் கொண்டிருக்கும் மழைநீரை இருவரும் தொட்டுணர்ந்து “ தண்ணீர்” என்கிறார்கள். படம் நிறைவடைகிறது. இந்தக் கடைசி காட்சிக்காக அமிதாப்பிற்கும் ராணி முக்கர்ஜிக்கும் கட்டாயம் விருதை வழங்கலாம். அத்தகையதொரு உயிர்ப்பான வெளிப்பாடு.

மேலும் படத்தில் மற்றுமொரு முக்கியமான அம்சம் ஒளிப்பதிவாகும். ரவி.கே.சந்திரன் மிசேலின் உலகத்தை அடர்ந்த இருளிலிருந்து மிதமான வெளிச்சத்தை நோக்கி நகர்வதாகக் காட்டி, படம் முழுவதையும் ஓர் அழகான பரிணாமத்திற்குள் கொண்டு வருகிறார். மழை நேரத்தில் வெளியில் பரவும் இருளும், பனி தூவும் வெளியில் அங்குமிங்குமாக ஒட்டிக் கிடக்கும் இருளும், மிசேலின் பெரிய வீட்டில் சுவரிலும் தரையிலும் அவளையொட்டி கரையும் இருளும் என இருளையும் அதனைக் கடந்த இன்னொரு வெளிச்சத்தையும் அற்புதமாகக் கையாண்டுள்ளார். அடுத்ததாக பின்னனி இசை மிசேலின் துயரத்தையும் வளர்ச்சியையும் கொண்டாட்டங்களையும் எந்த ஒப்பனையுமின்றி அசலாகப் படைப்பதற்குப் பெருங்காற்றியுள்ளது என்றே சொல்லலாம்.

அடுத்ததாக இந்தப் படத்தை இயக்கிய சஞ்சய் லீலா உண்மையிலே ஓர் அற்புதமான மனம் கொண்டவர்தான் என நினைக்கத் தோன்றுகிறது. உடல் அங்கவீனம் எனும் மட்டும் அடையாளப்படுத்தக்கூடிய இது போன்ற குழந்தைகளின் இருளையும் அந்த இருளுக்குள் அகப்பட்டுக் கிடக்கும் அவர்களின் துயரத்தையும் கருப்பொருளாகக் கொண்டு அவர்களுக்கு விடுதலையளிப்பதில் ஓர் ஆசிரியருக்கு இருக்கக்கூடிய கடைமையையும் கலை உணர்வுடன் சொல்லி படைத்துக் காட்டியிருக்கிறார். மிசேலின் இருள் அர்த்தமுள்ளவை, மிசேலின் இருள் அறிவால் ஆனவை, மிசேலின் இருள் அற்புதமானவை. 2005-ல் வெளியான இப்படம் 19க்கும் மேற்பட்ட பல இந்திய விருதுகளை வென்றுள்ளது. மேலும் இதே போல நோயால் பாதிக்கப்பட்டு தன் வாழ்வால் உழைப்பால் உயர்ந்த ஹெல்லன் கெல்லர் அவர்களின் சுயச்சரிதையான “The Story of My Life” எனும் புத்தகத்தின் பாதிப்பால் உருவானதுதான் இந்த “பிளாக்” திரைப்படம்.

“மிசேல் தன்னுடைய இருளுக்குள்ளிருந்து பேசிக் கொண்டிருக்கிறாள் அவளுடைய மொழியில், அவளுடைய உலகத்தைப் பற்றி, அவளது இசையைப் பற்றி”

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, malaysia