தனசேகர் தாத்தாவிற்கு மாதம் மாதம் ஓய்வூதியம் கிடைத்துவிடுவதால், அவருக்கென்ன கவலை. காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டு வீட்டுக்கு வெளியில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்துகொள்வார். நாள் முழுக்க அந்த நாற்காலி அவருக்கு மிகவும் வசதியாக இருந்துவிடுகிறது. மதியத்தில் சோறும் மாலையில் ஒரு குவளை காப்பியும் அவர் இருக்கும் இடத்திற்கே தேடி வந்துவிடும். அவருக்கு முன் விரிந்து வளரும் பகலின் ஒவ்வொரு கணத்தையும் அசைபோட்டே களைத்துவிடும் பொழுதுகள்.
“குமாரு. . என்ன வேலைக்கா?”
குமார். பக்கத்து வீட்டு வாலிபன். அடிக்கடி தனசேகர் தாத்தாவிற்கு அடிமையாகிவிடும் ரொம்ப நல்ல பையன். தொடக்கத்தில் அவருடன் வேடிக்கையாகக் கழிந்த தருணங்கள் மெல்ல மெல்ல துன்புறுத்தலாக மாறிவிட்டது. எப்படியாவது தனசேகர் தாத்தாவின் வாயில் விழாமல் ஓடிவிடுவதே அவனுக்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்தது.
“இல்லெ. . சுத்தி பாக்க”
“சுத்தி பாக்கெ எதுக்குடா டைலாம் கட்டி அழகா உடுத்திக்கிட்டு வெளியில போற? வீட்டுலெ இருந்துகிட்டெ சுத்தி பாரேன் படவா”
“உங்ககிட்ட மனுசன் பேச முடியுமா?”
“அப்பெ நீ என்ன நாயா? டேய் ஆளை ஏய்க்காதெ”
குமாருக்குக் காலையிலேயே கண் கலங்கிவிடும். அவரிடம் கோபப்பட்டாலும் அவனுக்கு எந்த நன்மையும் இல்லை. யாருடைய கோபத்தையும் அவர் மிகத் தந்திரமாக அலட்சியப்படுத்திவிடுவார். படியில் இறங்கி ஓடிவிட முயற்சித்தான் குமார்.