“ மனித நகர்வும் இரண்டாவது பிளவும் ”
இரண்டு இயக்கங்கள், ஒரே சூழலில், ஒரே நேரத்தில்.
1. அவன் என்னைப் பார்த்துக் கையசைக்கிறான்
2. அவனேதான் அவனுக்கு அருகிலேயே இரண்டாவது பிளவாக நின்று கொண்டு மற்றொருவன் தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருக்கிறான்
1
அந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் மட்டுமே ஆகியிருந்தது. பிரமை, வெறும் பிரமை என்று அலட்சியமாக இருக்க முயற்சித்தேன். இருள் சூழ்ந்து கொள்ளும் தருணங்களில் மனம் உள்ளார்ந்த பதற்றத்திற்கும் குழப்பத்திற்கும் பலியாகிக் கொண்டிருப்பதால், எதையாவது செய்தாக வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வந்திருந்தேன். நான்கு கைகள், நான்கு கால்கள் இரு உடல் பிசகலான காட்சி படிமங்கள்.
எங்கே செல்வது? யாரைச் சந்திப்பது? நகரம் சார்ந்த வாழ்வு பலரின் நெருக்கத்தையும் பழக்கங்களையும் கானல் நீர் போல வெறும் மதிய வெக்கையாக மட்டுமே ஆக்கிவிட்டிருந்தது. யாரையும் தெரியவில்லை.
நகருக்குள் நுழைந்து வெறுமனே என்னைக் கடக்கும் மனித முகங்களை ஆழமாகப் பார்த்தேன். எல்லோர் முகங்களிலும் சூழலைப் பற்றிய அலட்சியமும் சக மனிதனைப் பற்றிய நுகர்வும் கரைந்து போயிருந்தது. எனக்கான பிரச்சனையைப் பகிர்ந்து கொள்ள ஒர் ஆள்கூட எஞ்சவில்லை. பேருந்து நிறுத்தத்தினோரமாக வந்தபோதுதான் பட்டணத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் குடியிருப்பில் தனபாலன் என்கிற மனோத்துவ மருத்துவரும் அறிவியல் ஆய்வுனருமான இருப்பது குறித்து நினைவுக்கு வந்தது. அவர்தான் சரியான ஆள் என்பதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் அந்தக் குடியிருப்பிற்குச் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டேன்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு யாரைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறார்கள். எல்லோரையும் வினோதமாகப் பார்க்கப் பழகியிருந்தேன். என் கண்களில் அச்சமும் ஆச்சர்யமும் அப்பட்டமாகத் தெரிய துவங்கியிருந்தன. மருத்துவர் இருக்கும் குடியிருப்பு நெருங்கும்வரை எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். பேருந்தைவிட்டு இறங்கியதும் சாலை வெயிலில் கொதித்துக் கொண்டிருந்தது.
“யேங்க. . இங்க தனபாலன் சார் வீடு எந்தப் பக்கம்?”
எனக்கு முன் நின்றிருந்த அந்த வழிபோக்கன் ஒரே சமயங்களில் இரு வேறு செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஒன்று: என்னிடம் அவர் வீட்டைக் காட்டிக் கொண்டிருந்தான், மற்றொன்று அவனேதான் வேறு எங்கோ நடக்கத் தொடங்கினான். இரண்டு பிளவுகளாக அவனின் முகம் சிதைந்திருந்தது. கடவுளை நினைத்துக் கொண்டு, நேராக அவர் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினேன்.
தனபாலன் மருத்துவரின் வீடு இருண்டிருந்தது. முன் பக்கக்கதவில் மூளையின் இரு பாகங்களின் உள் புகைப்படங்களும், அதற்கும் மேலாக ஏதோ ஸ்பானிய தத்துவ பழமொழியும் இடம் பெற்றிருந்தன. “உனக்கு முன்னே எல்லாமும் விந்தைதான், உன்னையும் உட்பட” என்றவாறு தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தது.
“டாக்டரெ பாக்கனும். . உடனே. . பிளிஸ்”
“இருங்க. . பாக்கலாம். . டாக்டர் ஓய்வாதான் இருக்காரு”
அறைக்குள் நுழைந்ததும் மருத்துவர் தனபாலன் மனோத்துவ புத்தகம் ஒன்றைக் கையில் வைத்திருந்தார். சடங்கிற்காக இருக்கலாம். அமைதியாக அவருக்கு முன் அமர்ந்தேன். அவர் சிறிது நேரம் என் கண்களின் அசைவையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“உங்கள் கரு விழி அசாதரண அசைவுலெ இருக்கு. . யாரை இப்படித் தேடறீங்க?”
“யாரையும் இல்லெ டாக்டர். . எனக்கு மனக் கோளாறா இல்லெ அது உண்மையானு தெரிஞ்சிகிட்டு போலாம்னு வந்தேன் டாக்டர். . என்னாலெ முடிலெ. . பெரிய ஆபத்தான கண்டத்துலே இருக்கேன். . நான் இருக்கறது என்ன மாதிரியான உலகம்னு சுதாரிச்சிக்க முடிலெ டாக்டர்”
“பதறாம சொல்லுங்கெ. . ஒருத்தரோட முகத்தெ பார்த்தே என்னால சொல்ல முடியும். . உங்களுக்குள்ள பெரிய பிரளயம் தொடர்பான மாற்றம் இருக்கு, உங்க உடம்புலே ஏதோ நடக்குது. .”
“டாக்டர். . என் முன்னுக்கு இப்பெ ரெண்டு உலகம் நிகழ்ந்துகிட்டு இருக்குனு சொன்னா நம்புவீங்களா? எனக்கு முன்ன நீங்க ரெண்டா இருக்கீங்க. . டாக்டர் அடுத்து நீங்க என்னா செய்யப் போறீங்கனு என்னாலே சொல்ல முடியும் டாக்டர். . அதோ உங்க பக்கத்துலே நீங்கதான் மேசைலேந்து கீழே விழுந்த பேனாவெ எடுத்து வச்சிக்கிட்டு இருக்கீங்க”
நான் சொல்லி முடிக்கவும் அவருடைய பேனா கீழே விழவும் சரியாக இருந்தது. அவர் அதை எடுத்து வைத்துவிட்டு என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்.
“டாக்டர் எது நிஜம்னே தெரிலெ டாக்டர். . ஏற்கனவே நடந்துவிடுகிற இதெல்லாம் உண்மையா இல்ல இப்பெ நடக்கறது உண்மையா. . எல்லாமே ரெண்டு ரெண்டான இயக்கத்துலே. . அளவுக்கு அதிகமான ஆட்கள், மத்தவங்க பாக்கறதெ விட ரெண்டு மடங்கா நான் பாக்கறெ இயக்கங்கள். . ஐயோ டாக்டர் பைத்தியம் பிடிக்கறெ மாதிரி இருக்கு”
2
“டாக்டர் அந்த ஆளுக்கு என்ன ஆச்சி டாக்டர்?”
“அவர இப்போதைக்கு மருத்துவமனைலே பாதுகாப்பா வச்சிருக்காங்கெ. . ரொம்ப நாளைக்கு அவராலே நிலைக்க முடியுமானு எனக்கே தெரிலே. . யாரும் சந்திக்க முடியாத, யாரும் அனுபவிக்க முடியாத ஒரு சக்தியை, அவர் உணர்ந்துகிட்டு இருக்காரு. . அது மாபெரும் பிரபஞ்ச இயக்கத்தின் இரகசியம். . அவர் நம்மிடமிருந்து விலகி மூனாவதான ஒரு வட்டத்துக்குள்ள இருக்காரு. . அதுலெ அவராலெ எப்படி நுழைய முடிஞ்சதுனே தெரில. . நம்பளோட கட்டுப்பட்ட புலன்களைக் கொண்டு அதைத் தீர்மானிக்க முடியலே. . நான் என் நிலைப்பாட்டை ஆராஞ்சி சொல்லிட்டேன். . ஆனா யாரும் நம்ப மாட்டறாங்கெ.. அவருக்குப் பைத்தியம் என்ற நிலைபாடு அவங்களுக்கு”
“அப்படி என்னாச்சி டாக்டர் அவருக்கு?”
“நான் சொன்னா அது யாருக்கும் புரிய போறதில்லெ. . இது நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட சூட்சமத்தின் பாதிப்பு. . 4 மணி நேரம் அவரோட பேசனதுலே அவரோட நிலைமையே என்னால அனுமானிக்க முடிஞ்சது. . ஆய்வு செஞ்சேன். . திடுகிடும் ஓர் அபாய சக்தியெ அவரு உணர ஆரம்பிச்சிட்டாரு. பிரபஞ்சத்தின் இயக்க சக்தியில் மனுசன் தமது இரண்டாவது பிம்பத்தெ பார்க்க ஆரம்பிச்சிட்டான்”
“இரண்டாவது பிம்பமா? அப்படினா?”
“இந்தப் பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் எல்லாம் உயிருள்ள பொருள்களின் இயல்பான நகர்வின் மீது புறச்சூழலின் வற்புறுத்தல் இல்லாதவரை அது நேர்க்கோட்டில் தன்னுடைய அசலான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். தம்மீது பயன்படுத்தக்கூடிய புறச்சக்தியின் பாதிப்பை எதிர்க்கும் இயல்புநிலை, இதுதான் நியூட்டனின் முதல் விதி. அதைத்தான் ஆங்கிலத்துலே இப்படிச் சொல்லுவாங்கெ:
Newton's First law of motion states that: Inertia is
"An object at rest tends to stay at rest and an object in motion tends to stay in motion with the same speed and in the same direction unless acted upon by an external force."
“அதுக்கும் அவரோட நிலைக்கும் என்ன தொடர்பு டாக்டர்?”
“மனிதனைச் சுற்றி எப்பொழுதும் அவனுடைய இயல்புநிலையைப் பாதிக்கக்கூடிய புறச்சக்தி இருந்து கொண்டே இருக்க பல வாய்ப்புகள் இருக்கு. . காரணம் நம் கண்களுக்குப் புலப்படாத ஆயிரக்கணக்கான அணுக்கள் காற்றில் கலந்துள்ளன. அது ஒவ்வொன்றும் தனியொரு சக்தியைக் கொண்டிருக்கிறது. ஆக்ஷிஜன், ஹைட்ரோஜன் என்று நிறையவே இருக்கு, அதுக்கு ஒவ்வொன்னுக்கும் அசைவும் வேகமும் இருக்கு, எப்போதும் நம் கண்ணுக்குப் புலப்படாத லட்சக்கணக்கான அணுக்களின் அசைவுகள் ஒவ்வொரு மனிதனின் செயலைச் சுற்றியும் அதுவும் நிகழ்ந்துகிட்டு இருக்கு, இந்த இரு நிகழ்வுகளும் வெவ்வேறு தன்மையும் காலமும் அளவும் கொண்டவை,”
“அப்படிப் பார்த்தாலும். . அவரு சொல்றெ மாதிரி அவருக்கு எல்லாமே ரெண்டு ரெண்டுதானே தெரியுது, ஒரெ மனுசன் எப்படி ஒரே நேரத்துலெ ரெண்டா இயங்க முடியும்?”
“அதுதான் நான் சொன்ன இரண்டாவது பிம்பம். . நியூட்டனின் முதல் விதியின் பால் உருவாகும் பிம்பம் அது”
“கொஞ்சம்கூட அந்தச் சூட்சமம் புலப்படல டாக்டர்”
“கொஞ்சம் நிதானமாக யோசிச்சி பாருங்க. . அணுக்களின் பிளவினால்தான் பிரபஞ்சமே உருவாகியது என்று ஒரு தியோரி இருக்கு, பிக் பெங் தியோரி, அதன்படி மனுசனோட இயக்கத்தில் Inertia என்கிற சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது, அதுதான் மனுசனோட ஒவ்வொரு இயக்கத்தையும் நடுநிலமை தவறாமல் பாதுகாத்து புறச்சக்தியால் ஏற்படும் மாறுதல்களை எதிர்த்து மனித செயலின் இயல்புநிலையை தற்காத்து வருது, இது இயல்பான இயக்கம், ஆனா காத்துலே பரவிக்கிட்டு இருக்கற லட்சக்கணக்கான அணுக்களின் அசைவால் நகர்வால் மனிதனின் செயலில் Inertia சக்தியில் பயங்கரமான பிளவு ஏற்படுகிறது, தன் செயலின் அசலான நிலையை தற்காக்கும் மனிதனுடைய அந்தச் சக்தியும், கண்களுக்குப் புலப்படாத அபார நகர்வைக் கொண்டிருக்கும் அணுக்களும் மோதிக் கொள்ளும்போது அங்கு மாபெரும் எதிர்ப்பு சக்தியும் பிம்ப உடைப்பும் நடைபெருது. . அந்தப் பிளவுலெதான் மனிதனுடைய செயல் இரண்டாக உடைகிறது, அணுக்களுக்குள் ஏற்படும் அதிர்வின்மை காரணத்தால் அது மனிதனின் செயலில் பாதியைத் தனக்குள் நிரப்பிக் கொள்கிறது. . எதிரொளிக்கிறது . . உறிஞ்சி கொள்கிறது என்றே சொல்லலாம். .”
“டாக்டர். . மனித குளத்திற்கு புலப்படாத ஏதோ ஒன்றை நீங்க கண்டுபிடிக்க முயற்சி செய்றீங்க. . பைத்தியக்கார நிலைமை ஏற்பட்டுரும் டாக்டர். . அறிவுக்கு எட்டவே மாட்டுது. . பிளிஸ். . குழப்பம் வேண்டாம்”
“இதுலே குழம்ப ஒன்னும் இல்ல. . நமக்கும் பிரபஞ்சத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கு. . அதுலெ இதுவும் ஒன்னு”
“எப்படி டாக்டர்? அணுக்கள் பிளவு சரி. . அதெப்படி என் உடல் செய்யப் போகும் அடுத்த நொடியை அணுக்கள் உறிஞ்சிக் கொள்ள முடியும்? இது எப்படிச் சாத்தியம்?”
“நிதானமா யோசிங்க. உங்க மண்டைலெ படார்னு கட்டையிலெ அடிச்சா. . எப்படி இருக்கும்? அந்தக் கணத்துலே நீங்க மயங்கி விழும் முன் நீங்க பார்க்கக்கூடிய பொருள்கள் இரண்டாகவோ நான்காகவோ பிளந்து பற்பல சில்லுகளாக விரிவது போல் காட்சியளிக்கும் அல்லவா? அது மாதிரிதான். கண்ணாடிலே உங்க பிம்பத்தெ எப்படிப் பார்க்க முடியுது? நீங்க செய்யற எல்லாத்தையும் அப்படியே கொஞ்சம்கூட பிசகலில்லாமல் உங்களோட பிம்பம் செய்யும். . இது ஆரம்பத்தில் சாத்தியமாயிருக்குமா? ஆனால் நிஜத்தில் இருக்கிறதே. . அது மாதிரிதான், அணுக்கள் உங்களின் அடுத்த நகர்வை எதிரொலிக்கும் வாய்ப்புள்ளது. . அந்த அணுக்களின் பிளவால் நமது பிம்பம் இரண்டாக உடைந்து ஒன்று நிஜ உலகத்திலும் மற்றொன்று அணுக்களின் உலகத்திலும் அதாவது அணுக்கள் நகரும் நுண்ணிய தளத்தில் இயங்கத் தொடங்குகின்றன, அந்த இரண்டாவது தளத்தின் நுண்ணிய இயக்கங்களைத்தான் அந்த மனுசன் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். . இது எப்படி ஆனது என்று என்னாலயும் கண்டுபிடிக்க முடிலெ. . அது அதிசயம்!”
3
இருள் சூழ்ந்திருந்த அறை. வெளி உலகத்தின் வெளிச்சம் என்னிடமிருந்து அபக்கறிக்கப்பட்டிருந்தது. யாரையும் பார்க்க நான் அனுமதிக்கப்படவில்லை. என்னையும் யாரும் பார்க்க மறுக்கிறார்கள். யார் பேசினாலும் எனக்கு விளங்கிக் கொள்ள சிரமமாக இருக்கிறது. குரல்கள் இரண்டாக உடைந்து எனக்குள் சரிந்து கொள்கின்றன. எல்லோரும் உளறுவது போல கேட்கிறது.
“உங்களுக்கு மனப்பிறழ்வு! மனச்சிதைவு! பைத்தியம்! உங்க மூளை செத்துக்கிட்டு இருக்குனு நினைக்கிறோம்” இப்படிப் பல தீர்மானங்களை எடுத்துக் கொண்டு என்னை ஆய்வு செய்யப் போவதாகக் கூறினார்கள். குழறுபடியான அவர்களின் உடைந்த சொற்களின் வழி நான் புரிந்து கொண்டவை இவ்வளவுதான். நானும், என்னைப் போலவே எனக்கு முன் 10 வினாடி கால அவகாசத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மற்றொரு நானும் தனித்த அறையில் விடப்பட்டிருந்தோம். அவன் என்கிற நான் சென்ற இடமெல்லாம் நானும் போய்க் கொண்டிருந்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய இயக்கத்தையே 10 வினாடிக்கு முன்னால் நான் பார்க்கத் தொடங்கினேன். அது என் உடலா அல்லது என்னுடைய ஸ்தூல உடலா? தெரியவில்லை. மூளை குழம்பு இறுக்கமாகியது. எல்லாமும் பிரமையாக மிதப்பது போல் காட்சியளிக்கத் துவங்கின.
அந்த அறையிலுள்ள தடித்த கம்பிகளில் கொஞ்சம் கொஞ்சமாக என் தலையைக் கொண்டு மோதி கொள்வதையும் என் தலையின் ஓடு உடைந்து பிளப்பதையும் 10 வினாடிகளுக்கு முன்பு இரண்டாவது பிம்பமாக உடனிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
4
“டாக்டர் அந்த மனசனோட இறப்புக்கு என்ன சொல்லப் போறீங்க? அவரோட உடம்புகிட்ட உக்காந்து ஏதோ யோசிச்சிக்கிட்டு இருந்தீங்களே?”
“இது இனி நடக்கக்கூடிய சாத்தியம் ஏற்பட்டா. . என்ன ஆகும்னு நெனைச்சேன். .. . நடக்கலாம் நடக்காமலும் போகலாம். . தெரிலெ! நடக்கத் தொடங்கனுச்சினா. . மனுசனோட மூளை இயங்காம போவவும் வாய்ப்பு இருக்கு!”
மனோத்துவ மருத்துவராகவும் அறிவியல் ஆய்வுனராகவும் இவ்வளவு காலம் பணியாற்றிய எனக்கு இது பிரபஞ்ச விந்தையாகவே தோன்றுகிறது. என் அறைக்குள் நுழைந்து சிறிது நேரம் அமைதியில் உறைந்திருந்தேன். 10 நிமிடத்திற்குப் பிறகு யாரோ என் அறைக் கதவை உள்ளேயிருந்தபடியே திறக்க முயற்ச்சிப்பது போன்ற சப்தம் கேட்டது. மெல்ல எழுந்து பார்த்தேன். அங்கு கதவுக்கருகில் நின்று கொண்டிருந்தது நான்தான்.
. . . . . .
ஆக்கம் : கே.பாலமுருகன்
மலேசியா