Friday, May 8, 2009

சிறுகதை - சாமியாடிகளின் கறை படிந்த பிரதேசமும் அலைந்துகொண்டிருக்கும் எண்களும்







கிழக்கைப் பார்த்து அடர்ந்திருக்கும் காட்டு வழியே 20 நிமிடங்கள் நடந்தால், ஒரு சிறு ஓடை தென்படும். அங்கிருந்து வலதுபுற மலைமேட்டில் ஒரு கோவிலின் கோபுரம் சிதிலமடைந்து வானத்தை எக்கிப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து வீழும் பறவையின் சிறகு போல சொக்கியிருக்கும். நீ நின்று கொண்டிருப்பது ஒரு சாமியாடியின் கோவில் என்பதைத் தெரிந்து கொள். நேராக நடந்து மலைமேட்டின் தொங்கல்வரை செல்.

மிக அருகாமையில் தெரியும், பிறகொரு சமயம் உன்னை அது எங்கோ இழுத்துக் கொண்டு போகும் மாயைப் போல தெரியும். சடாரென்று கோவிலின் கோபுரம் கண்களிலிருந்து மறைந்து கானல்போல வெறும் வெயிலாக மாறுவதாகத் தோன்றும். கொஞ்சமும் அக்கறைப்படாமல் விரைந்து ஏறு. மலையின் உச்சியை அடைந்ததும் உனக்கு உடல் முழுவது வியர்த்திருக்கும். உடனே அந்த வியர்வையைத் துடைத்துச் சுத்தப்படுத்திவிட்டு 5 நிமிடம் அங்கேயே காத்திரு. உடல் மீண்டும் நிதானத்திற்குத் திரும்பியதும் உடலிலிருந்து ஏதாவது துர்நாற்றம் வீசுகிறதா என்பதைத் தெரிந்து கொள். இல்லையென்பதை உறுதி செய்தபின் கோவிலை நோக்கி நட.

“4 நம்பர் சொல்லு. . டே. . சொல்லுடா. . 4 நம்பர்லே எல்லாமும் அடக்கம்டா. . பொணத்து மேல உக்காந்து மை எடுக்கற கலை அவ்ள சாதரணம் இல்லடா. . தலைச்சம் பிள்ளையோடெ முதுகெழும்புலேந்து எடுத்த மை”

“டே. . முரளி. . 4 நம்பர். . டே. . நம்பர் எடுக்கப் போலயா. . டெ. . ஆத்தா காவல் கொடுக்கற நேரம் காட்டுலேந்து தலையடி சாமியாருங்க கொழ பண்றானுங்க. . முரளி. .டே. . தூங்கறான் பாரு.. டே”

அறைக் கதவைத் திறந்த அம்மா இன்னும் கொஞ்சம் நகர்ந்து என்னை நெருங்கியிருக்கலாம். அவரின் அழைப்பு காதுக்குச் சமீபத்தில் கேட்கிறது. விழிப்புநிலையில் இருந்தும் எந்தப் பிரதிபலிப்பும் உடலில் இல்லை. வெறும் பிரக்ஞை மட்டும் அறையில் இருப்பதாக உடல் எங்கோ நழுவிவிட்டது போல. எங்கோ ஒரு மலைபிரதேசத்தின் அடிவாரத்தில் அல்லது சுடுகாட்டின் இருளில் இப்படி அதிசயமான மனநிலையில் எங்கோ அலைந்து கொண்டிருக்கும் என் அகத்தின் பாதியை அம்மாவின் அழைப்பு கயிறு போட்டு இழுக்கிறது. குரல்களால் நிரம்பிய ஒரு வெளிப்பரப்பு.

“டே. . என்னா பண்றான் இன்னும்”

அம்மா வந்து உடலைக் கொஞ்சம் பலம் கொண்டு தட்டினார். மலையிலிருந்து உருண்டு கீழே விழுவது போல திடீர் விழிப்பு. கண்களைத் திறந்திருக்கும் எனக்கு எங்கேயிருந்து இந்த விழிப்பு?

“என்னாடா ஒடம்பு இப்டி வேர்த்திருக்கு? ஏகோன் ஓடுது”

அறைக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தும் நான் மட்டும் அறையிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தேன்.

“போய் நம்பரு எடுத்துட்டு வாடா. . மணியாச்சி. சீனன் கடயெ அடைச்சிருவான்”

நிராகரிக்க இயலாத குரல்கள் எனக்குள் உதிர்ந்து ஏதோ ஒரு உருவகத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தன. உணர முடிந்தது. தொண்டைக்குள்ளிருந்து என் அம்மாவின் முகத்தை எட்டிப் பார்த்து பிறகு மீண்டும் சலசலவென நீர்ப்போல உள்ளிறங்கி வயிற்றுப் பகுதியிலுள்ள செல்களை மோதுகின்றன.

“கெட்ட கனவு மாதிரி இருக்குமா”

“சரி. . சரி. . கெளம்பி போ”

வீட்டிலிருந்து வெளியே வந்ததும் உடலெல்லாம் கூசியது. மோட்டாரை எடுத்துக் கொண்டு நம்பர் கடைக்குச் சென்றேன். அது ஒரு அலமாரி கடை. எல்லாம் பலகை அலமாரிகள். அந்தக் கடைக்குள் நுழைந்து உள்ளே இருட்டில் இருக்கும் ஒரு அறைக்குள் போனால், முதலாளியின் தம்பி பெரிய நாற்காலியில் அமர்ந்திருப்பான். எப்பொழுதும் உத்தமன் போல வியாக்கியானம் செய்துகொண்டிருக்கக்கூடியவன். அண்ணனைப் பற்றி ஏதாவது குறைப்பட்டும் கொள்வான்.

“ஏசோக் யூ அடா கெனாலா நம்போர்”

நாளை எனக்கு நம்பர் அடிக்கப் போகிறது என்று சப்புக் கட்டினான் மலாய் மொழியில். அவனிடமிருந்து எதையும் கேட்கும் மனநிலையில் நானில்லை. 4 நம்பரை மட்டும் ஒரு தாளில் எழுதிக் கொடுத்தேன். அப்பாவின் கார் எண்கள். 7169. அவன் அதைப் பார்த்துவிட்டு ஏதோ முனகினான். அந்த அறையின் இருப்பு அமானுடமான சூழலை ஏற்படுத்துவது போல இருக்கும். தொலைவில் எறியும் சிவப்பு விளக்கும் அதன் உக்கிரமும் நமக்குள்ளும் தாவுவது போல ஒரு பிரமை.

“யூ மாவு தேங்கோக் போமோ சீனா? பொலே கென்னா நம்போர்லா”

சீன சாமியாடியைப் பார்க்கிறாயா? உனக்கும் அதிர்ஸ்டம் கிட்டுமென அவன் உதிர்த்த வார்த்தைகள் கனவில் சொல்வது போல தோன்றியது. எப்பொழுது வெளியே வந்தேன் என்று தெரியவில்லை. சூழலைப் பற்றிய தெளிவு கிடைக்கும்போது மோட்டாரில் சென்று கொண்டிருந்தேன்.

கிழக்குப் பார்த்த ஒரு திசையில் அடர்ந்த காட்டுப் பாதையில் ஓர் இருளில் நகர்ந்து கொண்டிருந்தேன். எங்கோ மலையின் உச்சியிலிருந்து உச்சாடனக் குரல்கள் சரிந்து அடிவாரத்தில் இறங்கி காடு முழுக்க பரவுவது போல ஒரு சப்த அதிர்வு. யாரோ என்னைக் கட்டி இழுத்துக் கொண்டுருக்கிறார்கள். தூரத்திலிருந்து அந்தக் குரல் ஏதோ முனகுகின்றது. அந்த முனகல் ஒரு மந்திரம் போல என்னை இயக்குகின்றது. ஒரு மரத்தடியைக் கடக்கும்போது அம்மாவும் அப்பாவும் அங்கு அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருப்பது தெரிகிறது. அவர்களை நோக்கி என் வார்த்தைகளை அள்ளி வீசுகிறேன். வெறும் காற்று மட்டும் கசிகிறது எனக்குள்ளிருந்து.

“இங்கு வந்து உக்காரு. . உன் பேரு என்னா?”

“முரளிதரன்”

“முரளி. . நீ வந்து சேந்திருப்பது மலையடி சிவசக்தி கோயிலு”

“உனக்குள்ள 4 நம்பரே இறக்கி உங்க உலகத்துலே இருக்கற குரல்களெ சேகரிக்கனும். . நல்லா கேளு. . உன் வயித்துக்குள்ள முளைச்சிருக்கற சுடுகாடு ரொம்ப பயங்கரமானது. . செத்தவன் சும்மா இருக்கமாட்டான். . வெளிய வரப் பாப்பான். . அவன் வெறும் வார்த்தைகளால் உள்ளவன். . உன்ன பயன்படுத்தி ஒரு வார்த்தையா வெளிய வந்துருவான். . அவனுங்களே அடக்க எண்களால் மட்டும்தான் முடியும். . எண்களெ அழிக்கனும். . அது பற்றிய பிரக்ஞையை எல்லாரும் இழக்கனும். . அப்பத்தான் அந்தச் சுடுகாட்டுப் பிணங்கள் அடங்கும். நல்லா கேட்டுக்கெ நீ கொஞ்சம் கொஞ்சமா இந்தக் கோயிலுக்கு வந்துட்டெ. .”

அறைக் கதவைத் திறந்து யாரோ உள்ளே வருகிறார்கள். அப்பாவின் கைகள் என் மீது பட்டு என்னை எதுலிருந்தோ மீட்கின்றன.

“டே. . நேத்து எடுத்தியே நம்பரு அடிச்சிருச்சிடா”

கண்களைத் திறந்ததும் வீட்டிற்கு வெளியிலிருந்து நான்கு உருவங்கள் உள்ளே நுழைய காத்திருந்தன. எட்டிப் பார்த்தேன். அதிர்ந்து போவதற்குள் மீண்டும் அப்பாவின் குரல்.

“டே. . போயி சீனன்கிட்ட காசெ வாங்கிட்டு வந்துரு. எப்படியும் 2000 வெள்ளி கிடைக்கும்”

உடல் ஊனமுற்ற குழைந்தைகள் போல அந்த நான்கு உருவமும் வளைந்து நெளிந்து, சுருண்டு, தவழ்ந்த நிலையில் மனித உருவத்திலிருந்து பிசகிய ஓர் அசாத்திய தோற்றத்தில் இருந்தன. மயக்கம் தலைக்கு எட்டி ஓங்கி அடித்தது. மெல்ல அந்த நால்வரும் வீட்டிற்குள் நீர்ப்போல உருகி ஊர்ந்து நுழைந்து கரைந்தார்கள்.


2

அவ்வளவு தூரம் வந்து இன்னும் தோட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதை வளைந்து வளைந்து எங்கோ போய்க்கொண்டிருந்தது. அவ்வப்போது புதியதாக முதுகில் ஒரு வலி துவங்கியிருக்கிறது. முதுகு தானாக வளைந்து கொள்ளவும் செய்கிறது. பயண அசதியின் வெளிப்பாடாக இருக்கலாம். 14ஆம் எண் தோட்டத்தில் ஒரு சாமியாடி இருப்பதாகக் கூறியிருந்தார்கள். அவரைப் பார்த்து ஏதாவது பேசிவிட்டு வரலாம் என்று தோன்றியது. பாதையின் இழுவைக்கேற்ப விட்டுக் கொடுத்தவனாக மோட்டாரில் நகர்ந்து கொண்டிருந்தேன். இரப்பர் தோட்டத்து எல்லைவரை வந்து சேர்ந்ததும் அங்கிருந்து ஒரு பாதை இலேசாக நெளிந்து காட்டுக்குள் ஓடியது. வழிப்போக்கர்கள் யாரும் இல்லாததால் ஏதோ நம்பிக்கையில் உள்ளே நுழைந்தேன்.

“யாம்மா இங்க சாமியாடி இருக்காராமே. . அவர் வீடு எங்க?”

“அதோ அங்க இராமர் கோயிலு இருக்கே, அதுக்குப் பக்கத்துல முனியாண்டி சாமி கோயிலு இருக்கும் பாருங்க. . அங்கத்தான் அவரு வீடு”

உள்ளே நுழைந்ததும் அந்தச் சாமியாடி காவி வேட்டிக் கட்டிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டு உறங்கிவிட்டிருந்தார். சங்கடத்துடன் இலேசாக அவருக்கு முன்னால் போய் முனகினேன். இல்லை, நான் முனகவில்லை. ஏதோ உள்ளுக்குள்ளிருந்து.

“வாங்க உக்காருங்க. . சாரி. . தூங்கிட்டேன். மத்தியானம் இப்படித்தான் சாப்டுட்டா தூக்கம் வந்திருது. . சொல்லுங்க என்னா விசயம்? ஏதாவது முடி கயிறு கட்டனுமா? இல்லெ பேயு ஓட்டனுமா?”

“சாமி. . என்னோட பிரச்சனயே வேற. . எனக்கு எப்பவும் ஒரு கனவு வருது ஆனா அந்தக் கனவு ஒவ்வொரு நாளும் வளந்துகிட்டே வருது. அன்னாடம் கனவுலே நான் ஒரே பாதையிலே ஒரே மலை உச்சிய நோக்கி போறேன். . அங்க ஒரு கோபுரம் தெரியுது. . சாமியாடி ஒருத்தர் இருக்காரு. . அவர் எனக்குப் புரியாத பல விஷயங்களே பேசறாரு”

“என்னப்பா ஏதோ கனவு கினவுனு புலம்பறே. . இந்த மாதிரி கெட்ட கனவுலாம் வர்றது சாதாரணம்தானே. . அதுக்கு என்னா. . ஒரு முடி கயிறு கட்டனா சரியா போயிரும்”

“இல்ல சாமி . . ஏதேதோ நடக்குது. என் வயித்துக்குள்ள ஒரு சுடுகாடு இருக்குனு அந்தச் சாமியாடி சொல்றாரு. . ஆனா என் வயித்துலேந்தோ இல்ல என் உடம்புக்குள்ளேந்தோ ஏதோ ஒன்னு இந்த வெளி உலகத்தெ எட்டிப் பாக்குது சாமி. .என்னால அதெ உணர முடியுது. கனவுலே நான் என் பயணத்தெ எங்க முடிக்கறனோ மறுநாள் கனவுலே அங்கேந்தே பயணத்தெ தொடர்றேன் சாமி. .”

“என்னப்ப உளர்றே? வயித்துக்குள்ள சுடுகாடா? அட நி ஒன்னு. சும்மா இதெல்லாம் ஏதாவது காக்கி சேட்டெ அடிச்சிருக்கும். காட்டுப் பாதையிலே போயிருப்பெ.இரு துன்னுரு தர்றேன். போட்டுக்கோ”

வந்த நோக்கம் எதற்கும் இடம் கிடைக்கவில்லை. சாமியாடி ஏதோ மந்திரம் ஓதி என் நெற்றியில் திர்நீரை அப்பினார்.

“தம்பி. . ஒரு நேரத்துக்கு ஒரு மாதிரியா தெரியறே. தூரத்துலேந்து பாத்தேன் உன் தலெ ரவுண்டா வலைஞ்சி உடம்புலேந்து வெளியே வந்துட்ட மாதிரி இருக்கு. தொங்கிப் போது. பாத்துப்பா. ரொம்ப குனிஞ்ச வேல ஏதாச்சம் செய்யறயா?


3

மலை உச்சியின் கோயிலில் அமர்ந்திருந்தேன். அந்தச் சாமியாடி ஒரு மஞ்சள் விளக்குப் போல கோவிலின் கோபுரத்து சுவரிலிருந்து பிளந்து உள்ளே ஊற்றினார். அவரின் உருவம் நீர்ப்போல உருவமற்ற நிலையில் பரவியிருந்தது.

“பயப்படாதெ! நான் உனக்குள் இருக்கும் ஆழ்மன பிரமை! இல்ல இந்தக் கோயிலோட முன்னால் சாமியாடி. எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கோ. எங்கள் உலகம் உன்னெ பயன்படுத்தி பூமியில உள்ள எல்லாம் எண்களையும் மீண்டும் எடுத்துக்க போறோம். நீ எண்களால் உருவானவன். உன்னெ உன் வயித்துக்குள்ள இருக்கற பிணங்களெ திண்றதுக்காக எல்லாம் எண்களும் உனக்குள்ள வந்துகிட்டு இருக்கு. அருவி போல நீர்ப்போல. நீ ஒருநாள் கரைஞ்சி போகப் போற. எல்லாத்தையும் மீட்கப் போறோம்.. சாமியாடிங்க செஞ்ச எல்லாத்தையும் மீட்கப் போறோம். . எண் மேல செலுத்தன எல்லாம் சூனியங்களையும் எடுத்துக்க போறோம். உலகத்துல்ல மனுசாளுங்க மாதிரி ஒவ்வொரு நாளும் ஒரு எண் பிறக்குது வளருது, ஒவ்வோர் மனுசனோட வயித்துக்குள்ளயும் போயீ உயிர் வாழுது. பிறகொரு சமயத்துலே அவன் ஒரு எண்ணாகவே இருக்கான். அவனுக்குள்ள அந்த எண்தான் எல்லாமுமா இருக்கு.”

4

என் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். முதுகு தண்டு ரொம்பவே வளைந்து காணப்பட்டது. அந்தக் கனவுலகிருந்து என்னால் மீளமுடியவில்லை. தினமும் ஒரு கராரான குரல் எங்கோ தொலைவிலிருந்து கேட்கிறது. இது என்ன பித்தநிலையா அல்லது பிரமையா? வீட்டு முன்வாசலில் வந்து அமர்ந்தேன். பக்கத்து வீட்டு பாட்டி அங்கிருந்து கொண்டே ஏதோ முனகினார்.

“டே. . ஏதோ நம்பரு அடிச்சிருச்சாம்? நல்ல இராசிக்காரன்தான் நீ. அந்தக் காலத்துலே நம்பரு அடிக்கறதுக்காக என்னனமோலாம் பண்ணுவானுங்க, வசியம் செய்வானுங்க, சுடுகாட்டுலே உக்காந்து பொணத்துலேந்து மை எடுத்து என்னனமோ பண்ணுவாங்க நம்பரு அடிக்க, அடிச்சிட்டா கோயில்லெ போய் கெடா வெட்டுவானுங்க. நீ அதெல்லாம் செய்யாம பெரிய தொகையா அடிச்சிட்டியே. நம்பரு அடிச்சி நல்லா சாப்டு “8” மாதிரி தலெ சிறுத்தும் வயித்துக்குக் கீழே பெருத்தும் இருக்கறயே”

பகீரென்றிருந்தது. வேகமாக உள்ளே சென்று கண்ணாடியின் முன் என்னைப் பார்த்தேன். முதுகு தண்டு வளைந்து, கால்கள் சுருங்கி “6” போல தெரிந்தேன். தலை காணாமல் போயிருந்தது.


ஆக்கம்

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
திண்ணை (08.05.2009)