Wednesday, April 28, 2010

“தனி” குறும்படம் விமர்சனம் - தனியனின் பொழுதுகளில் கரையும் உலகம் -

3 வருடங்களுக்கு முன் பார்க்க நேர்ந்த what is that என்கிற குறும்படம்தான் சினிமா மீதான எனக்கிருந்த தேடலையும் புரிதல்களையும் தீவிரப்படுத்தியது என்று சொல்லலாம். அதுவரை பல ஆஸ்கார் விருது பெற்ற உலக சினிமாக்களை வாங்கி பார்ப்பதில் ஒரு பைத்தியக்காரன் போல அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது, ஆஸ்கார் படங்கள் சொல்ல முடியாததை அப்படி என்ன இந்தக் குறும்படம் சொல்லிவிடப் போகிறது என்ற அலட்சியமான பார்வையுடன் இந்தக் குறும்படத்தைப் பார்த்தபோது, 2 மணி நேர சினிமா உடைக்க நினைக்கும் வாழ்வின் உச்சங்களை வெறும் 5 நிமிடங்களில் ஒரு சிறு மௌனத்தினூடாக சில சொற்களுடன் உடைத்துக் காட்ட முடியும் என்கிற அசாதரண பிம்பத்தைக் கொண்டிருந்தது அந்தக் குறும்படம்.

மனிதனுடைய மிகப்பெரிய பலவீனமே சக உறவுகள் வெளிப்படுத்தும் அன்பைக்கூட புரிந்துகொள்ள முடியாததுதான். சமக்காலத்தில் நமக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்பதுபோல அதன் நிதர்சனங்களைக் காட்டியது அந்தக் குறும்படம்.

“நான் வளர்ந்துவிட்ட மனிதனல்ல, வளர்ந்துகொண்டிருக்கும் மனிதன், நான் திறமை சாலியல்ல, வலுவானவனும் அல்ல, பிரத்யேக மனிதனும் அல்ல, எனக்குக் குறைபாடுள்ள கதாபாத்திரங்களை மிகவும் பிடிக்கும் காரணம் என்னவென்றால் எத்தனை வயதானாலும் நான் இன்னும் முழுமையற்ற மனிதனாகவே இருக்கிறேன், அலட்டலின்றி, மிகை இன்றி, போலித்தனமின்றி, புனைவின்றி, ஒப்பனையின்றி, இந்த வாழ்வையும் மனிதர்களையும் பார்க்கிறேன்” என்கிறார் உலக திரைப்பட ஆளுமை அகிரா குரோசோவா. போலித்தனங்களையும் ஒப்பனைகளையும் தூக்கி எறிந்துவிட்டு தனது மாற்று வடிவத்தை உருவாக்கிக் கொண்டதுதான் குறும்படம் எனலாம்.

உலக போருக்குப் பிறகு முதன் முதலில் அகிரா குரோசாவின் ரெஷொமோன் படம் திரையிடப்படும்போது, ஜப்பானிய வாழ்வியலையும் மனிதர்களையும் கலை பார்வைக்குள் கொண்டு வரும் ஒரு புதிய கலாச்சார புரட்சியைத் தோற்றுவிக்கிறார் அகிரா, வீழ்ச்சியடைந்த ஜப்பானி நிலப்பரப்பை அதன் கலாச்சாரம் சார்ந்து தூக்கி நிறுத்தியதில் ஒரு திரைப்பட ஆளுமையான அகிராவின் சினிமாக்களுக்கு இருந்தது என்றால், சினிமா வெறும் வணிக கேலி கூத்து அல்ல, சந்தைக்குள் கூழிக்கு மாறாடிக்கும் வடிவமும் அல்ல, அது நம்மை நமது வாழ்வை, நமது கலாச்சாரத்தின் எழுச்சியை வீழ்ச்சியைக் காட்டும் கண்ணாடி போன்றது. “”ஒருவனின் படைப்பைக் காட்டிலும் அவனை அதிகமாகச் சொல்லக்கூடியது எதுவுமில்லை” என்று இந்திய திரைப்பட ஆளுமை சத்ய ஜித்ரே சொல்கிறார்.

அத்தகைய தீவிரமான இலக்கிய நேர்த்திகள் குறையாத வடிவமாக இன்று குறும்படம் பரவலாக தனக்கான களத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. சமக்கால நிகழ்வுகள் தொடங்கி வாழ்வின் மீதான பிடிமானங்கள்வரை தவறி விழும் நினைவுகளின் அடுக்குகளைப் பதிவு செய்வது முதல் மானுட தோல்விகள்வரை எல்லாவற்றையும் காட்சியமைப்பில் கொண்டு வரும் சாத்தியம் குறும்படத்தில் இருக்கிறது. குறுகிய நேரத்தில் ஒரு பெரும்கதையாடலை நிகழ்த்தி காட்டுவதன் அசாதரணம்தான் குறும்படம் என நினைக்கத் தோன்றுகிறது.

தனி குறும்படத்தைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தபோது, அதன் கேமரா எல்லாம்விதமான காட்சியமைப்பு ஒழுங்குகளையும் கேமரா இலக்கணங்களையும் உதறி தள்ளிவிட்டு பயணிப்பதாக, அவனின் தனிமையை கேமரா கதைச் சொல்லியாக இருந்து விவரிப்பதாக கதை விரிகிறது.

அய்யப்பன் மாதவனின் இயக்கத்தில் வந்திருக்கும் இந்தத் தனி குறும்படம் வீட்டிற்கு உள்ளேயே, புறக்கணிக்கப்பட்ட ஒரு வாழ்வின் மீதமாக தனியாக கிடக்கும் ஒருவனின் இருப்பைக் காட்டுகிறது. குறும்படத்தின் நீளம் சிறியதாக இருந்தாலும் காட்சியமைப்புகளில் படிந்திருக்கும் வெறுமை நம்மை சலிப்புடன் இழுத்துக் கொண்டு போகிறது. அந்தத் தனியின் பரப்பளவு மிக விசாலனமானது, கொடூரனமானது, சோம்பலானது, ஆபத்தானது என்று சொற்களில்ன்றி மௌளனத்தில் உறைந்து கிடக்கும் ஒரு தனியனின் தீராத பொழுதுகள்தான் இந்தக் குறும்படத்தில் கடந்து செல்கிறது.

தனி குறும்படத்தில் நான் இணையும் கட்டங்கள் அதன் ஒளிப்பதிவுகள்தான். பெரும்பாலும் காமிரா சொல்லும் காட்சிகளை அதிக கவனம் எடுத்து தரிசிக்க முயல்வேன், அந்த முயற்சியின் போது தனி குறும்படத்தின் இன்னொரு கதாபாத்திரத்தின் இருப்பை வழுவாகக் காட்ட காமெராவின் பிரேம் தீவிரமாக படைப்புடன் உழைத்துள்ளது என்றே சொல்லலாம். தனி குறும்படத்தின் தொடக்கம் மிக முக்கியமான கட்டம். இதை அடையும் பார்வையாளன் மட்டுமே படைப்பிற்குள் நுழைய முடியுமென கருதுகிறேன். குறும்படத்தின் தொடக்க ஒளிதான் பார்வையாளனைக் கதைக்கான, படைப்பிற்கான மொத்த தரிசனங்களை அடைய வாயிலாக வருகிறது.

தனி குறும்படத்தின் கதாபாத்திரமான அந்த ஆண் அறைக்குள் படுத்திருக்கிறார். அவருடைய தலைக்கு இடதுபக்க மூலையில் மெல்லிய வெளிச்சத்துடன் சன்னல் இருக்கிறது, சிறிது நேரத்திற்குப் பிறகு விடியலின் முதல் வெளிச்சம் சன்னலின் வழியாக அறைக்குள் நுழையவிடும் காட்சியமைப்பு, அந்த வெயில் போடும் கோடுகள் போல மிக அழகாகவும் அவனது தனியான இருப்பைக் காட்டுவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வெளிச்சம் உள்நுழையும் காட்சியமைப்பின் வழியாக வெறுமை ஒரு கதாபாத்திரமாக குறும்படத்தின் பிரேம்க்குள் வருகிறது. ஒளிக்கு உணர்வு இருப்பதாகச் சொல்வார்கள். ஒளியின் வர்ண பிரதிபலிப்பு மனிதர்களின் அகத்தையும் சூழலின் பிரக்ஞையையும் காட்டக்கூடிய தன்மை இருக்கிறதை இந்தக் குறும்படத்தின் தொடக்கத்தில் பார்க்க முடிகிறது.

ஒடுக்கப்பட்ட மனிதர்களின் முகத்தையும் அவர்களின் பிராந்திய அமைப்புகளையும் காட்டும்போது இலேசான மஞ்சள் ஒளி பரவியிருக்க, முகங்களின் இடதுபுற மேற்பரப்பில் இருளைக் கசியவிடுவது அந்த ஒடுக்கப்பட்டநிலையை இன்னும் காத்திரமாக அல்லது தீவிரமாக காட்சிப்படுத்த முடியும்.

நமக்கு இதுவரை சினிமா பார்த்துப் பழகியதன் மூலம் பாரம்பரியமான ஒரு பார்வையும், மதிப்பீடுகளும், புரிதலும் உருவாகியிருக்கும். இது மசாலா சினிமா, வணிக சினிமா, கலை சினிமா என்று வேறுப்படும். நமது கலாச்சாரம், வரலாறு, முந்தைய அனுபவம், பொது நம்பிக்கை தரும் இந்த அனைத்து பாரம்பரியமான மரபான பார்வைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மாற்று வடிவமாகத்தான் குரும்படத்தை என்னால் உணர முடிகிறது. சினிமாவின் அத்துனை கோட்பாடுகளையும், வழக்கமான உத்திகளையும் கடந்து ஒரு இயங்குத்தளத்தில் சுதந்திரமாக இயங்கக்கூடியதாக குரும்படத்தை அவதானிக்க முடிகிறது. குறுகிய நேரத்தில் ஒரு பெருங்கதையாடலை நிகழ்த்திக் காட்டும் அசாத்தியம் குரும்படத்திற்கு உண்டு. அதைக் கையாளும் முறையைப் பொருத்தது.

அய்யப்பன் மாதவன் இயக்கிய தனி குரும்படம் மரபான சினிமா சூழலிலிருந்து விடுபட்டு தனித்து புதிய மொழியுடன் நிற்கக்கூடியதாகவே கருதுகிறேன். இந்த விலகல், புதிய முயற்சி தமிழ்ச் சூழலுக்கு மிக அவசியமானது. வாழ்வு குறித்து நமக்கிருந்த நமது கருத்துருவாக்கங்களின் பரப்பைக் கடந்து செல்லக்கூடிய இன்னொரு புலனை நமக்களிக்கும் ஒரு அசாதரண முயற்சி கையாளப்பட்டுள்ளது. தனிமைக்கும் தனிக்கும் வித்தியாசமான அணுகுமுறை உண்டு. தனிமை என்பது இயல்பு, ஆரோக்கியமானதாகவும் கருதலாம். குளியல் அறையில்கூட நாம் தனிமையில்தான் இருக்கிறோம், அது ஒரு சம்பவம் அவ்வளவே. ஆனால் தனி என்பதன் சொல்லுக்குப் பின்னனியில் ஒரு புறக்கணிப்பும் வலியும் இருப்பதாக உணரக்கூடும். இந்தக் குரும்படம் முழுக்க கதையாக்க நுட்பமாக ஒரு தனியனின் பொழுதுகளே கொண்டுவரப்பட்டிருக்கிறது.

குறும்படம் நெடுக்க தனித்து விடப்பட்டவனின் பொழுகளை இரு பரிணாமங்களை, இரு வர்ணங்களில் காட்சியப்படுத்தியிருப்பது, ஒளிப்பதிவின் ஆளுமையைக் காட்டுகிறது. குறும்படத்தில் வரும் பல காட்சியமைப்புகளில் இரு வர்ணங்கள் அல்லது ஒளி மிக துல்லியமாகப் பயன்படுத்தப்பட்டுருக்கிறது. சன்னலிலிருந்து வரும் வெளிச்சம்/வெயிலின் கோடுகள் ஒரு பக்கமும், அதன் அருகாமையில் இருக்கும் தனியன் கதாபாத்திரத்தின் உடலில் படிந்திருக்கும் மெல்லிய மஞ்சள் ஒளியும் இருளும் கலந்த வர்ணம் ஒரு பக்கமும், குறும்படத்தின் மையப் பொருளாக இன்னொரு கதாப்பாத்திரமாகக் கையாளப்பட்டுள்ளது. சன்னலிலிருந்து வரக்கூடிய வெளிச்சம், அல்லது வெயிலின் கோடுகள் வெளியுலகத்தையும், இருள் படிந்து தனியாக இருக்கும் அந்தத் தனியனின் கதாபாத்திரம் வெளியுலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு வடிவமாகவும் காட்டப்பட்டிருப்பது கலையின் நவீன நேர்த்தியையும் கலை தொழில்நுட்பத்தின் புதிய முயற்சியையும் காட்டுகிறது.

அடுத்தபடியாக, தனி குறும்படத்தில் பூனை ஒரு கதாபாத்திரமாக அல்லது ஓர் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கதையின் கருவை வலுவாக்குகிறது எனலாம். நகுலன் தனது படைப்புகளில் பூனையை தனிமையின் குறியீடாகவும் மரணத்தின் குறியீடாகவும் பாவித்திருப்பதைப் போல தனி குறும்படத்தில் பூனை தனியனின் அக உலகத்தை அதன் கட்டமைப்புகளைப் பிரதிபலிக்கும் இன்னொரு அடையாளமாக குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மூடிய சன்னலின் வழி வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்ட நிலையில் பூனையின் போராட்டத்தின் மூலம், தனியனுக்கு அளிக்கப்பட்ட பறிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட வாழ்வை உணர்த்துவதாக உள்வாங்கிக் கொள்ள முடியும் எனப்படுகிறது.

தொடர்ந்து, தனி குறும்படத்தில் இருமுறை படிக்கட்டு காட்சிகள் பதிவாகியுள்ளன. தனியன் கதாபாத்திரம் கீழே இறங்கி மீண்டும் மேலே ஏறும் காட்சிகள். படிக்கட்டுகள் காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம், எனக்கு வங் கார் வாய் இயக்கிய in the mood of love என்கிற படத்தில் இடம்பெறும் அற்புதமான படிக்கட்டுக் காட்சிகள்தான் நினைவுக்கு வரும். அப்படி நினைவுக்கு வரும்போதெல்லாம், தமிழில் அல்லது ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட அனைத்து படிக்கட்டு காட்சியமைப்புகளும் தோல்வியடைந்ததாகவே கருதுகிறேன். கீழிருந்து வரும் நகரத்தின் வெளிச்சமும் மேலேயிருந்து பரவும் இருளுக்கும் நடுவில் அழகான இசையுடன் அந்தப் படத்தில் படிக்கட்டுகளில் இறங்கி மேலேறும் கதாபாத்திரங்களைக் காட்டியிருப்பார்கள். தனி குறும்படத்தில் வரும் படிக்கட்டு காட்சிகள் முழுக்க அடர்த்தியான மஞ்சள் ஒளி மட்டுமே பாவித்திருப்பது கொஞ்சம் சலிப்பை உண்டாக்குகிறது.

தொடர்ந்து ஒரு சராசரியான பார்வையாளனுக்கு சொற்கள் அல்லது உரையாடல் ஏதுமின்றி வெறுமையைப் படமாக்கிய இந்தக் குறும்படம் முழுக்க சலிப்பையும் கேள்விக்குறிகளையுமே எழுப்பும் என்பதிலும் சந்தேகம் இல்லை. உணர்வுகளைப் படமாக்குவது மிகவும் வரவேற்க்கத்தக்க முயற்சியாகும். அண்மையில் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமண்யபுரம் படம் துரோகத்தைப் படமாக்கியது போல, வர்ணங்களின் ஒளியின் மூலம் தனியை, வெறுமையை சொற்களின்றி மௌனத்துடன் குறும்படமாக்கிய தனி குறும்பட வட்டத்திற்கு எனது வாழ்த்துகள். நமது பாரம்பரியமான பார்வைகளையும் மதிப்பீடுகளையும் அகற்றும் ஒரு அடையாளமாக தனி குறும்படத்தை அடையாளம்காண்கிறேன்.

குறிப்பு: சிங்கப்பூர் அம் மோ கியா நூலகத்தில் தனி குறும்பட வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட விமர்சனம்- 2009

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Thursday, April 22, 2010

இந்தி திரைவிமர்சனம்- அப்பா-Paa- மீட்க முடியாத முதிர்ச்சியும் மீட்கப்படும் உறவுகளும்

“கடவுளை ஏன் தொந்தரவு செய்கிறாய்?”

என்கிற ஒரு வசனத்தை “ப்ப்பா” திரைப்படத்தில் அவுரா எனும் 12 வயது பையன் தன் பாட்டியிடம் கூறுவதாக இடம் பெற்றிருக்கும். இந்த வசனத்தின் எதார்த்தத்திலிருந்தும் அதன் பின்னனியில் ஒளிந்திருக்கும் அடர்த்தியிலிருந்தும் இந்த இந்தி திரைப்படத்தை அவதானிகக்லாம் என நினைக்கிறேன். இது படத்தில் ஒலிக்கும் மிகச் சாதரணமான வசனம்தான். ஆனால் படம் முழுக்க மனித படைப்புகளின் அதிசயங்களின் மீதும் அல்லது குறைபாடுகளின் மீதும் கடவுளை ஒரு காரணப் பொருளாகத் திணித்து தமது இயலாமைகளைச் சரிக்கட்டிக் கொள்ளும் எவ்வித முயற்சிகளும் காட்டப்படவில்லை. கடவுள் அல்லது விதி என்ற எந்தச் சொற்பிரயோகமும் இன்றி இந்த நோயையும் அவுராவையும் எல்லாரையும் போல இயல்பான படைப்புகளில் ஒன்றாகக் கற்பிக்கப்பட்டிருப்பது அருமையான அணுகுமுறை.

அவுரா progeria எனும் கோடியில் சிலருக்கு மட்டும் எற்படும் ஒரு நோயுடன் பிறக்கிறான். இந்த நோயைப் பற்றி ஆரம்பத்தில் ஒரு மருத்துவரால் சிறு விளக்கம் மட்டுமே தரப்படுகிறது. இந்த நோயுடையவர்கள் சீக்கிரமே முதுமையை அடைந்துவிடுவதாகவும், அவர்களின் உடல் உறுப்புகள் 12 முதல் 14 வயதிலேயே 80 வயது முதுமை அடைந்தவர்களுக்குரிய தளர்ச்சியை அடைந்துவிடும் எனவும் அந்தக் காலக்கட்டத்துலேயே அவர்கள் மரணிக்கவும் நேரிடும் எனவும் அவுராவின் பிறப்புக் குறித்து விவரிக்கப்படுகிறது. ஆகவே படத்தில் அவுராவின் 12ஆவது வயதில் கதை நகர்கிறது.

தன்னைப் புறக்கணித்து எங்கோ சென்றுவிட்ட தனது அப்பாவை வாழ்வில் முதல்முறையாகச் சந்திக்கும் மகனையும் அவனுக்குள் ஏற்படும் ஒருவகை மெல்லிய நட்பும் காதலும் அன்பும் வெறும் உணர்வுகளால் சொல்லப்பட்டுருக்கின்றன. அரசியல் முன்னெடுப்புகளுக்காக அவுராவின் அம்மாவை வயிற்றில் ஒரு குழைந்தையுடன் விட்டுச் செல்கிறார் அபிஷேக் பச்சான். அவுராவின் அம்மா ஒரு மருத்துவர், பல போராட்டங்களுக்கிடையே அவுராவைச் சுயமாக வளர்த்து எடுக்கிறார். அவுராவின் 12ஆவது வயதில் பள்ளியில் நிகழும் ஓர் அறிவியல் காட்சிக்காக அவுராவின் பள்ளிக்கு வரும் அப்பா(புகழ்பெற்ற அரசியல்வாதி) அவுராவைச் சந்திக்கிறார். அங்கிருந்துதான் இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. இருவரும் மீண்டும் தன் உறவுகளின் வேரைக் கண்டடைவதென கதை அடுத்த களத்திற்கு எந்தச் சலனமும் இல்லாமல் முன்னேறுகிறது.

இந்தப் படத்தை மூன்று விதங்களில் ஒரு சிறந்த படம் என மதிப்பிடக்கூடும். அந்த மூன்று தளங்களில் வைத்து திரைப்படத்தை விமர்சிக்கலாம் அல்லது எனது இரசனை குறிப்புகளை வழங்கலாம் என நினைக்கிறேன்.

1. அமிதாப் என்கிற அடையாளம் (அவுராவாக)

இந்தப் படத்தில் அவுராவாக அதாவது குறிப்பிட்ட நோயுடைய 12 வயது சிறுவனாக நடித்திருப்பது இந்தி திரைப்படத்தின் சூப்ப்ர் ஸ்டார் எனப் போற்றப்படும் மூத்த நடிகர் அமிதாப் பச்சான் ஆவார். இந்தி சினிமாவின் ஆளுமை என அடையாளப்படுத்தும் வகையில் தனது நடிப்பாற்றலை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பரிசோதனை முயற்சிகளுக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் ஆட்படுத்தி வரும் முக்கியமான சினிமா கலைஞரான இன்றும் தனது அடைவுகளின் மூலம் உச்சத்தை இழக்காமல் நடித்துக் கொண்டிருப்பவர்.

ஆரம்பக்காலக்கட்டத்தில் கதாநாயகத்துவத்தின் மூலம் பிரபல குறியீடாக எழுந்த அமிதாப் ஒரு சில காலக்கட்டங்களுக்குப் பிறகு தனது வயதின் எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்று கதைப்பாத்திரத்தில் தன்னை வடிவமைத்துக் கொண்டு அதன் மூலம் சாகசங்களைத் தொடர்ந்த மிகத் துணிச்சலான மனிதர். இந்தி சினிமாவை இன்னமும் தனது மாற்று அடையாளங்களின் மூலம் வசீகரித்துக் கொண்டும் எல்லாம் கதைப்பாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய அளவிலான வடிவமாக இருந்து கொண்டும் எந்தச் சலிப்பபையும் ஏற்படுத்தாத சினிமா நாயகனாக தனது பயணத்தைத் தொடர்கிறார்.

ப்பா படத்தில் அவுரா எனும் 12 வயது சிறுவனின் கதைப்பாத்திரத்தை அடைந்திருக்கும் அமிதாப்பின் துணிவை தமிழ் சினிமா கமலின் முயற்சிகளுக்கு நிகராகச் சிலர் குறிப்பிடுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. God father எனும் ஆங்கில திரைப்படத்தில் மார்லன் பிராந்தோவின் உடல் மொழியையும் அவரின் தொனி சிதறலையும் கூர்ந்து அவதானித்தவர்கள் கண்டிப்பாக நாயகன் படத்தில் கமல் செய்திருப்பது மார்லன் பிராந்தோவின் நகல் கதைப்பாத்திரத்தைத்தான் எனப் புரிந்துகொள்ள முடியும். இன்னொரு மாற்று சினிமாவைப் பார்த்து அதைப் போல அந்த நடிப்பைத் தமிழுக்குள் கொண்டு வந்து முயற்சித்தது கமல் மட்டும்தான். இதற்கும் மிகச் சிறந்த பயிற்சி வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.

கமலின் நடிப்பு அரசியலிலிருந்து முற்றிலும் தவிர்த்து பார்க்க வேண்டியது அமிதாப்பின் கலையுணர்வு மிக்க நடிப்பாகும். யாரும் எதிர்ப்பார்த்திராத எந்த அலட்டலும் இல்லாத யதார்த்தத்தையும் கசப்பில்லாமல் மிகையில்லாமல் படைக்கும் ஆற்றலும் இந்தி சினிமாவின் மூலம் அவர் பெற்ற முதிர்ச்சியும் கைவசம் இருக்கின்றன. அந்த அவகையில் “ப்ப்பா” திரையில் அமிதாப் தனது சுய அடையாளத்தை முற்றிலும் அழித்துவிட்டு வேறொரு தோற்றத்துடன் படைப்பைக் கொடுத்திருக்கிறார். அவுரா கதைப்பாத்திரம் மிகச் சிக்கலான வடிவமாகும்.

மேலும் நம் சமூகத்தில் காணக்கிடைக்காத ஒருவகையான விநோதமான நோயைக் கொண்டிருக்கும் ஒரு முதிர்ந்த தளர்ந்த சிறுவனின் உடலுக்குள் சினிமா அளித்திருந்த பிரபலமான உடல்மொழிகளையும் அதற்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட முறையில் அவருக்கிருக்கும் உயரம் வசீகரம் என எல்லாவற்றையும் முற்றிலும் சிதைத்து உருவான ஓர் வித்தியாசமான மேலும் படைப்பின் எதார்த்த உக்கிரத்தை வெளிப்படுத்தும் வடிவம் “ப்ப்பா” வில் வரும் அவுரா. அவுராவின் உடல்மொழியும் தளர்ந்த தோற்றமும் நமக்குள் எந்த வெறுப்பையும் சலிப்பையும் அறுவறுப்பையும் ஏற்படுத்துவதில்லை, மேலும் பரிதாப மனநிலையையும் சேகரிக்க முயலவில்லை. மாறாக மனித படைப்பின் அதிசயத்தையும் அதன் இன்னொரு வடிவமான அடர்த்தியையும் அன்பையும் காட்டும் ஓர் ஆல்பம் போல திறந்து விரிக்கப்படுகிறது அவுரா என்கிற அற்புதம்.

சமீபத்தில் வெளியான பெஞ்சமின் பட்டன் ஆங்கில திரைப்படத்தை ஞாபகப்படுத்துவது போன்ற படமாக “ப்பா” இருந்தாலும் இரண்டு படங்களும் முன்வைக்கும் சிக்கல் வெவ்வேறானவையாகும். மேலும் அமிதாப்பும்                 பிரட் பிட்டும்(Brad pitt) வெவ்வேறான கலை வெளிப்பாடுகளைக் கொண்டவர்கள், இருவரின் உடல்மொழிகளும் சினிமாத்தனமானவை கிடையாது, தனித்துவங்கள் கொண்ட எதார்த்தமானவை.

2. உடலுக்குள் அடரும் முதிர்ச்சியும் தளர்ச்சியும் – அவுரா என்கிற அதிசயம்

அடுத்ததாக படத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் அவுராவின் வாழ்வைக் குறித்த அலசல் “ப்பா” படத்தில் மாற்று விதமாக அணுகப்பட்டிருப்பது மிகச் சிறந்த முயற்சியாகும். அவுரா என்பவனை ஒரு நோயாளியாகக் காட்டி, ஒரு அறுவறுப்புமிக்க கதைப்பாத்திரமாகக் காட்டி பார்வையாளர்களைக் கவலைப்படுத்தும் பிரமிப்பூட்டும் எந்தச் சினிமாத்தனமும் இதில் மேற்கொள்ளப்படவில்லை. மனித படைப்புகளை எப்படி அதன் அழகியலுடன் எதிர்க்கொள்வது எனும் மிக ஆரோக்கியமான உளவியலை படம் முழுக்க கட்டமைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

எம்.ஆர் ராதாவின் இரத்தக் கண்ணீரில் தொடங்கி, குஸ்டரோகியைக்கூட விவேக்கின் நகைச்சுவைக்காகப் பயப்படுத்தும் அற்ப முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு சமூகம் எதிர்கொண்டு பழக்கப்படாத ஒரு விநோதமான நோயை அன்பாலும் யதார்த்த அழகியலுடன் படைத்திருக்கும் “ப்ப்பா” திரைப்படக் குழுவிற்கு ஆழ்ந்த தரிசனம் வாய்க்கப்பட்டிருக்கிறது. கைகள் இரண்டும் நீளமாகவும் தொங்கியபடியும் முதுகுதண்டு வலைந்தபடியும் தலையில் முடியில்லாத நிலையில், முகத்தில் சுருக்கமும் என அவுரா 12 ஆவது வயதிலேயே 80 வயதிற்குரிய தளர்வைப் பெற்றிருப்பான். குரலில் இலேசான தடுமாற்றமும், சொற்களைத் தெளிவாக உச்சரிக்க முடியாமையும் என அவுரா நோயால் அடையும் துன்பத்தை திரையில் ஆரம்பத்திலும் இடையிலும் எங்கேயும் துன்பவியல் நாடகம் போல காட்டவில்லை, மாறாக இறுதி காட்சியில் அவுரா உயிரைத் துறக்கும்போது இதுவரை திரையில் காட்டப்படாத துயரத்தை மொத்தமாக நம்மால் உணர முடியும்.

அவுராவின் மரணத்தை நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிப்பதைக்கூட கண்டுகொள்ளாமல் படம் அலட்சியமாகக் கடந்து ஒரு நிறைவை அடையும்போது பிறப்பும் மரணமும் எத்துனை எதார்த்தமான நிகழ்வென நகுலன் தனது கவிதையில் அடையும் மௌனத்தையும் அடர்த்தியையும் போல நாமும் அடைந்துவிடுகிறோம். விவரிக்கப்படாத மௌளனம்கூட சொல்லமுடியாத ஒரு துயரத்தைக் கொண்டிருக்கும் என்பதைப் படத்தில் காட்டாமல் உணர்வுகளின் தளத்தில் வைத்து கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

“இருப்பதற்கென்றுதான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்” – நகுலன்

3. படம் முழுக்க சொல்லப்படும் அழகான நகைச்சுவை சொல்லாடல்கள்

அவுரா தனது நோயை எண்ணி கவலையடையும் எந்தத் தருணத்தையும் இந்தப் படத்தில் அடர்த்தியாகக் காட்ட முயற்சிக்கவில்லை. அவுரா எல்லாம் இடங்களிலும் சிறுப்பிள்ளைப் போல நடந்துகொள்வதோடு சராசரிக்கும் அப்பாற்பட்டு அதீதமான அறிவாற்றளையும் கொண்டிருக்கிறான். அதனை ஒரு சொற்பொழிவு போல எங்கேயும் விவாதிக்காமல் அதையே ஒரு நகைச்சுவை உணர்வின் மூலம் அலட்சியமாகச் சொல்லும்போது சிரிப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது.

எடுத்துக்காட்டாக சில இடங்கள்:

“அரசியல்வாதிகள் ஏன் எப்பொழுதும் வெள்ளை சட்டையையே அணிகிறார்கள் தெரியுமா, காரணம் இந்த நாட்டையே சமாதியாக்கிவிட்டு அதைத் துக்கம் கொண்டாடத்தான் அப்படி அணிகிறார்கள் போல”

மருத்துவமனையில் அவுரா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, “நேரம் கொஞ்சமாகத்தான் இருக்கு. . “ என்று சொல்கிறான், உடனே அவனது தாத்தா அவன் மரணிக்கவிருப்பதைத்தான் சொல்கிறான் என நினைத்து அவனுக்கு பல ஆறுதல்கள் சொல்லத் துவங்குகிறார், அவனோ திடீரென்று “ விசிட்டிங் நேரம் கொஞ்சமாகத்தான் இருக்கு” என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிடுகிற போது வயிறு வலிக்க சிரிப்பலை ஏற்படுகிறது. இப்படிப் பல இடங்களில் நகைச்சுவை சொல்லாடல்கள் நிரம்ப இருக்கின்றன.

அவுரா அழகான உணர்வுகளையும் துயரத்தையும் தனது இயலாமைகளையும் எந்த அலட்டலமின்றி வெளிப்படுத்தும் ஒரு பாத்திரப் படைப்பாக மனதிற்குள் நிறைகிறான்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா


Saturday, April 17, 2010

மனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு

1. உலகத் திரைப்பட மேதை அகிரா குரோசாவா

ஜப்பானிய திரைப்பட இயக்குனர் அகிரா அவர்கள் எழுதிய நாட்குறிப்புகளையும் சினிமா குறித்த கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்தவர்கள் மு.நடராஜன் மற்றும் இளையபாரதி ஆவர். அகிராவின் படங்களில் மிக முக்கியமாகக் கருதப்படுவது மனித உணர்வுகளின் ஆழங்களைத் தொடுவதன் மூலம் அவர் உருவாக்கும் அழுத்தமான பிரதிகள் மற்றும் ஒவ்வொரு சினிமாவிலும் அவர் வெளிப்படுத்தும் புதிர் தன்மையாகும்.

“வன்முறையும் அமைதியும் மாறி மாறி வருகிறது” என்ற ஒரு வசனம் இந்தப் புத்தகத்தில் அகிராவின் சினிமா படைப்பை மையப்படுத்துவது போல இடம்பெற்றிருக்கும். மடோடோயா என்கிற படத்தின் மூலம் உணர்வுகளின் உச்சத்தைத் தழுவும் சந்தர்ப்பங்களையும் மனித வாழ்வையும் அன்பின் முன் உடையும் எல்லாம் தர்க்கங்களையும் தரிசிக்கும் வகையில் அவரது அந்தக் கடைசி படைப்பைக் கொடுத்திருப்பார். பூனை ஒன்று தொலைந்துபோகும்போது அந்தத் துக்கத்தை நினைத்து அழுவதற்கு அவர் ஒரு எளிமையான மனிதராக இருக்க வேண்டும் என்பதற்கில்லை, மெத்த படித்த முதிர்ந்த ஒரு பேராசிரியராகவும் இருக்கலாம்.

இந்தப் புத்தகத்தின் தொடர் கட்டுரைகள் சிறு சிறு பத்திகள் அகிராவின் வாழ்வியல் குறிப்புகளை நினைவுக்கூர்கின்றன. ஒரு அழகான மழையின் ஆல்பத்தைத் திருப்பிப் பார்ப்பது போல அடர்த்தியான எண்ணங்களைப் பரவவிடும் தருணத்தை இந்தப் புத்தகத்தில் கண்டடைந்தேன்.

சில குறிப்புகள்: நான் வளர்ந்துவிட்ட மனிதல்ல, வளர்ந்துகொண்டிருக்கும் மனிதன், நான் திறமைசாலியல்ல, வலுவானவனும் அல்ல, பிரத்யேகமான மனிதனும் அல்ல, எனக்குக் குறைபாடுள்ள கதைப்பாத்திரங்களை மிகவும் பிடிக்கும், காரணம் என்னவென்றால் எத்தனை வயதானாலும் நான் இன்னும் முழுமையற்ற மனிதனாகவே இருக்கிறேன்”
– அகிரா


2. காந்தியமும் தமிழ்ச் சனாதனிகளும் – அ.மார்க்ஸ்

அ.மார்க்ஸ் எழுதிய காந்தியத்தைப் பற்றி வேறொரு பார்வையை விமர்சனத்தை வெளிப்படுத்தும் முக்கியமான நூல் இது. மார்க்ஸ் உருவாக்கும் பிரதிகள் பெரும்பாலும் பொது புத்தி சார்ந்து கட்டமைந்திருக்கும் புரிதலையும் அரசியலையும் எதிர்த்து முரணான வடிவத்தில் மையத்தைக் கட்டவிழ்க்கும் பிரதிகளாக இருக்கும். அவ்வகையில் இந்தப் புத்தகம் காந்தியத்தையும் காந்தியையும் வேறொரு அடையாளத்தில் வைத்து ஆராய்கிறது.

அ.மார்க்ஸின் இஸ்லாமியத்தின் சமூக குடும்ப கல்வி மதிப்பீடுகளை மாற்று வெளியில் வைத்து விவாதிக்கும் ஆற்றலைப் போல இந்த இடத்திலும் மிகவும் துணிச்சலாக காந்தியின் மீதிருக்கும் இந்துத்துவ அடையாளங்களை நோக்கி தனது பார்வையையும் புரிதலையும் கூர்மையாக்குகிறார். யார் காந்தியின் உண்மையான எதிரிகள் எனத் தொடங்கி, சனாதன மரபுகள் குறித்து காந்தி, பெரியாரின் பார்வையில் காந்தி எனப் படரும் ஒரு விரிவான அரசியல் விழுமியங்களாக வாசிக்க வாசிக்க புதியதொரு கற்பிதங்களை உருவாக்குகின்றன.

“மதசார்பின்மை” என்கிற தத்துவக் கருத்தாக்கத்தை ஒரு அரசியல் சொல்லாடலாக மாற்றி அமைத்ததில் காந்தியின் பங்கையும் செயல்பாடுகளையும் மிகவும் தெளிவாக அ.மார்க்ஸ் விவிரிக்கிறார். இந்திய மரபின் மீது அதீதமான நம்பிக்கையும் மரியாதையும் உடைய காந்தியின் இன்னொரு எதிர் பிம்பத்தையும் கடைசிவரை தீண்டாமைக்கு எதிர்குரல் கொடுத்த காந்தியையும் மார்க்ஸ் மேலும் ஆழமாகச் சொல்கிறார்.

சில குறிப்புகள்: அ.மார்க்ஸ் காந்தியைப் பற்றி விவரித்ததில் மிக முக்கியமாக நான் கருதுவது, இந்து சனாதனத்துக்கெதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பேசியவர்கள் அம்பேத்காரும் பெரியாரும் ஆனால் ஒடுக்குதலுக்குக் காரணமான அதிகார சக்தியினர் மத்தியில் பேசியவர் காந்தி எனும் வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என காந்தி குறித்த நமது அரசியல் பார்வையை உடைக்கிறார் அ.மார்க்ஸ்.

“ரகுபதி ராகவா ராஜா ராம் எனும் பாடலைப் பின்னனியில் ஒலிப்பரப்பவிட்டு, காந்தியை ஓர் ஒழுக்கம் சார்ந்த ஆளுமையாகப் பார்த்து பரவசப்படும் ஓர் சாதரண இந்துத்துவ அடையாளம் கிடையாது காந்தி என்பதை தத்துவப் பரப்பில் வைத்து மறுத்துள்ளார் மார்க்ஸ்.

-புத்தக வாசிப்பும் தேடலும் தொடரும்-

இலக்கியப்பிரதி/புத்தக விமர்சனம்
கே.பாலமுருகன்
மலேசியா

Friday, April 16, 2010

கவிதை: மாய்த்தலும் மேய்த்தலும்

1
ஒரு விசுவாசியின்
இறுதி வழிப்படுதலோடு
எல்லாம் அடிமைத்தனங்களும்
முழுமையடைகின்றன.

2
ஒரு அடிமையை
உற்பத்திக்க
முதலில் கற்றுத்தர வேண்டியது
விசுவாசத்தை.

3
தனது கடைசி
நாவையும் பிரயோகித்து
எல்லாவற்றையும்
வழித்துவிட்ட விசுவாசம்
துளையிட்டுத் தேடத்துவங்கியது
முதலாளியின் காலடியையும்
அக்குளையும்.

4
அரசியல் கட்சிகளின்
விசுவாசம்
மிகப்பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டன
ஏழைகளும் தீபாவளி பொட்டலங்களும்
விருந்துபரிப்பும் இருக்கும்வரை.

5
துடைத்துவிட்டப் பிறகு
தூக்கியெறியப்பட்டன
விசுவாசமும் நேர்மையும்.

6
தலைவர்களின் மலத்தில்
மொய்க்கின்றன
நன்றியுணர்வும் சமூக உணர்வும்.
தண்ணீர் சுழற்றப்படாத
கழிவறைத் தொட்டியின் வெண்மையில்
தலைவாறும் சில அடிமைகளின்
முகங்கள்.

7
மேய்ச்சலுக்கு
அவிழ்த்துவிட்டது போல
தேர்தலுக்கான பெயர் பட்டியல்.

8
தலைவருக்காக
சில வேண்டுதல்கள்
நிறைவேற்றப்பட்டன.
கடவுள் மொட்டையடித்து
மயிலிறகைத் தந்தருளினார்
எண்ணெய் தடவி.

9
மாய்த்தலுக்குப் பிறகும்
விழிக்கின்றன
மேடைவாதிகளின் எச்சில் துளிகள்.

10
சமூகம்
சமூகம்
சமூக
சமூ

பை
ப்பை
குப்பை.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                 மலேசியா

Monday, April 12, 2010

சிறுகதை: எழுதத் தெரியாத ஒரு எழுத்தாளனின் கதையிலிருந்து

1
மாமா இன்று ஒரு முடிவுடன்தான் வீடுவரை வந்திருந்தார். வெயிலின் கடுமை அவரின் உடலில் வலிந்திருந்தது. மறுப்பதற்கும் முரண்படுவதற்கும் என்னிடம் ஓர் உடல்மொழி இருந்தது. அதன்படி எல்லாவற்றையும் நிகழ்த்துவதற்குத் தயாராக அமர்ந்திருந்தேன்.


“யேண்டா கிறுக்கன் மாதிரி பேசுறியாம்?”

“ஏற்கனவே ஆள் இருந்து வாழ்ந்த ஒரு வீடுத்தான் வேணும். . சும்மா புது வீட்டுலலான் என்னால இருக்க முடியாது மாமா. அவ்ளதான் சொல்லிட்டென்”

“இந்த எழுதற பொழைப்புக்கு ஏதாவது ஒரு வேலையெ செஞ்சா காசு கூட கெடைக்கும், அதுக்கு தகுந்த மாதிரி ஒரு பெரிய வீடா வாங்கியிருக்கலாம். எழுதி எழுதி மண்டெ ஓடி போச்சி போல. எழுத்தாளனா எழுத்தாளன்”

அவரை நேரெதிர்கொண்டு பார்ப்பதைத் தவிர்ப்பதன் வழியாக அவரை அலட்சியப்படுத்திவிடலாம். அம்மாவிடம் ஏதோ முணுமுணுத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி நடக்கத் துவங்கினார். சிறிது நேரத்திற்கு முன்புவரை வீட்டில் அடர்ந்திருந்த வெப்பம் மெல்ல கரைந்திருந்தது. ஒருவேளை அது என் உடலிலிருந்து அகன்றதாகவும் இருக்கக்கூடும்.

இரட்டைமாடி வீடு. 17-c – மேற்குப் பாலத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரம். விசாலமான அறைகள். விசித்திரமான கட்டுடல், எப்பொழுதும் அலையும் ஓர் இருளும் அமைதியும். இதுதான் நான் அடுத்த வாரம் குடிப்புகப் போகும் வீட்டைப் பற்றிய குறிப்புகள்.

“ஆள் இருந்த வீட்டுலதான் கனவும் இருக்கும்மா. . அங்கத்தான் அன்பு, ஆசை, கோபம், அழுகை, சிரிப்பு, தேம்பல், கதறல் எல்லாம் இருக்கும்”

பைத்தியக்கார சிந்தனை என்றார்கள். தலையசைத்துவிட்டு சிரித்தேன். பைத்தியம் என உறுதிப்படுத்தினார்கள். பணம் இல்லாதவன் ஏற்கனவே ஆள் இருந்த வீடுகளை வாங்குவது இயல்புதானே? இதிலென்ன அப்படியொரு ஆபாசமான சமரசத்தைக் கண்டார்கள் இவர்கள்? எவ்வளவு செலவானாலும் புது வீடுதான் உழைப்பிற்கு வலு சேர்க்குமாம்.

எனக்கு முதல் அடையாளங்களை உருவாக்குவதில் விருப்பமில்லை. அது அபாயக்கரமானது. ஏனோ தெரியவில்லை, ஏற்கனவே பதியப்பட்ட அடையாளங்களின் இருண்மையைத் தேடி அலைவதில் ஓர் அசாத்தியமான இன்பம் இருந்தது. அதை நோக்கி அதன் வால்களைப் பிடித்துக் கொண்டு அலைகிறேன். எனது சுயமே பிறர் சொல்லப்பட்டு உருவானது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொருமுறையும் எல்லோரும் என்னை அழைத்தார்கள். அவர்களின் அழைப்பு என்னை நோக்கி என்னை விரியச் செய்ததாக எனக்குள் குரலெடுத்து ஓடியது.

அப்பா அடிக்கும்போது சொன்னார், “நீ பண்றெ ஒவ்வொன்னும் பெரச்சனைத்தாண்டா. .”. அம்மா கவலைப்படும் சமயங்களிலெல்லாம் சொன்னார், “நீ ஏன்டா மத்தவங்கள மதிக்க மாட்டுறெ, எல்லாம் நீ செய்யற.“ நீ. . நீ . . நீ. . இதைவிட என்ன வேண்டும் என்னைப் பற்றி என் சுயத்தை அறிந்துகொள்ள.

ஏதோ புதுமைப்பித்தன் கதையில் வருவது போன்ற கேலியும் குதர்க்கமும்தான் என்னை பிறரிடமிருந்து பிரித்து வைத்திருந்தது. அம்மாவின் கேள்விகளுக்கு என்னிடம் ஒருவகை வினோதமான சுருக்கமான பதில் மட்டுமே இருந்தது. “நீங்க எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சொல்லி சொல்லி உருவாக்கன ஒரு எச்சம்தான் நான், எனக்கு வேறெதுவும் தெரியல”.

“முதல்ல நாள் முழுக்க படிச்சி படிச்சி சாவறியெ. . அந்தப் புத்தகத்தெலாம் கொளுத்தனும்டா”. என விசனப்படும்போது அம்மாவின் அன்பை அப்படியே அள்ளி எடுத்துக் கொள்ளும் அனுபவம் சமரசத்திலும் வெறுமையிலும் கிடைக்கப்போவதில்லை. சராசரியாக இல்லாமல் இருப்பதற்கும் யாருடைய புனைவோ அல்லது கதையோ அவசியமாகத் தேவைப்படுகிறது. அர்த்தமற்று அலையும் எத்தனையோ ஊனமுற்ற கதைப்பபத்திரங்களை உருவாக்கிய தமிழ் எழுத்தாளர்கள் விரவிக் கிடக்கிறார்கள். எனக்குள் நான் முழுமையடையாத சந்தர்ப்பங்களில் எழுதத் தெரியாத சிந்தனை வரண்ட ஏதோ ஒரு எழுத்தாளனின் கதையிலிருந்து தப்பி வந்த அரைகுறை என என்னை நான் கற்பித்துக் கொள்கிறேன்.

2

அன்று புது வீட்டிற்கு போவதற்கு எல்லாமும் தயாராகிவிட்டது. பழைய வீட்டிலிருந்து நீங்குதல் என்பது எங்கே ஒரு கலையாவிடுமோ எனப் பயந்துகொண்டே இருந்தேன். இது குறித்து ஒரு சிறுகதை அல்லது கவிதைகள் எழுதிவிட்டால், உடலிலிருந்து விந்து பாயும் போது ஏற்படும் ஒரு சாந்தம், அமைதி, திருப்தி ஏற்படும் என நம்பினேன்.

பழைய வீட்டிலிருந்து ஒவ்வொரு பொருளாக லோரியில் ஏற்றிக் கொண்டிருந்தோம். எப்பொழுதோ சிறு வயதில் தூக்கியெறிந்த பொம்மைகளின் கால்கள், ரோதைகள் இல்லாத ஓட்டப்பந்தய கார்கள், பென்சில் பெட்டி என நான் ஒளித்து வைத்திருந்த என்னை மீட்டுக் கொண்டேயிருந்தன. எனக்குள் நடுக்கம் பரவிக் கொண்டிருந்தது. முழுமையற்று சுற்றித் திரிந்து கொண்டிருந்த நான் பழைய வீட்டின் மூலை முடுக்குகளில்லாம் கிடந்தேன்.

“ஏண்டா. . . எல்லாம் பொருளையும் எடுத்துக்கிட்டியா? ஒருவாட்டி சரி பார்த்துரு”

அம்மா அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. காலியாகிவிட்ட எனக்குள் மீண்டும் நான் உள்நுழைந்தேன். இத்தகையதொரு அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லைத்தான். ஏனோ நான் வெறுமையாகிக் கொண்டே இருந்தேன்.

வெறும் வீடு. 25 வருடமாக எனது ஒவ்வொன்றையும் சேமித்து வைத்திருந்த வீடு. மீசைக்கார தாத்தா இறந்தபோது உடலை மட்டும் தூக்கியெறிந்த வீடு. அப்பா வீட்டை விட்டு ஓடியபோது அவரது துன்பங்களையும் மன உளைச்சல்களையும் மட்டும் வீசியெறிந்த வீடு. எல்லாரையும் எல்லாவற்றையும் வீணே சுமந்து கொண்டிருந்த வீடு. வெண்மையாகியிருந்த சுவர்களில் ஏதோ ஓர் உருவம் அசைந்து நெளிந்தது. அது முழுமையற்ற ஓர் உருவம். கீழ்மாடியிலிருந்து மேல்மாடிக்குச் சுவரின்வழி தாவி குதித்தது. குழந்தைத்தனமான ஒரு பரவசம் அதன் வசம் இருந்தது. யாரோ ஒரு பைத்தியக்கார எழுதத் தெரியாத எழுத்தாளனின் மொக்கை கதையிலிருந்து தப்பி ஓடி வந்த ஒரு கதைப்பாத்திரமாக இருக்கக்கூடும். யாரும் கண்டுகொள்ளாத அல்லது வாசிக்காத அல்லது முடிக்கப்படாமலேயே பல ஆண்டுகள் கிடந்த விரக்தியைக் கொண்டிருப்பது போலவும் தெரிந்தது. வீடு முழுக்க அந்த உருவம் பரவியது.

“டே. . பாத்துட்டியா இல்லியா?”

“ம்மா. . நான் வரலம்மா. .இங்கயே இருந்துடுறேன்

-முடிவு-

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா


Friday, April 9, 2010

அங்காடித் தெரு – இரண்டாம் ஆட்டமும் வேறொரு புரிதலும்

எழுத்தாளர் சாரு அவரது வலைத்தலத்தில் “அங்காடித் தெரு” படத்திற்கான விமர்சனத்தை எழுதியிருந்தார். எனது விமர்சனத்திற்கும் அவரது விமர்சனத்திற்கும் நிரம்ப முரண் இருந்ததை உணர முடிந்தது. ஒருவரின் முரணை உடைப்பது நமது சுயநலம். நாம் உடன்படும் எல்லாவற்றிக்கும் எல்லோரும் உடன்பட வேண்டுமென நிர்பந்திப்பதும் ஒருவகை வன்முறையே. அவை ஆரோக்கியமானதாக இருந்தாலும்கூட. அங்காடித் தெரு குறித்து அவரது கருத்தியலின் முரணிலிருந்து எனக்குள் நிரம்பும் ஒருவகை புரிதலை முன்வைக்கும் ஒரு தர்க்கம் மட்டுமே இது.

ஏழை என்றால் நல்லவன்; பணக்காரன் என்றால் கெட்டவன் என்று இரட்டை எதிர்மறையாகப் பார்க்கும் பழைய காலத்து மார்க்சீயப் பார்வையெல்லாம் காலாவதி ஆகி ஒரு நூற்றாண்டு ஆகிறது. ஆனால் வசந்த பாலன் அப்படித்தான் வாழ்க்கையைப் பார்க்கிறார். படத்தில் வரும் அத்தனை ஏழைகளும் நல்லவர்களாகவும், பணக்காரர்கள் அத்தனை பேரும் கடைந்தெடுத்த அயோக்கியர்களாகவும் இருக்கிறார்கள். - சாரு

சில பணக்காரர்களின் அடையாளம் இப்பொழுது புதிய அரசியலில் நிறுவப்படுவது குறித்தும் மேலும் விரிவாகப் பேச இடமுண்டு. பணமிருப்பவன் சமூகத்தில் செல்வாக்கைப் பெறுவதற்காக ஏழைகளுக்குப் பணம் கொடுத்து விளம்பரத்தைத் தேடிக் கொள்வது முதல், அரசு உதவி செய்யும் என்கிற நம்பிக்கையில் வெறுமனே இருக்கும் சில ஏழைகளின் சோம்பேறித்தனங்கள் தொடங்கி மார்க்சிய பார்வை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. வரவும் வேண்டும். அது ஒரு மார்க்சியமாக இல்லாவிட்டாலும்.

பணம் இருப்பவனிடம்தான் அதிகாரம் வலுவான குரலாக அடிமையாகக் கிடக்கிறது. ஒரு பணக்காரன் தேவையில்லை என்று புறக்கணித்தாலும் அதிகாரத்தின் சிறு சிறு துண்டுகள் அவனிடமே கடைசியாக வந்து மண்டியிட்டுக் கிடக்கின்றன. அவன் அதைக் கையில் எடுப்பதும் அல்லது முதலாளியின் காலுக்கடியில் வெறுமனே அமர்ந்திருக்கும் ஒரு நாயைப் போல வைத்திருப்பதும் அவனது உரிமை.

இந்த ஒரு அடையாளத்தை முன்வைத்து மதிப்பீட்டால், விளிம்புநிலை சமூகமே அரசாங்கத்தால் அல்லது பணக்காரர்களின் உதவியால் தனது வாழ்வு மீட்கப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்புடனே போராடி வருகிறது. அவர்களுக்கு வேண்டியது உழைப்பதற்குரிய நேர்மையான களமும் அதற்குரிய ஊதியமும். கம்யூனிச கோட்பாடுகளையும் அதற்குப் பிந்தைய மார்க்சிய பார்வையையும் பழையவை என கொஞ்சம் நகர்த்தி வைத்துவிட்டாலும், இந்தப் பிரச்சனை வேறு எப்படிப் பார்க்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்படுமா? அல்லது இதற்கு மாற்றான புதிய சிந்தனையோ மதிப்பீடோ “புத்திஜீவிகள்” எனக் கூறிக் கொள்பவர்கள் அளித்துள்ளார்களா? அல்லது அதையும் முதலாளி வர்க்கத்தின் அடிவருடிகளே ஏழைகளுக்காகப் பரிந்துரை செய்ய வேண்டுமா? கோட்பாட்டையெல்லாம் ஒதுக்கிவிடுவோம், உழைப்பாளிக்கு நிகழும் சுரண்டலை இதுவரை வந்த எந்தக் கோட்பாடுகளும் நிவர்த்திக்காத சூழலில் இன்னமும் மாறாமல் முதலாளிகளால் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படும் அவர்களின் வாழ்வை மீண்டும் சொல்வதில் என்ன பழமைவாதம் இருக்கப் போகிறது? இதை ஒரு மறுவாசிப்பைப் போல முன்வைக்கும் அங்காடித் தெருவை ஒரு மார்க்சிய கோட்பாட்டை முன்வைத்து புறக்கணிக்க முயல்வதால் அவர்களின் மறுவாழ்விற்கு ஏதேனும் பரிந்துரைகள் அல்லது தீர்வுகள் கிடைத்துவிடுமா? காட்டப்படுவதால் தீராத அதன் உக்கிரம் மீள்பதிவு எனும் முறையில் ஒரு படமாகவாவது இருக்கும் அல்லவா?

அவர்களின் வாழ்வு, பரிதாபத்திற்குரியது எனும் மட்டும் அடையாளப்படுத்தும் கலை அபத்தம் அல்ல, அதையும் கடந்து பணக்காரர்களின் சமூக கட்டமைப்பிற்கு எதிராக வாழ்வுரிமைக்காகப் போராடும் ஒரு உணர்வை அல்லது தந்திரத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆவணமாக மாற்றப்பட வேண்டும் என அடுத்தக்கட்ட விவாதத்தை முன்வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அங்காடித் தெருவில் அவர்கள் முதலாளியின் பிடியிலிருந்து தப்பி அதற்கு எதிராக இன்னொரு சிறு முதலாளியிடம் அடைக்கலம் பெற்று அதே தெருவில் உழைக்கத் துவங்குகிறார்கள்.

அவர்கள் முதலாளி வர்க்கத்தின் முழுமையான பிடியிலிருந்து விடுப்படுதல் என்பது சாத்தியமாகாத பட்சத்தில் அதன் நிதர்சனம் சார்ந்து நேர்மையான ஒரு முதலாளியான, (அதே தெருவில் சுயமாகக் கடை வைத்து உழைக்கும் ஒரு பார்வையற்றவர்) அவரிடம் சரணடைகிறார்கள். வசந்தபாலன் ஒரு சமூகப் போராளியைப் போல அவர்களை முழுவதுமாக முதலாளி வர்க்கத்திடமிருந்து விடுதலையளிக்கும் கதைநாயகனாக மாறாமல் சமூகத்தின் நிதர்சனத்தைத்தான் நம்பிக்கயளிக்கும் வகையில் கொடுத்திருக்கிறார்.

பணக்காரர்கள் அனைவரும் அயோக்கியவர்களாகவும் ஏழைகள் அனைவரும் நல்லவர்களாகவும் காட்டப்பட்டிருப்பதாகச் சொல்லும் சாருவிடம், என்னகொரு பதில் இருக்கிறது, “அங்காடித் தெருவில் லிங்குவும் கனியும் சந்திக்கும் பணக்காரர்களும் மட்டுமே கெட்டவர்களாக இருக்கிறார்கள். அல்லது அங்காடித் தெருவில் ஒரு பக்கத்தில் வாழும் பணக்காரர்கள் மட்டுமே அயோக்கியர்களாக இருக்கிறார்கள்”.

அங்காடித் தெருவின் மொத்த வாழ்க்கையையும் வசந்தபாலன் காட்டியிருப்பதாக எந்தப் பதிவும் இல்லாததால் சாருக்கு மேற்படி விளக்கமளிக்க அவசியமில்லை. ரங்கநாதன் தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது ஏன் எல்லோரும் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் ஏன் எல்லோரும் மூச்சி விடுகிறார்கள் எனக் கேட்க முடியுமா?


“நான் தான் கடவுளை வேண்டிக் கொண்டேன், குழந்தை குள்ளமாகப் பிறக்க வேண்டும் என்று. குழந்தை குள்ளமாக இல்லாவிட்டால் நான் யாருடனோ படுத்து குழந்தை பெற்றுக் கொண்டதாகச் சொல்வார்கள் அல்லவா? இப்போது பாருங்கள் பாய், யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள்.” - சாரு

இதுவொரு ஆபாசமான காட்சியாகவும், இப்படியொரு மனநோய் பீடித்த சமூகத்தில் வாழ்வதற்கு வெட்கப்படுவதாகவும் சாரு குறிப்பிட்டிருந்தார். இது மனநோய் பிடித்த சமூகம் என்கிற உண்மையை அங்காடித் தெரு படத்தை பார்த்துதான் மிகவும் தாமதமாக அவர் புரிந்து கொண்டதன் இயலாமையை நினைத்து வருந்துகிறேன். அடுத்தவன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் அவனைப் பார்த்து மன உலைச்சலுக்கு ஆளாகும் மனநோய் பீடித்தவர்கள் பல நூற்றாண்டுகளாக இருக்கிறார்களே.

அந்தப் பாலியல் தொழிலாளி பேசும் அந்த வசனத்தை ஆபாசமாகப் பார்க்கும் அவர், அவள் அப்படிப் பேசுவதற்குரிய அத்துனை ஒட்டுக்குமுறைகளையும் அவமானங்களையும் அந்தச் சமூகம் அளித்ததன் உக்கிரத்தை வசனத்திற்கு அப்பாற்பட்டு வெளிப்படும் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வின் மீதான ஆபாசங்களைப் பார்க்கத் தவறிவிட்டார். அங்காடித் தெருவில் கொஞ்சம் நேரம் மட்டுமே வந்து போகும் இந்தக் காட்சியும் இந்த வசனமும், போலித்தனமான முறையில் அறங்களை உற்பத்தி செய்து அதற்கு எதிராக வாழவும் எளிமையானவர்களை அதே அறங்களை முன்வைத்து சிதைக்கும் முனையும் ஒரு சமூகத்தை ஓங்கி அறையும் முயலும் அபாரத்தை உணர்த்துகிறது. குழந்தை ஊனமாகப் பிறந்ததைக்கூட பொருட்படுத்தாமல் இந்தச் சமூகத்தின் கேவலமான மதிப்பீட்டிலிருந்து தான் தப்பிவிட்டதாக ஆறுதல் அடையும் ஒரு பாலியல் தொழிலாளியின் சொற்கள், கணம் கொண்டு அவர்களை வெறும் விபச்சாரப் பிண்டமாகப் பார்க்கும் காமுகர்களின் முகத்தைக் கிழிக்கும் விரல்கள். வசனத்தின் பின்னாலுள்ள இன்னொரு பரிணாமத்தை அல்லது விளைவைக் கண்டடைய இயலாததால்தான் இத்தகையதொரு விமர்சனமா?

வாழ்க்கை இவ்வளவு குரூரமாக இருந்தால் இந்த உலகம் இந்தக் கணமே அழிந்து போய் விடும். இவ்வளவு அவலங்களுக்கு இடையிலும் உலகம் ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் இந்த இருளின் இடையிலும் ஏதோ ஒரு ஒளிக்கீற்று கசிந்து கொண்டிருக்கிறது என்பதனால்தான். - சாரு

இதைத்தான் வசந்தபாலனும் படத்தின் இறுதி காட்சியில் நிறுவியிருக்கிறார். மீண்டும் வாழ்வின் மீதான நம்பிக்கையாலும் அதன் மீதான பிடிமானத்தாலும்தான் இருவரும் அதே தெருவில் மீண்டும் அவர்களின் வாழ்வைத் துவங்குகிறார்கள். இந்தப் புள்ளியிலிருந்து மீண்டும் படத்தை எதிர்க் கொண்டால் எல்லாம் வரட்சியும் துயரமும் கரைந்து போகக்கூடிய புதிய ஆற்றல் பிறக்கும். ஒரு பார்வையாளனாக படத்தில் நாம் சலிப்படைந்த எரிச்சலடைந்த எல்லாம் காட்சிகளிலிருந்து விடைப்பெற்று ஒரு நம்பிக்கையின் பால் பிடிமானம் கொள்வோம். மேலும் சாருவின் ஒரு சில கருத்துகள் மிகவும் ஏற்புடையதே. தமிழ் சினிமாவிற்குரிய மிகையான பதிவுகள் இந்தப் படத்திலும் காட்டியிருப்பதைக் குறிப்பிட்டிருந்தார்.

சாருவின் கருத்துகளுக்கு எதிர்கருத்து தெரிவிக்க வேண்டும் என்கிற முனைப்பில் எழுதிய விமர்சனம் கிடையாது. எனது புரிதலை முன்வைத்து இந்தப் படத்தை நியாயப்படுத்தவும் முயற்சிக்கவில்லை. எனது புரிதலை மட்டும் சொல்லியிருக்கிறேன். மேலும் உலக சினிமாக்களை முன்வைத்து தமிழ் சினிமாவை விமர்சிப்பதால் இனி எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்திய சினிமாவின் சந்தையை வெறும் வர்த்தகமும் வியாபாரமும் மட்டுமே பிடித்து வைத்திருக்கிறது. எல்லாரையும் ஒரு நுகர்வாளனாகவே உற்பத்திக்கும் இந்திய சினிமா சந்தையின் முன் எப்பொழுதாவது வெளிவரும் அங்காடித் தெருவைப் போன்ற படத்தின் சில பலவீனங்களையும் சகித்துக் கொள்ளும் பக்குவம் புதிய சினிமாவுக்கான தேடல் நிரம்பியவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Monday, April 5, 2010

செய்தி வாசிப்பவர்களும் ஒரு கவிதையும்

முதன் முதலில் எப்பொழுது என் கண்கள் அதன் பிரக்ஞையுடன் தொலைக்காட்சி பார்க்கத் துவங்கியிருக்கும்? உடல் உறுப்புகள் நிகழ்த்தும் அதிசயங்களை அறிவு ஒரு தகவலாக அனுபவமாகப் பெற்றுக் கொள்ளாதவரை அல்லது அறிவு உடல் உறுப்புகளையும் புலன்களையும் இயக்காதவரை ஒரு வசீகரமான கற்பனை புரிதல்களிலே எல்லாவற்றையும் பார்த்திருக்கிறோம்.

மாலையில் அப்பா செய்தி பார்த்துக் கொண்டிருக்கும்போது, எனக்குள் எழும் முதல் சந்தேகம், “எப்படி இந்த ஆள் நம் வீட்டின் தொலைக்காட்சி பெட்டிக்குள் நுழைந்திருப்பான்?” என்றுதான். ஆக அந்தச் செய்தி முடியும்வரை காத்திருப்பேன். செய்தி முடிவதற்குள் எல்லாம் கவனமும் வேறு ஒன்றின் மீது பாய்ந்துவிடுவதால் தொலைக்காட்சி பெட்டிக்குள் நுழைந்தவனைப் பற்றி மறந்துவிட நேரும். தமிழ் சினிமா பார்க்கும் ஒரு காலக்கட்டம் வந்து சேர்ந்தபோது, எல்லாரும் இந்தச் சின்ன பெட்டிக்குள்தான் நுழைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என ஒரு கற்பனையைக் கொண்டிருந்தேன். தொழில்நுட்பத்தின் வரையறைகள் பற்றி அக்கறை கொள்ளாத ஒரு பருவம்.

“வலி என்பது இறைச்சக்தியின் ஆனை” என ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். வலி என்பதே நம் உடல் இருப்பதற்கான ஆக வலுவான ஒரு வலியுறுத்தல் என நினைக்கிறேன். ச.தமிழ்செல்வன் ஒருமுறை உயிர்மையில் மஞ்சள் காமாலைக் கண்டதைப் பற்றி எழுதியிருந்தார். மஞ்சள் காமாலைத்தான் அவரை ஒரு உடல் மனிதனாக மாற்றியிருந்தது எனக் கூறியிருந்தார். அது போலத்தான் முதிர்ச்சி என்பது நமது பாலியத்தின் கற்பனை உலகம் புதியதாகத் திணிக்கப்பட்ட தர்க்க அறிவால் உடைக்கப்படும் சம்பவத்தை வரையும் ஒரு வடிவமாகக் கருதப்பட்டது. இப்படி நம்மிடமிருந்து தவறி தவறி பல பொருள்கள் வெறும் தொழில்நுட்பக் குறியீடாக மாறிவிட்டன.

இன்று பள்ளியில் மாதிரி தொலைக்காட்சி பெட்டியைக் கொண்டு மாணவர்கள் அனைவரையும் செய்தி வாசிப்பாளராக பாகமேற்று நடித்துக் காட்டப் பணித்திருந்தேன். மாணவர்கள் சுயமாக வானிலை அறிக்கைகளைத் தயாரித்துக் கொண்டனர். ஒவ்வொருவராக மாதிரி தொலைக்காட்சியின் முன் அமர்ந்து வானிலை அறிக்கையை வாசிக்கத் துவங்கினர். சிலருக்கு உண்மையில் செய்தி வாசிக்கும் ஆற்றல் கைவந்திருந்தது. சிலர் தைரியமாக பார்க்காமல் சுயமாக வாசித்துக் காட்டினர். மாணவர்கள் எல்லாரும் பொதுவாக என்னிடம் கேட்ட கேள்விகள் பின்வருமாறு:

1. அவர்கள் எப்படிப் பார்க்காமல் சரளமாக வாசிக்கிறார்கள்?
2. அவர்கள் சிரிப்பு வந்தால் என்ன செய்வார்கள்?

செய்தி வாசிப்பாளாருக்கு இருக்க வேண்டியது, தைரியமும் சூழலுக்குத் தகுந்த தொனியும் சொற்களும் திரையில் விரியும் எழுத்துக்களை வரிகளை விரைவாக வாசித்துப் பாசாங்கு செய்யும் ஆற்றலும்தான். முன்பொரு முறை பள்ளியின் செய்தி வாசிப்பாளராக ஒவ்வொரு வாரமும் ஒருவரைத் தேர்ந்தெடுத்தேன். பிரச்சனையுள்ள மாணவர்கள்கூட ஆர்வம் காட்டினார்கள். எல்லாருக்கும் அதில் ஒரு மயக்கம் இருக்கிறது. அவர்கள் நம்மைப் பார்த்து செய்தி சொல்லவில்லை என்பதைக்கூட தெரியாமல் அவர்களின் செய்தி வாசிப்பையும் அதன் சரளத்தையும் பார்த்து பிரமிக்கிறார்கள் மாணவர்கள்.

கவிதையும் சில வரிகளும்

உனக்காகப் பெரும்வெளியில்
உட்காந்திருந்தபோது
மரத்திலிருந்து மெல்ல
உதிர்ந்து வீழ்ந்தன
காத்திருப்பும் முன்பொருமுறை
நாம் சந்தித்த கோடைகாலத்தின்
சில பொழுதுகளும்.

உன்னைச் சந்திக்கும்
தருணத்தில்
பேசுவதற்கென்று
சில வார்த்தைகளைத்
தயார்ப்படுத்தியிருந்தேன்.
அதற்கு முன்பதாகவே
எல்லாமும் தேவதைகளாகிவிட்டன.
இப்பொழுது வெறும் நானும்
எனது மௌளனங்களும்.

சுயமாக
என்னையாவது வைத்திருக்க
முயன்றேன்.
இயலாதபோது ஒப்படைத்தேன்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Thursday, April 1, 2010

திரைவிமர்சனம்:- அங்காடித் தெரு- ரங்கநாதன் தெருவின் இரைச்சல்களும் கொடூரங்களுக்குப் பிந்தைய ஒரு காதல் உணர்வும்

“நாம் தினமும் அலட்சியமாகவும் அவசரமாகவும்
கூட்டத்துடன் கூட்டமாகக் கடந்துவிடும் ஒரு தெருவைப் பற்றி
கதையாகச் சொல்ல என்ன இருக்கிறது?”

செந்தில் முருகன் ஜவுளிக்கடை இருக்கும் அந்த ரங்கநாதன் தெருவில் ஒரு பரதேசியைப் போல அலைந்து திரிந்தால் மட்டுமே இத்துனை நுட்பமாக அந்தத் தெருவின் மனிதர்களைப் பற்றியும் அந்தத் தெருவின் கதையைப் பற்றியும் சொல்ல இயலும். தெருவோர வியாபாரிகளும் தெருவில் படுத்துறங்கும் தொழிலாளர்களுமென படம் முழுக்க சமூகத்தின் பொருளாதார இடைவெளியில் சிக்கி சிதையும் சமூகத்தின் மீதங்கள் நிரம்பி வழிகிறார்கள். அவர்கள் வெறும் புத்திஜீவிகளின் மதிப்பீடுகளுக்காகக் கொண்டு வரப்படும் பரிதாப கதைப்பாத்திரங்கள் கிடையாது. நமது எல்லாம் வகையான மதிப்பீடுகளையும் மீறி வாழ்ந்துவிட்டுப் போகும் நிதர்சனம்.

வசந்தபாலன் என்கிற மனிதர் இந்த அங்காடித் தெருவில் புறக்கணிப்பட்டுத் திரியும் யாருமற்ற தனிமையின் பிம்பமாகவோ அல்லது தெருவில் படுத்துறங்கிவிட்டு வெயில் அடங்கியதும் எழுந்து நகரும் ஒரு சாதாரண நாயை போலவோ மிகவும் பிடிமானத்துடன் அலைந்து திரிந்து ஒரு கலையையும் சில மனிதர்களையும் கண்டைந்திருக்கிறார். கலை ஒரு சமூகத்தை வாழ வைக்கும் என்பார்கள். வசந்தபாலனின் மூலம் அங்காடித் தெருவில் கவனிக்கப்படாத ஒரு கலையை சினிமா என்கிற வடிவத்தின் மூலம் சிறு சிறு சமரசங்களுக்குப் பழக்கப்படுத்தி முன்னிறுத்தியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன் மலேசியா வந்திருந்த இயக்குனர் ராசி அழக்கப்பன் அவர்களின் உரையாடலிலிருந்து புரிந்துகொண்ட இந்திய சினிமாவின் உலகத்தைப் பிடித்து வைத்திருக்கும் வர்த்தக அடைவையும் செயல்பாடுகளையும் முன்வைத்து பார்த்தால் வசந்தபாலன் இப்படத்தில் பாடல் காட்சிகளையும் நகைச்சுவைக் காட்சிகளையும் புகுத்தியிருப்பது, இன்னும் இரண்டாண்டுகளில் மீண்டும் இது போன்ற தரமான படத்தை வழங்குவதற்கான எதிர்கால (நியாயமான) வர்த்தக திட்டம் என்பதை அறிய முடிகிறது. மூன்று மதிப்பீடுகளை முன்வைத்து இந்த அங்காடித் தெருவின் முன் வந்து நம்மால் நிற்க முடிகிறது.

1. ரங்கநாதன் தெருவின் வாழ்வு
2.சுரண்டப்படும் உழைப்பும் தொழிலாளிகள் மீதான முதலாளித்துவத்தின் அத்துமீறலும்
3. வறுமை என்கிற பிடியின் முன்னால் தப்பிப்பதற்காக அவர்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு காதல்

1. ரங்கநாதன் தெருவின் வாழ்வு

பெரும்பாலும் தமிழ் சினிமாக்களில் சண்டைக் காட்சிகளிலும் அல்லது வில்லன் மாமுல் வசூல் பண்ணும் காட்சிகளிலும் மட்டுமே இது போன்ற அங்காடித் தெருக்களைக் காட்டியிருக்கிறார்கள். அந்தக் காட்சி முடிந்தவுடன் மிகவும் நேர்மையாக நாம் அதையெல்லாம் கடந்துவிடுவோம். ஆனால் காமிராவை அங்காடித் தெருவின் இரைச்சலுக்கும் நகர்விற்கும் நடுவில் நிறுத்திவிட்டு, ஒரு நத்தையின் அசைவுகளை நிதானமாகத் தரிசிப்பது போல ஒரு தெருவின் வாழ்வைக் காட்டியிருக்கிறார் வசந்தபாலன். ஒரு தெருவின் வாழ்வை மையமாகக் கொண்டு புனையப்பட்ட சினிமா என்பதன் மூலம் இப்படம் இந்திய பொருளாதாரம் எளிய மக்களின் மீது ஏற்படுத்திய வன்முறையை அதன் கலாச்சார நிலப்பரப்பு சார்ந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. நுகர்வுத்தன்மையும் தேர்வுகளும் வரண்ட இயந்திரங்கள் பாய்ந்தோடும் நதியின் ஓட்டத்தை மனிதர்கள் எனும் குறியீட்டின் மூலம் நிறைவு செய்து உவமைப்படுத்தி அங்காடித் தெருவெங்கும் நம்மை அலையவிடுகிறார் இயக்குனர்.

யூ டியூப் வீடியோ ஒன்றில் வசந்தபாலன் இரவில் அந்த அங்காடித் தெருவில் நடந்து அலைந்து திரிந்து எல்லாவற்றையும் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தது. அவர் அசலைத் தேடி அலைந்திருக்கிறார். அவர் கண்டடைந்த அந்த அங்காடித் தெருவையும் அதனை மையமாகக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் எளிய மனிதர்களையும் ஒரு கலை படைப்பாக தருவதற்குரிய அத்துனை முயற்சிகளையும் அங்காடித் தெரு-வில் உணர முடிகிறது. உடல் ஊனமுற்றவர்கள் சமூகத்தில் எல்லாரையும் போல இயல்பாக எல்லாம்விதமான அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பெற்று வாழத் தகுதி இல்லாதவர்கள் எனவும் முழுமை பெற்ற ஒருவன் பெறும் பொருளாதார பலத்தை உடல் ஊனமுற்றவனால் பெற இயலாது எனவும் பொருளாதார சிந்தனைகளை வலுவாக முன்வைக்கும் முதலாம் உலக நாடுகள் நம்புவதாக “Readers Diegest” இதழில் படித்திருந்தேன்.

அங்காடித் தெருவில் வரும் உடல் ஊனமுற்றவர்கள் சமூகத்தில் சாதரணமாகவும் இயல்பாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் பிறரை தன்னுடன் ஒப்பீட்டு பொருளாதார பின்னடைவை உணர்ந்து சோர்ந்து போகாமல் உழைப்பை நம்பி வாழ்பவர்களாகத் தோன்றுகிறார்கள். தெருவில் அமர்ந்து பொருட்களை விற்கும் கண் தெரியாதவரும், அதே தெருவில் விலைமாது ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கே வந்து போகும் குள்ளரும் என உடல் ஊனமுற்றவர்களை வெறும் பரிதாபத்தைச் சம்பாரிக்கும் பிம்பமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவர்களின் யதார்த்த வாழ்வின் மீதான நியாயத்தை மீறாமல் வசந்தபாலன் காட்டியிருப்பது சிறப்பாக அமைந்திருந்தது. மனிதனுக்கு மனிதன் வேறுப்படும் அறம், பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம் என எல்லாம் ஏற்றத் தாழ்வுகளையும் வேறுபாடுகளையும் உற்பத்திக்கும் ஓர் இயந்திரத்தின் வயிறுதான் ரங்கநாதன் தெரு.

“வெயில்” திரைப்படத்தில் நெருப்பெட்டி செய்யும் தொழிலாளர்களின் தெருவை சிறிது நேரம் காட்டிய வசந்தபாலனின் பார்வை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ஒரு சமூகத்தின் வாழவையும் அதன் நெருக்கடிகளையும் சலிப்பு தட்டாமல் எந்த விநியோகத்தையும் செய்யாமல் அசலாகக் கொடுத்திருக்கிறார் என்கிற மதிப்பீடு எனக்குள் ஏற்பட்டது. அந்தச் சில காட்சிகளையே(தெருவின் வாழ்வு) ஒரு சினிமாவாக ஆக்கியிருக்கிறார் இயக்குனர். ஆனால் அங்காடித் தெருவின் வாழ்வை மேலும் அடர்த்தியான காட்சிகளுடன் பதிவு செய்திருக்கலாமே எனவும் தோன்றியது. படத்தில் அங்காடித் தெருவில் பிரபலமான பேரங்காடியான செந்தில் முருகன் ஜவுளிக்கடையின் உள்ளே நிகழும் கொடுமைகள்தான் அதிகமாகக் காட்டப்பட்டது, கொஞ்சம் வெளியே வந்தபோதும் அது முழுமையான அழுத்தத்தைக் கொடுக்காதது போன்று தோன்றியது. அப்படி முழுமையாகவும் எதிர்ப்பார்க்க முடியாது என்பதும் தெரிந்ததே. ஒரு பார்வையாளனின் வலுக்கட்டாயமான எதிர்ப்பார்ப்பு மட்டுமே.


2. சுரண்டப்படும் உழைப்பும் தொழிலாளிகள் மீதான முதலாளித்துவத்தின் அத்துமீறலும்

இப்பொழுது அங்காடித் தெருவிலிருந்து அங்கே பிரபலமாக இயங்கி வரும் தொழிலதிபர் அண்ணாச்சியின் அடுக்குமாடி பேரங்காடியான “செந்தில் முருகனுக்குள் நுழைவோம். அங்கே எல்லோருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சீருடையும் இறுக்கமான விதிமுறைகளும் இயந்திரத்தனமான கட்டளைகளும் நிரம்பி இருக்கின்றன. முதலாளித்துவம் என்கிற அதிகார அமைப்பிலிருந்து எல்லாம்விதமான கட்டளைகளும் ஒடுக்குமுறைகளும் நேர்த்தியாக நிர்வாக பிம்பத்துடன் அளிக்கப்படும் கொடூரத்தை அங்கே பார்க்க முடிகிறது. அங்கு வேலைக்காகக் கொண்டு வரப்படுபவர்கள் பெரும்பாலும் கிராமப் பின்னனியும் வறுமை பின்னனியும் கொண்டவர்கள் என்பதால் அவர்களை தனது அதிகாரத்திற்குள் வைப்பதிற்கும் உழைப்பைச் சுரண்டுவதற்கும் வசதியாக இருக்கும் என்கிற உண்மையை அப்பட்டமாகக் கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு நிமிடம் தாமதம் ஆனாலும் ஒரு ரூபாய் அவர்களின் சம்பளத்திலிருந்து வெட்டப்படும் என்கிற மிரட்டல் தொழிலாளர்களிடமிருந்து முதலாளிகளால் எதிர்ப்பார்க்கப்படும் உழைப்பின் நேர்மையைக் கட்டமைக்கும் ஓர் அதிகார முயற்சி. முதலாளிகளுக்காக உழைத்துக் கொடுப்பதில் ஓர் உழைப்பாளி என்கிற முறையில் தனது பரிசுத்தமான கடமை என்கிற புரிதலை அவனுக்குள் எந்தச் சலனமும் இல்லாமல் அவனகளிக்கப்பட்டிருக்கும் ஒரு வாய்ப்பாக அவனை நம்ப வைத்து கழுத்தறுக்கும் ஒரு வன்முறையை அந்தப் பேரங்காடிக்குள் தாராளமாக நிகழ்ந்துகொண்டிருப்பதை வசந்தபாலன் காட்டுகிறார். இதற்கு முதலாளித்துவத்தின் மீது பயங்கர வெறுப்பும் எதிர்வினையும் இருக்க வேண்டும். அத்தகையதொரு வெறுப்புத்தான் பேரங்காடியில் எல்லாம் தொழிலாளர்களையும் கொடுமைப்படுத்தும் இரண்டாம்தர முதலாளியான சூப்பர்வைசர் கதைப்பாத்திரத்தை உருவாக்க முடிந்திருக்கிறது. பார்வையாளன் ஒட்டுமொத்த வெறுப்பையும் அந்தக் கதைப்பாத்திரத்தின் மீது காட்டக்கூடிய ஒரு படைப்பு அந்த அண்னாச்சியின் நம்பிக்கைக்குரிய மேற்பார்வையாளன்.

மையக்கதைப்பாத்திரமான லிங்கு அந்தப் பேரங்காடியில் வேலை செய்து பிற்கு வெளியே வீசப்பட்ட ஒரு பழைய தொழிலாளியைத் தெருவில் சந்திக்கிறான். இந்தப் படத்தில் மிக முக்கியமான கம்யூனிச உரையாடல் இங்குத்தான் நிகழ்கிறது. அந்தத் தொழிலாளி சொல்வது முதலாளி வர்க்கத்தின் ஆக வினோதமான அதே சமயம் உக்கிரமான கொடுமையையும் ஆக்கிரமிப்பையும் முன்வைக்கிறது. முழு உழைப்பும் சுரண்டப்பட்டு, உடல் பாதிக்கப்பட்டது அல்லது தேவையில்லை எனக் கருதப்பட்டு வெறும் சக்கையாகத் தூக்கி வெளியே வீசிவிட்டார்கள். அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்ததால் கால்கள் இரண்டும் நோயால் பாதிக்கப்படு அழுகி நாசமடைந்திருக்கின்றன. அந்தத் தொழிலாளி அவனின் கால்கள் இரண்டையும் காட்டும்போது நமது முகம் மட்டும் சுழிக்கவில்லை, கூடவே உழைப்பாளியின் கால்களை நக்கி நக்கி அதன் மொத்த ஆரோக்கியத்தையும் சுரண்டி தின்ன கொடூரமான முதலாளிகளின் நாக்குகளும் அறுவறுக்கத்தக்க முறையில் நம் முகத்தைச் சுழிக்கச் செய்கிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் வசனத்தின் உக்கிரம் இங்கு அதிகமான அழுத்தத்துடன் அவரது அடையாளத்தையும் வெளிப்படுத்துகிறது.

பெரும்பாலும் நீண்டகால பள்ளி விடுமுறைகளில் சுங்கைப்பட்டாணியிலுள்ள பலவகை தொழிற்சாலைகளில் தற்காலிக வேலைகளைச் செய்திருந்த அனுபவம் எனக்குண்டு. அங்கு வெளிநாட்டு தொழிலாளிகள் மிகவும் மோசமாக வழிநடத்தப்படுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அதையும் முதலாளிகளின் தரகர்களான நம் இந்தியர்களே சிலர் செய்வதையும் பார்த்திருக்கிறேன். அதிகாரத்தைக் கடனுக்கு வாங்கி அதை எந்த வலிமையுமற்ற எளிய மனிதர்களின் மீது செலுத்திப் பார்ப்பதில் பலருக்கு சுகம். அவர்களின் எந்த வசதியும் இல்லாத மாட்டுக் கொட்டாய் போன்ற இருப்பிடமும்கூட அங்காடித் தெருக்களில் வரும் தொழிலாளிகளின் நெருக்கடியான இருப்பிடம் போல் ஒத்திருப்பதால் இந்தப் படத்தில் வரக்கூடிய தொழிலாளிகள் தொடர்பான அவதானிப்புகள் எனக்கு பரிச்சியமான விஷயங்களாக இருந்தன. குறிப்பாக கோலாலம்பூரில் வீடியோ கடையில் வேலை செய்தபோது அந்த மேல்மாடியில் தங்கியிருந்த உணவகத்தின் தொழிலாளிகளான இந்தியர்களின் வாழ்வையும் துன்பத்தையும் 14ஆவது வயதிலேயே நேரில் கண்டிருக்கிறேன்.

அங்காடித் தெருவின் ஒரு உபரியாக அங்கே முதலாளிகளின் அதிகார கட்டமைப்பு வெறும் பணம் உற்பத்திக்கும் நோக்கத்திற்காக மிகவும் வலுவாக வன்முறையாக அப்பாவி கிராமத்து இளைஞர்களின் மீது பாவிக்கப்படுகிறது. இதை வசந்தபாலன் மிகவும் துணிச்சலாகச் செய்திருக்கிறார்.


2. வறுமை என்கிற பிடியின் முன்னால் தப்பிப்பதற்காக அவர்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு காதல்

இந்தப் படத்தின் வலுவான சர்ச்சைக்குரிய முதலாளித்துவ எதிர்ப்பையும் ரங்கநாதன் தெருவின் வாழ்வின் உக்கிரத்தை மட்டும் காட்டியிருந்தால் ஏற்கனவே இந்திய சினிமா உலகத்தில் உருவாகி ஆக்கிரமிப்பு செலுத்திக் கொண்டிருக்கும் வர்த்தக அதிகாரம் நிச்சயம் வசந்தபாலனைத் தூக்கி வெளியே வீசியிருக்கக்கூடும் என நினைக்கிறேன். எதிர்நிலையில் சில தேவையான சமரசங்கள் அவருக்குத் தேவைப்பட்டிருக்கக்கூடும். ஆகையால்தான் அத்துனை நெரிசல்களுக்கும் மனித இரைச்சல்களுக்கும் நடுவே ஓர் அழகான காதல் கதையை இயக்குனர் சொல்லியிருக்கிறார் எனத் தோன்றுகிறது.

லிங்கு கனி என்கிற இரு இளம் தொழிலாளர்களுக்கு மத்தியில் ஏற்படும் காதலை கவனமாக நகர்த்தி கதையின் உள்ளோட்டமாக அவர்களின் இருப்பை உருவாக்கி கடைசிவரை இழுத்துக் கொண்டு போய் அந்த அங்காடித் தெருவில் நிறுத்துகிறார். இருவரும் எல்லாம்வகையான முதலாளித்துவ கோடுரங்களையும் எதிர்த்து உடைத்து மீண்டும் அந்த அங்காடித் தெருவிலேயே அவர்களின் வாழ்க்கையைப் புதிய நம்பிக்கையுடன் தொடங்குவதாகப் படம் நிறைவடைகிறது.

தொடக்கத்தில் கனி அறிமுகம் ஆகும் காட்சிகள் சினிமாவின் கதைநாயகிகளுக்கே உரிய (கொஞ்சம் மாறுதலுடன்) பாணி. அடிக்கடி காமிரா அவர்களின் காதலுக்குள்ளும் அவர்களின் உணர்வுகளுக்குள்ளும் மூழ்கி மிதப்பதையும் அவ்வப்போது தோன்றும் பாடல்களும், இருவரின் பழைய காதல் கதைகளை மீட்டுணர்தல்களும் சினிமாவின் தீவிர பார்வையாளனுக்கு சலிப்பூட்டுவதாக இருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் அதன் தேவையை இந்திய வணீக ஆக்கிரமிப்பிற்குள் இருந்து பார்ப்பவனுக்கு மட்டுமே தெரியக்கூடும்.

படத்தின் முதல் காட்சியில் கனியின் கால்கள் அவளுக்கருகில் இருக்கும் லிங்குவின் கால்களை மிதிக்கின்றன. இது நடப்பது ரங்கநாதன் தெருவிலுள்ள ஒரு பேருந்து நிலையத்தில். படத்தின் இறுதி காட்சியில் அதே கனி இரு கால்களையும் இழந்து சக்கர வண்டியில் அமர்ந்துகொண்டு பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறாள். வாழ்வு தொடங்கும் புள்ளியிலிருந்து அது விரியும் அற்புதத்தின் முரணை இங்கே அருமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். தப்பித்தல் என்பது அன்றாட வாழ்வின் சலிப்பில் கரைந்து சுமையாகத் தேங்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது என ஏதோ ஆன்மீகப் புத்தகத்தில் படித்ததாக ஞாபகம். இறுக்கமான விதிமுறைகள், இயந்திரத்தனமான பின்பற்றுதல்கள் என வாழ்வின் துயரத்திலிருந்து தப்பிக்க மனம் ஒரு மாயை உலகை தனக்குள்ளாகவோ அல்லது தன்னுடன் வாழும் பிறருடனாகவோ உருவாக்கிக் கொள்ள முற்படும். அத்தகைய ஒரு தப்பித்தலின் வடிவம்தான் காதலும்கூட எனச் சிந்திக்க வாய்ப்பிருக்கிறது. கனியும் லிங்குவும் வேலை உலகத்தின் துயரப் பிடியிலிருந்து தப்பிக்க ஒருவர் மீது ஒருவர் அன்பைக் காட்ட முயல்கிறார்கள். இந்த உணர்வு நமது சொகுசான எல்லாம் மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டது.

நெருக்கடியான அதிகாரத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டிருக்கும் அடிமை மனத்தின் இருண்ட பகுதியிலிருந்து உறைந்து வெளிப்படும் ஓர் உணர்வுக்கு பல பெயர்களில் காதலும் ஒரு பெயர். அந்தக் காதலில் எத்துனை நேர்மை தேவை என்பதை கனிக்கும் லிங்குவிற்கும் ஏற்படும் மனப்போராட்டமும் சண்டையும் விவாதமும் நிருபிக்கின்றன. பகிர்தல் என்பது மிக உன்னதமாகப் போற்றப்படும் இடத்தில் அந்தப் பகிர்தலில் யாரும் கொடுக்கா முடியாத அன்பிற்க்கு நிகரான ஒரு நேர்மையைத் தூய்மையை மனம் எதிர்ப்பார்ப்பது யதார்த்தமாகும். இத்தகைய சூழலில் கனிக்கும் லிங்குவிற்கும் ஏற்படும் சண்டையும் புறக்கணிப்பும் கவனிக்கத்தக்க அவர்களே உருவாக்கி வாழும் அறத்தைச் சார்ந்ததாகும்.

வசந்தபாலனின் நண்பரான சூர்யாவிடம் கேட்டப்போது, வசந்தபாலன் ஒரு மாதம் அங்காடித் தெருவில் தங்கி அந்தத் தெருவைச் சிறுக சிறுக உள்வாங்கியுள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒரு கலைஞனுக்குரிய பார்வையும் அவதானிப்பும் ஒரு அருமையான நேர்மையான கலை படைப்பு உருவாவதற்கு மிக முக்கியமாகும். அதைத் தனது கலை ஆய்வின் மூலம் வசந்தபாலன் சாதித்துள்ளார். பின்னனி இசை அவருக்குக் கைகொடுக்காதபோதும் அந்தக் குறைபாடு அவரின் கலை எழுச்சிம்மிக்க படைப்பில் எங்கோ தூரத்தில் கேட்கும் ஓர் இரைச்சல் போல மறைந்துவிடுகிறது.

மேலும் பேரங்காடியில் அடிக்கடி தொழிலாளிகள் உதைக்கப்படுக்கிறார்கள், அடிக்கப்படுகிறார்கள், கடுமையான சொல்லால் திட்டப்படுகிறார்கள், வதைக்கப்படுகிறார்கள். இவை யாவும் கடைக்கு வந்திருக்கும் வாடிக்கையாளர்களின் முன்னிலையில்தான் கொடூரமாக நடக்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களின் சிறு முகப்பாவனைக்கூட இந்தப் படத்தில் எங்கிலும் காட்டப்படவில்லை. அப்படியென்றால் செந்தில் முருகன் ஜவுளிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் என்ன வெறும் பிணமா? உணர்வுகளும் எதிர்வினையுமற்ற ஜந்துக்களா? எனக் கேட்கத் தோன்றுகிறது. எந்த இடத்திலும் அவர்களின் கண் முன்பே நடத்தப்படும் வன்முறையை அதிகாரக் கொடூமையை நோக்கி அவர்கள் என்ன செய்தார்கள் எனக்கூட காட்டாமல் பெரும் நெருடலை ஏற்படுத்திவிட்டார் என அதை மறுக்காமல் நேர்மையாக முன்வைக்கத் தோன்றியது.

இதை மட்டும் தவிர்த்துவிட்டால் அங்காடித் தெருவின் மனிதர்களின் இரைச்சல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்துவதற்காக அவர்கள் எதிர்க்கொள்ளும் பொழுதுகளையும் நெருக்கடிகளையும் இப்படியொரு ஆக்கமாக வேறு யாரும் சொல்லிராத மொழியுடன் பதிவு செய்ததற்காக வசந்தபாலனை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் சில காட்சிகளை ஒட்டி விமர்சிக்க எண்ணமிருந்தும் அதை நீட்டிக்க விருப்பமில்லை. பூப்படைந்த கனியின் தங்கையை எந்தத் தீட்டுதலுக்கும் உரிய பிம்பமாகக் கருதாமல் கோவிலுக்குள் கொண்டு வந்து அவளுக்காக நடத்தப்படும் சடங்குகள், மொத்தமாக இந்துத்துவ அறங்களுக்குப் பின்னனியில் உருவான பிற்போக்கு கற்பிதங்களை உடைத்திருக்கிறது. சபாஷ் வசந்தபாலன்.

“மலேசியாவில். . தைப்பூச தெரு வியாபாரிகளைக் கடக்கும்போது அங்கொரு பலூன்களை விற்பவர் வெகுநேரம் பலூன்களைக் காட்டி காட்டி குழந்தைகளிடம் ஏதாவது சாகசம் செய்து கொண்டிருப்பார். மனம் அவர் கையில் வைத்திருக்கும் பலூன் போல உப்பிவிடுகிறது. அந்தத் தெரு வியாபாரியிடம் அப்படி என்ன இருக்கப் போகிறது அவரது வாழ்வைவிடவும். . “

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி