Monday, October 12, 2009

தமிழாசிரியர்கள் எங்கே?

கோலா மூடா யான் மாவட்டத்தில் உள்ள எல்லாம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் அதன் மாவட்ட அதிகாரியின் மூலம் கவிதைக் கருத்தரங்கம் குறித்து அறிக்கையும் மின்னஞ்சல் மூலமாகவும் செய்திகள் அனுப்பியும் நேற்று நிகழ்வில் கெடா கோலா மூடா யான் மாவட்டத்திலுள்ள 23 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 4 ஆசிரியர்கள் மட்டுமே இலக்கிய ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டது வரவேற்க்கத்தக்க ஒன்று என்றும் சொல்லலாம்.

நிகழ்வில் கலந்துகொண்ட பலர் எழுப்பிய கேள்வி எங்கே தமிழாசிரியர்கள்? கொடுக்கப்பட்ட பதில்கள்:

ஒருவேளை : 1. தீபாவளி நெருக்கம் என்பதால் அலைச்சல்


2. இலக்கிய ஆர்வம் இல்லாமல் போய்விட்டது


3. கட்டாயப்படுத்தாதவரை எனக்கெதற்கு இலக்கியம் என்கிற
மனோநிலை

(குறைந்தபட்சம் கலந்துரையாடலில் கலந்துகொண்டு விவாதம் செய்திருக்கலாம், தனது எதிர்க் கருத்துகளைப் பதிவு செய்திருக்கலாம்-)

மூன்று மலேசிய தமிழ் நாளிதழ்களில் அறிக்கை கொடுத்தும் ஏன் தகவல் சேராமல் இருந்திருக்கும்? வாய்ப்பில்லை, காரணம் ஒருசிலர் அதிகபட்சமாக வாசிப்பதே இந்த நாளிதழ் மட்டும்தான். கல்வி இலாகா தொடர்புடைய ஒருவர் இலக்கிய நிகழ்வுகளுக்கும் நமது ஆசிரியர்களுக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது போல என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

கடந்தமுறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் “சிறுகதைக் கருத்தரங்கம்” நடத்தும்போதும் அதில் கட்டாயத்தின்பேரில் கலந்துகொண்ட சில ஆசிரியர்கள் வெளிப்படையாகவே குறைப்பட்டுக் கொண்டனர். அந்த ஆசிரியர்கள் முன்வைக்கும் கேள்விகள் இதுதான்.

“எதுக்கு எங்களெல்லாம் இந்த நிகழ்ச்சில்லெல்லாம் கலந்துக்க சொல்றாங்க”
“நாங்க எதுக்கு இதையெல்லாம் தெரிஞ்சிக்கனும்?”
“எதுக்கு இலக்கியம் இலக்கியம்னு அறுக்கறாங்க?”

அதன் பிறகு இனி கட்டாயத்தின் பேரில் எந்த ஆசிரியர்களையும் இலக்கிய நிகழ்விற்கு அழைப்பது மீண்டும் ஒரு இனப்படுகொலைகளுக்கு ஒரு ஹிட்லரை அழைப்பது போன்ற உணர்வைக் கொடுத்துவிடும் என்று பயம் ஏற்பட்டது. கட்டாயப்படுத்தி கொடுக்கப்படும் இலக்கியம்கூட ஒரு வன்முறைத்தான். அறிமுகம் செய்து பார்க்கலாம், அதில் ஈர்ப்புக் கொண்டவர்கள் நிச்சயம் தனக்கான நேரத்தைத் தாராளமாக இலக்கியத்திற்காகச் செலவழிப்பார்கள்.

முன்பெல்லாம் தமிழாசிரியர்கள்தான் இலக்கியம் ஆர்வம் கொண்டவர்களாக இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றவர்களாக, இலக்கிய விவாதங்கள், புதிய களம் உருவாக்குவது என்று தீவிரமாக இயங்கியவர்கள், இப்பொழுது எல்லாம் ஒரு பொருளியல் சிந்தனைக்குள் சுருங்கி மங்கிவிட்டது போல. ஒருசிலரிடம் அறிக்கைகள் வந்ததா என்று கேட்டதற்கு, “வந்துச்சி அதை தலைமை ஆசிரியர் மேசை மேலே போட்டு வைத்திருந்தார்” என்றதும் நிகழ்வில் எந்தத் தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ளாததும் அதிர்ச்சியே. ஒரு சில தலைமை ஆசிரியர்கள் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு வரமுடியாததைத் தெரிவித்தது பாராட்டக்கூடிய விசயம். மற்றபடி பொதுமக்கள் ஆதரவுடன் சில வாசகர்களின் வருகையால் நேற்றைய கவிதைக் கருத்தரங்கம் 25 பேருடன் நடந்தேறியது. கோலா மூடா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் உயர்திரு.ப.அர்ச்சுணன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவர் தொடர்ந்து இலக்கிய நிகழ்விற்கு ஆர்வத்துடன் வந்து கலந்துகொள்வது ஒரு முன்னுதாரணம்)
-தொடரும்-

கே.பாலமுருகன்