சில வருடங்களுக்கு முன்னதாகவே தமிழர்கள் சுயத்தொழில், வியாபாரம், சிறுத்தொழில் என பொருளாதார ரீதியில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்த்துக் கொண்டு வருவது வரவேற்க்கத்தக்கதாகும். சிறு தொழிலுக்கான பயிற்சிப் பட்டறைகள், வழிக்காட்டுதல்கள் ஆங்காங்கே நடந்து வருவது அதற்கு அரசியல் தலைவர்கள் தலைமை தாங்குவதையும் நாளேடுகளில் பார்த்திருக்கக்கூடும்.
தமிழர்களை உற்பத்தியாளர்களாகவும் முதலாளிகளாகவும் மாற்றியமைக்கும் முயற்சிகள் காலணித்துவ சிந்தனைக்கு எதிர்விளைவாகவே இதனைக் காண முடியும் மேலும் சிறு சிறு சுரண்டல்களுக்கு ஆளான ஒரு சமூகம் தன் பொருளாதாரத்தை உயர்த்தி கட்டமைத்துக் கொள்ள வியாபாரமும் தொழிலும் மட்டுமே ஏற்கத்தக்க களமாகும் என்கிற ரீதியில் அதிகமான தமிழர்கள் வியாபாரத்தில் ஈடுபடத் துவங்கியிருந்தனர். சமீப காலமாக சிறுத்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இது இன்னொரு பார்வையில் நல்ல வளர்ச்சியும் ஆரோக்கியமும்கூட.
ஆனால் மார்க்சிய சிந்தனைப்படி இது ஒருவகை அரசியலிலிருந்து விடுப்படுதல், அரசியலுக்கு அப்பால் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துதல் என்கிற வகையில் இந்த வளர்ச்சி முன்வைக்கப்பட்டாலும், பொதுபுத்தி சார்ந்து பார்த்தால், மீண்டும் ஒரு சில குட்டி முதலாளிகளே உருவாகியிருக்கிறார்கள் எனப்படுகிறது. குழுவாதத்தின் புரட்சி குரல்களுக்கு நடுவில் சிக்கி, கரைந்துபோன அல்லது வலுவிழந்துபோன இந்தப் பார்வை, குட்டி முதலாளித்துவம் வளர்ந்து, உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் பேரமைப்புகளாக மலேசியாவில் வளர்ந்து விட்டதைக் கவனிக்க மறந்துவிட்டது. இப்பபொழுது அதன் விளைவுகள் நாடலவிளான குற்றங்களாகக் கொண்டு வரப்படுகின்றன.
பொருளீயலை மேம்படுத்த வேலை உலகத்தில் சிக்கிக் கிடக்கும் குடும்பம் அல்லது பெரும் தொழில்கள் செய்யும் பெரும்பாலான தமிழர்களின் வீடுகளில் பணிப்பெண்களாக இருப்பது இந்தோ, இந்தியா, பங்களாடேஸ் பெண்கள்தான். சமீப காலமாக இந்த மாதிரி உழைக்கும் பிரதேசத்து பணியாளர்களை வன்கொடுமைக்கு உட்படுத்துதல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பட்டினி போடுதல் என்ற குற்றங்கள் குட்டி முதலாளிமார்களாலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களாலும் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கவையாகும்.
அண்மையில் கிள்ளான் இந்திய தம்பதியர்களான தன் எஜமானர்களால் சித்ரவதை செய்யப்பட்டு கடுமையான காயங்களுக்குள்ளான இந்தோ பணிப்பெண் மருத்துவனையில் மரணமடைந்த செய்தி இந்திய குட்டி முதலாளிகளின் கொடுமைகளை மேலும் உக்கிரமாகக் காட்டியுள்ளது. வீட்டுக் கழிவறையில் வைத்து பூட்டுதல், சுடு நீரை உடலில் ஊற்றுதல், மொட்டையடித்து அவமானப்படுத்துதல், சூடு வைத்தல் என்று இந்த அதிகார மேல்தட்டு சக்திகளின் கொடுமைகளுக்கு, உழைக்க வந்த அன்னிய தேசத்து அப்பாவிகள் பலியாக வேண்டுமா? யார் வளர்த்துவிட்டது இந்த மனோபாவங்களை இந்தப் பணக்கார முதலாளிகளிடம்?
இயலாமை காரணமாகப் பிழைக்க வந்த தொழிலாளிகளிடம் நேர்மையாக நடந்து கொண்டாலே போதுமானது என நினைக்கிறேன். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதைக் கொடுத்தாலே போதும், ஆனால் அவர்கள் மேலும் மேலும் இந்த மாதிரி மனிதநேயம் சிதைந்த குட்டி முதலாளிகளிடம் சிக்கி, சுரண்டப்படுவதும் கொடுமைப்படுத்தப்படுவதும் என சீரழிவது வண்மையானது. முதலாளிகளை உற்பத்தி செய்பவர்கள் அல்லது வெளிநாட்டவர்களை இங்கே உழைக்கக் கொண்டுவரும் ஏஜேண்டுகள், அவர்களின் உயிர்களுக்கு எவ்வித ஆபத்தும் வராது, அவர்களின் உழைப்பு இழிவுப்படுத்தப்படாது, சுரண்டப்படாது என்கிற உத்திரவாதம் அளிக்கப்பட்ட பின்பே முதலாளிகளிடம் அவர்களைக் கொடுக்க வேண்டும் என்ற உறுதி எடுக்கப்பட வேண்டும்.
இதற்கு முன்பும் பல இந்திய உணவகங்களிலும் இதே போன்ற கொடுமைகள்தான் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. பட்டினி கொடுமையால் உணவகங்களில், அதிகமான நேரங்கள் வேலை வாங்கப்படுவதும், உறக்கம் இன்றி உழைப்பதும் என்று மிகப் பயங்கரமாகச் சுரண்டப்பட்டார்கள். இந்திய தமிழர்களை மலேசிய தமிழர்களே இப்படிக் கொடுமைப்படுத்தி அதிகாரம் செலுத்துவது இன்னொரு காலணித்துவ மனோபாவங்களையே காட்டுகிறது.
மேலும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு இந்திய தொழிலாளியான ஒருவரை மலேசிய இந்திய முதலாளியும் அவரின் குடும்பமும் உடல் சித்ரவதை செய்து, அவரைக் கொன்று குரூண் செம்பனை தோட்டத்தில் தூக்கி வீசினார்கள். முதலாளிமார்களின் பயங்கரவாதத்தைக் காட்டும் இச்செயலை ஒட்டு மொத்த மலேசிய சமூகமே மறந்து போனதை ஞாபகப்படுத்துகிறேன். நாளிதழில் அவர் மலேசியாவிற்கு வேலைக்கு வந்த புகைப்படத்தையும், கொடுமைக்குள்ளான சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவரின் ஆரோக்கியமும் சக்திகளும் முழுமையாக இந்த அதிகார பேய்களால் சீரழிக்கப்பட்டதை ஒட்டு மொத்த மலேசியாவும் பார்த்து, இந்தச் செய்தி அவ்வளவு பரபரப்பாகியும், மீண்டும் இதே போன்ற கொடுமைகள் இந்த முதலாளி வர்க்கத்தால் நடத்தப்படுவதென்றால், இந்த முதலாளிமார்களுக்கு என்ன உணர்வே இல்லையா?
இந்த உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரான கொடுமைகள் குறித்து வெகுமக்களின் உணர்வுகள் எப்படிப் பதிவாகிறது எனவும் தெரியவில்லை, காரணம் இன்றைய சூழலில் நமது பலரின் வீட்டில் தரையைத் துடைத்துக் கொண்டும் பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டும் தனது குடும்பங்களை விட்டுப் பிரிந்து வேலை செய்து கொண்டிருப்பது இந்தப் இந்தோ பணிப்பெண்கள்தான். இவர்கள் என்ன இழிப் பிறவிகளாக? இப்படி நடத்தப்பட நமக்கு யார் உரிமையைக் கொடுத்தது? எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவரின் அம்மா வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு அவர் வீட்டிலிருக்கும் இந்தோ பணிப்பெண் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அதன் ஒரு வரி மனதை அதிகமாகவே காயப்படுத்தியது.
“இந்த நாய்ங்க பொழைக்க வந்துட்டு என்னா திமுறு, சும்மா சும்மா பாத்ரூம் கழுவ வைக்காதீங்கனு என்கிட்டயே சண்டெ போடுது”
இதுதான் ஒட்டுமொத்த குட்டி முதலாளி வர்க்கத்தின் மொழியா? எப்பொழுது அந்த அம்மா அத்தகையதொரு சொல்லாடல்களை உழைக்கும் வர்க்கத்திருக்கு எதிராகப் பிரயோகம் செய்யத் துவங்கினார்? குட்டி முதலாளிகளின் ஆக்கிரமிப்பு குடும்ப உறுப்பினர்களையும் பாதித்திருக்கலாம் அல்லது நமது காலணித்துவ மனோபாவமாகக்கூட இருக்கலாம்.
குற்றத்திற்கான தண்டனைகளை பயங்கரமாகப் பிரகடனப்படுத்துவதிலும், குற்றத்திற்க்கான தண்டனைகளை விளம்பரப்படுத்தி மக்களைப் பயமுறுத்தல் செய்வதையும்தான் சட்டமும் ஊடகங்களும் செய்கின்றன எனத் தோன்றுகிறது. குற்றம் நிகழ்ந்ததன் அரசியல் – சமூக பின்னனிகள், எப்படி இக்குற்றம் உக்கிரமடையாமல் இருக்க பரிந்துரைகளை உற்பத்தி செய்வது என ஆழந்து சிந்திக்காத ஒரு சூழலா இங்கு உள்ளது? கேள்விக்குறிகள் தேங்க தேங்க குற்றங்கள் மறக்கப்பட்டு மீண்டும் குட்டி முதலாளித்துவம் வளரவே செய்யும் உயிர்களையும் பறிக்கும் அளவிற்கு.
அண்மையில் மலேசிய எழுத்தாளர் மீனாமுத்து எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. இந்தோ பணிப்பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகளைக் காட்டியிருப்பார். இறுதியில் அந்தப் பெண் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவாள். ஆனால் முதலாளியால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைத் தாங்க முடியாதவள், வீட்டின் தண்ணீர் தொட்டியில் அவளது மாத விடாய் நம்கினை அதன் குழாயில் போட்டு அடைத்துவிட்டு வந்துவிடுவதாகக் கதை முடிவடையும். இதுதான் கொடுமைகளுக்கு எதிரான செயல்.
குறிப்பு: ஒரு சிலர் இவர்களை நன்முறையில் வழிநடத்தி அன்பாகப் பழகுவதும் இங்கு உண்டு. அதே சமயம் பெரும்பாலான சூழலில் இந்தக் கொடுமைகள் நடந்துகொண்டே இருக்க, சக உயிரைத் துன்புறுத்தும் அளவிற்கு நாம் என்ன அவ்வளவு மோசமானவர்களாகிவிட்டோமா? ஒட்டு மொத்த சமூகமே இந்தக் குட்டி முதலாளிகளின் போக்கு குறித்து கண்டனத்தை எழுப்ப வேண்டும். இந்தியாவிலிருந்து மலேசிய வரும் தமிழர்களை (ஒரு காலத்தில் நம் முன்னோர்களும் இப்படிப் பிழைக்க வந்தவர்கள்தான் என மறந்து) கொடுமைப்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது சர்வதேச அளவில் மலேசிய தமிழர்கள் குறித்து பலவீனமான மதிப்பீடுகளைக் கொடுக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இது வலுவடைவதற்கு முன் நம் குரல்கள் முதலில் தமிழர்கள் மத்தியில் உருவாகி வரும் இந்தக் குட்டி முதலாளித்துவத்தை உடைக்க வேண்டும்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா