Friday, October 2, 2009

ஒரு யுகத்தைக் கடக்கும் காலணிகள்

நகரத்தில் காலணிகளுக்குத் தனி மவுசு உண்டு. காலணி என்பது பாதைசாரிகளின் களையாத கனவுகள். சோர்ந்து போய்விட்ட அவர்களின் நகர வாழ்வைத் தாங்கிப் பிடித்துக் கொண்டி நகரத்தை வலம் வருவது அனேகமாக இந்தக் காலணிகளாகத்தான் இருக்க முடியும். தினமும் நகரத்தில் நடப்பவர்கள் நகரத்தில் இருப்பவர்கள் அணிந்திருக்கும் காலணிகள் விசித்திரமான யாரும் கவனியாத ஒரு பெரும் கடமையைச் செய்து கொண்டிருக்கின்றன.

அப்பாவிற்கு ஜப்பான் சிலிப்பர் அணியும் பழக்கமுண்டு. வெளியே போனாலும்கூட இந்த ஜப்பான் காலணியைத்தான் அணிந்து கொண்டு செல்வார். அந்தக் காலணிக்கு எப்படி ஜப்பான் பெயர் வந்தது என்பதில் இன்னமும் ஆச்சர்யம்தான். ஜப்பான்காரர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட காலணியாக இருக்கலாம் அல்லது ஜப்பான்காரர்கள் அறிமுகப்படுத்திய காலணியாகக்கூட இருக்கலாம்.

சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் வெள்ளை என்று எல்லாம் வர்ணங்களிலும் ஜப்பான் காலணி இரண்டு வார்களுடன் மிகவும் எளிமையாகக் காட்சியளிக்கும். நகரத்தில் பலர் இதை அணிந்து கொண்டு சுற்றித் திரிந்த காலம் ஒன்று இருந்தது. அனேகமாக நகரத்திற்கு நடந்து வரும் எளிமை மனிதர்களின் காலணியாக ஜப்பான் காலணிதான் இருந்திருக்க முடியும். அப்பாவும் அதில் ஒரு ஆள். வெயில் பொழுதுகளில் எப்படி ஜப்பான் சிலிப்பர் மிகவும் வசதியாகக் கருதப்பட்டதோ அதே போல மழைக் காலங்களில் அது அசௌகரிகமாகவும் கருதப்பட்டது. சதக் சதக் என்று யாரோ சிலர் கடைத் தெருக்களில் நடந்து வரும் ஓசையைக் கேட்டபொழுதெல்லாம் அந்த நபர் ஜப்பான் சிலிப்பர்தான் அணிந்திருக்கிறார் என்று சரியாக அனுமானிக்க இயன்றது.

அப்பா அவர் வைத்திருந்த இரண்டு ஜப்பான் சிலிப்பர்களையும் மிகவும் நேசித்திருக்கிறார் என்பதை அந்த ஜப்பான் சிலிப்பர் தைபூசத் திருவிழாவின்போது காணாமல் போன தினத்தன்றுதான் புரிந்து கொண்டேன். ஒரு சிலிப்பர் ஏற்கனவே வார் அறுந்து மூலையில் கிடந்திருந்தது. அடுத்த சிலிப்பர் திருவிழாவில் அப்பா எங்கேயோ வைத்து தொலைத்துவிட்டு, அன்று முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டார். அங்கேயும் இங்கேயும் வெறும் கால்களுடன் அலை மோதிக் கொண்டிருந்த அப்பாவை நாங்கள்தான் சமாதானப்படுத்தி அழைத்து வந்தோம்,

“வேற சிலிப்புரு வாங்கிக்கலாம்ப்பா”

“டே! என்னா பேசறே? அது மாதிரி வராது. . எத்தன வருசமா வச்சிருக்கேன் தெரியுமா? எஸ்டேட்ல இருக்கும்போதுலேந்து வச்சிருக்கேன்”

மறுநாள் எல்லோருக்கும் முன்பே அப்பா எழுந்து கொண்டு நகரத்திற்குக் கிளம்பிவிட்டார். திருவிழா தேர் சென்ற நகரத்துப் பாதைகளில் நடந்து போனால் அங்குதான் அவருடைய சிலிப்பர் எங்காவது இருக்கும் என்ற அபாரமான நம்பிக்கையில். அவருடன் நானும் சென்றேன். குறைந்த வாகனங்களுடன் நகரம் பரபரப்பிற்க்காக ஆய்த்த நிலையில் தயாராகிக் கொண்டிருந்தது. கோவில் தேர் சென்ற பாதைகள் ஐஸ் பாலித்தீன்களும், பொங்கல் கட்டிக் கொடுத்த பாலித்தீன்களும், தாள்களூம் என்று குப்பையாக இருந்தது. அதில் எங்கே அப்பாவின் காலணி என்று தேடுவது? அப்பா வேகமாக நடந்து முன்னேறினார்.

“அப்பா யாராவது போட்டுட்டு போயிருந்தாங்கனா? எப்படி இருக்கும்?”

“இருக்கும்டா. . எங்கயும் போயிருக்காது”

வழியில் பல இடங்களில் அறுந்த காலணிகள் முதல் தனது ஜோடியை இழந்த ஒற்றைக் காலணிவரை பார்க்க நேர்ந்தது. இப்படி நகரத்தில் நடக்கும் திருவிழா காலங்களில் காலணிகளைத் தொலைப்பதென்பது இயல்புதான். ஒற்றைக் காலணிகளைப் பார்க்கும்போது மனதில் ஒருவிதமான வலி உண்டாகிவிடுகிறது. யாரோ விட்டுச் சென்ற ஒற்றைக் காலணிதானே என்று அலட்சியமாக அவற்றைக் கடந்துவிட முடியவில்லை. ஏதோ ஒரு சோகத்தைச் சுமந்து கொண்டு நடு சாலையில் தவிக்கவிடப்பட்ட ஆன்மாவின் வாழ்வைப் போலவே அந்தக் காலணியின் தோற்றத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள முடிகிறது. எங்கு தேடியும் அப்பாவின் அந்த ஜப்பான் காலணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருவரும் நகர வாழ்விற்குக் கொஞ்சம்கூட தொடர்பில்லாத ஒரு காரணத்தால் ஏற்பட்ட சோகத்துடன் வீடு திரும்பினோம். அப்பா அதற்குப் பதிலாக புதிய ஜப்பான் காலணியை வாங்கிக் கொள்ளவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அறுந்துபோன பழைய ஜப்பான் சிலிப்பரை தைத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். பிறகுதான் நகரத்திற்குச் சென்று புதியதாக வேறோரு காலணியை வாங்கிக் கொண்டு வந்தார். அது ஜப்பான் சிலிப்பரல்ல. அவர் அதை மறந்திருந்தார்.

சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு மழைப் பொழுதில் நகரத்தில் அலைந்து கொண்டிருந்தபோது காலணி அறுந்து கொண்டது. அந்தச் சிலிப்பரை அணிந்துகொண்டு நடக்கவும் முடியவில்லை, அதைக் கழற்றியெறிந்துவிட்டு வெறும் கால்களில் நடக்கவும் கூச்சமாக இருந்தது. எப்படியோ சமாளித்துக் கொண்டு காலணி தைக்கும் கடைவரை நகர்ந்துவிட்டேன். அங்கு காலணி தைப்பவரின் கடையில் ஏற்கனவே அறுந்த சிலிப்பருடன் இரண்டு பேர் நின்றிருந்தனர்.

“இப்பத்தான் வாங்கனேன் அதுக்குள்ள பிஞ்சிருச்சி. என்னா சிலிப்பரோ?”

“இப்பலாம் சிலிப்பரு எங்க தாங்குது. அதுவும் ஜப்பான் சிலிப்பர் அறவே பாய்க்க முடியாது”

அப்பொழுதுதான் உற்றுக் கவனித்தேன். அந்த நபர் கையில் பிடித்துக் கொண்டிருந்தது ஜப்பான் சிலிப்பர். அதை வைத்திருந்தவரின் முகம் வெயிலில் கருத்துப் போயிருந்தது. பழைய சிலுவார் ஒன்றை அணிந்து கொண்டு முன் பாக்கெட் கிழிந்த சட்டையுடன் நின்றிருந்தார்.

“இது ஒன்னு 4-5 வெள்ளி சொல்றானுங்க தம்பி. எங்க வாங்கறது. நல்லா தெச்சி கொடுங்க”

“கித்தாலாம் தெச்சாலும் தாங்காது. சும்ம கொஞ்ச நாளைக்குப் பாய்க்கலாம், அவ்வளவுதான்”

அந்த நபரின் முகம் தளர்ந்து போவதைப் பார்த்தேன். ஜப்பான் சிலிப்பரையே பார்த்துக் கொண்டிருந்தார். திருவிழாவில் மட்டுமில்லை நகரத்தில் எந்த நேரத்திலும் யாரோ ஒருவரால் ஜப்பான் சிலிப்பர் வாழ்வின் எளிமைகளுல் முக்கியமான அம்சமாகக் கருதப்பட்டு வருகின்றன. வார் அறுந்த சிலிப்பருடன் இன்றும் நகரத்தில் சிலர் நடந்து கொண்டிருக்கிறார்கள், ஒருவேளை அவர்கள் அணிந்திருப்பது ஜப்பான் சிலிப்பராகக்கூட இருக்கலாம். நகரத்தின் ஒவ்வொரு காலத்திலும் புது புது காலணிகள் வந்து குவிந்த வண்ணமே இருந்தாலும், ஜப்பான் சிலிப்பர்களை அணிந்து கொண்டு நகரத்திற்குள் நுழையும் மனிதர்களை எங்கேயாவது பார்த்திருக்கீர்களா?

ஆக்கம் : கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி