Sunday, February 3, 2013

Life of Pi - பசியும் வாழ்தலும்


“நியதி எனும் பேருண்மைக்கு முன் அனைத்து உயிரினங்களும் சந்தர்ப்பவாதிகளே’

அங் லீ இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் உலகமெங்கும் பரவலாக விமர்சிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றது. நிறைய பேர் ஏன் அங் லீ இந்தியாவைப் படத்திற்கான பின்புலமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். அது கலைஞனின் தேர்வுக்கும் மனநிலைக்கும் தேடலுக்கும் உட்பட்டது. இதுபோன்ற கேள்விகளைவிட படம் எதனை நோக்கி ஒரு பார்வையாளனை இழுத்துச் செல்கிறது அல்லது எப்படி அவனுடைய நம்பிக்கைகளுடன் விவாதம் செய்கிறது என்பதே விமர்சனம்.

கதைச்சுருக்கம் / கதைக்களம்

பிரான்ஸ் காலனிய ஆட்சிக்குக் கீழ் இருந்த பாண்டிச்சேரி பார்ப்பதற்கே ஒரு குட்டி பிரான்ஸ் மாதிரித்தான் இருக்கும். பாண்டிச்சேரியில் மிருகக்காட்சி சாலையை வைத்துப் பராமரித்து வரும் ஒரு குடும்பத்தின் கடைசி மகனான ‘பை’ என்பவனின் கதைத்தான் இது. பை-யின் அப்பா வைத்திருக்கும் மிருகக்காட்சி சாலையின் நிலத்தை உள்ளூர் அரசாங்கம் மீட்கவே, மிருகக்காட்சி சாலையை விற்றுவிட்டு மிருகங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு பை-யின் அப்பா கனடாவிற்குச் செல்லத் தீர்மானிக்கிறார். இடையில் மிருகங்களை நல்ல விலைக்கு விற்றுவிடுவதாகத் திட்டம். இந்தியாவை விட்டுச் செல்ல ‘பை’க்கு மனமில்லை. ஜப்பான் கப்பல் ஒன்றில் மிருகங்கள் அனைத்தையும் ஏற்றிக் கொண்டு புறப்படும்போது பை சக்தியின்றி அழுகிறான்.