Wednesday, November 25, 2015

அ.முத்துலிங்கத்தின் இலையுதிர் காலம் : வாழ்க்கையை நினைவிலிருந்து அழிப்பது

இவ்வாழ்க்கை நம்மை ஒவ்வொரு கணமும் நகர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் நினைத்தப்படியும் நினைக்காதபடியும் எவ்விதத் திட்டமும் இல்லாமல் முன்னறிவுப்பும் இல்லாமல் வாழ்க்கை நம்மை நகர்த்தியப்படியே இருக்கிறது. வெறுமையிலிருந்து குதுகலத்திற்கும், சோகத்திலிருந்து சூன்யத்திற்கும், சோர்விலிருந்து மகிழ்ச்சிக்கும், ஏக்கத்திலிருந்து கவலைக்கும், கூட்டத்திலிருந்து தனிமைக்கும் என மாற்றி மாற்றி ஒவ்வொரு நாளும் நாம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். நகர்ச்சி நம் வாழ்வின் நித்தியம்.

இரவுவரை சிரித்துக் கும்மாலம் அடித்துவிட்டுப் படுத்துறங்கி மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது சட்டென ஒரு சோகம் மனத்தை இழுத்துப் பிடித்திருக்கும். ஏன் என்றும் தெரியாது. மறுநாள் அதே சோகம் வெறுமையாகியிருக்கும். பின்னர் ஏதாவது ஒரு சம்பவத்தின் வழி நாமே அதனிலிருந்து நம்மை மீட்டுக்கொள்வோம். சிறுக சிறுக வாழ்க்கை நம்மை ஏதாவது ஒரு நிலைக்குத் தள்ளியப்படியே நகர்வதை உணர்ந்திருக்கிறோமா?

.முத்துலிங்கத்தின் இலையுதிர் காலம் சிறுகதை அத்தகையதொரு நகர்ச்சியின் யதார்த்தத்தின் முன்பே என்னைக் கொண்டு போய் நிறுத்தியது. அக்கதையின் வழி நான் அடைந்த இடம் அதுவாக இருந்தது. வாசகனுக்கு வாசகன் இவ்விடத்தில் வேறுபடலாம். நான் ஒட்டுமொத்த வாசகனுக்கான எல்லையை என் வாசிப்பின் வழியோ அல்லது இக்கதையில் நான் கண்டடைந்ததன் வழியோ நீர்த்துவிட முனையவில்லை. எல்லா நல்ல கதைகளுமே நமக்கான ஒரு திறப்பை வைத்திருக்கிறது. நம் முன் அனுபவங்களுடனோ நம் நம்பிக்கைகளுடனோ உரையாட விளைகிறது. எனக்கான திறப்புத்தான் எல்லோருக்குமானது என நிலைநிறுத்தும் எழுத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

.முத்துலிங்கம் அவர்களுடன் 2006ஆம் ஆண்டில் நிறைய மின்ன்ஞ்சல் உரையாடலை மேற்கொண்டுள்ளேன். மிகவும் தன்மையான மனிதர். அவருடைய உறவினர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருப்பதால் அடிக்கடி மின்னஞ்சலில் பேசும்போது குழம்பிவிடுவார். அவ்வருடம் மட்டுமே அவருடன் தொடர்பில் இருந்தேன். அதன்பிறகு நானும் வேறு எழுத்தாளர்களுடன் பேசத் தொடங்கியதும் அவரிடமிருந்து நகர்ந்துவிட்டேன். நகர்வு எத்தனை கசப்பானதாகத் தோன்றினாலும் அது யதார்த்தம் என்பதை நம்முடைய வாழ்பனுவங்கள் உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன.

இக்கதையின் கதைச்சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. தன் பக்கத்து வீட்டுக்காரரான 70 வயது நிரம்பிய சூஸனைப் பற்றி விவரிப்பதிலிருந்து கதை ஆரம்பமாகிறது. கடந்த பல ஆண்டுகளாகத் தனிமையில் வாழும் ஒரு வயது முதிர்ந்த பெண்ணைப் பற்றிய சித்தரிப்புகள் அடங்கிய கதை. நான் அறிந்த பலர் எப்பொழுதும் வயதானவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. அவர்களைப் பற்றி பெரிதாக அபிமானங்களும் இருப்பதில்லை. வயது முதிர்ந்துவிட்டதாலே அவர்கள் மரணத்திற்காகக் காத்திருக்கும் ஒரு ஜடமாக மட்டுமே பார்த்துப் பழகிவிட்ட பொதுமனங்களுக்கு இக்கதை ஆழமான பாதிப்பை உருவாக்கக்கூடும்.

நாங்கள் கம்போங் ராஜாவில் இருந்தபோது என் வீட்டுப் பக்கத்திலும் ஒரு தனித்த சீனக்கிழவி பல வருடங்கள் தங்கியிருந்தார். அவருடைய மகன் மாதம் இருமுறை அல்லது ஒருமுறை வருவார். அங்கிருந்த இன்னொருவர் மூலம் அவருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டதைத் தவிர அவருக்கு வேறு நாதியில்லை. வீடு முழுக்க உலாவிக் கொண்டே இருப்பார். வீடு முழுக்க அவரே நிரம்பியிருந்தார். ஏதாவது செய்து கொண்டே இருப்பார்.

Saturday, November 21, 2015

தீபாவளி படங்கள் ஒரு பார்வை

இவ்வருடம் தீபாவளிக்கு அஜித் நடித்தவேதாளம்படமும் கமல்ஹாசனின்தூங்காவனம்படமும் திரைக்கு வந்தன. மலேசிய அளவில் வேதாளம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தப் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் கதாநாயகனை முன்வைத்தே ஒரு படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. கதாநாயக வழிபாடு எப்படி உருவானது என்றால் ஒரே மாதிரியான மசாலா படங்களில் நடித்து நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற பிறகு ஒரு கதாயாகன் கொண்டாட்டத்திற்குரியவனாக மாறுகிறான்.

அவ்வகையில் கமல் அஜித் அளவிற்கான மாஸ் கதாநாயகன் கிடையாது. நடிப்புக்கும் கதைக்கும் தன்னைத் தைரியமாக அர்ப்பணித்துக் கொள்ளும் கலைஞன். தன்னைப் பின்னே வைத்துக் கதையை முன்னுக்குத் தள்ளும் படங்களில் கமல் நடித்திருந்தாலும் விஷ்வரூபம் போன்ற படங்களில் தன்னை மட்டுமே முன்னிறுத்துபவராகத் தோன்றினார். இதற்கிடையில் தன்னால் மாஸ் ஹீரோவாக மட்டுமே தோன்ற முடியும் எனத் தன் படங்களில் காட்டி வந்தாலும்என்னை அறிந்தால்போன்ற படங்களுக்காகத் தன் கதாநாயகத்துவங்களை விட்டுக் கொடுக்கவும் அஜித் தயங்கியதில்லை என்றே சொல்ல வேண்டும். ஆக, இரண்டு முக்கியமான கதாநாயகர்களின் சினிமாவான தூங்காவனமும் வேதாளமும் தமிழுக்கு மேலும் நல்ல ஜனரஞ்சகத்தனமான படம் என்றே அடையாளப்படுத்தலாம்.

வேதாளம்

தமிழ் சினிமாவின் அரதப்பழசான தங்கை பாசத்தை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட படம். திருப்பங்கள் மிக்க திரைக்கதையால் வேதாளம் அதனை மறக்கடிக்கிறது. தத்தெடுத்துக் கொண்ட தன் தங்கையின் குடும்பத்தைக் கொன்ற சர்வதேசக் குற்றவாளிகளான சகோதரர்களை வேதாளத்தைப் போல பழி வாங்குகிறார் முன்னாள் ரௌடி அஜித். இதுதான் படத்தின் மையக் கதை. பழிவாங்குதலும் தங்கை பாசமும் தமிழ் சினிமாவின் சலித்துப் போன கூறுகளாகும். மொத்த தமிழ் சினிமாவும் பழி வாங்குதலின் நியாயங்களைப் பேசியே புழுத்துப்போனவையாகும். பேய் படத்திலிருந்து நாய் படம் வரை பழிவாங்குதலின் மையச் சரடைப் பிடித்துக் கொண்டு நகர்ந்தே பழக்கப்பட்டுவிட்ட தமிழ் சினிமா சூழலில் மேலுமொரு பழி வாங்கும் பாங்கில் வரக்கூடிய படம் திரைக்கதையைக் கவனப்படுத்தினால் வெற்றிப் பெற்றுவிடும் நிலையே தற்பொழுது உருவாகியுள்ளது.

ஆகவே, வேதாளம் படத்தின் கதையில் எங்குமே புதுமை இல்லையென்றாலும் திரைக்கதையில் முன்னும் பின்னுக்குமான திருப்பங்களை வைத்து சமாளித்துவிட்டார்கள். அடுத்து, வேதாளம் படத்தின் பலம் என்றால் அது அஜித் தான். எப்பொழுதும் போல் இல்லாமல் உணர்ச்சிப்பூர்வமான வன்முறை வெளிப்பாடுகளைத் தன் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ரோஷமான தன் உணர்வுகளின் ஆழ்நிலை அலைகளைப் பிதுக்கி தன் முகப்பாவனையில் வெளிப்படுத்துவது ஆச்சரியமாக இருந்தது. தமிழ் சினிமாவின் வழக்கமான மாஸ் கதாநாயகர்களின் சண்டை காட்சிகள் என்பது நிறையபன்ச்வசனங்களும் ஓர் ஒற்றை கோபமும் மட்டும் இழையோடும். ஆனால், அஜித் தோன்றும் சண்டை காட்சிகளில் சிலவற்றில் வழக்கத்தைவிட்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு தளத்திற்குள் நின்று தன்னை வெளிப்படுத்துகிறார். அது மட்டுமே வேதாளம் படத்தின் கூடுதல் பலம். இயக்குனர் சிவா மேலும் தமிழ் சினிமா கவனப்படுத்தாத நல்ல கதைகளைக் கொண்டு சமூகத்திடம் உரையாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.