இரண்டாவது, நான் இதற்கு முன் எழுதிய அனைத்து சினிமா விமர்சனக் கட்டுரைகளும் என் வலைத்தலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. ஆகவே, இது என்னுடைய முதல் சினிமா விமர்சனக் கட்டுரை அல்ல என்பது புரியும். (http://bala balamurugan.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D )
வெகுஜன இரசனை
பொதுமக்களின் பெரும்பான்மையான இரசனையின் வளர்ச்சியே கலையை நகர்த்துகிறது, கலையைப் பொருளாதார ரீதியில் வெற்றியடைய வைக்கிறது. ஒரு கலைக்கு நிச்சயம் பொருளாதார வெற்றி ஒரு தலையாய பொருட்டே கிடையாது. ஆனால், கலையை வளர்க்கவும் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தவும் பொருளாதாரம் நிச்சயம் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
ஆகவே, இன்றைய கலையின் பொருளாதார வெற்றியை நிர்ணயம் செய்வது பொதுமக்களின் இரசனையே. இரசனை என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாழும் சமூகத்தினரால் தீர்மானிக்கக்கூடியவை. அனைவருக்குமான ஒன்று எனச் சமூகம் அதிகார்வப்பூர்வமற்ற நிலையில் தனக்கான இரசனையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அதன் வழியில் வரக்கூடிய அனைத்தையும் அச்சமூகம் வரவேற்று வெற்றியைத் தேடித் தருகிறது. சமூக இரசனைக்கு எப்பொழுதுமே ஒரு போராட்டமும் போட்டியும் அவசியமாகத் தேவைப்படுகிறது. காலம் முழுக்க சினிமா துறையில் மட்டுமே இந்தப் போட்டித்தன்மை பின்பற்றப்பட்டும் வருகின்றது.
எம்.ஜி.ஆர்- சிவாஜி, கமல் – ரஜினி, விஜய் – அஜித், இப்பொழுது சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி என இந்தப் பட்டியல் காலத்திற்கும் தொடர்கின்றது. இந்தப் பட்டியலையும் போட்டியையும் உருவாக்குவது அந்தந்த நடிகர்கள் அல்ல. இது ஒரு வகையில் சமூகத்தின் இரசனை கொண்டாட்டம். தனக்கு பிடித்த ஒரு மாஸ் கதாநாயகனை முன்னிலைப்படுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமா அவர்கள் செய்யத் துவங்குகிறார்கள். அது ஒரு சங்கமாக மாறுகிறது. இப்படித்தான் சமூக பொது இரசனை கூட்டுச் சேர்க்கப்பட்டு ஒரு கொண்டாட்டமாகவும் போட்டியாகவும் மாறுகிறது. அஜித் ஒரு குப்பை படம் நடித்துக் கொடுத்தாலும் அது வெற்றியாவதற்கு இதுபோன்ற கூட்டுமுறையிலான இரசனையே காரணம் என நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இரசனைக்கும் சமூகத்திற்குமான தொடர்பைப் புரிந்துகொள்ள முதலில் அந்தச் சமூகம் எவ்வித மனநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏதோ நெருக்கட்டிக்குள்ளும் வறுமைக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வெகுஜன சிந்தனை புரட்சி என்பதே அங்கு மிகவும் சொற்பமாகவே நடக்கின்றது. படித்த மக்கள் எப்பொழுதுமே எல்லாம் நாட்டிலும் பொதுபுத்தியை பொது இரசனையைத் தீர்மானிப்பவர்கள் அல்ல. அவர்கள் சிறுபான்மையினர்.
பெரும்பாலும் ஒரு நாட்டில் படித்தவர்களைவிட படிக்காதவர்களே அதிகமாக இருக்கிறார்கள். படித்தவர்கள் மட்டும் அப்படி என்ன தனித்துவமாக இருக்கிறார்கள் என்று கேட்டாலும் அதற்கும் பதில் இல்லை. அவர்கள் ஒரு உயர்த்தரக் கூலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். (விதிவிலக்குகள் உள்ளனர்). ஆனாலும், வெய்யிலுலும் புழுக்கத்திலும் மழையிலும் உழைத்துத் தொய்ந்து ஏதோ கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் வாழ்ந்துகொள்ளும் சராசரி மக்களே இன்று எல்லாம் நிலங்களிலும் குவிந்து கிடக்கிறார்கள். அவர்களை நோக்கியதாகவே சினிமா உலகம் வியாபார உத்திகளைப் பாவித்து வருகிறது. கலை உச்சம், கலை வெளிப்பாடு என்பது சொற்பமாகவும், தமிழ்நாட்டின் பெரும்பான்மை இரசனைகளை மனத்தில் கொண்டு வியாபார சந்தையைப் பெருக்கிக் கொள்ள ஏற்கனவே இரசனையாக்கப்பட்ட ஒன்றை எவ்விதத்திலும் கலைக்காமல் மீண்டும் மீண்டும் அதையே கொடுக்கும் ஒரு நிலைக்கு இன்று தமிழ் சினிமா ஆளாகிவிட்டது.