சமீபத்தில் பூனேயிலுள்ள மிருகக்காட்சிசாலையில் வெள்ளைப்புலி
இருந்த வளாகத்திற்குள் ‘தவறி’ விழுந்த வாலிபரின் மரணம் குறித்து எல்லோரும் நெருக்கமாக
உணர்வோம். ஏன் நெருக்கமாக உணர்கிறோம் என்றால் அவரின் கழுத்தைப் அந்தப் புலி கொவ்வி
இழுத்துப் போகும் காணொளியைத்தான் நாமெல்லாம் பகிர்ந்தும் பார்த்தும் இரசித்தும் விட்டோமே.
நான் பெரும்பாலும் இதுபோன்ற படங்களையோ அல்லது காணொளிகளையோ
பார்க்கத் தவிர்ப்பேன். எனக்கு ‘ஒரு புலி ஒரு வாலிபனைக் குதறி கொன்றுவிட்டது’ என்ற
செய்தி மட்டுமே போதும். அதுவே ஆயிரம் கற்பனைகளுக்கு இட்டுச்செல்லும். அப்படியிருக்க
ஏன் அப்புலி குதறுவதையும் கொவ்வுவதையும் நான் பார்க்க வேண்டும்? அது ஒருவிதமான கொடூர
மனநிலைக்கு இட்டுச்செல்கிறது. சமீபமாக இதுபோன்ற நிக்ழ்ச்சிகளை நேரம் செலவிட்டு காணொளியாகப்
பதிவு செய்ய எப்பொழுதும் சிலர் தயாராக இருக்கின்றார்கள். அது ஒரு பழக்கமாக மாறிக்கொண்டிருக்கிறது.
எனக்கு, பசியால் வாடி வதங்கி இறக்கப்போகும் ஒரு கருப்பினத்தின்
சிறுவனைக் கொல்வதற்காகக் காத்திருக்கும் கழுகொன்றின் புகைப்படமும் அதனைப் புகைப்படம்
எடுத்த உலகப் புகழ்ப்பெற்ற புகைப்படக்கலைஞரின் ஞாபகமும் வருகின்றன. பசியின் கொடுமையை
உலகிற்குச் சொன்ன புகைப்படம் அது. பல விருதுகளும் கிடைத்தன. ஆனால், சில நாட்களுக்குப்
பிறகு அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் தற்கொலை செய்து கொண்டார். பசியின் கொடுமையில்
சிக்கியிருந்த அந்தச் சிறுவனுக்கு ஒரு பருக்கை சோற்றை அந்த நேரத்தில் கொடுக்க வக்கில்லாமல்
புகைப்படம் எடுத்து அதன் மூலம் விருதையும் பணத்தையும் பெற்ற குற்ற உணர்ச்சியே அவரைக்
கொன்றுவிட்டது.