Friday, December 30, 2011

இந்தியப் பயணம்-4 அம்மாயும் கல்லநேந்தல் கிராமமும்


தஞ்சாவூர் பேருந்து நிலையத்திற்கு நானும் விஷ்ணுபுரம் சரவணனும் வந்து சேர்ந்தோம். பேராசிரியர் வெற்றிச்செல்வனிடமிருந்து விடைப்பெற்று புதுக்கோட்டைக்குப் பயணப்பட்டேன். தங்சாவூரிலிருந்து மேலும் ஒரு 3 மணி நேரம் பயணம். தஞ்சை பெரிய கோவிலைத் தரிசித்த பிரமிப்புகள் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றின. புதுகோட்டை பேருந்து நிலையம் பரப்பரப்பாகவே காணப்பட்டது. பேருந்திலிருந்து இறங்கியதும் நீண்ட சாக்கடை. வரிசையாக ஐவர் நின்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர். சாக்கடை கருமையாகி ஓடிக்கொண்டிருந்தது.

Thursday, December 29, 2011

கவிதை: ஆண்களின் கழிப்பறை

மன்னிக்கவும்
உள்ளே நுழைவதற்கு 30 சென் செலுத்தியாக வேண்டும்
வசூலிக்க ஆள் இல்லாவிட்டாலும் சிதிலமடைந்துவிட்ட மேசையின் மீதுள்ள
பழைய தகற குவளையில் நீங்கள் போடும் சில்லறைகள்
பேரோசையாகக் கேட்க வேண்டும்.

Sunday, December 25, 2011

கலை இலக்கிய விழாவும் – நான்கு மலேசியப் படைப்பாளிகளின் நூல் வெளியீடும்


நண்பர்களின் கவனத்திற்கு,

வருகின்ற பிப்ரவரி மாதம் வல்லினம் பதிப்பகம்-இதழ் , கலை இலக்கிய விழாவை நடத்தவுள்ளது. தமிழக எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான ஆதவன் தீட்சன்யா மற்றும் அ.மார்க்ஸ் அவர்களும் இவ்விழாவில் சிறப்புரை வழங்கவுள்ளனர். மேலும் மலேசிய இளம் எழுத்தாளர்களின் 4 நூல்களும் விழாவில் வெளியீடப்படும்.

1. கே.பாலமுருகன்-‘தீர்ந்து போகாத வெண்கட்டிகள்’- குழந்தைகள் சினிமாவைப் பற்றிய பதிவுகள்
2. ம.நவீன் – ‘கடக்க முடியாத காலம்’ சமீபத்தில் நவீன் எழுதிய கட்டுரைகள்/பத்திகள் தொகுப்பு
3. சிவா பெரியண்ணன் -‘என்னை நாயென்று கூப்பிடுங்கள்’- கவிதைகள்
4. யோகி – ‘துடைக்கப்படாத இரத்தக் கறைகள்’- பெண்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் கட்டுரைகள்

Thursday, December 22, 2011

இந்தியப் பயணம்(3) – பாரதியார் தேசம்


(barathiyar house)
(நான் பயணத்தைத் வரிசைக்கிரகமாக-தொடராக எழுதவில்லை, ஆகையால் இது நான் இந்தியா சென்ற ஐந்தாவது நாள்) கழுகு மலைக்குச் சென்று வந்த மறுநாள், எட்டயப்புரம் போவதாகத் திட்டம். பாரதியார் பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என ஏற்கனவே செல்மாவிடம் சொல்லியிருந்தேன். அதைப் பற்றி மறந்திருப்பினும் கோணங்கி அண்ணன் இத்தனை தூரம் வந்தாயிற்று, எட்டயப்புரம் அருகாமையில்தான் இருப்பதாகக் கூறி காலையிலேயே அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார். காலையில் எழுந்ததும் கோணங்கி அண்ணன் வீட்டில் மேல்மாடியிலிருந்து கோவில்பட்டி இரயில் தண்டவாளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் வீட்டு மொட்டைமாடி விசித்திரமாக இருந்தது. தாராளமான இடம். அவர் குடியிருப்பிலேயே நான்குக்கு மேற்பட்ட வீடுகள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. கோணங்கி இருந்த வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி அவருடைய அப்பா தனி அறையில் வசித்துக்கொண்டிருந்தார். முதல் நாள் இரவே அவரையும் சென்று சந்தித்திருந்தோம். அவரும் ஒரு வரலாற்று நாவலாசிரியர்.

Tuesday, December 20, 2011

சிறுகதை: குளியல்

 1
துண்டை இழுத்துக் கட்டும்போது அது தொடைவரை இறங்கி கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. என்னுடைய குளியல் நேரம் சரியாக 6 மணிக்குத் தொடங்கும். முன்கதவை அடைத்துவிட்டு அறைக்கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு முதலில் ஆடையைக் களைவேன். சிறிது நேரம் நிர்வாணமாக இருப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு குளியலுக்கு முன்பும் குளியலின் போதும் உருவாகும் இந்தக் கணம் மட்டுமே. 5 நிமிடம் வந்து போகும் என்னுடைய நிர்வாணம் ஒட்டு மொத்த உலகையே கேலி செய்வது போல இருக்கும்.

நான்சுவர் இல்லாமல், கதவு இல்லாமல், மறைப்பேதும் இல்லாமல், ஒரு சவர்க்காரம், தண்ணீரை அள்ள ஒரு கை வாலி, இது மட்டும், பிறகு ஒரு

Saturday, December 17, 2011

தீர்ந்துபோகாத வெண்கட்டிகள் - சினிமா புத்தகம்

இவ்வருடம் வல்லினம் பதிப்பில் வரும் மூன்றாவது புத்தகம், கே.பாலமுருகனின் 'தீர்ந்து போகாத வெண்கட்டிகள்'. மலேசியாவில் முதன் முதலாக உலக திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. வல்லினம் இணைய இதழில் இந்த வருடம் கே.பாலமுருகன் எழுதி 10 தொடர்களாக வந்த கட்டுரைகளைத்தான் இதில் தொகுத்துள்ளோம்.                   - வல்லினம்
சினிமா என்பது கலை என மீண்டும் மீண்டும் நிருபிக்க வேண்டியிருக்கிறது. அசலான படைப்புக்கும் உலக சினிமாக்களைக் காப்பியடித்து மறுபிரதியெடுக்கும் கற்பழித்தல் முயற்சிக்கும் மத்தியில் எது உண்மையான படைப்பு எது சினிமா என அரைகுறை அறிவுக்கூட இல்லாதவர்களிடம் தொடர்ந்து சினிமா சார்ந்து உரையாட வேண்டியிருக்கிறது. சினிமா என்ற கலையைக் காலம்தோறும் மழுங்கடிக்கும் ஒரே விசயம் 'வெகுசன இரசனைத்தான்'. இன்னும் நூற்றாண்டு பல கடந்தாலும் சினிமா என்பதை அக்குளில் கிச்சுகிச்சு மூட்டி மகிழ்ச்சிப்படுத்தும் ஒன்றாக மட்டுமே புரிந்துகொள்ளப்படும் அவலம் இங்கிருக்கிறது. (மாற்று இரசனைக்குத் தயாராக வேண்டும்) 
- கே.பாலமுருகன்

Wednesday, December 14, 2011

இந்தியப் பயணம் – பரப்பரப்பும் அமைதியும் (2)


3 மணிநேரம் 30 நிமிடத்திற்குப் பிறகு சென்னை விமான நிலையம் வந்திறங்கியப் போது பயணக் களைப்பை உணர முடியவில்லை. உடலுக்கு ஒரு தயாரிப்பு நிலை இருக்கிறது. நம்முடைய உடல் மீதான பலவகை கற்பிதங்களையும் கடந்து உடல் தன்னை உற்பத்தி செய்து கொள்கிறது. சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைகளும் பாதுகாப்பும் கொஞ்சம் கெடுபிடியாகவே இருந்தது. நான் அங்கு வந்து இறங்கியத் தினம் கனிமொழி விடுதலையாகி அநேகமாக இங்கு வரக்கூடும் என ஷோபா சக்தி சொல்லியிருந்தார். அந்தப் பரப்பரப்பை அதனுடன் தொடர்புப்படுத்திப் புரிந்துகொண்டேன். ஆனால் கடைசி வரை கனிமொழியைப் பார்க்க முடியவில்லை.

Monday, December 12, 2011

இந்தியப் பயணம் – அறிமுகங்கள் (1)



இலக்கியப் பயணம் எனச் சொல்லிவிட்டுச் சென்றதெல்லாம் ஒரு பாவனைத்தான். இங்கிருந்துதான் ஆண்டுதோறும் பல ‘எழுத்தாளர்கள்’ இலக்கியப் பயணம் செல்கிறார்களே. அவர்கள் போதாதா மலேசிய இலக்கியத்தைக் கடல் கடந்து சென்று வளர்க்க? கவிஞர் செல்மா அவர்களுடன் பேசித் தீர்மானிக்கப்பட்ட பயணம் இது. அங்குள்ள எழுத்தாளர் நண்பர்களுடன் ஒரு நட்பை ஏற்படுத்திக்கொள்வதே முதண்மையான நோக்கமாக இருந்தது. அதன்படி சென்ற முதல்நாள் முதல் இறுதிநாள் வரை பல சமயங்களில் கவிஞர் செல்மா பிரியதர்ஷனும் யவனிகாவும் உடன் இருந்து என்னுடன் பயணித்தார்கள்.

Sunday, November 27, 2011

இந்தியா பயணம்


இந்தியாவிற்குப் பயணப்படுகிறேன். நாளை மறுநாள் காலையில் இந்தியாவில் இருப்பேன். மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை மேலும் சில ஊர்களில் இலக்கிய நண்பர்களையும், தமிழ்த்திரைப்பட இயக்குனர்களையும் சந்தித்து உரையாடும் நோக்கத்தோடு பயணிக்கிறேன். இந்தப் பயணம் அர்த்தமுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை உண்டு. முடிந்தவரை மலேசிய இளம் படைப்பாளர்கள் இங்குச் செய்துகொண்டிருக்கும் மாற்று முயற்சிகளை அறிமுகப்படுத்தி அங்குள்ள இளம் படைப்பாளர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தமிழ் இலக்கியச் சூழலில் செயல்படும் வகையாக என் பயணம் அமையும் என நினைக்கிறேன். 12 நாட்களுக்குப் பிறகு மலேசிய திரும்பியதும் ஒரு வாரம் சிங்கப்பூர் பயணம். அதுவும் இலக்கியம் தொடர்பானதாக அமைகிறது. 

திரைப்படம்: மயக்கம் என்ன? குரூரமான சினிமா பார்வையாளர்கள்


செல்வராகவனின் படம் என்பதால் அதில் வழக்கமாக இருக்கப் போவது மனச்சிதைவு தொடர்பான அதீதமான பதிவுகள். ஒரு தமிழனுக்கு மனச்சிதைவு வந்தால் அவனை அது அதீதமான மன எழுச்சிக்கு உட்படுத்தும் என்பதைப் போல தன் படத்தின் வழி மனக்கோளாறுகளின் பல எல்லைகளைத் தொட முயன்றவர். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மையைத் தழுவி நின்றது என்பது விமர்சனத்திற்குரியது. ஆனால் செல்வராகவனின் படங்களில் வெறும் காதலால் மட்டும் மனச்சிதைவின் சாத்தியங்களை உருவாக்கிக்காட்டுவது தொடரக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. மயக்கம் என்ன அதற்கு மாறான ஒன்றைக் காட்டிச் செல்கிறது.

Thursday, November 24, 2011

My short film: Go Back

My recent short film: just a trial for memorial of harvard 3 tamil school.

starring: henrey, Nalini, my some students, and Siti.
story, direction, cinematography: K.Balamurugan

http://www.youtube.com/watch?v=tjQ5pqYjkGo

Saturday, November 19, 2011

கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”

 சமீபத்தில் கோ.புண்ணியவான் தன்னுடைய மூன்றாவது சிறுகதை தொகுப்பைப் பிரசுரித்திருந்தார். அதன் புத்தக வெளியீடு சுங்கைப்பட்டாணியில் 'கார்னிவல்' எனும் மண்டபத்தில் நடந்தேறியது. மலேசிய தமிழ் இலக்கிய சூழலில் வெகுகாலம் எழுதிக் கொண்டிருப்பவர் கோ.புண்ணியவான். 2005 ஆம் ஆண்டில் கல்லூரியில் பயிலும்போது அவருடைய சிறை நூலின் வழி கதைகளைப் படித்திருக்கிறேன். மேலும் 2008ஆம் ஆண்டு தொடங்கி அவருடைய சிறுகதை வளர்ச்சியையும் கவனித்து வருகிறேன். 2009ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய இதழான 'உயிர் எழுத்து' இதழில் அவர் சிறுகதை எழுதத் துவங்கிய பிறகு பெரும் மாற்றங்களை அடையாளம் காண முடிந்தன. மேலும் பேரவை கதை போட்டியில் மட்டுமே 12 முறைக்கு மேல் தன் சிறுகதை திறனைத் தொடர்ந்து பரிசோதித்து வெற்றியும் பெற்று வரும் ஒரே எழுத்தாளர். 

‘எதிர்வினைகள்’ எனும் அவருடைய சமீபத்திய சிறுகதை தொகுப்பில் மொத்தம் 17 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

Tuesday, November 8, 2011

கவிதை: ஒரு சொல்லைக் கொன்றவுடன் அடக்கம் செய்யவும்

ஒரு சொல் ஊனமானதுடன்
தன் மீதான அனைத்து குரல்களையும் கொன்றுவிடுகிறது.
ஒரு சொல்லை எப்படி ஊனமாக்கலாம்?
பெரும் வாக்கியத்துக்குள் அர்த்தமற்று நுழைக்கலாம்
தனி வாக்கியத்தில் பிழையான பொருளுடன் உள்நுழைக்கலாம்
குறிலை நெடிலாக்கி நெடிலைக் குறிலாக்கி துணைக்காலைப் பிடுங்கியெடுத்து
சொல்லுக்குள்ளிருக்கும் எழுத்தை எப்படிவேண்டுமென்றாலும் மாற்றிச் சிதைக்கலாம்.
ஊனமான ஒரு சொல்லைப் பிறகெப்படிக் கொல்வது?

Monday, November 7, 2011

கவிதை: வீட்டில் இருப்பதைப் பற்றி

நான் எங்கேயும்  போவதற்கில்லை
ஆகையால் வீட்டில்தான் இருக்கிறேன்.
ஒவ்வொரு இரவுகளையும்
மௌனமாகக்  கவனித்தபடி இருக்கும்
நான் வழக்கமாக
வீட்டில்தான்  இருக்கிறேன்.
உறங்கி எழும்போது
நான் வீட்டில் இருப்பதை
மறப்பதில்லை.
எல்லாப் பொழுதுகளையும்
பாதுகாப்புடன் கடக்க
எனக்குத்  தேவை
நான் வீட்டில் இருப்பது.

Friday, October 28, 2011

ஆஸ்திரேலிய சினிமா: திருடப்பட்டத் தலைமுறை (Rabbit Proof Fence

1500 மைல்
நிலத்தை எரிக்கும் வெயிலை மிதித்தப்படி
ஊர் தேடி அலையும் பறவைகள் போல
வேலிகளைக் கடக்க முடியாத ஒரு பயணம்”

பிலிப் னோய்ஸ் 2002 ஆம் ஆண்டு இப்படத்தை இயக்கி வரலாற்றில் ஒளிந்திருந்த சில உண்மைகளை உலகிற்குக் கொடுத்தார். சமீபத்தில் பினாங்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் போர் அருங்காட்சியகத்துக்குச் சென்றபோது, எப்படிப் பிரிட்டிஷாரால் மலாயாவைப் பிரிக்கும் எல்லையாகப் பயன்படுத்தப்பட்ட இடம், ஜப்பானிய காலக்கட்டத்தில் சிறையாகவும் வதை செய்யும் இடமாகவும் மாற்றப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அங்கிருக்கும் சுவர்களில் துப்பாக்கி குண்டுகளும் மரணித்தவர்களின் கதறல்களும் குருதி காய்ந்த வாடையும் எப்பொழுதும் பதிந்து கிடப்பது போன்ற சூழலை அதன் மௌனத்தை வைத்து உணர முடிந்தது. ஒவ்வொரு பிரதேசமும் இப்படியொரு வரலாற்றின் மரண ஓலத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. ஏதோ ஒரு பாசிச அரசு தனது

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு – முதல் பார்வை


படம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்கவிருந்த அனுபவத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. ஆகையால் இதை ஒரு சினிமா பார்வையாக மட்டும் மேலோட்டமாக எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன். காலத்தின் தேவைக்கருதி செயல்படுவதன் மூலம் சில சமயங்களில் சொற்பமாகப் பேசிச் செல்வதே நடைமுறைக்கு ஏற்புடையது.

‘வாகைச் சூட வா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு சமர்ப்பண வகை சினிமாவைப் பார்த்தேன். ஆகையால் இனி ‘சமர்ப்பண’ வகை சினிமாக்கள்

Saturday, October 22, 2011

குறுநாவல் தொடர்:தனிமையின் ஆயிரம் குரல்கள்


மிக விரைவில் குறுநாவல் தொடர் எழுதவிருக்கிறேன். வெகுநாட்களுக்குப் பிறகு இதை எழுத வேண்டும் எனத் தோன்றியிருக்கிறது. என் வலைப்பூவிலும் முகநூலிலும் இடம்பெறும். “தனிமையின் ஆயிரம் குரல்கள்”. ஒரு நகரத்தின் சிதைக்கப்பட்ட மனங்களின் எல்லையற்ற ஒழுங்கற்ற பதிவுகளும்.. மர்மங்களும் தற்கொலைகளும் நிரம்பிய கதைக்களம். குறிப்பு: வழக்கம் போல இது மாணவர்களோ அல்லது சிறுவர்களோ படிக்க வேண்டிய கதை அல்ல. உயிரோடு அல்லது மரணித்த யாரையும் குறிப்பிடும் நோக்கமும் இல்லை. 

கே.பாலமுருகன்

Sunday, October 9, 2011

தனி – சிங்கப்பூர் இலக்கிய சிற்றிதழ்



நண்பர் பாண்டித்துரை, பூங்குன்றன் பாண்டியன், அப்துல்காதர் ஷாநவாஸ் அவர்களின் முயற்சியில் இவ்வருடம் அக்டோபர் முதல் தனி இலக்கிய இதழ் வெளிவரத்துவங்கியுள்ளது. கடந்த வருடங்களில் வெளிவந்துகொண்டிருந்த ‘நாம்’ சிங்கப்பூர் இலக்கிய சிற்றிதழ்தான் இப்பொழுது மாற்று அடையாளங்களுடன் மேலும் பல மாற்றங்களுடன் வெளிவருகின்றது. அய்யப்பன் மாதவன், மாதங்கி, எம்.கே குமார், இராம கண்ணபிரான், ஷாநவாஸ் எனப் பலர் எழுதியிருக்கின்றனர்.

சிங்கப்பூர் மலேசிய இலக்கியத் தொடர்பிற்கு பல சமயங்களில்  களமாக இருந்து வருவது இது போன்ற சிற்றுதழ் முயற்சிகள்தான். கடந்த வருடம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் மலேசிய அநங்கம் சிற்றிதழை அங்கு அறிமுகப்படுத்த களம் அமைத்துக் கொடுத்தது வரை அந்த உறவு எப்பொழுதும் தொடர்கிறது. அதற்கும் முன்பு காதல் இதழ் ஒருமுறை அங்கு அறிமுகம் கண்டுள்ளது என்பதையும் நினைவுக்கூர்கிறேன். தனி இதழில் தொடர்ச்சியான மலேசிய இலக்கியவாதிகளின் பங்களிப்பு அவசியமானது. படைப்புகளை அனுப்ப விரும்புவோர் இந்த மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்:

கவிஞர் பாண்டித்துரை : thanimagazine@gmail.com

Thursday, October 6, 2011

திரை விமர்சனம்: வாகை சூட வா (கண்டெடுத்தான் காடும் கண்டெடுக்க முடியாத கலையுணர்வும்)


கண்டெடுத்தான் காடு எனும் ஒரு குக்கிராமத்தின் கதை இது. ஒரு பூர்வகுடி சாயலில் வாழும் மக்கள். செங்கல் அறுத்து அதை ஒரு சிறு முதலாளியிடம் விற்று வாழ்க்கையைக் கடத்துகிறார்கள். செங்கல் சூரையில் பெரியவர்கள் முதல் பிள்ளைகள்வரை வெயிலில் காய்ந்தவாறு வேலை செய்கிறார்கள். அவர்கள் கடைசிவரை நம்பி வாழ்வதே அந்த மண்ணையும் மண் கொடுக்கும் செங்கலையும்தான். படம் 1966 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. புழுதி பறக்கும் கிராமத்தின் மூலையில் இலையுதிர்ந்து நிற்கிறது ஒரு மரம். அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்கிற இலட்சியத்துடன் வாழும் விமல், ஒரு தனியார் அமைப்பின் மூலம் கண்டெடுத்தான் காட்டிற்கு வாத்தியாராக வந்து சேர்கிறார்.

Tuesday, October 4, 2011

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்

“நான் கவிதை சொல்லி, கவிஞனில்லை”- றியாஸ் குரானா
ஒரு கவிதையைக் கொல்ல முடியுமா? அல்லது கவிதை என நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு வெளியை வேரறுத்து புதிய கதைப்பரப்பை அதற்குள் நுழைக்க முடியுமா எனக் கேட்டால், அந்தக் கேள்வி சமக்காலத்துக் கவிதையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முறைமையாக இருக்கும் என நினைக்கிறேன். மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலைத் தேட முயன்ற நான் அதை றியாஸ் கவிதைகளுக்குள் கண்டடைந்திருப்பதாக ஒரு குற்றசாட்டை முன்வைக்கிறேன். கவிதைக்கு ஒரு கூட்டுப் புரிதலை நோக்கிய ஒரு களம் அவசியம் தேவைப்படும் எனச் சொல்வதற்கில்லை. ஒரு கவிதை இன்று பல்வேறு சமயங்களில் பலவகைகளில் புரிந்துகொள்ளப்படுகின்றது. மனதின் அந்தரங்கமான மொழித்தான் கவிதை எனச் சொல்லப்படுகிறது. அந்தரங்கமான ஒன்று ஒரு மனிதனின் ஆழ்மனதுடன் பேசும் உரையாடலை எப்படிப் பொதுவிற்குக் கொண்டு வந்து கலந்தாலோசிப்பது? அல்லது விவரமாகக் கருத்துரைப்பது? இதுவே இக்காலக்கட்டத்தின் கவிதையை நோக்கி நாம் முன்வைக்கும் சவாலாகக்கூட இருக்கலாம்.

Sunday, October 2, 2011

சிறுகதை: ஒரு மேசை உரையாடல்







“வா மணி!”

“கேங் சண்டன்னா சொல்லு... எறங்கிருவோம்... இப்படிப் பேச்சுக்குக் கூப்டறது எனக்குச் சரியா படல...”

“ரிலேக் பண்ணு மணி... முனியாண்டி கேங்ல சேர்ந்தோனே துள்ளற பாரு... முன்ன எங்க இருந்த நீ? கொஞ்சம் தெரிஞ்சி பேசு...”

“பாங்... இந்தப் பழைய கதைலாம் பேசத்தான் கூப்டிங்களா?

“இரு மணி. ஒரு கருப்பு பீரு சொல்லட்டா? டென்ஷன் ஆகாத... சண்டைக்கு வரச் சொல்லல... ஆப்பே ஹீத்தாம் சத்து”

“நான் முனியாண்டி, தியாகு... இப்படி யார் கேங்லயும் இருப்பன். என் மனசுக்கு யாருகிட்ட இருக்கணும்னு சொல்லும்...”

“ஆமாம் மணி. நீ யாரு... செம்ம ஜாமான்காரன்...”

“இப்ப என்னா குத்திக் காட்டறீங்களா? இந்தக் கஞ்சா தொழிலுக்கு யாரு என்னை இழுத்துக்கிட்டு வந்தது?”

“சரிடா... மணி. நாந்தான். ஆனா, கத்துக்கொடுத்த குருவுக்கே நீ செய்யற பாரு...”

“தொழில்னா எங்க பூர முடியுமா அங்க பூந்துகிட்டுப் போக வேண்டியதுதான்... இதுல குரு கிருலாம் இல்ல...”

“ஓ... அப்படியா மணி? ஜாலான் காசுலாம் வாங்கறீயா?”

“தோ பாருங்க பாங். இப்ப நான் உங்க கேங்ல இல்ல. சும்மா என்ன ஏன் கேள்விக் கேக்குறீங்க? நான் எங்க காசு வாங்கனா என்ன?”

“எல்லா மறந்துட்டியா மணி? உன் தங்கச்சி சரசு எப்படி இருக்கு? இன்னும் ஜாமான் விக்குதா?”

“பாங்... அது என் இஷ்டம். என் தங்கச்சி. எங்க எப்படி வைக்கணும்னு எனக்குத் தெரியும். நீங்க நாட்டாம செஞ்சிக்கிட்டு இருக்காதீங்க...”

“மணி. ரொம்ப தப்பு பண்ற... நம்ம கேங்ல ஒரு சட்டம் இருக்கு. பொம்பளைங்கள உள்ள இழுக்கக்கூடாது. அவுங்கள தொந்தரவு செய்யக்கூடாது... தெரியும்ல?”

“பாங்... நான் உங்க கேங் இல்ல. எதுக்கு உங்க சட்டத்த நான் மதிக்கணும். வெளாட்டுக் காட்டிக்கிட்டு இருக்காதீங்க... எல்லா கஞ்சா கைகங்கத்தான்... அப்புறம் என்ன சட்டம் திட்டம்?”

“மணி... நல்லா பேசறடா. ஜாலான் காசு, பொம்பள அது சரி நான் உன்ன ஏன் கூப்டன்னா... நம்ம பையன் ஒருத்தன் பாப்ல ஜாமான் தள்ளிக்கிட்டு இருக்கும்போது கை வச்சிட்டியாம்... நீ அப்படி ஏதும் செய்யலைன்னா சொல்லிட்டுப் போய்க்கிட்டே இரு...”

“ஆமாம்... கை வச்சன். அவன் என்னா என்ன பாத்து துரோகின்னு சொல்றான். நான் உன்கிட்ட சொல்லிட்டுத்தானே வெளியானன். எங்க லாபம் அதிகம் இருக்கோ அங்க போறதுதானே சரி? அப்புறம் அவனுக்குப் பேச்சு ஓடுது?”

மணி... அவன் உன்ன விட பல வருசம் கேங்ல நேர்மையா இருக்கறவன். அவனுக்குக் கெட்கற உரிமை இருக்கு... நீ அவனை அங்க வச்சி அடிச்சது தப்பு மணி... அது பிசனஸ் பண்ற இடம்...”

“என்னா பாங் பிசினஸ்? ஏதோ அரிசி வியாபாரம் பண்ற மாதிரி பில்டாப்பு கொடுக்குறீங்க... கட்டி விக்கற நாய்க்கு என்ன எத்திக்ஸ்’?”

இரண்டு துப்பாக்கி சூடுகள் அக்கடையில் வெடிக்கிறது. அதுவரை மாற்று உடையில் பக்கத்து மேசையில் அமர்ந்திருந்த ஓப்ஸ் பெர்சே குழுவின் தலைவர் மாரிமுத்து கடையிலிருந்து வெளியே வந்து மேலதிகாரிக்குத் தொடர்புக் கொண்டார்.

-      கே.பாலமுருகன்