Monday, June 29, 2009

புடுராயாவில் உறங்கிக் கொண்டிருப்பவர்கள்

மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். அங்கிருக்கும் ஒரு மிகப் பெரிய மையப் பேருந்து நிறுத்தம்தான் புடுராயா. எப்பொழுதும் பயணிகளால் நிரம்பி வழியும் இரண்டுமாடி கடட்டம். கீழ் தளத்தில் பேருந்துகள் வந்து நிற்க, மேலே பிளாட்பாராத்தில் பயணிகள் காத்திருப்பார்கள். அறிவிப்பு வந்ததும் கீழே இறங்கி ஓட வேண்டும். இரைச்சலுடன் ஒருவரை ஒருவர் முந்தி கொண்டும் இடித்துக் கொண்டும் எப்பொழுதும் நகர்ந்து கொண்டே இருப்பார்கள்.

மேலும் நாம் உள்ளே நுழைந்தவுடன் பேருந்து டிக்கெட் விற்கும் ஆசாமிகள் நம்மை மொய்க்க தொடங்கிடுவார்கள். நாம் போக விரும்பாத ஊரின் பெயரெல்லாம் சொல்லி “அங்க போக போறிங்களா? பஸ் 11மணிக்கு” என்று இம்சிப்பார்கள். கையைப் பிடித்து வழுக்கட்டாயமாக இழுக்காத குறைதான்.

புடுராயாவின் பிளாட்பாரத்தில் நான்கு சதுர வடிவத்தில் இருக்கைகள் பல்லிங்கு கற்களால் போடப்பட்டிருக்கும். நேற்று கோலாலம்பூரிலிருந்து இல்லம் திரும்பும் வழியில் புடுராயாவில் இரண்டு மணி நேரம் இருக்க வாய்ப்புக் கிடைத்தது. வழக்கமாக அந்த மாதிரி தருணங்களில் கோலாலம்பூர் நண்பர்களை அழைத்து இலக்கியம் அரட்ட்டையடிப்பது உண்டு. இந்த முறை யாரும் சிக்கவில்லை. ஒருவர் கடைசிவரை தொலைபேசி அழைப்பை எடுக்கவே இல்லை, மற்றொரு நண்பர் இரவு 11வரை நகர முடியாது என்று சொல்லிவிட்டார், மற்றொருவர் வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டதால் இரண்டு மணி நேரம் புடுராயாவில் அமர்ந்து கொண்டு ஏ1எச்1 காய்ச்சல் பரவிவிடுமோ என்கிற சந்தேகத்துடன் பெரும் கூட்டத்தில் ஒருவனாக அமர்ந்திருக்க வேண்டியிருந்தது.

பயணிகள் கூட்டம் குறைய துவங்கியதும் எங்கிருந்தோ சில மலாய்க்கார கிழவர்கள் கையில் அட்டை பெட்டியுடன் அங்கு வரத் துவங்கினார்கள். எற்கனவே பழகி போன ஒரு நடவடிக்கையைப் போல, இருக்கைகளில் அட்டை பெட்டிகளை விரித்து படுத்துக் கொள்ளத் துவங்கினார்கள். அவர்களுக்குள் எப்பொழுதோ யார் எங்கு படுக்க வேண்டும் என்கிற ஒப்பந்தம் எடுக்கப்பட்டிருக்கும் போல, மிக நேர்த்தியாக அவர்களுக்கான இருக்கைகளில் சாவகாசமாக படுத்துக் கொண்டு உறங்கத் துவங்கினார்கள்.

அருகில் நின்று கொண்டிருக்கும் அல்லது நடந்து கொண்டிருக்கும் பயணிகளை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. புற உலகைப் பற்றி கொஞ்சமும் அக்கறையில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் யார் அல்லது எங்கிருந்து வந்திருப்பார்கள்? இப்படிக் கேள்விகள் எனக்குள் நெளியத் துவங்கின.

சில மனிதர்கள் அவர்களை வெளிப்படுத்திக் கொள்ளாதவரை அவர்கள் குறித்த இரகசியங்களும் அதிசயங்களும் நம்மை அல்லது நமக்குள் ஒரு பிரமிப்பாக நெளிந்து கொண்டே இருக்கும் போல.


அன்புடன்
கே.பாலமுருகன்
மலேசியா

Thursday, June 25, 2009

ஆறாம் விரலும் புகை மண்டலமும்


நகரத்தில் நடப்பவர்களுக்கும், நிற்பவர்களுக்கும், அமர்ந்திருப்பவர்களுக்கும் ஒரு ஆறாம் விரல் இருப்பதைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும்? அந்த ஆறாம் விரல் முளைத்துவிட்ட மனிதர்கள் ஆயாசமாக நகரத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எந்த இடத்திலும் சட்டென்று பார்த்துவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அது என்ன ஆறாம் விரல்? புகைப்பவர்களின் கை இடுக்குகளில் உற்றுக் கவனியுங்கள் சிகரெட் துண்டு நெருப்பைக் கக்கிக் கொண்டு சாவகாசமாக வளர்ந்திருக்கும். அதுதான் அந்த ஆசாமிகளின் ஆறாம் விரல் என்று கவிஞர்கள் முதல் பாடலாசிரியர்கள்வரை வர்ணித்துக் கொள்கிறார்கள்.

மருத்துவமனைக்கு வெளியில், பேருந்து நிறுத்தத்தில், மேம்பாலத்தின் சரிவில், பேரங்காடியின் சுவர் நெடுக, நடைப்பாதையில் இப்படி நகரத்தில் நாம் நகரக்கூடிய எல்லாம் இடங்களிலும் புகைப்பவர்களையும் ஆறாம் விரல் நபர்களையும் பார்க்கலாம். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தம்மால் ஏற்படவில்லை என்ற பாவனையில் அவர்களை மறந்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்ட முகக்குறிப்புகளை வெளிப்படுத்திக் கொண்டு புகைத்துக் கொண்டிருப்பார்கள். புகை பிடித்தால் சிந்திக்க முடியும் என்று யார் சொல்லியிருப்பார்கள்? ஆறாம் அறிவுதான் பகுத்தறியும், ஆறாம் விரலும்கூடவா?

புகைப்பவர்களை யாராலும் தடுக்க முடியாது. ஒருசிலர் அவர்களிடமிருந்து விலகி நடப்பதையும், மூக்கைப் பொத்திக் கொண்டு நகர்ந்து கொள்வதையும் பார்க்கலாம். ஆக மொத்தத்தில் கெடுதி என்று தெரிந்தும் தாராளமாகப் புகையிலையை வாங்கவும் அதைப் பொது மக்கள் இருக்கும் நகரத்தில் சுதந்திரமாகப் புகைக்கவும் இங்கு எல்லாம் வசதிகளும் இருக்கின்றன. புகைப்பவர்கள் நிற்கும் இடத்தில் நன்றாகக் கண்காணித்துப் பாருங்கள். எங்காவது “புகைப் பிடிக்காதீர்கள்” என்ற அறிவிப்பு அட்டை தொங்கிக் கொண்டிருக்கும். அந்தப் புகைப் பிடிப்பவனின் அருகில் நின்று கொண்டிருக்கும் எல்லோரும் அந்த அறிவிப்பு பலகையைப் பார்த்திருப்பார்கள். இருந்தும் புகை மண்டலம் சூழ அந்த நடு வெயிலிலும் மக்கள் சாதாரணமாக தங்கள் கடமைகளில், நகர்வில் ஆழ்ந்து கரைந்து கொண்டிருப்பார்கள். அந்தப் புகைப் பிடிப்பவனையோ அந்தப் புகையைச் சுவாசிக்கும் சக மனிதனின் பாதிப்பு பற்றியோ யாருக்கும் அக்கறை இருப்பதாகக் கட்டாயம் தெரியாது.

“தம்பி! இந்த எடத்துலே சிகரேட் குடிக்காதீங்க!”

“அண்ணன்! நீங்க குடிக்கும் சிகரெட் மூச்சி திணற வைக்குது, தயவு செய்து புகைப் பிடிக்காதீங்க”

“யப்பா, தம்பி! அங்க பாரு புகைப் பிடிக்கக்கூடாதுனு போர்டு போட்டுருக்கு. . சிகரெட்டெ அணைச்சிருப்பா”

இப்படியெல்லாம் புகைப் பிடித்துக் கொண்டிருப்பவனை பார்த்து கேட்க யாருக்காவது தைரியம் வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்களா? பார்த்திருந்தால் மகிழ்ச்சி. இருந்தும் பல இடங்களின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க மறுத்து தனது ஆண்த்தனத்தைக் காட்டிக் கொள்வதற்காகவும் தனது செல்வாக்கைக் காட்டிக் கொள்வதற்காகவும் ஒருசிலர் புகைப் பிடித்து சக மனிதனை வெறுப்பேற்றுவார்கள். அந்த ஆறாம் விரல்காரர்களுக்குப் புகைப்பதிலும் சிகரெட்டைத் தனது விரல்களின் இடுக்குகளில் சுமந்து கொள்வதும் பெரும் பாக்கியமாகவும் நாகரிக உலகம் தரக்கூடிய சுயமரியாதையாகவும் தோன்றுகிறது. அவர்களும் அப்படித்தான் கருதுகிறார்கள்.

“ஸ்டைலு ஸ்டைலுதான் இது சூப்பர் ஸ்டைலுதான்”

பள்ளிக்கூட சீருடையில் பேரங்காடியின் வெளிச்சுவரில் சாய்ந்து கொண்டு ஸ்டைலாகப் புகைப் பிடிக்கும் மாணவர்களை நீங்கள் பார்த்ததுண்டா? இனியாவது பாருங்கள், அந்த மாணவர்களுள் உங்களுக்குத் தெரிந்த நண்பரின் மகனோ அல்லது உங்களின் சொந்தக்கார பையனோ இருக்கலாம். அவர்களுகெல்லாம் குரு யாரென்று தெரியுமா? வேறு யாரும் இல்லை, நம்முடைய தமிழ் சினிமா கதாநாயகர்கள்தான். விரலால் சுண்டி வாயில் சிகரெட்டைக் கவ்விக் கொள்வதில் தொடங்கி பல ஆண்டுகளாகக் கதாநாயகர்கள் சிகரெட்டைக் கொண்டு செய்யும் சாகசத்தைதான் இன்று நம் மாணவர்களும் பின்பற்ற முயல்கிறார்கள். அதற்கு நகரம் பெரும் வசதியாக ஆகிவிட்டது. பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு சுற்றித் திரியும் எல்லாம் மாணவர்களின் கைகளிலும் ஆறாம் விரல் முளைத்திருக்கும். அந்த ஆறாம் விரலுடன் நகரத்தில் எங்காவது இரகசிய இடுக்குகளில் தனக்கென்று ஓர் உலகத்தைச் சிருஷ்டித்துக் கொண்டு புகைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அது ஒரு புகை மண்டலம்.

பொது இடங்களில், கர்ப்பிணி பெண் இருக்கும் இடங்களில், சிறுவர்களுக்கு முன், பேருந்தில், இப்படி ஆறாம் விரல் மறுக்கப்படும் இடங்களிலும் தைரியமாகப் புகைப் பிடிக்கும் நபர்களை என்ன செய்யலாம் என்று நமக்கெல்லாம் தோன்றும். என்ன செய்வது? 4 மணி நேரம் அவர்களை அமர வைத்து கருத்தரங்கம் நடத்த முடியுமா? அல்லது காவல் துறையில் தெரிவிக்க முடியுமா? அல்லது நேருக்கு நேர் அவரிடம் சண்டையிட்டு முறையிட முடியுமா?

இன்றைய தினத்தில் நகரம் பெரும் புகை மண்டலமாக மாறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் பார்க்கும் திருப்பங்களிலெல்லாம் யாராவது ஒருவர் புகைப் பிடித்துக் கொண்டு ஆசுவாசமாக நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கடக்கும்போது அவர்கள் விடும் புகையை நீங்களும் கொஞ்சம் சுவாசித்துக் கொள்கிறீர்கள். அந்த ஆறாம் விரல்காரனின் அழிவில், மிகவும் நாகரிகமாக எல்லாம் வகையான ஒத்துழைப்புடனும் நாமும் கொஞ்சம் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

“ஐயா அப்பாவுக்குக் கடையில போய் ஒரு சிகரெட் வாங்கிட்டு வந்துரு”

எங்கிருந்து தொடங்குகிறது இந்த அழிவு? அந்த வேரைப் பின் தொடர்ந்து சென்று பாருங்கள். எல்லாம் முடிந்தவுடன் நீங்கள் ஒரு நகரத்தில் வந்து நிற்பீர்கள். அருகில் நடக்கும் ஆளைக் கூட அடையாளம் காண முடியாத அளவிற்கு நகரம் புகையால் சூழப்பட்டிருக்கும். தடவி தடவித்தான் நடக்க முடியும். அப்படித் தடவும்போது அருகிலுள்ள நபரைத் தொட நேர்ந்தால், அந்த நபருக்கு ஆறாம் விரல் முளைத்திருப்பதை உணர முடியும். அந்தத் தருணத்தில் நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம் நீங்கள் இருப்பது புகைக் கக்கும் மனிதர்களின் நகரத்தில் என்று.

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Wednesday, June 24, 2009

தமிழன் புத்தி எப்படி போது பாருங்க

இரண்டு மணிநேரத்திற்கு முன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பெரிய சாலையில் பயங்கர சத்தம் கேட்டது. இரண்டு கார்கள் மோதி கொண்டதற்கான சத்தமாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டே சத்தம் கேட்ட திசைக்கு ஓடினேன். ஓடினோம். பக்கத்து வீட்டுக்காரர்களும் என்னுடன் ஓடி வந்தார்கள். அதற்கு முன்பதாக அங்கு பெரிய கூட்டமே கூடியிருந்தது. என்ன ஆச்சர்யம்? எப்பொழுதும் அந்தச் சாலை இருண்டும் ஆள் நடமாட்டம் அற்றும் கிடக்கும். இப்பொழுது கொஞ்ச நேரத்தில் இப்படியொரு கூட்டம் எங்கிருந்து முளைத்திருக்கும் என்று திகைப்பாக இருந்தது.

இரண்டு கார்களும் மிக மோசமாக நசுங்கி போயிருந்தன. அதில் இரண்டு குழந்தைகள் வீரீட்டு அழும் குரல் மனதை என்னமோ செய்தது. காரில் சிக்கிக் கொண்டிருந்த அவர்களை வெளியே எடுப்பதற்காக மலாய்க்காரர்களும் சீனர்கள் சிலரும் கதவை உடைத்துக் கொண்டிருந்தார்கள். நானும் கூட்டத்துடன் இனைந்து கொண்டு கால்களால் கதவின் கீழ் பகுதிக்கு முட்டுக் கொடுத்துவிட்டு கதவைப் பலம் கொண்டு இழுத்தேன். உள்ளுக்குள்ளிருந்து உயிருக்காகப் போராடும் அந்தக் குழந்தையின் அழுகையை மிக அருகாமையில் கேட்கும்போது எனக்குள் பயங்கர தடுமாற்றம். கண்களில் கொஞ்சம் தண்ணீரும் வந்திருக்கும் போல. ஒரு விபத்தை இப்படி நேரில் சந்திப்பது இதுவே முதல் தடவை என்பதால் இருக்கலாம்.

அவர்களை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது இரண்டு தமிழ் குரலை நன்றாக கேட்க முடிந்தது. காருக்குப் பின்புறமாக நின்று கொண்டு இதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“காடி நம்பரு என்னானு பாரு. . அந்தக் காடியோட நம்பர பாரு. அதான் துரோவா(மோசமா) அடிப்பட்டிருக்கு”

எல்லோரும் உள்ளுக்குள்ள உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் உயிர்களீன் மீது கவனமாக இரூக்கும்போது அந்த இரு குரல்கள் மட்டும் ஏன் காரின் எண்களின் மீது அக்கறை கொள்கிறது என்று கேட்கிறீர்களா? வேறெதற்கும் இல்லை, நாளை நம்பர் எடுக்கத்தான். விபத்தில் சிக்கிய காரின் எண்களை வைத்து சூது விளையாட மட்டுமே நம்மவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. என்ன ஒரு ஆபத்தான சுயநலம் இது.

அதுவே நம்முடைய பாசத்திற்குரிய உறவுகள் விபத்தில் சிக்கி சாலையில் துடித்துக் கொண்டிருக்கும் போது யாரும் அறியாத கணத்தில் அந்தக் காரின் எண்களை எழுத மனம் விடுமா? சூது பழக்கம் மனித நேயத்தைத் தின்று கொண்டிருக்கிறது. தமிழன் மட்டுமா இதைச் செய்கிறான்? என்ற கேள்வியின் மூல நியாயப்படுத்த முயலலாம். எனக்குத் தெரிந்து தமிழன் அதைச் செய்யும் போதுதான் நான் பார்த்திருக்கிறேன்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா

Tuesday, June 23, 2009

நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்- என் முதல் நாவலின் முன்னுரை


என் முதல் நாவலான “நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்” கடந்தாண்டு நடந்த மலேசிய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசு கிடைத்திருப்பது என் படைப்புக்கு ஏற்பட்ட அறிமுகமும் சிறந்த அங்கீகாரமே ஆகும்.

ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு விளிம்புநிலை பின்னனி கொண்ட குடும்பத்தில் வாழ்ந்து வளர்ந்து அந்தப் போராட்டங்களையும் சிறு சிறு சமரசங்களையும் கடந்து வந்த என்னுடைய புறச் சூழலின் உந்து சக்திதான் இந்த நாவல் உருவாதற்கான முதல் காரணம். என் குடும்ப கட்டமைப்பின் புறவெளி சிக்கலான தோட்டப்புற நகர வாழ்க்கையின் சாராம்சத்தின் அடிப்படையில் அமைந்தவைதான்.

1970களில் தொடங்கி 1995 வரை நீடித்து மேலும் ஒரு நீண்ட பயணத்தை வாழ்க்கையின் யதார்த்த தளத்தில் மேற்கொள்ளும் ஒரு குடும்பத்தின் கதை. புக்கிட் லெம்பு என்ற தோட்டத்திலிருந்து வெளியேறி பட்டண விளிம்பு நிலை மனிதர்களாக வாழ்ந்து, தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் குடும்ப மனிதர்களின் உளவியல் கூறுகளிலிருந்து வெளிப்படும் நினைவோடைகளாக கதை கொண்டு செல்லப்படுகின்றது. இவர்கள் மனித வாசல்களாக தொடர்ந்து ஒரு பிரமையில் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

தோட்டப்புறத்திலிருந்த விளிம்பு போராட்டத்திலிருந்து தம்மைக் தற்காத்துக் கொள்ள நகர வாழ்விற்கு புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன் என்கிற முறையில் இந்த நாவலின் கதையைத் தோட்டப்புறத்திலிருந்து தொடங்கி ஒரு பெரும் நகர்தலில் தம்மை சமரசப்படுத்திக் கொள்ளும் ஒரு குடும்பத்தின் சிதைவை மையமாகக் கொண்டவையாக அமைத்துள்ளேன்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வெளியீடாக இந்த நாவல் வரவிருக்கிறது. நாவலின் அட்டைப் படம் யுகமாயினி இதழாசிரியர் சித்தன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில்

கே.பாலமுருகன்
மலேசியா

Monday, June 22, 2009

நிலத்திற்கு மேலே நடப்பவர்களின் கதை

1

எல்லோரும் நடந்துவிட்டு

கொஞ்சம் நிலத்தை

எனக்காக விட்டுவைத்திருந்தார்கள்.

நடந்தேன். தவழ்ந்தேன்.

பற்றுக்கொண்டேன். பைத்தியமானேன்.
மீண்டும் சேகரிக்க

ஏதுமில்லாததால்

முன்னோர்களின் காலடி

சப்தங்களை நிலம் முழுக்க

ஆராய்ந்தேன். சிலாகித்தேன்.

கண்டறிந்தேன். மீண்டும் பற்றுக்கொண்டேன்.


பிறகொருநாள்

வேலிகள் பூட்டினேன்.

பாதுகாத்தேன். பயம்கொண்டேன்.

பெரும்வெளியின் ஒரு துளியில்

பற்றுக்கொண்டேன்.


வேலியில்

முள்கம்பிகள் பொருத்தினேன்.

குருதி சொட்ட கீறி

பார்த்தேன். நிம்மதிகொண்டேன்.

தினம் ஒருமுறை காயப்பட்டு

அப்பொழுதும் பற்றுக்கொண்டேன்.
உறக்கத்தின் பாதியில்

நடுநிசிக்கு ஓடிவந்தேன்.

வீடு தொலைந்தேன். ஆடைகள்

தொலைந்தேன். நடுவீதியில்

கொண்ட பற்றைப் பிடித்துக்கொண்டு

நடந்தேன்.


நிலத்தின் எல்லாம் திசைகளிலும்

சிக்குண்ட என்னைத் தேடி பிடித்து

சட்டைபைக்குள் அடைத்துவிட்டு

விடுபடும் கணத்தில்

நிலம் என் கால்களைப் பிடித்துக்கொண்டு

பின் தொடர. யார் அகதி என்கிற குழப்பத்தில்

எல்லோரும் நிலத்தின் மேல் நிலத்துடன் நடக்கத் துவங்கினோம்.


2

விக்ரமாதித்யன் கதை சொல்லாததால்

வேதாளமெல்லாம் நிலத்தின்

முதுகைப் பிடித்துக் கொண்டு

செத்துப் போயின.

வேதாளத்தைக் கொன்ற பாவத்தை

இன்று சுமப்பதென்னவோ

ஒரு வரலாறு மட்டுமே.


3

உத்தரவு கிடைத்ததும்

நகரத்துவங்கினோம்

எல்லாவற்றையும் விட்டுவிட்டு.

--------------------------------------------------------------------------------

கே.பாலமுருகன்

மலேசியா
நன்றி: திண்ணை

Saturday, June 20, 2009

கைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா? ‘பசங்க’ திரைப்படம்-1

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி, சுப்ரமண்யபுரம் புகழ் இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் பசங்க திரைப்படத்தின் விமர்சனங்கள் மிக வேகமாக பலரால் எழுதப்பட்டு வருகின்றன.
பசங்க படம் நல்ல படமா என்கிற கேள்விக்கு உயிர்மையில் சாரு அந்தப் படத்தையொட்டி புகழ்ந்து எழுதிவிட்டார் என்பதற்காகவோ அல்லது ஆனந்த விகடன் இதழ் திரை விமர்சன பகுதியில் அந்தப் படத்திற்கு 50 புள்ளிகள் வரை அளித்துவிட்டதாலோ “பசங்க” திரைப்படத்தை அகிரா குரோசாவின் சினிமா அளவிற்குக் கொண்டு போய்விட வேண்டாம். அது ஆளுமைகளின் வாலைப் பிடித்துக் கொண்டு ஜால்ரா போடும் குழு செய்ய வேண்டியது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திரையிலிருந்தும் பெற்றுக் கொள்ள வேண்டியது அல்லது புரிந்து கொள்ள வேண்டியது தனித்துவமான அனுபவம் சார்ந்ததாகும்.

பசங்க படத்தின் இறுதி காட்சியில் சிறுவன் அன்புக்கரசு விபத்தில் சிக்கி சுயநினைவு இழக்கப்போகும் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறான். பல சினிமாக்காளில் இப்படி முக்கியமான அல்லது துணை கதாமாந்தர்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடுவது சலித்துப் போன ஒரு சம்பவம் சார்ந்த கிளைமேக்ஸ் காட்சியமைப்பாக இருந்தாலும், கொஞ்சம் சகிப்புத்தன்மையுடன் அதைக் கடந்து வந்து, அந்த இறுதி கட்ட காட்சியில் அன்புக்கரசை மீண்டும் சுயத்திற்குக் கொண்டு வர அவனின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அவனுடைய எதிரி சிறுவன் ஜீவானந்தமும் மேற்கொள்ளும் வைத்தியம், “கைத்தட்டல்தான்” என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்க வேண்டிய சூழலைப் புரிந்து கொள்ள முடியும். இன்று நம்முடைய சக மனிதர்களின் வெற்றிக்குக்க்கூட நாம் மறுக்கும் அந்தக் கைத்தட்டல்தான், அன்புக்கரசின் உயிரை மீட்டுக் கொண்டு வருகிறது.

நீங்கள் எப்பொழுது கடைசியாக ‘உண்மையாக” கைத்தட்டினீர்கள்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்களுடன் இருக்கும் சக உறவுகளுக்காக எப்பொழுது நீங்கள் கைத்தட்டி வரவேற்றுள்ளீர்கள்? கைத்தட்டல் வெறும் இரு கைகள் சேர்ந்து ஒரு ஓசையை எழுப்பும் வேலையா? அந்த ஒவ்வொரு ஓசையும் ஒரு உயிரை உற்சாகப்படுத்துகிறது, பரவசம் கொள்ளச் செய்கிறது, அவனை அங்கீகரிக்கிறது. கைத்தட்டல் என்பதை அவ்வளவு சாதரணமான ஒரு செயலாக நினைத்துவிட முடியாது.

பசங்க திரைப்படத்தில் சிறுவன் அன்புக்கரசின் அம்மா அவனின் வளர்ப்புமுறையைப் பற்றி சொல்லும் இடத்தில், கைத்தட்டல் அவனுடைய ஒவ்வொரு வயதிலும் அவனை அங்கீகரித்திருக்கிறது அவன் செயல்பாடுகளைத் துரிதப்படுத்திடுக்கிறது, கைத்தட்டி அவன் எழுந்து நடந்திருக்கிறான், கைத்தட்டி அவன் ஓடியிருக்கிறான், அவனுடைய ஒவ்வொரு சாகத்திற்குப் பின்னாலும் பலரின் கைத்தட்டல் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது. பிறகொரு வயது வந்ததும், கைத்தட்டலைக் கேட்டு வாங்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறான்.

பசங்க படம் முழுவதும் சில துல்லியமான இடங்களில் சக மனிதர்களை அங்கீகரிப்பது எவ்வளவு நுட்பமான புரிதல் என்று கற்பிக்கப்பட்டே வருகிறது. பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தய போட்டியில் அன்புகரசின் வெற்றிக்காக அவனுடைய குடும்பமே அவனுடன் சேர்ந்து கைத்தட்டிக் கொண்டே ஓடும் போது, உடல் சிலிர்த்து சொல்ல முடியாத ஒரு அனுபவத்தைப் பெறுகிறது. நம்முடைய கைத்தட்டல் பிறரை எப்படியெல்லாம் வாழ வைத்திருக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஒருவேளை நம் பட்டியலில் யாருமே இல்லாமல் இருக்கலாம். இந்தக் கைகள் ஏன் கைத்தட்ட மறுக்கிறது? அங்கீகாரத்திற்காக ஏங்கும் மனதிற்கு வயது கிடையாது. பலர் இன்று நேர்மையாகவும் குறுக்கு வழியிலும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். டத்தோ பட்டம் என்கிற சமூக அங்கீகாரத்தை கொஞ்சம் பணம் கட்டினாலே இன்று வாங்கிவிடலாம். இன்னும் கொஞ்சம் நாட்களில் பாசார் மாலாம்( இரவு சந்தையில்) “இங்கு பட்டம் பதவிகள் விற்கப்படும்” என்கிற விளம்பரம் வந்தாலும் அதற்கும் ஒரு கூட்டம் அலைமோதும்.

அரசியல்வாதிகளை விட்டுத்தள்ளுங்கள். நம்முடனே இருந்து நம்முடனே வாழும் சக மனிதர்களைப் பாருங்கள். அவர்களின் வெற்றியில் நாம் பங்கு கொள்ளும் முதல் கட்டமே ஒர் கைத்தட்டல்தான். சினிமாவில் நமிதாவின் குலுங்களுக்குக் கைத்தட்டுகிறோம், ரஜினி அவரின் தோப்பா முடியை சீவினால் கைத்தட்டுகிறோம், விஜயகாந்தின் வசனங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்து நகைச்சுவையாகக் காட்டினால் கைத்தட்டுகிறோம் பிறரை அவமானப்படுத்துவதிலும் கேலி செய்திலும் காட்டும் அக்கறை ஏன் பிறரை அங்கீகரிப்பதில் முடமாகி சுருங்கிக் கொள்கிறது?

தெரிந்தும் தெரியாமலும் நாம் செய்யும் புறக்கணிப்பு, அங்கீகரிக்க மறுக்கும் நம் மனம் நமது வாழ்வில் ஒரு காலி இடத்தை விட்டுவிட்டு நகர்ந்துவிடும். காலம் முழுவதும் அந்தக் காலி இடம் நம்மை நிரப்பிக் கொண்டே இருக்கும். நம்முடைய இயலாமைகளை அது உச்சரித்துக் கொண்டே இருக்கும். சக மனிதனை சிறு அளவில்கூட அங்கீகரிக்க இயலாத நமக்குள்ளே சுருங்கிப் போன நம்முடைய மனநிலையை நிரப்பிக் கொண்டே இருக்கும். அந்தக் காலி இடம் நிரம்பி வழியும் ஒரு கணத்தில் இந்தச் சமூகம் நம்முடைய சுயத்தைத் தெரிந்துகொள்ளும்.

கைத்தட்டுவதற்காக நீங்கள் அரசியல் கூட்டங்களுக்கோ, சமயச் சொற்பொழிவுகளுக்கோ வரித்துக் கொண்டு செல்ல வேண்டாம். சுற்றிலும் பாருங்கள், உங்களின் கைத்தட்டலுக்காகப் பலர் ஏங்கித் தவிக்கிறார்கள். உங்களின் கைத்தட்டிலின் மூலம் அவர்களை மீட்டெடுங்கள். முடியும்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
Friday, June 19, 2009

சிறுகதை: அக்கா பையன் சுந்தரம்


யாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். என் அக்கா பையன் சுந்தரம் வெளிக்கதவில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான்.


“யேண்டா?”

“அத்தெ இருக்காங்களா?”

“உள்ளே வா”


அவன் உள்ளே வந்ததும் உடல் முழுவதும் பரவியிருந்த வியர்வை நெடியைச் சுவாசிக்க முடிந்தது. முகம் கறுத்து, வெகுநேரம் வெயிலில் நடந்தே வந்திருக்க வேண்டும். கமலாவைப் பார்த்ததும் “அத்தே தண்ணீ வேணும்” என்று கேட்டுவிட்டுத் தலையைத் தொங்க போட்டுக் கொண்டான். எப்பொழுதாவது முக்கியமான நிகழ்ச்சி என்றால்தான் சுந்தரம் என் வீட்டிற்கு வருவான். கடைசியாக மூன்று மாதத்திற்கு முன் மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்திருந்தான்.

அவனிடம் ஏதும் கேட்க முடியாதவனாய் அமர்ந்திருந்தேன். எனக்கே என் இறுக்கம் வெறுப்பை உண்டாக்கியது. கால்களைச் சுருக்கிக் கொண்டு கமலா கொடுத்த தண்ணீரை சிறிது நேரத்தில் உறிஞ்சி உள்ளே விழுங்கிக் கொண்டான். தண்ணீர் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்துகொண்டு வெளியே பார்த்தான்.


“ஏய்! யேன் வந்துருக்கான்னு போய் கேளு நைசா”


கமலா அவனுக்கு எதிராக அமர்ந்து கொண்டு சொல் தூண்டியலைத் தயார்ப்படுத்தினாள். சுந்தரம் எதிலும் அக்கறையில்லாதவன் போல அமர்ந்திருந்தான். ஒருவேளை அவனுடைய கவனம் வேறெங்காவது போயிருக்கலாம். அவனிடம் சொற்கள் இல்லாததைப் போல அல்லது முற்றிலும் சொற்களை வேறு எங்கோ தூக்கி வீசிவிட்டு இங்கே வெறும் உடலாக அவன் வந்திருக்கலாம்.


“அக்கா எப்டி இருக்காங்கய்யா? ஏதாவது முக்கியமா சொல்ல வந்தியா?”


கமலாவிற்கு எந்தவித சாமர்த்தியமும் இல்லாததை இப்படித் தொடக்கத்திலேயே ஒப்புக் கொண்டிருக்கிறாள். அவள் கேட்ட கேள்விகள் அவனை எந்தவகையிலும் தூண்டியிருக்காது. உடலை மட்டும் அசைத்துவிட்டு கமலாவை ஒருமுறை பார்த்தான். அவனிடம் பதில் இல்லை என்பதைப் போல இருந்தது அந்தக் கணநேர பார்வை.


“சும்மாதான் வந்தீயா? கூட்டாளி பாக்கயா? சரி இரு தே களக்குறேன், குடிச்சிட்டுப் போ”


கமலா நல்லவள் போல என்னிடம் வந்தாள்.


“கேள்வி கேக்கறா பாரு. எதுக்கு வந்துருக்கேனு கொஞ்சம் அதட்டற மாதிரி கேட்டுருக்கலாம், சொல்லியிருப்பான். அவன் மூஞ்சே பாத்தயா? ஏதோ சண்டெ போல அவன் அம்மாகூட. ஏற்கனவே சொல்லியிருக்கான், மாமா வீட்டுல போய் தங்கனும்னு. போய் தண்ணீ கொடுத்து எப்படியாவது அனுப்பி வச்சிறு சொல்லிட்டேன்”


கமலா தேநீர் களக்குவதில் தீவிரமடைந்தாள். வீட்டு ஹாலை எக்கிப் பார்த்தேன். சுந்தரம் எழுந்து வெளியே போய்க் கொண்டிருந்தான். முன்வாசல் கதவை மிக அழகாகத் திறந்து, மீண்டும் அழகாக சாத்திவிட்டு பெரிய சாலையில் இறங்கி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.--------------------------------------------------------------------------------ஆக்கம்: கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com

Wednesday, June 10, 2009

நவீனத்தமிழ் இலக்கியக் கருத்தரங்கமும் - “கடவுள் அலையும் நகரம்” கவிதை தொகுப்பு வெளியீடும்


சிங்கப்பூர் தங்கமீன் பதிபகத்தின் வெளியீட்டில் கே.பாலமுருகனின் “கடவுள் அலையும் நகரம்” கவிதை தொகுப்பும் ஜாசின் தேவராஜன் அவர்களின் “அரிதாரம் கலைந்தவன்” சிறுகதை தொகுப்பும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (14.06.2009) சிங்கப்புரில் வெளியீடு காணவுள்ளது. நவீனத்தமிழ் கருத்தரங்கம் எனும் தலைப்பில் பிரபல மலேசிய எழுத்தாளர்கள் சை.பீர்முகமது, கே.பாலமுருகன், தேவராஜன், சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஜெயந்தி சங்கர், கண்ணபிரான், சித்ரா ரமேஸ் போன்றவர்களின் நவீன இலக்கியம் குறித்த உரைகளுடன், கலந்துரையாடல் நிகழ்வில் தொலைபேசியின் வாயிலாக இந்திய எழுத்தாளர்கள் நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாகத் தொடர்புக் கொண்டு உரையாடுவார்கள். நிகழ்வின் விவரங்கள் பின்வருமாறு:திகதி: 14.06.2009 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : மாலை மணி 4.00க்கு

இடம் : தேசிய நூலகம், 14ஆவது தளம், (POD) 100, விக்டோரியா ஸ்ட்ரீட்

(புகிஸ் எம்.ஆர்.டி நிலையம் அருகில்) சிங்கப்பூர்

தொடர்புக்கு : 016-4806241 (கே.பாலமுருகன்)/ 012-6194140 (ஏ.தேவராஜன்)

+6582793770 (பாலுமணிமாறன் - சிங்கப்பூர்)

Sunday, June 7, 2009

என்னா பாக்கறே?

இங்க என்னா பாக்கறே?
போய் வேலையே பாரு.
என்னா பொழுது போகலையா?
அப்படி வா வழிக்கு.

ரொம்ப சோர்வா இருந்தா
வா இலக்கியம் பேசலாம்.
அசோகமிதரனின் பாப்பானியசம் பேசலாமா
இல்லெ ஜெயகாந்தனோட சமஸ்கிருத
வசீகரத்தைப் பேசலாமா?
அதுவும் இல்லைனா ஷோபா சக்தியோட
புலி எதிர்ப்பு பத்தி பேசலாமா?
அல்லது கருணாநிதியின் மூக்கு
பத்தி பேசலாம்.
அப்பயும் சோர்வா இருக்கா?
அப்பனா சோனியாவோட
தேசிய கற்பைப் பத்தி அளக்கலாமா?

அப்பயும் முடியலையா
தக்காளி, இருக்கவே இருக்கே
பிரபாகரன் மரணம்.
லூட்டி அடிக்கலாம் வா
வெக்கங்கெட்டவனே.

ஈழப் போராட்டம் பத்தி
இப்பெ என்னா நொட்ட வந்துருக்கே?
என்னாது? தகுதியா?
போர்ப் பயிற்சி எடுத்துருக்கனுமா?
நல்லா வக்கணையா பேசறதுக்குத்தான்
பயிற்சி எடுத்துருக்கெ.
வா உன் மூஞ்சி மேல
காறி துப்ப.

கே.பாலமுருகன்

Saturday, June 6, 2009

ஷோபா சக்தி வலைப்பதிவிலுள்ள கட்டுரை/கதைக்கு எனது பின்னூட்டங்கள்

1. பா.செயப்பிரகாசத்திற்கு மறுப்பு
(ஷோபா சக்தி)

பா. செயப்பிரகாசம் “யாருக்காகப் பேசுகிறார் அ. மார்க்ஸ்” என்றொரு கட்டுரையை ‘கீற்று’ இணையத்தில் எழுதியிருந்தார். அ.மார்க்ஸ் ‘புத்தகம் பேசுது’ இதழுக்கு வழங்கியிருந்த நேர்காணலை எப்படியெல்லாம் திரிக்க முடியுமோ அப்படியெல்லாம் திரித்து, மேற்கோள்களை எப்படியெல்லாம் சிதைக்கமுடியுமோ அப்படியெல்லாம் சிதைத்து பா.செ. அந்தக் கட்டுரையில் புலிகளுக்கு வக்காலத்து வாங்கியிருந்தார். பல இடங்களில் பா.செயப்பிரகாசம் காலச்சுவடுக் கட்டுரையாளரை மட்டுமல்லாமல் குமுதம் கட்டுரையாளரையும் தாண்டிச் சிந்தித்துள்ளார். ஓவராய் சிந்தித்ததன் விளைவுதான் ராஜீவ் காந்தியைப் புலிகள் கொல்லவில்லையென்ற அவரது புதிய கண்டுபிடிப்பு. சிவராசனுக்கும் அகிலாவுக்கும் தனுவுக்கும் சூசகமாக வீரவணக்கக் குறிப்புகளை புலிகள் தங்களது பத்திரிகைகளில் எழுதியதை பா. செ. அறியாமலிருந்திருக்கலாம். ராஜீவ் காந்தியை எதற்காகக் கொன்றீர்கள் என்ற கேள்விக்கு வன்னிப் பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரன் தலைகுனிந்ததைக்கூட பா.செ. அறியமாட்டாரா? இதிலே பின்நவீனத்துவம் குறித்து பா.செக்கு விமர்சனம்வேறு. தமிழ்நாட்டில் மதுரை ஆதீனம் மட்டும்தான் இன்னும் பின்நவீனத்துவம் மீது விமர்சனம் வைக்கவில்லை.

என் பின்னூட்டம்: பா.செயபிரகாசம் கதைகளில் வெளிப்படும் யதார்த்தமான மனித நேயமும் மனிதர்களும் கவனிக்கத்தக்க அம்சங்கள். அவரின் அரசியல் குறித்து இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரூ படைப்பாளியும் அவனது அரசியல் நிலைபாடுகளாலும் கருத்துகளாலும் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதும் மதிப்பீடப்படுவதும் இயல்பாக நடக்கக்கூடியது.

ஈழப் போராட்டம் குறித்து, இன்று புலிகளை மட்டுமே முன் வைத்து, அதாவது ஈழப் போராட்டம் என்றாலே விடுதலை புலிகள் என்று ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தும் அரசியல் பார்வையைப் பல எழுத்தாளர்கள் கொண்டுள்ளார்கள். அதற்கு அவர்களே பொறுப்பு.

இன்று உலகம் முழுவதும் விடுதலை புலிகளுக்கும் அவர்களின் "வீரப் போராட்டத்திற்கும்" அங்கீகாரமும் ஆதரவும் கிடைப்பதற்குக் காரணம், புலிகள் மட்டுமே ஆண்மையுடையர்கள், களத்தில் இறங்கி போர்ப் புரியக்கூடிய வீரர்கள் என்கிற வசீகரக் கட்டுமானம் இருக்கிறது. அந்தக் கட்டுமானம் புலிகளின் தவறுகளைச் செல்லாமாகக் கூட கண்டிக்க விடாதபடி மிக இறுக்கமாக கட்டமைக்கப்பட்டுருக்கிறது. இன்று புலிகளைத் தவறாக பேசினாலோ, அல்லது அவர்களுக்கு முரணாகப் பேசினாலோ, "பச்சை துரோகி" என்கிற பெயர் கிடைஇக்கும் அளவிற்கு ஈழப் போராட்டத்தின் மீது புலிகளின் ஆளுமை படிந்துள்ளது.

ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் போன்றாவர்கள் ஈழப் போராட்டத்தை, புலிகளின் அந்த வசீகரக் கட்டுமானத்தை உடைத்து, நியாயமான அரசியல் அணுகுமுறைகளுடன் வெளிப்படுத்துவதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளன. புலிகள் மட்டுமே வீரர்கள், உயிர் தியாகம் செய்து தனி ஈழத்திற்காக போராடியவர்கள் என்கிற விமர்சனத்துடன் மட்டுமே ஈழப் போராட்ட்டத்தைக் கடந்து போக வேண்டும் என்கிற அவசியம் சமூகத்தால் வகுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் மீள்பார்வையும் மறுபரிசீலனையும் அவசியம் வேண்டும்.

கே.பாலமுருகன்
மலேசியா

2. எம்.ஜி.ஆர் கொலை வழக்கு: ஷோபா சக்தியின் சிறுகதை
எனது பின்னூட்டம்:

"எம்.ஜி.ஆர் கொலை வழக்கு"

கதைக்கே உரிய சில வசீகரங்களும் சில வெளிப்பாடுகளும் உள்ளடக்கிய கதை. ஷோபா சக்தி எழுதியிருக்கும் கதை என்று அவருடைய கொள்கை அறிந்தவர்கள், "இவன் என்னா எழுதிறப் போறான், புலி எதிர்ப்பு உக்கிரமாக வழியும் களமாக மட்டுமே இருக்கும்" என்று புலம்புவதற்கு எல்லாம் வகையான வசதிகளையும் கதாசிரியர் செய்து கொடுத்திருக்கிறார். இயக்கத்தைச் சேர்ந்தவனைப் பிடித்து வைத்துக் கொண்டு அவனைக் கொலை செய்யத் திட்டமிடும் இடங்களில், புலிகள் மீதான/இயக்கத்தின் மீதான கோபம் வெளிப்படுகிறது.

* எம்.ஜி.ஆர் கொலை வழக்கா? அவர் இயற்கை மரணத்தை எய்தியவர் அல்லவா? படங்களில் கூட காட்டினார்களே, பகவான் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டே அவரது உயிரைக் கொண்டு செல்வது போல. ஆச்சரியத்துடன் யார் அந்த எம்.ஜி.ஆர் அல்லது எம்.ஜி.ஆர் எப்படி இறந்திருப்பார் என்ற கேள்விகளுடன் சட்டென வாசகன் உள்நுழைந்துவிடக்கூடிய வசீகரத்தை ஏற்படுத்தும் தலைப்பு "எம்.ஜி.ஆர் கொலை வழக்கு". இருக்கட்டும், ஷோபா சக்தி கதையின் தலைப்பை "engineering" செய்து மிகத் தந்திரத்துடன் கையாண்டுள்ளார். எம்.ஜி.ஆர் இரசிகர்களை ஆர்வத்திற்குட்படுத்தும் அம்சம்.

*கதைக்குள் நுழைந்தால், கதாசிரியர் நம் முகத்தை ஓங்கி அறைந்து இது நீ நினைக்கும் எம்.ஜி.ஆர் அல்ல என்பது போல இருக்கும். கதையில் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ எம்.ஜி.ஆர் கொண்டிருந்த அரசியலின் நிலைபாடுகளை விமர்சிப்பது போல இருக்கிறது. எம்.ஜி.ஆர் என்கிற வசீகரத்தின் தேசிய உச்சியின் மேல் தாண்டவம் ஆடுகிறது கதை.

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, June 5, 2009

சிறுகதை : மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்
1

வாங்கய்யா. . எப்ப வந்தீங்க? வீட்டுல எல்லாம் நல்லாருக்காங்களா? வீட்டுப் பக்கமே வரமாட்டுறீங்க? ஆமாம். . என்னைலாம் பாக்க வந்துட்டாலும் அன்னிக்கு மழையா பெய்து வெள்ளம் வந்து 10 பேரு செத்துப் போயிருவாங்க போல. ஆமாம் இப்பல்லாம் மழையே பேயறது இல்லியே?

சரி பரவால்லே. . நம்மள யாரு பாக்க வரா யாரு வர்றது இல்லேனு பாத்துக்கிட்டா இருக்க முடியும்? வந்து உக்காருங்க. மிலோ குடிப்பீங்களா? ஆமாம் எப்பவும் வந்தா அதைத்தானே குடிப்பீங்க. சாரி, ரொம்ப நாள் கழிச்சி வர்றீங்களே அதான்யா. மறதி ரொம்பயா. இப்பல்லாம் சின்ன வயசுலே இந்த மறதி கோளாறு வந்துர்றுது. வயசான கெழடுக்கு என்ன எளவு வந்துர்ற போது? சாப்பாடு அப்படி. நீங்க உக்காருங்க. நல்லா தாராளமா உக்காந்து சாப்புடுங்க. நீங்க உக்கார்றே அளவெ வச்சித்தான் மத்தவங்களோட நீங்க எப்படிப் பொழங்கறீங்கன்னு சொல்ல முடியும், நல்லா சூத்த நாக்காலிலே வச்சி அமுத்தி உக்காருங்க. கொஞ்ச நேரம் பேசலாம்.

வெளில வெயில் அதிகமா இருக்குலே? ஆமாம் இப்பெல்லாம்தான் மழையே பேய மாட்டுதே.

உள்ளே

வீட்டு முன்னுக்கு எப்பவும் 3 நாக்காலி வைக்கச் சொல்லி அடம் பிடிச்சாரு இருக்கற வரைக்கும். ‘எவனாவது வீட்டுக்கு வருவானுங்க, அவனுக்கு நம்ப செய்யற நல்லது உக்கார நாக்காலி கொடுக்கறதுதான்’ எப்பயும் இப்படிச் சொல்லிட்டு வீட்டு முன்னுக்குத்தான் உக்காந்துருப்பாரு. ரெண்டு நாக்காலி காலியா கெடக்க, ஒன்னுல அவரு உக்காந்திருப்பாரு. அவருகிட்ட பகிர்ந்துக்க பேசிக் கொள்ள நிறைய வார்த்தைங்க இருந்துச்சி. ஏதாவது முனகிகிட்டே இருப்பாரு.

யாராச்சம் கிடைச்சிட்டா அவரு குனம், பேச்சு, உடல்மொழி, எல்லாம் மாறிடும். ரொம்ப உற்சாகமா அங்கயும் இங்கயும் சின்ன பையன் மாதிரி நடந்துகிட்டு வந்தவங்களே கவனிப்பாரு. யாரும் இல்லாத நேரத்துல ‘மழை யேன் இப்பலாம் பேயவே மாட்டுதுனு புலம்பிகிட்டு இருப்பாரு. கதவைத் திறந்து வெளில நிண்டு சாக்கடையில மூத்திரம் பேயுவாரு. ரொம்ப நேரம் யாரும் அவருகிட்ட பேசலான அழ ஆரம்பிச்சிருவாரு. எவ்ள நேரம் அழுவாருன்னு சொல்ல முடியாது. கட்டுப்படுத்த முடியாது. தேம்பி தேம்பி அழுந்துகிட்டு மூனாவது நாக்காலிலே உக்காந்துக்குவாரு. இழுத்து வந்து வீட்டுக்கு உள்ள வச்சி சாப்பாடு கொடுக்க கொஞ்சமாவது பலம் வேண்டும், போங்க.

வீட்டுல அவரெ தனியா விட்டுட்டு எங்கயும் போக முடியாது. கதவெல்லாம் சாத்தி பூட்டிட்டு போனாலும், சட்டை சிலுவாரு எல்லாத்தையும் கழட்டி வீசிட்டு வீடு முழுக்க அசிங்கம் பண்ணி வச்சிட்டு அம்மணமா படுத்துருப்பாரு. இந்தக் கோலத்தெ பாத்தும், அவரெ எப்படித் தனியா வீட்டுல உட்டுட்டு போக முடியும்?


வெளியே

1

எங்க? அந்த வீடா? ஆமாம் இப்படி நேரா போனிங்கனா முன் வாசல்லே பந்தல் கட்டி கூடாரம் போட்டுருப்பாங்க பாருங்க. அங்கத்தான். அங்க போயி அவரு பேரெ சொல்லிக் கேளுங்க சொல்லுவாங்க. வீட்டு முன்னுக்கு மூனு மர நாக்காலி இருக்கும் பாருங்க. ஒன்னு ரொம்பவே அமுங்கிப் போயிருக்கும். மத்தெது ரெண்டும் புதுசு மாதிரி இருக்கும். அங்கத்தான் அவரு வீடு. 5 நாள் ஆச்சே. இப்ப வந்துருக்கீங்க? உறவா இல்லெ கூட்டாளியா? பாக்க வயசான ஆளு மாதிரி இருக்கீங்க, கூட்டாளியாத்தான் இருப்பீங்க. இதுக்கு முன்னெ வந்துருக்கீங்களா அவரெ பாக்க? வந்துருக்கலாமே.

2

ஓ! அந்த மண்ட ஓடியோட கூட்டாளியா நீங்க? என்னா பாக்கறீங்க? ஓ, மண்டெ ஓடினு சொன்னனே அதுக்காகவா? மண்டெ எங்க ஓடப் போது. . மனுசனோட சிந்தனையும் எண்ணமும்தான் ஓடுது. வெயில் மண்டையா பொளந்தா அப்படித்தானே வரும்! சரி. . 5 வீடு தள்ளி போனிங்கனா அவரு வீடு வரும். அங்கப் பாருங்க, முன்னுக்கு பந்தல் கட்டிருக்காங்க. மூன்னு நாக்காலி இருக்கும் பாருங்க. அதுலே நானாவது போய் உக்காந்துருக்கலாம். எனக்குத்தான் மழை வந்தாலே கட்டுல்லே படுத்து தூங்கத்தானே தெரியும்.

அழுக வச்சித்தான் எடுத்தானுங்க. வீட்டுலேந்து மனுசன் ஓடிப் போயிட்டாரு. ஒரு வாரம் கழிச்சி எங்கயோ நகரத்துலே உள்ள, ஆஸ்பித்தல்லே செத்து அழுக வச்சித்தான் எடுத்தாங்களாம். உடம்பெ கழுவும் போது சதைலாம் விலகி, அழுவன நாத்தம் இன்னும் இந்தப் பக்கம் அடிச்சிக்கிட்டு இருக்கு. அதை மோந்து பாத்துக்கிட்டே போங்க. அங்கத்தான் அவரு வீடு.

வெற்றிடம்

மூன்று நாற்காலிகள். கொஞ்சமாய் காற்று. எப்பொழுதாவது மழைப் பெய்யும். கடப்பவர்கள் எப்பொழுதும் போல பைத்தியக்கார யதார்த்தத்துடன் மூன்று நாற்காலியையும் பார்த்துவிட்டுப் போகிறார்கள். அவ்வளவுதான்.

ஆக்கம்: கே.பாலமுருகன்

மலேசியா

நன்றி: திண்ணை

bala_barathi@hotmail.com

Thursday, June 4, 2009

மலாயாப்பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவையின் ஏற்பாட்டில் தேசிய அளவிலான 24-ஆம் பேரவைக் கதையின் சிறுகதைப் போட்டி (2009/2010)

சிறுகதை எழுத்தாளர்கள் இந்தச் சிறுகதைப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டு தமது அடையாளத்தை நிறுவலாம். ஆர்வமுள்ளோர் டைப் செய்யப்பட்டிருப்பின் 4-5 பக்கங்களுள்/ கையெழுத்தாக இருப்பின் 7-9 பக்கங்கள்- ஒரு சிறுகதையை எழுதி பேரவைக்கு அனுப்பி வைக்கலாம். எழுத்து அளவு 12, வரிசைகளுக்கான இடைவெளி 1.0 , பொதுப் பிரிவு மாணவர் பிரிவு என்று இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றது. பொதுப்பிரிவில் 12 கதைகளும் மாணவர் பிரிவில் 10 கதைகளும் பரிசுக்குரிய கதைகளாக தேர்ந்தெடுக்கப்படும்.

மாணவர் பிரிவில் 16 வயது முதல் 25 வயது வரை பல்கலைக்கழகம்/ ஆசிரியர் கல்லூரி போன்ற படிப்பகத்தில் பயிலும் மாணர்வர்கள் பங்கெடுத்துக் கொள்ளலாம். பொதுப்பிரிவில் வயது வரம்பின்றி பங்கெடுக்கலாம்.


கதையின் கரு : கடந்த பேரவைப் போட்டி பரிசளிப்பின் போது அதன் நீதிபதியான விரிவுரையாளர் திரு.சபாவதி அவர்கள் தமது நீதிபதி உரையில் இப்படித்தான் கேட்டுக் கொண்டார். “மலேசிய பல்லின சமுதாயத்தை முன்னிறுத்தும் பானியிலான சிறுகதைகளை எழுதுங்கள், எல்லாம் இனத்தையும் கதைக்குள் கொண்டு வந்து மலேசிய கதையை உருவாக்குங்கள் என்று.”

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

ANTOLOGI CERPEN KE-24
PERSATUAN BAHASA TAMIL UNIVERSITI MALAYA
D/A JABATAN PENGAJIAN INDIA
FAKULTI SASTERA DAN SAINS SOSIAL
UNIVERSITI MALAYA
50603 KUALA LUMPUR

படைப்புகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் : 31.08.2009Wednesday, June 3, 2009

கோணங்கியின் நாவலும் ஆளுமை கிறுக்கெடுத்தவர்களும்


கோணங்கியின் நாவலைக் கையில் வைத்துக் கொண்டு பெரிய மேதாவிகள் போல பிரசங்கம் செய்பவர்கள் உண்டு. இந்த நாவலைப் புரிந்து கொள்ள முடியலையா? இது எளிதான பின்நவீனத்துவம்,நவீனத்துவம், கட்டற்ற மொழி அமைப்பு என்று மிகப்பெரிய இலக்கிய ஜாம்பவன்கள் போல போலி முகத்துடன் ஆளுமை சார்ந்த மோகத்திற்காக அலைபவர்கள் உண்டு. (கோணங்கி நாவல் என்று மட்டும் இல்லை, இன்னும் சில நாவல்கள்/பிரதிகளும்தன்)

நவீனத்துவ மாயையில் சிக்கிக் கொண்டவர்கள்தான் அப்படித் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்..

*புரியவில்லை என்றால் புரியவில்லை என்று சொல்வதற்கு தயங்கி, இன்று பலர் தனது வாசிப்பாளுமையின் உச்சமாக கோணங்கியை அளவுகோளாக வைத்துக் கொண்டு கபட நாடகமாடுகின்றனர்.

*எளிமையான மொழி, சுமாரான கமர்ஷயல் மொழி, கட்டற்ற மொழி,நோக்கமில்லாத அமைப்பை இழந்த மொழி,தரமான மொழி, என்று இலக்கியத்திற்குப் பலவகையான மொழி பயன்பாடு உள்ளன. சிலர் வரித்துக் கொண்டு செயற்கையாக தேர்வுசெய்கிறார்கள்,சிலரின் ஆளுமை அவர்களின் மொழியை அவர்களே உருவாக்கிக் கொள்ளும்படி செய்துவிடுகின்றது. அது செயற்கை அல்ல. மிக பொருத்தமான அவர்களின் அகஉலகம் சார்ந்த யதார்த்தம்.

* எல்லாம் மொழி அமைப்புகளையும் ஒட்டு மொத்தமாக ஒரு வகைக்குள் சேர்த்துவிடமுடியாது.சில இலக்கியவாதிகளின் படைப்புகள் தொடக்கத்திலேயே தனக்கான தனித்துவமான மொழியைக் கண்டறிந்து கொள்கின்றது. அதை அடைய முடியாத வாசகர்களுக்கோ சரி,எழுத்தாளனுக்கோ சரி எந்தப் பாதிப்பும் இல்லை. அது சுயம் சார்ந்த தேர்வு.

* இதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, தன் மாய ஆளுமையை முன் வைத்து பிறருக்கு இலக்கிய புத்தி சொல்வதும், பிறரின் வாசிப்பை மலிவுப்படுத்தி பேசுவதுமாக சில நாட்டாமைகள் இருக்கிறார்கள். அவர்களின் வார்த்தைகளில் வரிக்கு வரிக்கு ரஷ்ய எழுத்தாளர்களின் நாவலின் தலைப்பும், கோணங்கியின் நாவல் தலைப்புகளும், நமக்குப் புரியாத ஏதோ ஒரு மொழியில் மிகவும் மாய யதார்த்தமாகப் பேசி புலம்புவார்கள். அல்லது எளிமையான மொழியிலேயே பேசி, 'இவர்களை' நீங்கல் வாசிக்கவில்லையென்றால் உங்கள் இலக்கியம் வளரவே வளராது என்று பிரச்சாரம் செய்து உங்களைத் தட்டிவிட முனைவார்கள்.

*அதுவும் இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் பிறரை திட்டிக் கொண்டும், ஒப்பிட்டு தரம் தாழ்த்தி பேசிக் கொண்டும், கேலி கிண்டல் அடித்துக் கொண்டும் சுய இன்பம் அடைந்து கொள்வார்கள். இந்த குனத்தை -சமரசமற்ற சிறந்த ஆளுமை- என்று அடையாளப்படுத்தவும் செய்வார்கள். தங்களுக்குத் தெரிந்த எழுத்தாளரின் பெயரைச் சொல்லி, அவரை வாசித்தால்தான் முடியும் போல என்று மேற்கொள்கள் எல்லாம் காட்டிக் கொண்டு தனது வாசிப்பு களத்தை அம்பலப்படுத்தி மார் தாட்டிக் கொள்வார்கள்.

இவர்களையெல்லாம் கண்டு பல இளம் வாசகர்கள், ஆரம்ப நிலை வாசகர்கள் பயப்பட தேவையே இல்லை. உங்களின் வழியில் நீங்கள் செல்லுங்கள். நல்ல இலக்கிய வாசிப்பை சில நல்ல மூத்த இலக்கியவாதிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் முயலுங்கள். பிறர் வாசிக்காததை நாம் வாசிக்கவில்லையே என்கிற எண்ணம் அவசியமில்லை. தரமான புத்தகங்கள் நிறையவே இருக்கின்றன. அதைக் கண்டடையுங்கள், வாசியுங்கள். யாருடனும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எழுத்துலகில் யாரும் உரிமையாளர்கள் கிடையாது.

(உரிமையாளர்கள் போல நாடகம் ஆடத் தெரிந்தவர்கள் பலர் உண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மெல்ல வளரும் நமது இயல்புக்கு புறம்பாக உடனே வளர்ந்துவிடு, இல்லையென்றால் நீ கோழை என்று தீர்ப்பு வழங்கவும் பலர் இருக்கிறார்கள்- அவர்களைக் கண்டு தயக்கம் வேண்டாம். கமர்ஷியல் புகழையும் இலக்கிய தொடர்புகளும் பத்திரிக்கை பலமும் கொண்ட பலர் அப்படியொரு பிம்பத்தை வரித்துக் கொண்டு தன்னுடைய கூட்டத்துடன் பேசி அலைந்து கொண்டிருக்கிறார்கள். என்றுமே அவர்கள் இலக்கிய/எழுத்துலகின் உரிமையாளர்கள் ஆகிவிட முடியாது.

ஆகையால் கோணங்கி, ஜெயமோகனின் விஷ்னு புரானம் போன்ற தடிப்பான நாவல்களுடன் பெரிய இலக்கிய புலி போல பேசுபவர்களைக் கண்டு முதலில் பயப்பட வேண்டாம். அவர்கள் நம்மைப் போல மிக சாதாரணமானவர்கள்தான். வாசிக்கக் கிடைத்தவர்கள் வாசிக்கட்டும், அதற்காக வாய்ப்பில்லாதவர்களைப் பார்த்து கேலி கிண்டல் அடிப்பதைவிட இருப்பதைக் கொடுத்து அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்த முனையலாம்.)

கே.பாலமுருகன்

Monday, June 1, 2009

ஜூன் மாத தீராநதி இதழில் -யஸ்மீன் அமாட் திரைப்பட விமர்சனம்ஜூன் மாத தீராநதி இதழில் எனது சினிமா கட்டுரைப் பிரசுரமாகியுள்ளது.
மலேசிய மலாய் திரைப்பட இயக்குனர் யஸ்மீன் அமாட் அவர்களின் படங்களைப் பற்றிய விமர்சனமாக அக்கட்டுரை மலர்ந்துள்ளது.
(டேலண்ட் டைம் திரைப்படம்)
யஸ்மீன் அமாட் ஒரு துணிகர இயக்குனராக தமது குரலை ஆளுமையை சினிமாவின் மூலம் பதிவு செய்து வரும் முற்போக்குத்தனம் கொண்ட யதார்த்தவாதி. அவரது "டேலண்ட் டைம்" படம் குறித்தும் முஷ்கின் படம் குறித்தும் எனது கட்டுரை பதிவாகிவுள்ளது.


ஒரு இனத்தின் அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சினிமாதான் மலேசிய மலாய் இயக்குனரான யாஸ்மின் அமாட் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் “முஷ்கின்” மற்றும் “டேலண்ட் டைம்”.(யஸ்மீன் அமாட்)
இந்தப் படங்களின் மூலம் வெளிப்படும் காட்சிகள் மலாய்க்கார சமுகத்தின் எதிர்வினைகளையும் கண்டனங்களையும் சம்பாதித்துள்ளன. பெரிய அளவில் பேசப்படவில்லையென்றாலும் யஸ்மின் அமாட் அவர்களின் குரலுக்கு அரசு ரீதியிலிருந்து இன்னமும் எதிர்ப்போ கண்டனமோ வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மலேசிய திரைப்பட கலையைக் கலாச்சார தளத்திலும் மதமற்ற மனித பண்பாட்டுத் தளத்திலும் வைத்து நுட்பமான வெளிப்பாடுகளாக ஆக்கப்படுத்தியுள்ளார் யஸ்மின் அமாட் என்கிற துணிகர மலேசிய சினிமாவின் மிகச் சிறந்த அடையாளம். . . . . .
மேலும் வாசிக்க தீராநதி ஜூன் மாத இதழை மறவாமல் பார்க்கவும். . . .

தேவதைகளைத் துரட்டியடித்த பொழுதுகள்

எப்பொழுது என் தேவதைகளைத்
துரட்டியடித்திருப்பேன்?

அம்மா சோறு ஊட்டும்போதெல்லாம்
நிலவிலிருந்து உருகி வெளிவந்த
வெள்ளைத் தேவதை
எப்பொழுது என் உலகிலிருந்து
காணாமல் போயிருப்பாள்?
அம்மா இல்லாமல்
சொந்தமாக சாப்பிட
அடம் பிடித்த ஒரு நாளிலா?அக்காவின் கைப்பிடித்து
கண்ணு கடை சாலையில்
நடந்தபோதெல்லாம்
எனக்கருகில் நடந்து வந்த
மோகினி தேவதை
எப்பொழுது தொலைந்து போயிருப்பாள்?
அக்கா வேண்டாம் என
தனியாக நடக்கப் பழகிய ஒரு நாளிலா?


அப்பாவுடன் மோட்டார்
சவாரி செய்த பொழுதுகளிலெல்லாம்
என்னைப் பின் தொடர்ந்த
காட்டுத் தேவதைகள் எப்பொழுது ஓடிப் போயிருப்பார்கள்?
அப்பா எனக்கென்று தனி சவாரிக்காக
ஒரு சைக்கிள் வாங்கித் தந்த ஒரு நாளிலா?


நீண்ட நாட்களுக்குப் பிறகு
தனிமை எனக்குள்ளிருந்து
உதிரும் போதெல்லாம்
நான் முன்பு தொலைத்த தேவதைகளெல்லாம்
இப்பொழுது கணக்கிறார்கள்
என் மீது சிறுக சிறுக சுமத்தப்பட்ட
தனிமைகளென.


கே.பாலமுருகன்