Friday, June 7, 2013

2012ஆம் ஆண்டின் கவனம் பெற்ற நல்ல தமிழ் திரைப்படங்கள்



2012 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் விமர்சகன் அல்லது பார்வையாளன் என்கிற முறையில் பலர் அந்த வருடத்தில் வெளிவந்த திரைப்படங்களை வரிசைப்படுத்தினார்கள். அவர்களின் வரிசைப்படுத்தல்களுக்குப் பலவிதமான பின்புலம் இருந்தன. ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாம் படங்களையும் ஒரே விமர்சனப் பார்வையில் வைத்து மதிப்பிடுவது தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சாத்தியமில்லை. 

2012ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களைப் பல வகைகளில் பிரித்து விமர்சிக்க வேண்டும். விஜய் விருது விழாவிலும் கூட முக்கியமான படங்கள் ஏதும் விருதுகள் பெறாமல் போனதற்கும் இதுதான் காரணம் என நினைக்கிறேன். மக்கள் இரசனையை முன்னிட்டுத்தான் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என கட்டாயம் நேர்ந்தால் கண்டிப்பாக விஜய் படமான 'துப்பாக்கி' படத்திற்குத்தான் அனைத்து ஓட்டுகளும் போய் சேரும். ஆனால், சமரசமே இல்லாத தீவிர விமர்சனப் போக்கில் தமிழ்ப்படங்களை அணுகினால் மட்டுமே சல்லடை செய்து மிக முக்கியமான கலையையும் சமூகப் பொறுப்புமிக்க படங்களையும் அடையாளம் கண்டு மக்களின் இரசனையைப் புதுப்பிப்பதோடு சினிமா இயக்குனர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்க இயலும். இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்கிற புத்திமதியாக விமர்சனம் ஒருபோதும் இருக்கக்கூடாது. காரணம் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு, அல்லது கலை மட்டும் அல்ல, அது ஒரு தொழிலும்கூட.