Tuesday, May 19, 2009

சிறுகதை: ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்



எதிரில் அமர்ந்திருப்பவனைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவனது வசைப்பாடல் காரி உமிழும் சொற்கள், கடுமையான வார்த்தைகள், எதைப் பற்றியும் நான் கவலைப்படுவதற்கில்லை. அவன் அப்படியிருக்கும்போது ஒரு நாயைப் போல தெரிகிறான். பெரும்பாலும் சாலையில் படுத்துக் கொண்டு நம்மைப் பார்த்துக் காரணமே இல்லாமல் குரைக்கும் சொறி நாய் போல அவன் என் முன் அமர்ந்திருந்தான்.

அவனது சொற்களால் அதற்குச் சில நியாய ஒழுக்கங்களைக் கட்டமைத்து என்னை மறு உற்பத்தி செய்ய முயல்கிறான். அவனுக்குப் பல வருடங்களாக இது மாதிரியான வேலைகளில் ஆர்வமும் உள்ள உந்துதலும் அதிகம்.

1

கடவுளை முன் வைத்து ஒரு முட்டாள் சொன்ன சில விஷயங்களை அவனிடம் ஒரு மாலைப் பொழுதில் நான் உரையாடிக் கொண்டிருந்தேன். இருவரும் தெருவோரமாக நின்றுகொண்டு சாலையில் போகும் வாகனங்களின் இரைச்சல்களைக் கவனித்துக் கொண்டே சிறு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தோம்.

“கடவுள் நம்முடன் அமர்ந்துகொண்டு செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் நாம் காய் நகர்ந்த்தும் நுட்பங்களை அவதானித்து, நமக்கு சவால்களை ஏற்படுத்தி நமது மன வலிமையை மதிப்பீட்டுக் கொண்டிருக்கிறார்” என்றான்.

அவன் முகத்தில் காரி துப்பினேன். என்னை மிகவும் மோசமான தோரணையில் எட்டிப் பார்த்துவிட்டு முகத்தில் வழியும் எச்சிலைத் துடைத்துக் கொண்டான்.

“காகம் மேல பறக்கும்போது அது கடவுள் மீது காக்கா பீ போட்டுவிட்டுப் போனாலும், கடவுள் அமைதியாகத்தான் இருக்கிறார், பக்தன்தான் பரபரப்புக்குள்ளாகுகிறான். உனக்கு மன நோய். யாரையாவது பார்த்து சீக்கிரம் மருத்துவம் செய்து கொள்”

அவன் ஏதோ வேதாந்தி போல சில்லறைத்தனமான கருத்துகளில் பேசிக் கொண்டிருந்தான். அவனது உரையாடலை இரத்துச் செய்துவிட்டு அவனது அசட்டு கடவுள் உவமைகளில் சலிப்புத் தாங்க முடியாத தடுமாற்றங்களை அவனிடம் முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டு ஓங்கி அறையலாம் என்று தோன்றியது.

“கடவுள் எப்பொழுதும் நம் முன்னுக்கு ஒரு கயிறைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார், அதைக் கவனிக்காமல் நாம் நம் வேலையில் சல்லாபித்துக் கிடக்கிறோம், அதைப் பிடித்துக் கொண்டு மேலே வா என்ற கடவுளின் உதவும் கரத்தை நாம் கண்டுக் கொள்வதே இல்லையே” என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

நான் முதல்முறையாக அப்பொழுதுதான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன். எதிரே வந்த காரின் மீது விழுந்து வைத்தேன்.

2

மீண்டும் ஒரு மழைக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று விடுதியில் அவனைச் சந்திக்க நேர்ந்தது. கையில் ஏதோ ஒரு வேதப் புத்தகத்தை வைத்துக் கொண்டு விடுதியின் வாசலில் யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தான்.

“வாங்க. . உங்க கடவுள் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டான்.

“நல்லாயிருக்கிறார். .அவ்வப்போது வயிறு பிரச்சனை என்பதால் இப்பொழுதெல்லாம் மலக்கூடத்தில்தான் இருக்கிறார்” என்றேன். எங்குப் பார்த்தாலும் ஒரு தமிழ் தூயவனாக தூயத் தமிழில் உரையாடக்கூடியவனாகத்தான் அவனைப் பார்க்கிறேன்.

“கடவுள் மலத்தின் அதிபதியும்கூட. . தேவையற்ற செத்துப் போன சேர்க்கைகளை இராசாயணத்தின் உந்துதளில் வெளியே தள்ளுகிறார் கடவுள். . . உங்களின் எந்த வசைக்குள்ளும் சிக்காமல் தப்பிக்கும் அளவிற்குக் கடவுளுக்குப் புத்தியுண்டு” என்றான்.

சிலுவாரை அவிழ்த்து அவனிடம் எதையாவது அசிங்கமாகக் காட்டி இங்கு வந்து பார்க்கச் சொல் உன் கடவுளை” என்று சொல்லலாம் என்று சொற்கள் நாவின் நுணிவரை வந்துவிட்டன. விடுதியின் மேல் மாடி அறையில் அவன் தங்கியிருப்பதாகவும் இன்று இரவு முழுவதும் கடவுளை ஆராய்ச்சி செய்யப்போவதாகவும் கூறினான்.

“என்ன ஆராய்ச்சி?”

“இது கொஞ்சம் அறிவியல்பூர்வமான உடற்கூறுகளின் அடிப்படையில் மானுட தந்தையின் ஆண்மையை ஆராய்ச்சி செய்யப் போகிறேன்” என்றான்.

“புரியவில்லையே” என்று அவனது அசடுகளைத் தாங்க முடியாமல் உறுமினேன்.

“கடவுளுக்கு எந்தச் சுரப்பியிலிருந்து ஆண் விந்து வெளியேறுகிறது என்ற உற்பத்தி ஆய்வில் ஈடுபடத்தான் என் வீட்டிலிருந்து 900 கிலோ மீட்டர் தள்ளி வந்திருக்கிறேன். இன்று இந்த ஆராய்ச்சியின் மூலம் கடவுளைக் கொள்ளப் போகிறேன். கடவுள் என் கையில்தான் சாகப் போவதாக வரம் வாங்கிவிட்டார் போல” என்று கொஞ்சம் முரண்பாடாகப் பேசினான்.

“உன் கடவுளை ஏன் நீயே கொள்கிறாய்?”

“பிறகு? ஒருபோதும் உன்னைப் போன்ற அன்பே சிவம் ஆட்களிடம் என் கடவுளை நன் ஒப்படைக்கப் போவதில்லை. வளர்த்துவிட்ட எங்களுக்குத்தான் கடவுளின் மீது அத்துனை உரிமைகளும் உண்டு. ஆதலால் இன்று இரவு நகரத்திலிருந்து 25 மைல் தள்ளியிருக்கும் இந்த மரணித்த விடுதியில் 12ஆவது மாடியில் வைத்து கடவுளை நான் கொலை செய்யப் போகிறேன். சாட்சி நீ மட்டும்தான். வெளியே சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்” என்று சொல்லிவிட்டு கைகளை நீட்டினான்.

“உன் கை ரேகையில் என் சத்தியத்தை ஒளி வைத்துக் கொண்டு நீ செய்யப்போகும் அப்பாவித்தனமான கொலைக்கு ஏன் என்னை உடந்தையாக்குகிறாய்? எப்படியோ போ. எனக்கு கவலையில்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து 6ஆவது மாடிக்கு நகர்ந்தேன். அவன் ஏதோ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான். கடவுள் சம்பந்தபட்ட கொலைக்கு முன்பதாக சொல்லப்படும் மந்திரமாக இருக்கலாம்.

3

சரியாக மணி 11-ஐ கடந்திருந்தது. உறக்கமே பிடிக்கவில்லை. மெத்தையில் ஒரு நத்தையின் போன்ற நகர்வுக்கு ஒப்பாக உறக்கம் ஊர்ந்து கொண்டிருந்தது. அவன் எப்படிக் கடவுளைக் கொள்ளப் போகிறான்? எங்கிருந்து தொடங்குவான்? அவனது அறைக்குப் போய் அவனது கொலையைப் பார்க்க மனம் அள்ளல்படுத்தியது. போகலாம் ஆனால் அவனைப் போன்ற உற்பத்தியிலும் மரணத்திலும் ஆர்வம் உள்ளவனைத் தனிமையில் அவனது அறையில் சந்திக்க எனக்குத் தயக்கமாக இருக்கிறது.

கடவுளின் மரணத்தில் கண்டிப்பாக ஏதாவது விந்தை நிகழலாம். உலகமே அறியும்படியான ஒரு வெளிச்சம் பரவலாம். அல்லது நாய் ஒன்று சாக்கடையில் “ஒன்னுக்கு” போவது போன்ற சம்பவமாக முடிவடைந்துவிடலாம். சன்னலைத் திறந்து காத்திருந்தேன். எப்பொழுது கடவுள் இறப்பார் என்று.

திடீரென்று சொல்ல முடியாது, மிக நிதானமாகவே ஏதோ உயரத்திற்கு எனது நிலப்பரப்பு வளர்வது போல ஒறு பிரமை தட்டியது. என் 6ஆவது அடுக்கு மெல்ல வளர்ந்துகொண்டே உயரத்திற்குச் சென்றது. அப்பொழுது கடவுளின் கொலையைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கடவுள் தரையை நோக்கி போய்க்கொண்டிருந்தார். காற்றின் அழுத்தம் தலை முடியை உடைத்து பின்னுக்குத் தள்ளியது. கடவுளுடன் நானும் அவரது மரணத்தை நோக்கி உள்நுழைந்தேன். கடவுள் தலைகீழாக தனது உக்கிரங்களை கரைத்து மண்டை வழியாக உருவெடுத்த பிளவின் ஊடாக வெளியாக்கினார். இன்னும் சிறிது தூரம்தான் கடவுளின் மரணம். தரை. உலகம் கடவுளை அறுக்கப் போகிறது. கடவுளின் பிராந்தியங்களைத் துண்டிக்கப் போகிறது உலகம்.

4

“அன்புள்ள நண்பர் முகிந்தாவுக்கு. நான் இறப்பதற்கு முன் எழுதி வைத்த கடிதம் இது. பைத்தியக்கார நாயின் கடிதம் என்றுகூட சொல்லிக்கொள்ளலாம். நீ இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது நானோ அல்லது கடவுளோ இறந்திருக்கக்கூடும் அல்லது இருவரும். அதனால் என்னைப் பற்றி நீ கவலைப்படாதே. உனக்கு இதில் ஆர்வம் இருக்கப்போவதில்லை. என்னைப் பற்றியும் என் பைத்தியக்கார பொழுதுகள் பற்றியும் நீ உன் நண்பர்களிடம் சொல்லி இரக்கப்படப் போகிறாயா அல்லது தோற்றுப்போன என் ஆராய்ச்சிகளின் மீது காரி துப்பப் போகிறாயா என்று எனக்கு தெரியவில்லை.

உனக்காவது என் ஆய்வு பற்றி தெரிய வேண்டுமென்றுதான் உன்னை நான் அடிக்கடி தொடர்புக் கொண்டேன். ஆனால் நீயோ என்னைத் தொடர்ந்து கொச்சைப்படுத்திக் கொண்டே இருந்தாய். புறக்கணிப்பு எவ்வளவு வலி என்று உனக்கு தெரியாது. காரணம் அதைப் பற்றியெல்லாம் கவலையில்லாமல் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரு கழிச்சடை நீ.

நான் தொடர்ந்து கடவுளிடம் விவாதித்தேன். பல நாட்கள் அவருடன் உரையாடலை மேற்கொண்டேன். பல விவாதங்களில் கடவுள் தோல்வியுற்று என்னிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுத் தொலைத்தார். இறுதியாக நீ வாழத் தகுதியற்றவன் என்று நானும் கடவுளும் முடிவுக்கு வந்துவிட்டோம். நீ இந்த உலகத்தில் ஏதோ ஒரு நிலப்பரப்பில் சுற்றித் திரிந்து அலைந்து சம்பாஷனைச் செய்து கொண்டிருப்பதைக் குறித்து எனக்கும் கடவுளுக்கும் கடும் கோபம். உன்னை வளரவிடுவதில் கடவுளுக்கு ஆர்வம் இல்லை. நீ இன்னும் பல மனிதர்களைக் காயப்படுத்தக்கூடியவன் என்கிற தீர்ப்புக்குக் கடவுள் உடன்பட்டுவிட்டார்.

பிரபஞ்சத்தில் நீ எறிந்த வார்த்தைகளுக்கு நீ பொறுப்பேற்க வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது. உனது கடும் வார்த்தைகள் பிரபஞ்ச வெளியின் தனிமைகளை உசுப்பிவிட்டதால் நீ மரணிக்க வேண்டும் என்று கடவுள் முடிவெடுத்துவிட்டார். வரும் ஞாயிறன்று உனக்கான மரணம் ஒரு உன்னைத் தேடி வரும். அப்பொழுது மழைப் பெய்துகொண்டிருக்கும். உனது விடுதியின் அறையை ஒருவன் கடவுளுக்குக் காட்டிக் கொடுப்பான். அங்கிருந்துதான் நீ உனக்கான வெளியை இழக்கத் துவங்குவாய். இனி நீயும் உன் கடவுளும். வணக்கம்.

“அன்பே சிவம்”

இப்படிக்கு

கடவுள்.


ஆக்கம்: கே.பாலமுருகன்

மலேசியா