கண்ணீர் அஞ்சலி
தெலுக் இந்தான் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் நடக்கவிருக்கும் என்னுடைய சிறுகதை பட்டறைக்குக் கிளம்பி பேருந்தில் சென்று கொண்டிருந்த நேரம். சிறுவர் நாவல் தொடர்பாகப் பேசுவதற்காக நண்பர் மூர்த்தி அவர்களுக்குத் தொடர்புக் கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். சட்டென அவருடைய அழைப்புத் துண்டித்துக் கொண்டது. உரையாடல் பாதியிலேயே நிற்கக்கூடாது என்று எண்ணி மீண்டும் அழைத்தேன். மறுமுனையில் திரு.மூர்த்தி அவர்கள் சோர்வடைந்த குரலுடன் ஒரு துக்கச் செய்தியை வைத்திருந்தார். அழைப்புத் துண்டிக்கப்பட்ட இடைவேளையில் அவருக்கு இன்னொரு அழைப்பு வந்திருக்கிறது. மூர்த்தி அவர்கள் கணத்த குரலுடன் ‘சீனி ஐயா இறந்துட்டாராம் பாலா’ என்றார்.
ஐயா காலமாகி பல நாட்களுக்குப் பிறகே இந்தக் கட்டுரையை எழுதத் தோன்றியது. மனத்திலிருந்து சுமையை எல்லாம் நேரங்களிலும் சட்டென எழுத்திற்குள் இறக்கி வைத்துவிட முடியாதுதான். எனது தந்தையார் இறந்து சில நாட்களே ஆகியிருந்த தருணம் அது.
சீனி ஐயாவுடனான உறவு எனது கல்லூரி காலத்திலிருந்தே தொடங்கியது. 2004ஆம் ஆண்டு விரிவுரைஞர் திரு.தமிழ்மாறன் அவர்கள் சீனி ஐயாவை இலக்கணப் பட்டறைக்காகக் கல்லூரிக்கு அழைத்து வந்திருந்தார். அதற்கு முன்பே ஐயாவை ‘உங்கள் குரல்’ இதழின் வழி ஓரளவிற்கு அறிந்திருந்தேன். தவறாமல் மாதந்தோறும் அந்த இதழை வாசித்தவர்களில் நானும் ஒருவன். அதை அவ்வப்போது விரிவுரையாளர்களிடம் சொல்லிக் கொள்வதிலும் ஒரு பெருமை இருக்கவே செய்தது.
ஐயா அவர்களிடம் விரிவுரையாளர்கள் அனைவரும் மிகுந்த மரியாதையோடு நடந்து கொண்டார்கள். அதிலும் திரு.தமிழ்மாறன் அவர்கள் எப்பொழுதும் வகுப்பில் சீனி ஐயாவைப் பல நேரங்களில் மேற்கோள் காட்டிய வண்ணமே இருப்பார். அன்று முதன் முதலாக சீனி ஐயாவின் இலக்கணப் பட்டறையில் கலந்து கொண்டேன். அத்துனை அழுத்தமாகவும் தீர்க்கமாகவும் பேசும் திறன் கொண்டவர்களை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. குரலில் எந்தத் தயக்கமும் இல்லாமல் கற்றோர் நிறைந்திருந்த சபையில் ஐயா பேசிக் கொண்டிருந்தார். அதுவரை அல்ல, எப்பொழுதுமே மனத்தோடு ஒட்டாத இலக்கணம் என்னைவிட்டுத் தூரமாகவே இருந்தது. ஆனால், அன்று ஐயாவின் உரை வழக்கமான ஒரு பாடமாக அல்லாமல் மிகவும் இயல்பாகவும் நகைச்சுவையுடன் இருந்தபோதே அந்த இடைவேளி குறைவதைப் போல உணர்ந்தேன்.