Saturday, November 8, 2014

Interstellar: காலமும் புவி ஈர்ப்புச் சக்தியும்: ஒரு கற்பனை அறிவியல்

Chiristhoper Nolan அநேகமான இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளனாக இருக்கக்கூடும் என்கிற ஒரு மனநிலை அவருடைய ஐந்தாவது படத்திற்குப் பிறகு உறுதியாகிறது. நான்காவது படமான inception ஒரு பின்நவீனத்துவ சினிமா என விமர்சிக்கப்பட்டது. ஆனால், அப்படம் ஆழ்மனம் பற்றிய ஒரு தத்துவப்பார்வையைக் கொண்டிருந்தது என்பதை யாரும் உணரவில்லை.

நாம் காணும் உலகத்திற்கு அப்பாற்பட்ட ஓர் அறிவியலைத்தான் கிரிஸ்தப்பர் புனைவாக்குகிறார். அதில் ஒரு தத்துவப்பார்வையையும் விதைக்கவே செய்கிறார். ஓரளவிற்காகவாவது அறிவியல் தெரியாதவர்கள் நிச்சயம் இந்தப் படத்தை இரசிக்க முடியாது. காலம் குறித்த ஒரு அபாரமான சிந்தனையைப் படம் ஏற்படுத்துகிறது.

நாம் அறிந்திருக்கும் பால் வீதியைத் தாண்டும் ஒரு கற்பனையாகப் படம் மாற்று அறிவியலைச் சித்தரிக்கிறது. முன்பு பகவத் கீதையில் படித்துள்ளேன், இந்த ஒரு பால் வீதி மட்டும் மல்ல இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணற்ற பால் வீதிகள் இருக்கின்றன. இது போல் இன்னும் எத்தனையோ சூரியன்களும் பூமிகளும் இருக்கின்றன எனப் பகவத் கீதை அழுத்தமாகச் சொன்னதை, இப்படம் ஒரு புனைவாகச் சொல்கிறது.

இரண்டு மிக முக்கியமான கட்டங்கள் என்னை உலுக்கியது என்றே சொல்லலாம். ஒன்று கதாநாயகனும் அவனுடன் இன்னொரு விஞ்ஞானியும் ஏதோ ஒரு கிரகத்தில் தரையிறங்குகிறார்கள். அந்தக் கிரகத்தில் அவர்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம் உலகக் கணக்குப்படி அது 7 வருடங்கள் ஆகும். ஒருவேளை அவர்கள் அந்தக் கிரகத்தில் 10 மணி நேரம் சிக்கிக்கொண்டால், அந்தக் கதாநாயகன் பூமியில் விட்டுவந்த தன் பத்து வயது மகளுக்கு 80 வயதாகிவிடும்.

அடுத்து, கதாநாயகன் பால் விதியைக் கடந்து பெருவெளிக்குள் நுழைந்து இறுதியாக மாபெரும் காலம் என்கிற சக்திக்குள் மாட்டிக்கொள்ளும் கட்டம் அபாரமானவை.

பூமி இனி வாழ்வதற்கு ஆபத்தான பகுதியாக மாறத் துவங்குகிறது. ஆகையால் இந்தப் பால் வீதியைத் தாண்டி அடுத்த பால் வீதிக்குள் இருக்கும் கிரகங்களில் எது மனிதர்கள் வாழத்தகுதியானவை என்பதைக் கண்டறிய 4 பேர் கொண்ட குழு நம் பால் வீதியைக் கடப்பதுதான் படத்தின் கதை. இதை மையமாகக் கொண்டு படத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

எனக்கும் இப்படம் எந்த அளவிற்கு விளங்கியுள்ளது என்று தெரியவில்லை. நான் 4 வருடம் அறிவியல் வகுப்பில்தான் படித்தேன். இயற்பியல், இராசாயணவியல் என அனைத்திலும் நல்ல தேர்ச்சிப்பெற்ற மாணவன் என்பதால் அறிவியல் ஓரளவிற்குத் தெரியும். இருப்பினும் இவர்கள் பேசும் அறிவியல் நம் பாடத்திட்டங்களைத் தாண்டியவையாகும்.

படத்தைத் திரையரங்கில் பார்க்கத் தவறினால் உங்களுக்கான ஒரு பேரனுபவத்தை நீங்கள் இழக்கக்கூடும். படம் முதல் ஒரு மணி நேரம் ரொம்பவும் அமைதியாகப் பரப்பரப்பின்றி நகர்வதால் விஜய் அஜித் இரசிகர்கள் தயவு செய்து இப்படத்திற்குப் போய்விடாதீர்கள். மேலும் அறிவியல் தர்க்கங்களில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு இப்படம் சலிப்பைக் கொடுக்கலாம். ஒரு மிகப்பெரிய புரிதல் சிக்கல் வரக்கூடும். படம் கணமான ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறது. கற்பனையான பயணமான இருந்தாலும் அடுத்தக்கட்ட மானுடப் பரிணாமத்திற்குரியதாக இயக்குநர் சிந்தித்துப் பார்த்திருக்கிறார்.

- கே.பாலமுருகன்