முதன் முதலில் எப்பொழுது என் கண்கள் அதன் பிரக்ஞையுடன் தொலைக்காட்சி பார்க்கத் துவங்கியிருக்கும்? உடல் உறுப்புகள் நிகழ்த்தும் அதிசயங்களை அறிவு ஒரு தகவலாக அனுபவமாகப் பெற்றுக் கொள்ளாதவரை அல்லது அறிவு உடல் உறுப்புகளையும் புலன்களையும் இயக்காதவரை ஒரு வசீகரமான கற்பனை புரிதல்களிலே எல்லாவற்றையும் பார்த்திருக்கிறோம்.
மாலையில் அப்பா செய்தி பார்த்துக் கொண்டிருக்கும்போது, எனக்குள் எழும் முதல் சந்தேகம், “எப்படி இந்த ஆள் நம் வீட்டின் தொலைக்காட்சி பெட்டிக்குள் நுழைந்திருப்பான்?” என்றுதான். ஆக அந்தச் செய்தி முடியும்வரை காத்திருப்பேன். செய்தி முடிவதற்குள் எல்லாம் கவனமும் வேறு ஒன்றின் மீது பாய்ந்துவிடுவதால் தொலைக்காட்சி பெட்டிக்குள் நுழைந்தவனைப் பற்றி மறந்துவிட நேரும். தமிழ் சினிமா பார்க்கும் ஒரு காலக்கட்டம் வந்து சேர்ந்தபோது, எல்லாரும் இந்தச் சின்ன பெட்டிக்குள்தான் நுழைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என ஒரு கற்பனையைக் கொண்டிருந்தேன். தொழில்நுட்பத்தின் வரையறைகள் பற்றி அக்கறை கொள்ளாத ஒரு பருவம்.
“வலி என்பது இறைச்சக்தியின் ஆனை” என ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். வலி என்பதே நம் உடல் இருப்பதற்கான ஆக வலுவான ஒரு வலியுறுத்தல் என நினைக்கிறேன். ச.தமிழ்செல்வன் ஒருமுறை உயிர்மையில் மஞ்சள் காமாலைக் கண்டதைப் பற்றி எழுதியிருந்தார். மஞ்சள் காமாலைத்தான் அவரை ஒரு உடல் மனிதனாக மாற்றியிருந்தது எனக் கூறியிருந்தார். அது போலத்தான் முதிர்ச்சி என்பது நமது பாலியத்தின் கற்பனை உலகம் புதியதாகத் திணிக்கப்பட்ட தர்க்க அறிவால் உடைக்கப்படும் சம்பவத்தை வரையும் ஒரு வடிவமாகக் கருதப்பட்டது. இப்படி நம்மிடமிருந்து தவறி தவறி பல பொருள்கள் வெறும் தொழில்நுட்பக் குறியீடாக மாறிவிட்டன.
இன்று பள்ளியில் மாதிரி தொலைக்காட்சி பெட்டியைக் கொண்டு மாணவர்கள் அனைவரையும் செய்தி வாசிப்பாளராக பாகமேற்று நடித்துக் காட்டப் பணித்திருந்தேன். மாணவர்கள் சுயமாக வானிலை அறிக்கைகளைத் தயாரித்துக் கொண்டனர். ஒவ்வொருவராக மாதிரி தொலைக்காட்சியின் முன் அமர்ந்து வானிலை அறிக்கையை வாசிக்கத் துவங்கினர். சிலருக்கு உண்மையில் செய்தி வாசிக்கும் ஆற்றல் கைவந்திருந்தது. சிலர் தைரியமாக பார்க்காமல் சுயமாக வாசித்துக் காட்டினர். மாணவர்கள் எல்லாரும் பொதுவாக என்னிடம் கேட்ட கேள்விகள் பின்வருமாறு:
1. அவர்கள் எப்படிப் பார்க்காமல் சரளமாக வாசிக்கிறார்கள்?
2. அவர்கள் சிரிப்பு வந்தால் என்ன செய்வார்கள்?
செய்தி வாசிப்பாளாருக்கு இருக்க வேண்டியது, தைரியமும் சூழலுக்குத் தகுந்த தொனியும் சொற்களும் திரையில் விரியும் எழுத்துக்களை வரிகளை விரைவாக வாசித்துப் பாசாங்கு செய்யும் ஆற்றலும்தான். முன்பொரு முறை பள்ளியின் செய்தி வாசிப்பாளராக ஒவ்வொரு வாரமும் ஒருவரைத் தேர்ந்தெடுத்தேன். பிரச்சனையுள்ள மாணவர்கள்கூட ஆர்வம் காட்டினார்கள். எல்லாருக்கும் அதில் ஒரு மயக்கம் இருக்கிறது. அவர்கள் நம்மைப் பார்த்து செய்தி சொல்லவில்லை என்பதைக்கூட தெரியாமல் அவர்களின் செய்தி வாசிப்பையும் அதன் சரளத்தையும் பார்த்து பிரமிக்கிறார்கள் மாணவர்கள்.
கவிதையும் சில வரிகளும்
உனக்காகப் பெரும்வெளியில்
உட்காந்திருந்தபோது
மரத்திலிருந்து மெல்ல
உதிர்ந்து வீழ்ந்தன
காத்திருப்பும் முன்பொருமுறை
நாம் சந்தித்த கோடைகாலத்தின்
சில பொழுதுகளும்.
உன்னைச் சந்திக்கும்
தருணத்தில்
பேசுவதற்கென்று
சில வார்த்தைகளைத்
தயார்ப்படுத்தியிருந்தேன்.
அதற்கு முன்பதாகவே
எல்லாமும் தேவதைகளாகிவிட்டன.
இப்பொழுது வெறும் நானும்
எனது மௌளனங்களும்.
சுயமாக
என்னையாவது வைத்திருக்க
முயன்றேன்.
இயலாதபோது ஒப்படைத்தேன்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா