“இது வீடு.
இது என் வீடு.
என் வீடு அழகாக இருக்கும்.
என் வீட்டைச் சுற்றி அழகான பூச்செடிகள் இருக்கும்.”
தன் வீட்டைப் பற்றி ஒரு சிறுவன் உருவாக்கும் முதல் வாக்கியம் இப்படிதான் பெரும்பாலும் அமைகின்றன. இங்கிருந்துதான் அவனுக்கும் அவன் வீட்டுக்குமான நெருக்கம் தொடர்கிறது. வீடு என்பதன் சொல்லுக்குள் இருக்கும் அனைத்து விளக்கங்களையும் தன் வீட்டைச் சார்ந்தே அவன் புரிந்துகொள்கிறான்.
என் வகுப்பில் ஒரு மாணவன் இருக்கிறான். இரண்டாம் ஆண்டு பயிலும் அவனுக்கு எப்பொழுதும் அவன் வீடு குறித்து பெரிய வியப்பும் விருப்பமும் இருக்கும்.
“ஏய் எங்க வீட்டுல பெரிய குருவி இருக்கு தெரியுமா?”
“சார் எங்க வீட்டுல ஒரு பெரிய அலமாரி இருக்கு”
தன் வீட்டைப் பற்றி அவனுக்குள் எப்பொழுதும் யாரும் கலைக்க முடியாத ஒரு கனவு மிதந்துகொண்டே இருக்கின்றது. யார் எதைச் சொன்னாலும் அவற்றையெல்லாம்விட கொஞ்சம் பெரியதாகக் கட்டாயம் அவன் வீட்டுக்குள் இருக்கும். “எங்க வீட்டுலெ இன்னும் பெரிசா இருக்கும் தெரியுமா” எனச் சொல்லிவிட்டு நம்முடைய அடுத்த கேள்விக்காக ஆச்சர்யத்துடன் பார்ப்பான். சிறுவர்கள் வாழும் வீடு இப்படி நிறைய குறிப்புகளுடன் மௌனித்திருக்கிறது.

மாலை வெயில் தலையை எரித்துக்கொண்டிருந்தது. தண்டவாளம் காட்டிய தூரம் என் வீடு எங்கோ தொலைந்து போய்விட்டதோ என்கிற அச்சத்தை உருவாக்கியது. சுங்கைப்பட்டாணி காவல் நிலையத்திற்கு அருகில் வரும்வரை வீடு தொலைந்துவிட்டதோ என்கிற நினைப்பில்தான் இருந்தேன். எனக்குப் பழக்கமான பட்டணத்தின் வாசலை வந்து சேர்ந்ததும் தொலைந்தது நான் என்கிற பிரக்ஞையும் இன்னும் சிறிது நேரத்தில் இருளத் துவங்கிவிடும் என்கிற பயமும் ஒன்றுசேர நடுக்கத்தைக் கொடுத்தது. அருகில் இருந்த தொலைப்பேசியின் மூலம் அக்காவிற்கு அழைப்புக் கொடுத்த பிறகே நிம்மதியடைந்தேன். முதல்தடவை இப்படி நடந்திருப்பதால் ஆர்.சீ. மோட்டாரில் பெரிய சத்தத்துடன் வந்து நின்ற அப்பாவிற்கும் பெரிய அதிர்ச்சிதான். வீட்டை அடைந்ததும் கால் வலி, நடுக்கம், பயம் என அனைத்தும் எப்படியோ காணாமல் போயிருக்கக் கூடும். எதுவும் நடக்காததைப் போல அறையின் சன்னலைத் திறந்து வெளியே பார்த்தேன்.