கடந்துபோகும்
ஒவ்வொரு வருடத்தையும் அதன் இறுதி எல்லையில் இருந்துகொண்டு மீட்டுண்ர்வதென்பது எழுதி
வைத்த டைரியை வெகுநாள் கழித்துப் படித்துப் பார்ப்பதை போன்ற உணர்வைக் கொடுக்கும்.
2012ஆம் ஆண்டு மறக்க முடியாத பல சந்தர்ப்பங்களையும் மறக்க நினைக்கும் பல கணங்களையும்
கொடுத்திருக்கின்றன.
கோப்புகளுக்குள்
ஒளிந்து கிடக்கும் சில புகைப்படங்களின் வழியே கடந்தாண்டு நிகழ்வுகளை நினைவுக்கூற முடிகின்றது.
அவற்றுள் சில:
அ. மலாக்கா
மாநில தமிழ் ஆசிரியர்களுடன் சந்திப்பு- 16.09.2012
முகநூல் நண்பர்
திரு.ராஜா அவர்களின் மூலம் தமிழ் மொழி பட்டறை நடத்த முதன்முதலாக வெளிமாநிலம் சென்ற
அனுபவம் மறக்க முடியாதது. முதலில் ராஜா அவர்கள் பணிப்புரியும் பாத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளிக்குச்
சென்று அங்குள்ள ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி பட்டறை நடத்தினேன். மாணவர்கள்
ஆர்வமுடன் இருந்தார்கள். சிறப்பாகப் பங்கெடுத்த மாணவர்களுக்கு நூல்களைப் பரிசாகக் கொடுத்தேன்.
பிறகு மதியம் அலோர் காஜா தமிழ்ப்பள்ளிக்கு என்னை அழைத்துச் சென்றார். அனுபவமிக்க மூத்த
ஆசிரியர்கள் பலர் இருந்தனர். மலாக்கா மாநிலத்தின் ஆறாம் ஆண்டு தமிழ் போதிக்கும் ஆசிரியர்கள்
அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். சுமார் 4 மணி நேரம் பட்டறையை வழிநடத்தினேன்.
ஆ. புத்தாக்க
ஆசிரியர் விருது- 25 ஜூன் 2012
மாவட்ட ரீதியில்
கல்வி இலாகாவின் முதல்வர் அவர்களால் இந்தப் புத்தாக்க ஆசிரியர் விருது 2012-ஐ வழங்கப்பட்டது.
2009ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த விருது எனக்களிக்கப்படுகிறது. எங்கள் மாவட்டத்தில்
இந்தப் புத்தாக்க விருதை இரண்டு முறையும் பெற்றது நானே.