Monday, October 5, 2009

பால்ய நண்பன் வீடு திரும்பினான்


4ஆம் ஆண்டு படிக்கும்போது அம்மாவின் தோழி ஒருவர் நாங்கள் புதியதாக மாறிப் போயிருந்த வீட்டைப் பார்வையிட பக்கத்து கம்பத்திலிருந்து வந்திருந்தார். அத்துடன் அது எங்களின் 3ஆவது புதிய வீடு. வீடு மாறி புதிய இடத்திற்கு வரும்போது ஏற்படும் உற்சாகம் குதுகலமானது. அம்மாவின் தோழியுடன் வந்த அவரின் பையன் அப்பொழுதுதான் எனக்கு அறிமுகமானான். முதல் நாளே என் சைக்கிளில் அமர்த்திக் கொண்டு புதியதாக வந்த கம்பம் முழுக்க சவாரி அடித்தேன். கம்பம் முழுவதும் சீனர்கள்தான். சீன கம்பம் என்றுகூட சொல்லலாம்.


அதன் பிறகு அவனுடன் வளர்ந்த எனது பொழுதுகள் எங்கோ ஓர் இடத்தில் தேங்கிக் கிடந்தது. இன்று என் வீடுவரை என்னைத் தேடி கண்டுபிடித்து வந்திருந்தான். 2000த்திற்குப் பிறகு அவன் ஏதோ குண்டர் கும்பலில் ஈடுபட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவனுடைய அம்மா ஒவ்வொருநாளும் வீடுவரை வந்து அழுதுவிட்டுப் போவார்.

ஆறாம் படிவம் பயிலும்போது ஒரு திருவிழாவில் குண்டர் கும்பலுடன் ஒரு கேங்-வுடன் காதில் வட்டமான தோடுடன், முடியெல்லாம் வர்ணம் பூசிக் கொண்டு வேறொரு நண்பனாக தென்பட்டான். நானும் அவனும் அவ்வளவு நெருக்கமில்லைத்தான், ஆனால் அவனுடன் விளையாடிய பால்ய கால நினைவுகளும், பக்கத்து கம்பம்வரை நடந்தே திரிந்த நாட்களும் அவனுக்கும் எனக்கும் மத்தியில் ஓர் இருப்பை உண்டாக்கியிருந்தது. அவனைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம், விவரிக்கலாம். ஆனால் அது நீண்டுவிடக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு குண்டர் வேட்டை சம்பவத்தில் அவர்களுக்கும் மலாய்க்காரர் நண்பர்களுக்கும் அடிதடி சண்டை முற்றி, அந்தக் கும்பலில் இருந்ததற்காக, அவன் காட்டிற்குள் இரண்டு நாட்கள் ஓடி அலைந்ததாகவும், பிறகு அங்கிருந்து தப்பித்து கோலாலம்பூர் சென்று அங்குத்தான் அவன் வாழ்வை அவன் தேடிக் கொண்டான் என்றும் கூறினான். இப்பொழுது பல சிரமங்களைக் கடந்து முயற்சிகளைக் கடந்து காவல்துறையில் சேர்ந்து நலமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறினான். வாழ்ந்த ஊரை திரும்பவும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வீடு திரும்பியதாகவும், தன் அம்மா அவனை இன்னமும் வெறுக்கிறார் என்றதும், மனம் ஒரு கனம் வலித்தது.

அவரை என்னுடன் அழைத்துப் பார்த்ததாகவும், இந்த ஊரைவிட்டு வரமாட்டேன் என்று அவர் சொன்னதுடன், “வீட்டெ உட்டு ஓடிப் போனாவன் எதுக்குடா திரும்பி வரனும்” என்று கத்தினார் என்றும் சொல்லிவிட்டு தலை குனிந்தான்.


“எங்க அம்மாவுக்கு என் மேல பாசமே இல்லையா பாலா? அவங்கனாலெதான்னே நான் வீட்டைவிட்டு ஓடனென். . “

அவனின் வாழ்வின் மீதான அதிருப்திகளை ஒரு கணம் அசை போட்டது மனம். அவன் வீடு முழுக்க குரல்கள். அவனை புறக்கணிக்கக்கூடிய, அவனை அவமானப்படுத்தக்கூடிய, அவனை அலட்சியப்படுத்தக்கூடிய, அவனைத் தூக்கி எறியக்கூடிய குரல்கள். மதியத்தில் அவன் வீடு தேடிச் செல்லும்போதெல்லாம் அவன் வீட்டிற்கு வெளியில் ஏதும் அறியாமல் வெளியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பான். உள்ளே அவன் அம்மாவும் அக்காவும் கத்திக் கொண்டிருப்பார்கள்.

“இவங்களோடெ இருக்க முடிலெடா. . சும்மா. . கத்திக்கிட்டெ. . நான் இன்னும் சாப்டகூட இல்லெ தெரியுமா?”

அவனை நினைத்து வருத்தம் அடையக்கூட சரியான முகப்பாவனையைக் காட்டத் தெரியாமல் திரும்பி வந்துவிடுவேன். அவன் காணாமல் போனபோது சமயத்தில் அதை ஒரு சராசரி செய்தியாகவே எடுத்துக் கொண்டேன்.

இன்று என் வீட்டின் முன் வந்து நின்றவன், “தெரிலையா பாலா?” என்றதும் ஆச்சர்யமாக இருந்தது. கோலாலம்பூரிலிருந்து காரில் வந்திருந்தான். அவன் கடந்து வந்த எல்லாம் சூழலையும் சொன்னபோது, வீட்டை விட்டு வெளியேறுவது ஒரு தோல்வியடைந்த அசம்பாவிதம் என்று மட்டும் நினைக்க முடியவில்லை. அவன் அடைந்த திருப்பங்களும், அவன் சந்தித்த மனிதர்களும் அவனை மீண்டும் உருவாக்கியிருக்கிறது.

“அம்மாவை மட்டும் விட்டுறாதெடா. .” என்று மட்டும் சொல்ல முடிந்ததே தவிற அவன் என்னைவிட்டுப் போன பிறகு எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அவனுடன் பேச வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இனி கோலாலம்பூர் வந்தால் அங்குமிங்கும் பேசுவதற்கும் உரையாடுவதற்கும் நண்பர்களைத் தேடி அலையவோ அல்லது அழைப்பேசியில் தொடர்புக் கொண்டு “என்னைப் பார்க்க வர முடியுமா? “ என்றோ கேட்க அவசியமிருக்காது. எங்கிருந்தோ தொலைந்தவன் எங்கிருக்கிறான் என்று அறிந்ததும் அவன் வாழ்வில் மீதமாக விடப்பட்ட இடங்கள் நிரம்பியிருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். எனக்குள் பழைய நண்பனைப் பார்க்க பக்கத்துக் கம்பத்திற்கு நடந்து சென்ற ஒரு மனோபாவமும் அந்த வெயிலும் மீண்டும் முளைத்திருந்தது.


கே.பாலமுருகன்