Wednesday, July 8, 2009

இருளைக் கடப்பதுதான் தைரியமா?

இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிற்சி முகம்களோ அல்லது தன்முனைப்பு முகாம்களோ நடந்தால் அதில் நடக்கும் அபத்த கூத்துகள் பற்றி சொல்லவே வேண்டாம். பித்த மூளைகளின் அரிப்புகள், தனியார் நிறுவனங்கள் தமிழ்ப்பள்ளிகளில் புகுந்து தன்முனைப்பு கொடுக்கிறேன் என்கிற பெயரில் ஏற்படுத்தும் கூத்துகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.

அம்மா அப்பாவின் தியாகங்களை உணர்த்துவதற்காக, அம்மா பாடல், சோகப் பாடல்களைப் போட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அழச் செய்து திருத்த வேண்டும் என்கிற மனோபாவத்துடன் அலைகிறார்கள். இதில் பல்கலைகழக மாணவர்களும் இதற்கு உடந்தையாக இருந்து பள்ளிக்குச் சென்று மாணவர்களை உளவியல் ரீதியில் பயமுறுத்துகிறார்கள்.

சரி அதை விட்டுத் தள்ளலாம். அதையும் கடந்து மேலும் ஒரு நடவடிக்கை இருக்கிறது. இதுதான் அபத்தத்தின் உச்சம். மாணவர்களுக்கு தைரியத்தை உண்டாக்க போகிறோம் என்கிற திட்டத்துடன், அவர்களை நடுகாட்டில் இருட்டில் தனியாக நடக்கவிட்டுப் பயிற்சி அளிக்கிறார்கள். தன்முனைப்பு முகாமை நடத்தும் அவர்களே இருளில் ஆங்காங்கே ஒளிந்து கொண்டு மாணவர்கள் தனிமையில் நடக்கும்போது பயமுறுத்தி உற்சாகமும் படுத்தவே செய்கிறார்கள்.

மாண்வர்கள் என்ன இருளில் காட்டில் இலைகளைச் சுற்றிக் கொண்டு போருக்கா போகப் போகிறார்கள்? அந்தக் காலத்திலிருந்தே நாம் குழந்தைகளை வளர்ப்பதிலும் அவர்களை வழிநடத்துவதிலும் தோல்வியடைந்தே வந்திருக்கிறோம். அட்தானால்தான் இருளைக் கண்டால் மாணவர்களும் குழந்தைகளும் அலறுகிறார்கள். அதன் நிதர்சனத்தை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் தன்னை வெளிச்சத்தில் இருத்திக் கொண்டு இதுதான் உண்மையென நினைத்துக் கொள்கிறார்கள். இருளைக் கடக்க வேண்டும் அது பயங்கரமானது என்று கற்பிக்கப்பட்டே வந்துள்ளதால் அவர்களின் பார்வை இருளின் மீது ஒரு பூச்சாண்டியைப் பார்ப்பதற்கு நிகரான மனநிலையில் படர்கிறது.


இதன் விளைவு என்ன தெரியுமா?

மாணவர்கள் அலறியடித்துக் கொண்டும் அழுது கொண்டும் ஓடுகிறார்கள். பயத்தில் விழி பிதுங்கி செய்வதறியாமல் மனம் துடிதுடிக்க தனக்குள்ளே அமிழ்ந்து போகிறார்கள். இருளைக் கண்டு அதைக் கடக்க முடியாமல் தவித்து அதன் விளிம்பில் நிற்கிறார்கள். இதுதான் அந்த நடவடிக்கையின் விளைவும் அதை நடத்துபவர்களுக்குக் கிடைத்த முதுகு சொறிதலும்.
இருளைக் கடந்து வருவதுதான் தைரியத்திற்கான அளவுகோலா? இருளில் தனியாக நடந்துவிட்டால் அவன் வீரனாகிவிடுவானா? என்ன ஒரு முட்டாள்தனமான புரிதல் இது? இருள் என்பது மிக அருகமையிலுள்ள ஒரு உண்மை. வெளிச்சம் என்பது நாம் ஒழுங்காக நடப்பதற்க்காகச் செய்யும் பாசாங்குத்தனம். ஒரு சுவாமிஜி சொல்லியிருக்கிறார். பாரதி இருளை குறைந்த வெளிச்சம் என்றுதான் சொல்லுகிறார். இருளை எப்படிப் பார்க்க வேண்டும் உணர வேண்டும் என்கிற சிறு பயிற்சிகூட இல்லாத இவர்களெல்லாம் எப்படி தமிழ்ப்பள்ளிகளுக்குள் நுழைகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

இப்பபடியே போனால், மாணவர்களெல்லாம் வீட்டிற்கு வெளியில் இருளில் படுத்து உறங்க ஆரம்பித்துவிடுவார்கள் தனது வீரத்தைக் காட்டுவதற்காக. வாழ்வில் அவர்கள் நிகழ்த்தி காட்ட வேண்டிய சாகசங்கள் எவ்வளவோ இருக்க, இருளுக்குள் நடந்து அழாமல் வருவதுதான் சாகசம் என்றால், எனக்குத் தலைச் சுற்றுகிறது. முதலில் இப்படி தன்முனைப்பு நடத்தி மாணவர்களின் உளவியலைச் சீரழிக்கும் இவர்களை 14 வருடம் காட்டில் வாழ்ந்து வர அனுப்பி வைக்கப்பட வேண்டும். புராணத்திலெல்லாம் ஆ ஊ ன்னா காட்டுக்கு கிளம்பி விடுகிறார்களே. நடைமுறை உலகத்தில் வாழ்த் தெரியாத இவர்களும் புராண மனிதர்கள்தான் என்னைப் பொருத்தவரையில். காட்டுக்குச் சென்றாலும் இவர்கள் ஆபத்தை ஏற்படுத்த நிறைய வாய்ப்புகள் உண்டு. மிருகங்களுக்கு, "காட்டில் வாழ்வது எப்படி?" என்று பாடம் எடுத்தாலும் எடுப்பார்கள்.

கே.பாலமுருகன்
மலேசியா